Wednesday, October 26, 2016

உடலுக்குறுதி தரும் குருதி!

மனிதர்கள் நோய் நொடியின்றி வாழ்வதற்கும், சுறுசுறுப்போடும் ஆற்றலோடும் திகழ்வதற்கும் மனித உடலில் ஓடும் இரத்தம் இன்றியமையாதது. மனிதனின் தலைமைச் செயலகமான மூளையும், இரக்கத்தின் இருப்பிடமாகக் கருதப்படும் இதயமும், உடலின் இன்னபிற உறுப்புக்களும் பழுதின்றி இயங்கத் தேவையான உயிர்வளியையும் (Oxygen) ஊட்டச்சத்துக்களையும் (Nutrients) அவற்றிற்கு எடுத்துச்சென்று அளிப்பது இரத்தமே. அத்தோடு, உடலுறுப்புக்கள் வெளியிடும் கழிவுகளை இழிவாகக் கருதாமல் சுமந்துசென்று வெளியேற்றுவதும் இரத்தத்தின் பணியே.

அரத்தம் என்று இலக்கியங்கள் விளிக்கும் இரத்தமானது, குருதி, செந்நீர், உதிரம் போன்ற பிற பெயர்களாலும் அழைக்கப்படுவது நாமறிந்ததே. சிறப்புடைய செந்நிறத்திரவமான இரத்தத்தில், இரத்த நீர்மம் (பிளாஸ்மா), சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், இரத்தச் சிறுதட்டுக்கள் ஆகியவை அடங்கியுள்ளன. இரத்தத்திற்குச் சிவப்பு நிறத்தையும், உடலுறுப்புக்களுக்குத் தேவையான உயிர்வளியையும் தருபவை இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள். எதிர்த்துப் போரிடும் வீரர்களாய் விளங்கி உடலை நோயிடம் கொள்ளைபோகாமல் காப்பவை வெள்ளையணுக்கள். இரத்தக்குழாய்கள் பாதிப்படையும்போது அவற்றிலிருந்து அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படுவதைத்தடுத்து உதிரத்தை உறையச் செய்பவை இரத்தச் சிறுதட்டுக்கள். இப்படி, இரத்திலுள்ள உயிரணுக்கள் அனைத்துமே தத்தம் பணியைத் திறம்படச் செய்தால்தான் நோயென்னும் இடும்பையின்றி மாந்தர் இன்பமாக வாழமுடியும்.

இரத்தத்தின் அருமையை அனைவரினும் அதிகமாக உணர்ந்தவர்கள் அரசியல்வாதிகள்தாம் என எண்ணத்தோன்றுகின்றது. ஏனெனில், ”என் இரத்தத்தின் ரத்தமே” என்று அவர்கள் தொண்டர்களை அன்பொழுக(!) அழைப்பதுவும், அந்த மந்திரச்சொல்லைக் கேட்டமாத்திரத்தில் தொண்டரடிப்பொடிகளும் மகுடிக்கு மயங்கிய நாகமென மாறி, ஆனந்தக்கண்ணீர் உகுத்து, ஓட்டுக்களை அவர்களுக்கு வாரிவழங்குவதும் கண்கூடு!

என்னதான் அரசியலார் அனைவரையும் ’ஒரே இரத்தமாக’க் கருதி அன்புபாராட்டினாலும் இரத்தத்தின் நிறந்தான் அனைவருக்கும் ஒன்றே தவிர அதில் பலபிரிவுகள் (வகைகள்) உள்ளன என்பதே உண்மை. ஒருவரின் இரத்தப்பிரிவு மற்றொருவரின் இரத்தப்பிரிவிலிருந்து வேறுபட்டது. நெருங்கிய உறவுகளுக்குள் வேண்டுமானால் இரத்தவகை ஒத்ததாயிருக்கும். வேற்றுமனிதர்களின் இரத்தவகை அவ்வாறிருக்க வாய்ப்புக்கள் குறைவு.

இரத்தச்சிவப்பு அணுக்களின் (RBCs) மேற்பரப்பிலிருக்கும்,  சிறிதளவு புரதத்தாலான (a tiny bit of protein) உடற்காப்பு ஊக்கிகளே (antigens) மனிதரின் இரத்தவகையைத் தீர்மானிக்கின்றன. இந்த உடற்காப்பு ஊக்கிகளின் அடிப்படையில், மனிதக்குருதியை ஏ (A), பி (B), ஏபி (AB), ஓ (O) எனும் நான்கு பொதுப்பிரிவுகளில் நாம் அடக்கலாம்.

இந்த இரத்தப்பிரிவுகள் பற்றி இரத்தினச் சுருக்கமானதோர் அறிமுகம்…

ஏ பிரிவு: இப்பிரிவு இரத்தத்தில், சிவப்பணுக்கள் ’ஏ’ வகை உடற்காப்பு ஊக்கியையும் (A antigen), (இரத்தநீர்மமான) பிளாஸ்மா, ’பி’ வகை உடற்காப்பு மூலத்தையும் (B antibody in the plasma) கொண்டிருக்கும்.

பி பிரிவு: இதில், சிவப்பணுக்கள் ’பி’ வகை உடற்காப்பு ஊக்கியையும் (B antigen), பிளாஸ்மா, ’ஏ’ வகை உடற்காப்பு மூலத்தையும் (A antibody in the plasma) பெற்றிருக்கும்.

ஏபி பிரிவு: இவ்வகை இரத்தத்தில், சிவப்பணுக்கள் ’ஏ, பி’ எனும் இருவகை உடற்காப்பு ஊக்கிகளையும் (A and B antigens) கொண்டிருக்கும்; ஆனால் பிளாஸ்மாவில், ஏ, பி எனும் இருவகை உடற்காப்பு மூலங்களுமே இராது (neither A nor B antibody in the plasma.)

ஓ பிரிவு: இதில், இரத்தச்சிவப்பணுக்களில் ஏ, பி எனும் இருவகை உடற்காப்பு ஊக்கிகளும் (neither A nor B antigen in the red cells) இராது; ஆனால் பிளாஸ்மாவில் ஏ, பி எனும் இருவகை உடற்காப்பு மூலங்களும் இருக்கும் (both A and B antibodies are present in the plasma).

