ஜெர்மனியிலுள்ள கய்சர்பர்க் (Kayserburg) எனும் கிராமத்தில், சனவரி 14, 1875-இல், தேவாலயத்தில் கிராமபோதகராய்ப் பணிசெய்துவந்த (the local Lutheran-Evangelical pastor) ஒருவரின் மகனாய்ப் பிறந்தவர் ஆல்பர்ட் சுவைட்சர் (Albert Schweitzer) எனும் பெருமகனார்.
மெய்யறிவாளர், மதபோதகர், இசைத்துறை
வல்லுநர், புகழ்பெற்ற மருத்துவர் இப்படிப் பன்முக ஆற்றலளாராய் மிளிர்ந்த
சுவைட்சர், மன்னுயிர்பால் நேயம் கொண்ட மாமனிதராய்த் திகழ்ந்து மன்பதையில்
அழியாப் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை, வேதாகமம் போன்ற துறைகளில் தேர்ச்சிபெற்றிருந்த அவர், பின்பு மெய்ந்நூலிலும் (theology) முனைவர்
பட்டம்பெற்று, ஜெர்மனியின் ஸ்டார்ஸ்பர்க் (Strasbourg) பல்கலைக்கழகத்தில்
சில ஆண்டுகள் மெய்ந்நூலியல் விரிவுரையாளராய்ப் பணியாற்றியபின், அங்குள்ள
சமயக் கல்லூரி ஒன்றில் முதல்வராய்ப் பணிபுரிந்திருக்கின்றார்.
சமயநூற் கல்வி, இசைநூற் கல்வி, மெய்ந்நூற்
கல்வி என்று பலவற்றிலும் தேர்ச்சிபெற்றுப் புகழோடு
திகழ்ந்துகொண்டிருந்தாலும் இவற்றால் சுவைட்சர் மனநிறைவு கொண்டாரில்லை.
பிறருக்கு உழைக்கவேண்டும் எனும் எண்ணம் கொண்ட அவர்மனம் அதற்கான வழிகள்
குறித்தே சிந்தித்துக்கொண்டிருந்தது.
அவ்வேளையில், ’உறங்கும் நோயால்’ (sleeping
sickness) ஆப்பிரிக்க மக்கள் மிகுந்த இடர்ப்பட்டு நூற்றுக்கணக்கில்
இறந்துகொண்டிருப்பதை அறிந்து மிகுந்த வருத்தமுற்றார் அவர். அம்மக்களின்
துயர்துடைப்பதே தன் வாழ்வின் இலட்சியம் என்றெண்ணியவர், தன் கனவு மெய்ப்பட
1906-ஆம் ஆண்டு மீண்டும் ஸ்டார்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறை
மாணாக்கராய்ச் சேர்ந்துவிட்டார்.
ஏழாண்டுகள் அத்துறையில் பயின்று
மருத்துவராய்த் தகுதிபெற்றார். தன் முப்பத்தேழாவது வயதில் ஹெலன் பிரஸ்லௌ
(Helen Bresslau) எனும் பெண்மணியை மணந்தார். இருவரும்
கருத்தொருமித்த காதலராய் விளங்கினர். ஆப்பிரிக்காவிற்குச் சென்று
மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் எனும் சுவைட்சரின் எண்ணத்திற்கு ஹெலன்
பெரிதும் துணைநின்றார். ஆப்பிரிக்காவிலுள்ள லாம்பரின் (Lambarene) எனும்
குன்றுகள் நிறைந்த பகுதிக்குத் தன் மனைவியோடு கப்பலில் பயணம் மேற்கொண்ட
சுவைட்சர், இயற்கைச் சீற்றங்கள் பலவற்றைக் கடந்து அவ்விடத்தை அடைந்தார்.
குன்றுகள் நிறைந்த அப்பகுதில் குன்றாத மனவுறுதியோடு ஏழைமக்களுக்குத் தொண்டு
செய்யத் தொடங்கினார்.
ஐரோப்பா கண்டத்தில் வெள்ளை இனத்தில் பிறந்த
அவர் ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவரின் நோய்களை குணப்படுத்தி அவர்தம்
வாழ்க்கையில் புத்தொளி பாய்ச்ச விழைந்ததை எண்ணுகையில், ‘யாதும் ஊரே யாவரும்
கேளிர்’ எனும் புறநானூற்று வரிகளின் உதாரண மனிதராய் அவர் திகழ்ந்திருப்பது
தெற்றெனப் புலப்படுகின்றது.
’உயிர்கள் தொழத்தக்கவை’ எனும் உறுதியான
எண்ணங்கொண்ட சுவைட்சர், மனிதர்கள் வாழ்வதற்கு ஆசைப்படுவதுபோலவே பிற
உயிர்களும் ஆசைப்படுகின்றன என்பதைக் கண்டார். அனைத்து உயிர்களையும்
பாதுகாப்பதில் அளவிலா ஆவல் கொண்டார். சுவைட்சரின் உயிரிரக்கம், நம்
இராமலிங்க வள்ளலின் சீவகாருண்யக் கோட்பாட்டோடு ஒப்பிடத்தக்கதாகும்.