ஊடற்காப்பு ஊக்கிகளைப் (antigens) போலவே மற்றொருவகைப் புரதமும் (protein) இரத்தத்தில் காணப்படுகின்றது. அதனை Rh காரணி (Rh factor) என்றழைப்பர். இது ஒருவருடைய இரத்தில் இருக்கலாம்; இல்லாதும் போகலாம். இப்புரதம் ஒரு குறிப்பிட்ட இரத்தவகையில் இருந்தால் அந்த இரத்தத்தை ’பாசிட்டிவ்’ வகை இரத்தம் என்றும், இல்லையேல் ‘நெகடிவ்’ வகை இரத்தம் என்றும் அடையாளப்படுத்துகின்றனர் மருத்துவர்கள். சான்றாக, ஏ பிரிவு இரத்தத்தில் இந்த Rh காரணி இருந்தால் அந்த இரத்தத்தை ’ஏ பாசிட்டிவ்’ என்றும், இல்லையேல் ’ஏ நெகடிவ்’ என்றும் அழைப்பர்.
நால்வகை இரத்தவகைகளில் ’ஓ நெகடிவ்’ பிரிவு இரத்தம் அனைத்து இரத்தவகையினருக்கும் பொருந்தக்கூடியது. எனவே, இவ்வகை இரத்தப்பிரிவினரை ’உலகளாவிய குருதிக் கொடையாளர்கள்’ (universal blood donors) என்றழைக்கின்றனர். (மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்) நோயாளி ஒருவரின் அவசரத்தேவைக்கு, அவருடைய இரத்தவகை கிடைக்கவில்லையெனில், ஓ நெகடிவ் இரத்தத்தைப் பயன்படுத்தலாம் என்பது மருத்துவர்கள் கருத்து. (எனினும், குருதிக்கொடை (blood donation) பெறுபவருக்கு ஓ நெகடிவ் இரத்தம் ஏதேனும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தினால், இரத்தம் ஏற்றுவதை உடனடியாய் நிறுத்திவிட்டுத் தகுந்த மருத்துவ ஆலோசனையை நாடவேண்டும்.)
ஓ நெகடிவ் இரத்தப்பிரிவினர் அனைவருக்கும் குருதிக்கொடையாளர்களாக இருப்பதுபோல், ’ஏபி பாசிடிவ்’ இரத்தப்பிரிவினர் அனைவரிடமிருந்தும் குருதியைத் தம் தேவைக்குக் கொடையாகப் பெற்றுக்கொள்ளும் தகுதி படைத்தவர்களாயிருக்கின்றனர். ஆதலால், இவர்களை ’உலகளாவிய குருதிப் பயனாளர்கள்’ (Universal Recipients) என்றழைக்கின்றனர். ஈவதற்கு ஒரு பிரிவினர் இருந்தால் ஏற்பதற்கும் ஒரு பிரிவினர் தேவைதானே? இயற்கையின் கணக்கு சரியாகத்தான் இருக்கிறது!
அடுத்து நம்முன் எழும் கேள்வி…இந்த இரத்தவகைகளுக்கும் நம் உடலில் உண்டாகும் நோய்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது. ’இருக்கிறது’ என்கிறது மருத்துவ அறிவியல். ’ஓ’ இரத்தப்பிரிவினரைவிட ’ஏபி’ இரத்தப்பிரிவினரை இதயநோய்கள் 23 சதவீதம் அதிகம் தாக்குவதாகவும், ’ஏ’ பிரிவினரை 5 சதவீதம் அதிகம் தாக்குவதாகவும், ’பி’ பிரிவினரை 11 சதவீதம் அதிகம் தாக்குவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகவல்களை உறுதிசெய்ய மேலும்பல ஆய்வுகள் தீவிரமாக இத்துறையில் மேற்கொள்ளப்படவேண்டும் என்கிறார் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் இதயநோய்கள் தடுப்புப்பிரிவில் பணிபுரியும் இதயநோய் நிபுணர் ரிச்சர்ட் ஏ. ஸ்டெயின் (Richard A. Stein, MD).
ஈதொப்ப, மறதிநோயும் (Dementia) ’ஓ’ இரத்தப்பிரிவினரைவிடப் பிறபிரிவினரை, குறிப்பாக ’ஏபி’ பிரிவினரை அதிகம் தாக்குவதாகத் தெரியவருகின்றது. காரணம், நினைவாற்றலுக்குத் துணைசெய்யும் மூளையிலுள்ள சாம்பல்நிறப்பொருள் (Gray matter), ’ஓ’ பிரிவினருக்கு அதிகமாகவும் ஏபி, ஏ மற்றும் பி பிரிவினருக்குக் குறைவாகவும் இருப்பதே எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு, இரத்தவகைகளுக்கும் நோய்களுக்குமிருக்கும் தொடர்பை மருத்துவ அறிவியல் நமக்கு அறியத்தருகின்றது. இதுகுறித்து நாம் அச்சம்கொள்ளத் தேவையில்லை. நோய்குறித்து விழிப்புணர்வூட்டும் தகவல்களாகவே இவற்றை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில், நம் உடலும், அதில் ஓடும் உதிரமும் நாமாக விரும்பிப் பெற்றதில்லை! நம் பெற்றோரும், உற்றாரும் (நாம் கேட்காமலேயே) நமக்குக் கொடையாகத் தந்தவை. ஆதலால், நம் இரத்தம் எந்தவகையைச் சேர்ந்ததாயிருப்பினும் கவலையுறாது, சிறந்த உணவுப்பழக்கத்தையும், சீரான உடற்பயிற்சியையும் கைக்கொண்டு, இருப்பதில் நிறைவுகாணும் இனிய மனத்தோடு நாம் வாழ்ந்தால் நோய்கள் நம்மை அணுகாது!




Monday, September 19, 2016

வள்ளுவம் வலியுறுத்தும் புலால் மறுப்பு!

’வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று மக்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதில்  மாற்றுக் கருத்தில்லை; ஆனால் எவ்வாறு வாழ்வது? அதற்கென்று ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா? என்ற கேள்வி உடனே நம் மனத்தில் எழுகின்றது. இதற்கான விடையைத் தன் அறிவாலும் அனுபவத்தாலும் கண்டறிந்து ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே ஏட்டில் எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் ஒரு மாமனிதர்!

அவர் வேறுயாருமல்லர்… சிந்தனைத் தெளிவும் கருத்துச் செறிவும் மிளிர ஒன்றரை அடிகளிலேயே வாழ்வின் நீள அகலங்களை அளந்துவிட்ட நீடுபுகழ் வள்ளுவரே அந்த மாமனிதர்!

முடிமன்னர் முதல் குடிமக்கள் ஈறாகச் சாதி சமயப் பேதமின்றி, உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபாடின்றி அனைவர்க்கும் வழிகாட்டும் அரிய நூல் வள்ளுவம் என்பது உலகறிந்த ஒன்று. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்றுங்கொண்ட ’முப்பால்’ தமிழகத்திற்கு அப்பாலும் புகழொளி பரப்பிவருகின்றது. விவிலியத்திற்கு (Bible) அடுத்தபடியாக உலகின் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது நம் திருக்குறளே என்பது தமிழரனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டிய சாதனை!

இந்த உலக சாதனை ஒருபுறமிருப்பினும், உள்ளூர்த் தமிழர்களாலேயே திருக்குறளுக்கு அடிக்கடிச் சோதனையும் நிகழ்ந்துவிடுகின்ற கொடுமையை என்னென்பது! மணக்குடவர் தொடங்கிக் (கவிஞர்) மகுடேஸ்வரன் வரைப் பலர் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியும்,  (Almost every writer/scholar has written commentaries on it.) சான்றாக, அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள இல்லறவியல், துறவறவியல் உட்பிரிவுகளைக் கருத்தில்கொள்வோம்.

இல்லறவியலில் இடம்பெற்றுள்ள அதிகாரங்கள் அனைத்தும் இல்லறத்தார்க்கே உரியன; துறவறவியல் அதிகாரங்கள் அனைத்தும் துறவியர்க்காகவே எழுதப்பட்டன என்ற எண்ணம் இந்தக் குழப்பவாதிகளுக்கு இருக்கின்றது. இந்த எண்ணம் சரிதானா?

இல்லறவியலிலுள்ள இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, விருந்தோம்பல் முதலிய அதிகாரங்களை வேண்டுமானால் நாம் இல்லறத்தார்க்கு மட்டுமே உரியவை என்று கருதலாம்; அதில் பிழையில்லை. ஆனால், அன்புடைமை, இனியவை கூறல், நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை, தீவினையச்சம், பயனில சொல்லாமை, ஈகை, புகழ் உள்ளிட்ட ஏனைய அதிகாரங்களும் இல்லறத்தார்க்கு மட்டுமே உரித்தானவை  என்று கருதுவது பொருந்துமா?

அன்பும், இன்சொற்களும், நல்லொழுக்கமும், தீவினையச்சமும், நடுவுநிலைமையும் அரசன் முதல் ஆண்டிவரை அனைவரும் கைக்கொள்ள வேண்டிய அரும்பண்புகளாயிற்றே! இவற்றை ”இல்லறத்தார்க்கு மட்டுமே” என்று எவ்வாறு முத்திரை குத்தவியலும்? எனவே, இல்லறவியலில் பேசப்படும் பண்புகள் இல்லறத்தார்க்கு ’அவசியம்’ இருக்கவேண்டியவை; ஏனையோரும் பின்பற்றி ஒழுகவேண்டியவை என்று கொள்வதே அறிவுடைமை!
இனி, துறவறவியலுக்கு வருவோம்!

இப்பகுதியில் இடம்பெற்றுள்ள ‘புலால் மறுத்தல்’ எனும் அதிகாரம் அதிக அளவில் சர்ச்சைகளுக்கு ஆட்பட்டு வருவது கண்கூடு. ”புலால் மறுப்பு துறவியர்க்கானது” என்று ஒரு சாராரும், ”இல்லை…இல்லறத்தாரும் கடைப்பிடிக்க வேண்டியதே அது” என்று மற்றொரு சாராரும் முடிவில்லா விவாதத்தில் ஈடுபட்டுவரக் காண்கிறோம்.

இந்த வி(தண்டா)வாதம் இருக்கட்டும்! இதுகுறித்து வள்ளுவரின் உள்ளம் என்ன எண்ணுகின்றது என்பதைக் குறள்வழி அறிந்துவருவோம்!

’புலால் மறுப்பு இல்லறத்தார்க்கு அல்ல’ என்று உரத்து முழக்கமிடும் ஊனூண் பிரியர்கள் தம் கருத்துக்குச் சான்றுகாட்டும் குறட்பா பின்வருவது…

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.
(குறள்: 259)

”அவிசொரிந்து (நெய் வார்த்து) வேள்வி செய்வதைவிட ஓர் உயிரைக் கொன்று உண்ணாதிருத்தல் நன்று” என்பது இக்குறளின் பொருள். புவியிலே, அவிசொரிந்து வேள்வி செய்வோர் யார்? முனிவர்கள்(அருளாளர்கள்); ஆகவே அவர்கள் மட்டுந்தான் உயிர்களைச் செகுத்தும் பகுத்தும் உண்ணக்கூடாது. பிறரெல்லாம் ’ஹலால் (இறைச்சிக்) கடையில் புலால் வாங்கி விலாப் புடைக்கப் புசிக்கலாம்…தவறில்லை என்று விளக்கமளிக்கின்றனர் இவர்கள்!

இவ்விளக்கம் ஏற்புடையதா என்பதையறிய நாம் வேறெங்கும் ஆதாரம்தேடி அலையவேண்டியதில்லை. புலால் மறுத்தல் அதிகாரத்திலேயே அதற்கான விடையும் நமக்குக் கிடைத்துவிடுகின்றது. ஆம், அந்த அதிகாரத்தின் ஆறாம் குறட்பாவை நோக்கி நம் பார்வையைப் பதிப்போம்!

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
(குறள்: 256) என்பது அக்குறட்பா.

இதன் பொருள்: பேதைமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகம் கொல்லாதாயின் பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை. 'உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது” என்று இக்குறளுக்கு அரிய விளக்கத்தைத் தருகிறார் பரிமேலழகர்.

’உலகு’ என்ற சொல்லை வள்ளுவர் இங்கே கையாண்டிருப்பது இக்குறள் துறவோர்க்கு மட்டுமன்று…துறவியரல்லாத பிறவோர்க்கும் சேர்த்துத்தான் என்பதைத் தெற்றென விளக்குகின்றது!

இக்குறளின் உட்கருத்தை இன்னும் நுட்பமாக நமக்குப் புலப்படுத்துகிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். அதனையும் காண்க!

”விலைக்கு வாங்கி யுண்பாரும் வீட்டிற் கொன்று உண்பாரும் ஆக ஊனுண்பார் இரு திறத்தார். குற்றத்தைப் பொறுத்த அளவில் இவ்விரு திறத்தாரும் ஒரு திறத்தாரே. ஒருவன் ஓர் உண்ணப்படும் உயிரியைக் கொல்வதற்கு அதன் ஊனுண்பவரும் நேர்வகையிலும் நேரல்லா வகையிலும் தூண்டுபவராயிருத்தலால், அக் கொலைக் குற்றம் கொன்றானையும் தின்றாரையும் ஒக்கச் சாரும் என்பது வள்ளுவர் கருத்தாகும். 
ஊன் தின்பதற்காக ஓர் உயிரியைக் கொன்றால், அக் கொலைக்குற்றம் அதைக் கொன்றவனைச் சாருமே யன்றி அதன் ஊனைத் தின்றவரைச் சாராது, என்னும் புத்த சமய வுறழியை (வாதியை) நோக்கிக் கூறிய கூற்றாகும் இது!”  -பாவாணர்

(கொன்றால்தான் பாவம்; ஏற்கனவே கொல்லப்பட்டதைத் தின்றால் பாவம் இல்லை எனும் புத்தமதக் கொள்கைக்கும் சேர்த்தே கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி இக்குறட்பா!)
இதே குறளை, கவியோகி சுத்தானந்த பாரதியின் ஆங்கிலக் கவிதை வரிகளில் சொல்வதானால்,

None would kill and sell the flesh
For eating it if they don't wish.

ஆன்றவிந்தடங்கிய சான்றோரே...அருமைத் தோழர்களே! இனியேனும், ’புலால் மறுத்தல்’ துறவியருக்கு மட்டுமே எனும் பொ(அ)ருளற்ற வாதத்தை விடுத்து, ’அது மண்ணில் வாழும் மானுடர் அனைவர்க்கும் பொதுவானது’ என்பதை உணர்ந்து, ஊனுணவைக் கடிந்து ஒதுக்குவீர்; வள்ளுவ நெறியில் வாழ்வீர்! 







Tuesday, May 10, 2016

செய்வீர்களா...? நீங்கள் செய்வீர்களா...?

வந்துவிட்டது மற்றுமொரு சட்டப்பேரவைத் தேர்தல் தமிழகத்துக்கு! ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்தத் தேர்தல், மக்கள்வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்துமா? அல்லது தளர்ச்சியை ஏற்படுத்துமா? என்பது தேர்தலில் வெல்லும் கட்சியின் கையில்தான் இருக்கின்றது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

உலகில் முடியாட்சியின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுக் குடியாட்சி குதூகலத்தோடு எழுந்தபோது மக்கள் மனம் மகிழ்ந்தனர். எதேச்சாதிகாரமும், வாரிசுரிமையும் ஒழியும்; ஆண்டான் அடிமை எனுங்கொடுமை அழியும், மானுடம் வெல்லும் என்றெல்லாம் அவர்கள் எதிர்பார்த்தனர். என்ன ஏமாற்றம்? குடியாட்சி அத்தகைய மாற்றங்கள் எதனையும் எதிர்பார்த்த அளவிற்கு ஏற்படுத்தவில்லை.

ஆட்சியுரிமை யார் கைக்குப் போகின்றதோ அவருடைய வாரிசுகளே அடுத்தடுத்து ஆட்சியதிகாரத்திற்கு உரியவராயினர் குடியாட்சியிலும்! குடும்ப ஆட்சிமுறையே குடியாட்சி என்ற பெயரிலும் கோலோச்சியதுகண்டு மனம் வெதும்பினர் மாந்தர். அம்மட்டோ? குடியாட்சி என்பது குடிகளின் ஆட்சி என்ற பொருள்மாறி அது குடி(அரக்கனின்)ஆட்சியாகவும் மாறிப்போன பேரவலத்தையும் சமீபகாலங்களில் காணக்கூடிய இழிநிலை நமக்கு வாய்த்திருக்கின்றது. பள்ளிக்குச் சென்று ’பாஸ்மார்க்’ வாங்கி வாழ்வில் முன்னேறவேண்டிய இளைய சமுதாயம், ‘டாஸ்மாக்’ முன்னால் கால்கடுக்கத் தவங்கிடப்பதும், தவத்தின் பலனாய்க் கையிலும் பையிலும் மதுப்புட்டிகளோடு மதிமயங்கி அலைவதும் நல்லோரை நடுங்கவைக்கின்றது; நாணவைக்கின்றது!
இந்நிலையில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிவாகைசூடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்பதில் கட்சிகளிடையே கடும்போட்டி நிலவிவருகின்றது. அதற்கு அவை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துவது ’தேர்தல் வாக்குறுதிகளையே.’ ’மலை அகழ்க்குவம்; கடல் தூர்க்குவம்; வான் வீழ்க்குவம்; வளி மாற்றுவம்’ என்று கட்சித்தலைமைகள் தம் தகுதிக்குச் சற்றும் பொருத்தமிலா வகையில், தம்மைத் தாமே புகழ்ந்துகொண்டும், வாக்காளப் ’பெருங்குடி’ மக்களுக்குத் தாம் அன்னையைப் போல, தந்தையைப் போல என்றெல்லாம், நகைக்கத்தக்க வகையில், உறவுமுறை கொண்டாடிக்கொண்டும் வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகின்றன. வாக்களித்தோரின் ஆட்காட்டிவிரல் ’மை’ காய்வதற்குள் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படும் என்பதே உண்’மை’!

இந்த வேடிக்கையை எண்ணும்போது, அரசியலார் வாக்குறுதியளிக்கும் விஷயத்தில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்த ஆவூர் மூலங்கிழாரின் புறப்பாட்டொன்று நம் நினைவுக்கு வருகின்றது.

ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல்என மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் இன்றியும் புரப்போர்
புகழ்குறை படூம் வாயில்… (புறம் – 196)

”தம்மால் இயலக்கூடியதை இயலுமென்றும், இயலாததை இயலாதென்றும் சொல்வதே தாளாண்மையுடையோர்க்கு நன்மை பயப்பதாகும்; அதைவிடுத்து இயலாததை இயலுமென்றும், இயலுவதை இயலாதென்றும் மாற்றிப்பேசுவது இரப்போரை  ஏமாற்றுவதோடு, புரப்போரின் புகழையும் கெடுக்கும் செயல்கள் என்கிறார் புலவர். ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் பாண்டிய மன்னனுக்குச் சொல்லப்பட்ட இவ்வறிவுரை, இன்றைய அரசியல்வாதிகளுக்கும் அட்சரம் பிசகாமல் பொருந்தும் அதிசயத்தை என்னென்பது!

மக்கள்தொண்டினை அடிப்படையாகக் கொண்டதே அரசியல். ஆனால் பொதுமக்களுக்குத் தொண்டுசெய்து சிறப்பதினும், தம் மக்களுக்குத் (பிள்ளைகளுக்கு) ’துட்டு’ சேர்த்துச் செழிப்பதிலேயே அரசியல் தலைவர்களின் உள்ளம் ஈடுபாடு காட்டுவது கொடுமையன்றோ?

அதனினும் கொடுமை, கட்சித்தலைவர்கள் தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை. ஆம், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் எந்தச் சாதியின் கை ஓங்கியிருக்கின்றதோ அல்லது எந்தச் சாதியின் எண்ணிக்கை அதிகமோ அந்தச் சாதியைச் சேர்ந்த, பணம்படைத்த பெரும்புள்ளிதான் அங்கே வேட்பாளராய் நிறுத்தப்படுவார். இது நடைமுறையில் (பல காலமாயுள்ள) எழுதப்படாத சட்டம்! இங்கே கல்வித் தகுதிக்கோ, தனிமனித ஒழுக்கத்துக்கோ, மக்கள் முன்னேற்றச் சிந்தனைகளுக்கோ இடமேயில்லை.

அரசியல்களத்தில் ஒருகாலத்தில் இருந்து, இன்று பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும் கிடைக்காததாய்க் காணமற்போய்விட்ட நற்பண்புகளில் ஒன்று ’அவை நாகரிகம்’. அன்றைய அரசியல்தலைவர்கள் பொதுமேடைகளில் ஒருவரையொருவர் தரக்குறைவாக ஏசுவதற்குக் கூசினர். வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர், வெவ்வேறு சித்தாந்தங்களைக் கைக்கொண்டிருந்தோர் நட்புபாராட்டிய காலமும் இருந்ததுண்டு!! இவையெல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன இன்று!

ஒவ்வொரு கட்சியும் தம் ’எதிர்’க்கட்சியைக் ’எதிரி’க்கட்சியாகவே பாவித்து, ஒருவரை ஒருவர் அருவருக்கத்தக்க மொழிகளிலும், வழிகளிலும் விமரிசித்துக் கொள்(ல்)வதும், வசைமாரிப் பொழிவதும், ஒருவர்செய்த ஊழலை மற்றவர் புள்ளிவிவரங்களோடு அம்பலப்படுத்துவதும், பெரியதிரையில் ’மார்க்கெட்’ போன நடிக, நடிகையரை அழைத்துவந்து தத்தம் கட்சிக்காகக் குரல்கொடுக்க வைப்பதும்,  தேர்தல் காலங்களில் வீதிதோறும் அரங்கேறும் விநோதங்கள்!!

நன்னடத்தையாலும் நல்லாட்சியாலும் மக்கள் மனங்களை வெல்ல முயலாது, விலையில்லா வீட்டு உபயோகப்பொருட்களைத் தந்து மக்களை விலைக்குவாங்க முயலும் மலிவான வியாபாரமும் இன்றைய அரசியலில் சகஜம்!

இந்தக் கேலிக்கூத்துக்களையெல்லாம் கண்டு நொந்துநூலாகிப்போன பொதுஜனமோ, ’கறை’படியாத இந்த உத்தமர்களில்(!) யாருக்கு வாக்களிப்பது? யாரை ஆட்சிபீடத்தில் அமர்த்துவது? என்று ’திருதிரு’வென விழிக்கின்றது!

மாண்புமிகு அரசியல்வாதிகளே! சொல்வதைச் செய்வதோடு சொல்லாததையும் சேர்த்தே செய்யக் காத்திருக்கும் கனவான்களே! இத்தருணத்தில் (பாவப்பட்ட) பொதுஜனத்தின் சார்பாக உங்களோடு சில வார்த்தைகள்…

நீங்கள் தேர்தலில் நில்லுங்கள்; வெல்லுங்கள்…வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் மக்களை அவர்களின் பொருள்சார்ந்த பலவீனங்களைப் பயன்படுத்தி முட்டாளாக்க முயலாதீர்கள். விலையில்லா வீட்டுசாதனப் பொருட்களைத் தருவதை/தந்ததையெல்லாம் உங்கள் சாதனைகளாகப் பட்டியல் போடாதீர்கள். அவையெல்லாம் மக்களின் உழைக்கும்திறனை உறிஞ்சி, அவர்களைச் சோம்பேறிகளாக்குவதைத் தவிர வேறெதெற்கும் பயன்படப்போவதில்லை. அதைவிடுத்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை அதிக அளவில் உருவாக்கி, அவர்களைச் சொந்த உழைப்பில் முன்னேறவிடுங்கள்!

சாதிசார் வோட்டுக்களை இழந்துவிடக்கூடாது என்ற ‘நல்லெண்ணத்தில்’ நாட்டில் பற்றியெரியும் சா’தீ’ வன்முறைகளைக் கண்டும் காணாமலிருக்கும் கயமையை ஒழியுங்கள்! ’இளைதாக முள்மரம் கொல்க’ என்ற பொதுமறை ஆசிரியரின் வாக்கிற்கிணங்க, வன்முறைகளை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்! சாதிப்பகையற்ற சமூகத்தை உருவாக்குவதே உங்கள் சாதனையாகட்டும்!

சாராயக்கடைகளை திறந்து தமிழ்க்குடிமக்களை முதலில் ’தண்ணீரில்’ மிதக்கவிட்டது யார்? என்று பட்டிமன்றம் நடாத்துவதில் காலங்கடத்தாமல், அவற்றைமூடி, காலனிடமிருந்து தமிழ்க்குடிகளை முதலில் மீட்கப்போவது யார்? என்பதை மக்களுக்கு அறியத்தாருங்கள்! பேச்சோடு நில்லாமல் செயலிலும் அதனை முழுவீச்சில் காட்டுங்கள்!

மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையை ஒழித்தால் மட்டும் போதாது! அவர்களுக்கு எதிராக நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய்ப் பெருகிவரும் வன்கொடுமைகளுக்கும் வாய்க்கரிசி போடவேண்டிய கடமை அரசியலார்க்கு உண்டு என்பதை மறவாதீர்கள்!

’தமிழ்நாட்டில் தமிழ்தானில்லை’ என்று குமுறினார் பாவேந்தர். அந்த அவலம் இன்றும் வலம்வரும் நிலையை முற்றாய் நீக்கித் தமிழ்க்குழந்தைகள் தாய்த்தமிழ் கற்கவும், மெல்லத்தமிழ் நம் கண்ணெதிரிலேயே சாகாதிருக்கவும் வகைசெய்யுங்கள்!

ஈதொப்ப, நீங்கள் ஆற்றவேண்டிய அருஞ்செயல்கள் ஏராளம்! ஏராளம்!
ஆட்சிக்கட்டிலில் ஏறும் ஆசைக்கனவில் மிதப்போரே…!
இவற்றில் சிலவற்றையேனும் செய்வீர்களா…? நீங்கள் செய்வீர்களா…?



Friday, April 15, 2016

நன்னர் நெஞ்சம்!

பெண்களின் உள்ளம் அருள் நிறைந்தது; அன்பு வடிவானது. எனினும், எல்லாத் தருணங்களிலும் எல்லாரிடத்திலும் அவர்களுக்கு அன்பு பிறந்துவிடும்; அருள் சுரந்துவிடும் என்று உறுதி கூறுவதற்கில்லை. காதலுக்கும் இது பொருந்தும். அதனைப் பின்வரும் நிகழ்வு விளக்குகின்றது.

குறிஞ்சிநிலத் தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியின்பால் காதல் கொண்டான். அவளுடைய காதலை விரும்பியவனாய்த் தினந்தோறும் அவள் தன்தோழியுடன் இருக்கும் இடங்களுக்கெல்லாம் அலுப்பின்றிச் சலிப்பின்றி வந்து, அன்பான மொழிகளை அவளிடம் கூறிநின்றான். அதன்பின்னரும் தலைவின் நெஞ்சம் அவன்பால் திரும்பவில்லை; அவனை விரும்பவில்லை. ஆனால் இவற்றையெல்லாம் கூர்ந்துகவனித்துவந்த தோழியின் நெஞ்சமோ அவன்நிலைகண்டு உருகியது.

இவ்வாறு நாள்தவறாது தலைவியைக்காண வந்துகொண்டிருந்த தலைவனைச் சின்னாட்களாகக் காணவில்லை. அதுகண்டு வருந்திய தோழி, தலைவியை நோக்கி, ”பெண்ணே! ஒருநாளா? இருநாளா? உன்னைக்காண பன்னாள் (பல நாள்கள்) வந்து பணிமொழிகளை மீண்டும் மீண்டும் கூறி, உன் காதலையும், கனிவையும் எதிர்பார்த்துநின்றான் தலைவன். அவனுடைய இரங்கத்தக்க செய்கைகண்டு (உனக்கு நன்மையையே எப்போதும் எண்ணுகின்ற) என் நன்னெஞ்சு நெகிழ்ந்தது. இப்போதோ மலைமீது தூங்கும் முற்றிய தேனிறால் கீழேவீழ்ந்து மறைவதைப்போல் அவன் காணாமற்போயினான். நமக்குப் பற்றுக்கோடாய்த் திகழ்ந்த, எந்தையான அவன் எங்குச் சென்றானோ யானறியேன்; அதனால் வேற்றுப்புலத்திலுள்ள நல்லநாட்டில் பெய்தமழை பாய்ந்துவருதலால், நம்புலத்து நீர் கலங்கிப்போதல்போல என்னுள்ளம் கலிழ்கின்றது (கலங்குகின்றது)” என்றாள்.

ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை
வரைமுதிர் தேனிற் போகி யோனே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
வேறுபுல னன்னாட்டுப் பெய்த
ஏறுடை மழையிற்  கலிழும்என் னெஞ்சே.  (குறு: 176)

”ஒருநாளா? இருநாளா? பலநாள் வந்தானே உன்னைத்தேடி; உன்அன்பை நாடி” எனும் தோழியின் மொழிகளில், கஜினி முகம்மதுபோல் அயராதுதொடர்ந்த தலைவனின் விடாமுயற்சிக்காகவாவது நீ அவனை ஏற்றுக்கொண்டிருக்கலாகாதா?!” எனும் ஆற்றாமை தொனிக்கின்றது.

இப்பாடலில் கவனிக்கத்தக்க இன்னொரு சொல்லாட்சி ’ஆசாகு எந்தை’ என்பது. ”நமக்குப் பற்றுக்கோடாகிய எந்தை போன்றவன்” என்று தலைவனைத் தோழி அழைக்கிறாளென்றால் அவன்பால் எத்துணைப் பரிவும் பாசமும் அவள் கொண்டிருக்கின்றாள் என்பதனை நாம் உய்த்துணரலாம். தலைவிக்கு எப்போதும் நன்மையையே எண்ணுகின்ற தன் நெஞ்சை ‘நன்னர் நெஞ்சம்” என்று தோழி பெருமிதத்தோடு கூறிக்கொள்வதும் இங்கே கவனிக்கத்தக்கது.

மலையில் தொங்கிக்கொண்டிருந்த சுவையான தேனடை யாருக்கும் பயனின்றிவீழ்ந்துபோதல்போல், தலைவனின் இனிய காதலும் தலைவியின் காதல் கிடைக்கப்பெறாமையால் பயனற்று அழிந்தது என்பதை இப்பாடலின் உள்ளுறையாகக் கொள்வர்.

சிறிய பாடலாயினும் ஒவ்வொரு சொல்லிலும் ஆழ்ந்தபொருளை இப்பாடலின் ஆசிரியரும் பெண்பாற்புலவருமான வருமுலையாரித்தியார் பொதிந்துவைத்திருப்பது அவருடைய நுண்மாண் நுழைபுலத்திற்குச் சான்றாகின்றது. இவர் பாடியதாய்ச் சங்க இலக்கியத்தில் இந்த ஒருபாடல் மட்டுமே கிடைத்திருப்பது நம் தவக்குறைவே!
இந்தத் தலைவனைப் போன்றே நிதமும் தலைவியைச் சந்திக்கவரும் தலைவனொருவன், தன் வாயால் தன்காதலை வெளியிடத் தயங்கியவனாய் வந்துதிரும்பும் காட்சியைக் கலித்தொகை 37-ஆம் பாடலும் அழகாய்ப் பதிவுசெய்திருக்கின்றது.

கய மலருண் கண்ணாய் காணாயொருவன்
வயமான் அடித்தேர்வான் போலத் தொடைமாண்ட
கண்ணியன் வில்லன் வருமென்னை நோக்குபு
முன்னத்திற் காட்டுதல்லது தானுற்ற
நோய்உரைக் கல்லான் பெயரும்மன் பன்னாளும்  (கலி- 37)

பேசும் பொருளடிப்படையில் வேறுபட்டாலும், ஒருமை, இருமை, பன்மை எனும் சொற்களின் கட்டமைப்பில் ஒத்திருக்கும்,


ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ… (புறம்: 101) என்று ஔவையார் அதியனைப் போற்றிப்பாடிய புறநானூற்றுப் பாடலும் இந்தக் குறுந்தொகைப் பாடலோடு ஒப்பிட்டு மகிழத்தக்கதன்றோ?




Saturday, January 16, 2016

நல்வழியில் நடக்கும் தொல்குடி!

மனிதகுலம் தோன்றிய தொடக்ககாலத்தில் மனிதர்கள் தனித்தனியாகவே வாழ்ந்தனர். காலப்போக்கில் விலங்குகளிடமிருந்தும், மழை, காற்று, தீ முதலிய இயற்கைச் சக்திகளின் இடர்களிடமிருந்தும் தம்மைக் காத்துக்கொள்வதற்காகவே அவர்கள் குழுக்களாய் வாழத்தொடங்கினர். எப்போது குழுக்கள் தோன்றினவோ அப்போதே யார் அதனை வழிநடாத்திச் செல்வது? எனும் கேள்வியும் பிறந்து, ”உடல்வன்மையும் மனத்திண்மையும் வாய்ந்தவொருவனே அதற்குத் தகுதியானவன்என்ற தீர்வையும் அவர்கள் கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தியிருக்கவேண்டும்.

பின்னர், மாந்தகுலவளர்ச்சி காரணமாய், ஒரே இடத்தில் அனைவரும் வாழ்வதற்கு இயலாமல் மக்கள் இடம்பெயர்ந்தும், புலம்பெயர்ந்தும் குடியேறினர். அவ்வாறு அவர்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் தொழிலடிப்படையிலான பிரிவுகள் தோன்றின. அவ்வவ்விடங்களில் அவர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைவர்களும் தோன்றலாயினர். இதுவே நாளடைவில் முடியாட்சிமுறையை முகிழ்க்கச் செய்தது எனலாம். 

தலைவன் ஒருவன்கீழ் ஏனையோர் அடங்கிவாழும் இத்தகைய ஆண்டான் அடிமைமுறைக்கு என்று கால்கோள் நடப்பட்டதோ அன்றே போரும் பூசலும் வேர்கொள்ளத்தொடங்கிவிட்டன. யார் அடுத்துத் தலைவனாகி அனைவரையும் அடக்கியாள்வது? யார் வையமனைத்தையும் தன் கையகப்படுத்துவது? என்ற போட்டியில் ஒற்றுமையும் சகிப்புத்தன்மையும் சகமனிதரையும் தன்னைப்போல் நேசிக்கும் அன்புடைமையும் மனிதர்களிடம் காணாமற்போயின. இன்றோபேராசையற்றவரை, உலகத்தோடு ஒட்டவொழுகும் உயர்ந்தோரை, நிபந்தனையின்றி அனைவரிடமும் அன்புபாராட்டும் நல்லுளம் கொண்டோரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கின்றது

இத்தகைய சூழலில், அன்பும் அமைதியும் அறவாழ்வும் வாழ்வோரை இனிக் காணவே வாய்ப்பில்லையோ என்று நாம் கவலும் வேளையில்… ”ஏன் காணமுடியாது? இதோ நாங்கள் இருக்கிறோம்!” எனும் குரல்கள் நம் காதுகளில் அமுதத்துளிகளாய் விழுகின்றன.
ஆம்! அறத்தையும் அமைதிநெறியையும் கைக்கொண்டுவாழும் மக்கள் இன்னும் புவிப்பந்தைவிட்டு முற்றாய் அழிந்துபோய்விடவில்லை. அங்குமிங்குமாய்ச் சிலர் இன்னும் இந்நற்பண்புகளுக்கு நீர்பாய்ச்சி வளர்த்துவரவே செய்கின்றனர் என்றறியும்போது நமக்கு ஏற்படும் களிப்பு அளப்பரியது. அம்மேன்மக்கள் யார்? அவர்கள் எந்த நகரத்தில் வசிக்கின்றனர் என்று சிந்திக்கின்றீர்களா?

அவர்கள் யாரும் நகரத்தில், நவநாகரிக உலகில்வாழும் மேட்டுக்குடியினரல்லர்; கல்வியில் கரைகண்ட அறிஞர்களும் அல்லர். பின்னர் யார்?

அவர்கள் மலேசிய தீபகற்பத்திலுள்ள (Peninsular Malaysia) காடுகளில் வாழும் பழங்குடியினர்! என்ன வியப்பாயிருக்கின்றதா? அவர்கள் வாழ்க்கைமுறையை அறிந்தால் இன்னும் அதிகமான வியப்புக்கு நாம் ஆளாவோம்!

அப்பழங்குடியினரின் வாழ்க்கைமுறையை அறிந்துவருவோம்! வாருங்கள்!

ஓரங் அஸ்லி’ (Orang Asli = Native people/Aboriginal people) என்றழைக்கப்படும் மலேசியப் பழங்குடியினரில் 18 பிரிவுகள் (18 types of tribes) இருப்பதாய்த் தெரிகின்றது. இவர்கள் 3 பெரும் பிரிவுகளில் அடக்கப்பட்டுள்ளனர். அத்தகைய பிரிவுகளில் ஒன்றுசெமாங்’ (Semang). இந்தச் செமாங்கின் ஓர் உட்பிரிவுவேபெடக்’ (Batek) என்பது. இப்பிரிவினர் மலேசிய தீபகற்பத்திலுள்ள (Peninsular Malaysia) காடுகள், தாமான் நெகாரா தேசியப்பூங்கா (Taman Negara National Park) மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கின்றனர்.

பொருளாதாரம்: காட்டிலிருந்து வேட்டையாடியும் சேகரித்தும் கிடைக்கின்ற காடுபடுபொருள்களை விற்றும், அரிதாக, மிகச்சிறிய அளவில் பயிர்த்தொழில் செய்தும் ஈட்டும் பொருளே இம்மக்களின் வாழ்வாதாரம். பொதுவுடைமையின் தந்தையானகார்ல் மார்க்ஸ்வந்து போதிக்காமலேயே பொதுவுடைமைத் தத்துவத்தைப் பின்பற்றுவதைத் தம் கடமையாகக் கொண்டிருப்பவர்கள் இம்மக்கள். ஆம்! தனியொருவன், (இவர்கள்) அனைவருக்கும் பொதுவான நிலத்தைத் தனதென்று உரிமைகோரும்ஏகபோகமுதலாளித்துவக் கொள்கையே இவர்களிடம் கிடையாது. அவ்வளவு ஏன்அந்தச் சிந்தனையே கேலிக்குரியது எனக்கருதுபவர்கள் இம்மக்கள்! காடும், அதிலுள்ள வளங்களும் அனைவர்க்கும் பொதுவானவை என்பதே இவர்கள் சித்தாந்தம்.

நம்பிக்கைகளும் கொள்கைகளும் ஒரு மனிதன் இன்னொருவனிடம் எவ்வித நியாயமான காரணமுமின்றிச் சினங்கொள்வது, தம்மினத்தவருக்குக் காய்ச்சல், மூச்சுத்திணறல், உடல் பலவீனம், மனவுளைச்சல் முதலியவற்றைத் தருகின்றகெஓய்’ (ke’oy) எனும் நோயைப் பரப்பும் என்று நம்புகின்றனர் இவர்கள். இந்த நோயால் பீடிக்கப்பட்ட ஒருவனை, இதனைப் பரப்பியதாய் மக்கள் நம்பும் இன்னொருவன், நாட்டுவைத்திய முறைகளைக் கையாண்டும், நோயாளியின் மார்பில் குளிர்ந்தகாற்றை ஊதியும் அவனுடலில் குடியிருக்கும்கெஓய்நோயை விரட்டவேண்டும்.

இவ்வாறு, முறையற்றவெகுளியால் சமூகத்திற்குத் தீங்குசெய்வோர் இச்சமூகமக்களின் ஆதரவை இழப்பர். ’பெடக்சமூகமக்களைச் சமாதானச் சகவாழ்வை விரும்பும் வேட்டைச்சமூகத்தினர் – 2011’-ஆக (Batek, a peaceful foraging society – 2011) என்று அறிவித்தார் அமெரிக்காவின் நியூ ஹாம்ஷையரிலுள்ள டார்ட்மவுத் கல்லூரியின் மானுடவியல்துறையின் கவுரவப் பேராசிரியரும், (Emeritus Professor, Dept. of Anthropology, Dartmouth College, New Hampshire, U.S.A.), பழங்குடியினர் குறித்த ஆராய்ச்சியில் ஆர்வத்தோடு ஈடுபட்டுவருபவருமான பேரா. கிர்க் எண்டிகாட் (Porf. Kirk Endicott)  என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

போரைத் தவிர்த்தலும், தீர்த்தலும்: இம்மக்களிடையே கருத்துவேற்றுமைகள் ஏற்படுவது மிகக்குறைவு. அவ்வாறு ஏற்படுமாயின், பொதுமன்றில் தங்கள் பிரச்சனை குறித்து விவாதித்துத் தம் கருத்துக்கு ஆதரவு திரட்டுவது இவ்வினத்தாரின் வழக்கம். அம்முறை வெற்றிதராதாயின், கருத்துவேற்றுமை ஏற்பட்ட குழுக்களில் ஒன்று, மற்றொரு குழுவோடு தமக்கு விளைந்த கசப்புணர்வும் அதிருப்தியும் மாறும்வரைமறையும்வரை, சிறிதுகாலம் தம் சமூகத்தைவிட்டு வெளியேறிவிடுமாம். சிறிதுகாலம் சென்றபின்பே மீண்டும்வந்து தம் மக்களோடு இணையுமாம். ’காலமெனும் மாமருந்துகோபத்தையும் விரோதத்தையும் ஆற்றும் அருமருந்துஎன்று கண்டறிந்து செயற்படும் இம்மக்களின் உளவியலறிவு பிரமிப்பை ஏற்படுத்துகின்றது.

சமூகத்தில் ஆண், பெண் நிலை: இக்குடியினரில், ஆடவரே பொதுவாக வேட்டைத்தொழிலைச் செய்வோராகவும், பெண்டிர் காய்கனிகளைச் சேகரிப்போராகவும் விளங்குகின்றனர். எனினும், இருவரின் உழைப்பும் சமமாகவே மதிக்கப்படுகின்றது. அரிதாக, வேட்டையில் பெண்டிரும், காய்கனி சேகரிப்பில் ஆடவரும் ஈடுபடுவதுண்டு. ’இந்தத் தொழிலை இவர்தான் செய்யவேண்டும்எனும் கடுமையான வரையறையோ, ஆடவரையும் பெண்டிரையும் பால் அடிப்படையில் பிரித்துப்பார்க்கும் நடைமுறையோ இவர்களிடம் இல்லை.

திருமணங்களும் ஆண், பெண் இருவரின் அன்பின் அடிப்படையிலும் அவர்களிடம் காணப்படும் ஒத்தகுணங்களின் (பொருத்தத்தின்) அடிப்படையிலுமே அமைகின்றன. சமூகத்தின் அடக்குமுறையும், ஆதிக்கமும் காதலுக்குக் குறுக்கேநின்று குந்தகம் செய்வதில்லை. ஒத்த தலைவன் தலைவியருக்கிடையே அமையவேண்டியபத்துவகைப் பொருத்தங்கள்குறித்து ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம் சொல்வதை இங்கே நாம் பொருத்திப்பார்க்கலாம்.

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருஎன
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (தொல்: பொருள்: 488)
தொல்காப்பியம் அறியாத்தொல்குடியினரான இவர்கள் அந்நெறி நிற்பது வியப்பே!
இத்தகைய உளமொத்த காதல்வாழ்விலும், அத்திபூத்தாற்போல், கணவன் மனைவியரிடையேயான உறவில் விரிசல்கண்டுவிடுமானால் அவர்கள் இருவரும் மணவிலக்குப் பெறுவதையும் இச்சமூகம் அனுமதிக்கின்றது. அவ்வாறு மணவிலக்கு நிகழ்ந்துவிடும் சூழலில், மணவிலக்குப்பெற்ற பெண் தன் சுற்றத்தையும் நட்பையும் சார்ந்துவாழ வேண்டியவளாகின்றாள்.

குழந்தை வளர்ப்பு: ’பெடக்சமூகத்தைச்சேர்ந்த பெற்றோர் தம் குழந்தைகளைக் கொண்டாடுவதிலும், கொஞ்சுவதிலும், அவர்களோடு நேரம் செலவழிப்பதிலும் மிக்க ஆர்வம் உடையவர்கள். இதில், ஆண்குழந்தை பெண்குழந்தை எனும் பேதமில்லை அவர்களிடம்! பெற்றோர், குழந்தைகளை அடிப்பதும் தாக்குவதும் அரிதினும் அரிது. ஏனெனில் தாக்குதல், கொல்லுதல் எனும் பொருள்களில் கையாளப்படும்சேகல்’ (sakel) எனும் சொல், இச்சமூகத்தினரால் கடுமையாக வெறுத்து ஒதுக்கப்பட்ட சொல்லாகும். தாக்குதல் எனும் சொல்லையே வெறுப்பவர்கள் அதனைச் செயலில்காட்ட முனைவரா? குழந்தைகள்விளையாட்டில்கூட முரட்டுத்தனமோ, வன்முறையோ ஒருவரோடு ஒருவர் போட்டியிடுவதோ கூடாது என்றெண்ணுபவர்கள் இவர்கள். இவ்வினமக்களைப் பெற்றோராகப் பெறும் பிள்ளைகள் பேறுபெற்றோரே என்று எண்ணத்தோன்றுகின்றது!

சமுதாய நடைமுறைகள்: இச்சமூகத்தினரில், ஒத்தசெயல்களில் ஆர்வம்கொண்ட பலர் ஒன்றுகூடி அச்செயல்களில் ஈடுபடுதல் வழக்கம். அவற்றிலொன்று மீன்பிடித்தல். எப்போதும் சுறுசுறுப்புடன் திகழும் இம்மக்கள் சோம்பித்திரிவதை விரும்புவதில்லை. ஏனெனில், ஒருவருடைய சோம்பல் இன்னொருவருக்கு வேலைப்பளுவைக்கூட்டும் என நினைக்கின்றனர்.

சுயமதிப்பீடு: ’கானகமே தம் உறைவிடம்என்றெண்ணும் இவ்வினத்தார், தம்மைக்கானவராய்அடையாளப்படுத்துவதையே விரும்புகின்றனர். காட்டில் எந்த இடத்தில் தங்க விழைகின்றனரோ அங்கே குடிசைபோட்டுத் தங்குவதைத் தம் வழக்கமாய்க்கொண்டிருக்கின்றனர். கானகவாசம் குளிர்ச்சியையும், நல்ல உடல்நலத்தையும் தமக்குத்தருவதாய்க் கருதுகின்ற இம்மக்கள், மரங்களடர்ந்த காட்டைவிட்டு, வெப்பம்மிகுந்த திறந்தவெளிகளில் தங்குவதை விரும்புவதில்லை.

பகிர்ந்துண்ணல்: பெடக்சமூகத்தைப் பொறுத்தவரை, தாங்கள் வேட்டையில் சேகரித்த உணவுப்பொருள்கள் அனைத்தையும் பகுத்துண்டுவாழும் பண்புகொண்டோராய்த் திகழ்கின்றனர். தம் இல்லங்களில் சமைக்கப்படும் உணவைத் தட்டிலிட்டு அதனைத் தம் பிள்ளைகளின் தளிர்க்கரங்களில் தந்து, மற்றவருக்கும் பகிர்ந்தளித்து உண்ணுதல் என்பது இவர்களின் வாழ்க்கைமுறையாய் இருக்கின்றது. பகுத்துண்ணலின் மகத்துவத்தைக் குழந்தைகளும் அறியவேண்டும் என்பதற்கான ஏற்பாடே இது. உணவு மட்டுமல்லாது, இவர்களுக்குப் பரிசிலாய்க் கிடைக்கும் பொருள்களையும்,  வணிகத்தின் வாயிலாய்ப் பெறும்/வாங்கும் பொருள்களையும் இவர்கள் பிறரோடு பகிர்ந்துகொள்ளத் தயங்குவதில்லை.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (322) என்ற வள்ளுவத்தை இவர்கள் எங்குக் கற்றனர்?

போருக்கும் வன்முறைக்கும் எதிரான அணுகுமுறை: இத்தொல்குடி மக்கள் வன்முறைக்கு முற்றிலும் எதிரானவர்கள். யாரேனும் பகைவர் தம்மைத் தாக்கவந்தால், எதிர்த்தாக்குதல் தொடுக்காமல் அவர்களிடமிருந்து தப்பியோடிவிடுவதையே தம் வழக்கமாய் வைத்திருக்கின்றனர். இது பயத்தினால் அன்று! பகைவனுக்கும் அருளும் இவர்தம் நன்னெஞ்சில் விளைந்த பாசத்தினால்!

1988-ஆம் ஆண்டு, பெடக் மக்களை அவர்கள் வசிக்கும் காட்டுப்பகுதிக்கே சென்று சந்தித்த பேராசிரியர் எண்டிகாட், இவ்வினத்தைச்சார்ந்த மனிதன் ஒருவனிடம், “உம்முடைய முன்னோர் ஏன் தம்மைத் தாக்கியோரைத் துப்பாக்கியால் சுடவில்லை?” (“Why didn’t his ancestors shoot the attackers?”) என்று வினவியுள்ளார். அதற்கு அம்மனிதன் சற்று அதிர்ச்சியோடு, ”ஏனெனில், அவ்வாறு தாக்குவது அவர்களைக் கொன்றுவிடுமே!” (“Because it would kill them”) என்று பதிலிறுத்திருக்கின்றான். இப்பதில் அந்தப் பேராசிரியரை மட்டுமன்றுநம்மையும் திகைக்கவைக்கின்றது!

வன்முறை, மற்றவருக்குத் துன்பமிழைத்தல், பழிவாங்குதல் போன்ற இழிகுணங்களை முற்றாய் வெறுத்தொதுக்கிய மக்கள் இவர்கள்!” என்று இவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கும் பேராசிரியர் எண்டிகாட், அண்டையில் வாழும் மலேசிய மக்களால் தமக்கு ஏற்படும் தொந்தரவுகளைத்தவிர்க்க இம்மக்கள் அவ்விடங்களைவிட்டு அகன்றுசெல்கின்றனரேயொழிய அவர்களை எதிர்த்துத் தாக்குதலோ, போரோ புரிவதில்லை என்று பதிவுசெய்திருக்கின்றார் (It was recorded in 1988).

வான்புகழ் வள்ளுவரின் தெய்வக்குறள் போதிக்கும் இன்னாசெய்யாமை, சான்றாண்மை, ஈகை, ஒப்புரவு, அன்புடைமை, விருந்தோம்பல் உள்ளிட்ட அனைத்து அறப்பண்புகளையும் தம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கின்றனர் மலேசியக் கானகவாசிகளான பெடக் மக்கள்.

நகரங்களில் வாழ்ந்தால்தான் நாகரிகம் வளரும்; பண்பாடு மிளிரும் என்ற எண்ணத்தில் நகரங்களை நாடிச்சென்று வாழ்ந்துவரும் நாகரிக மனிதர்களிடத்தும், அனைத்து அறநூல்களையும் எழுத்தெண்ணிப் படித்துவிட்டோம் என்று தருக்கோடும் செருக்கோடும் செப்பித் திரியும் மெத்தப்படித்த மேதைகளிடத்தும் காணக்கிடைக்கா அரும்பண்புகள், ’கானவர்என்று தம்மைப் பெருமிதத்தோடு புகலும் படிப்பறியா, உலகின் பாடறியா இத்தொல்குடியினரிடம் நிறைந்து கிடக்கின்றது!

காட்டில் வாழ்ந்தாலும், கல்வியில் (நகர்வாழ் மக்களினும்) தாழ்ந்தாலும், நயத்தகு நாகரிகத்திலும், வியத்தகு (மாந்தப்) பண்புகளிலும் நாடுவாழ் நல்லறிஞரினும், காடுவாழ் இத்தொல்குடியினர் பன்மடங்கு உயர்ந்துநிற்கின்றனர். இத்தகையோராலேயே மானுடம் வெல்கின்றது!