லாம்பரீனில் அவர் பணிசெய்துகொண்டிருந்த
நேரத்தில் முதல் உலகப்போர் மூண்டது. அவரால் தொடர்ந்து அங்கே மருத்துவப் பணி
செய்யமுடியாத சூழல் ஏற்பட்டதால் வேதனையோடு தன் சொந்த நாட்டிற்குத்
திரும்பினார்.
மருத்துவத்துறையை ஒதுக்கிவைத்துவிட்டுத் தத்துவ போதகராகவும்
இசை ஆசிரியராகவும் அவர் மீண்டும் அங்கே பணிபுரிந்துவந்த வேளையில், சுவீடனில்
சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கு அவருக்கு அழைப்பு வந்தது. அதனால் உற்சாகம்
கொண்ட சுவைட்சர், ”மரப்பெட்டியினுள்ளே மறைந்து கிடக்கும் காசு போன்ற என்னை
மக்கள் மறக்கவில்லை” என்று தனக்குத்தானே கூறி மகிழ்ந்தார்.
சில ஆண்டுகளில் சுவிட்சர்லாந்திலுள்ள
சூரிச் பல்கலைக்கழகம் (Zurich University) அவருக்கு ’கவுரவ டாக்டர் பட்டம்’
அளித்துச் சிறப்பித்தது. அதைத்தொடர்ந்து, ’பழைய காட்டோரத்தில்’ (On the
edge of the primeval forest) எனும் பெயர்கொண்ட அவருடைய நூலொன்று
வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு பல மொழிகளிலும் அறிஞர்களால்
மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது. ’நாகரிகமும் அறமும்’ (civilization and
ethics) எனும் அவரின் மற்றொரு நூல் 1923-ஆம் ஆண்டு வெளியானது. அந்நூலில்,
“மனிதர்களின் நாகரிகம் பாழாகிக்கொண்டிருப்பதைத் தடுக்கவேண்டுமானால்
‘உயிர்களின் தொழுதகைமை’ (reverence for life) என்ற அறவுள்ளத்தால் மட்டுமே
அது சாத்தியமாகும்” என்று தெளிவாய்க் குறிப்பிட்டிருந்தார் சுவைட்சர்.
மனக்கட்டுப்பாட்டில் மிகுந்த நம்பிக்கை
கொண்டிருந்த சுவைட்சர், ”மனம் சென்றவிடத்திலெல்லாம் அதனை விட்டுவிடுதல்
கூடாது என்றும் அதனைத் தீயதிலிருந்து நீக்கி நல்லதன்கண் கொண்டு செலுத்துதல்
வேண்டும்” என்றும் விளம்பினார்.
நன்றின்பால் உய்ப்ப தறிவு எனும் தெய்வப்புலவரின் பொய்யாமொழி ஈண்டு நினைவுகூரத்தக்கது.
’மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ எனும்
அற்புளத்தோடு பணியாற்றிக்கொண்டிருந்த சுவைட்சருக்கு 1953-ஆம் ஆண்டு
வரவேற்புப் பதக்கம் (Welcome Medal) எனும் பெரும்பரிசும் பணமுடிப்பும்
அளிக்கப்பட்டன. அப்பணம் முழுவதையும் ஆப்பிரிக்கப் பெருநோயாளிகளின்
(தொழுநோய்) சிகிச்சைகளுக்காகவே செலவிட்டார் அம்மாமனிதர். சமுதாயத்தால்
அருவருப்போடு ஒதுக்கப்பட்ட, அங்கம் அழுகிப்போன தொழுநோயாளிகளுக்கு
மருத்துவம் செய்து அவர்களின் தொழத்தக்க தெய்வமாக விளங்கினார் சுவைட்சர்.
அவருடைய அருந்தொண்டைப் பாராட்டும் வகையில் 1952-ஆம் ஆண்டு அவருக்கு நோபல்
சமாதானப்பரிசு (Noble peace prize) வழங்கப்பட்டது.
வயது முதிர்ந்த நிலையிலும் மக்கள் சேவையை
நிறுத்தாத அம்மனிதருள் மாணிக்கம், அற்றார்க்கொன்று ஆற்றுவதிலேயே தன்
உள்ளத்தைச் செலுத்தினார். அவரின் மகத்தான பணிகளை அறிந்த எலிசபெத்
மகாராணியார் அவருக்கு ’Order of Merit’ எனும் சிறந்ததொரு பட்டத்தை 1965-இல்
அளித்து மகிழ்ந்தார்.
பல்வேறு நாடுகளுக்கும் சென்று
சொற்பொழிவாற்றும் வழக்கத்தைக் கொண்டிருந்த சுவைட்சர், தம் பொழிவுகளில்
கூறிய அறக்கருத்துக்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை ஆகும்.
”பெருங்குடி மக்களாய்ப் பிறந்தவர்கள் பணியொன்றும் செய்யத் தேவையில்லை;
பணியாற்றப் பிறந்தவர்கள் இழிகுடி மக்களே ஆவர்” என்று கிரேக்க அறிஞர்கள்
பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் கூறிய கருத்துக்களைக் கடுமையாக எதிர்த்த
சுவைட்சர், உயிர்களுக்குள் பிரிவினையும் வேறுபாடும் கூடாது என்று
வலியுறுத்திப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் வான்புகழ்
வள்ளுவரின் கருத்தைப் பரப்புரை செய்திருப்பது போற்றுதலுக்குரியது.
’தமக்கென்றே உழைத்துக்கொண்டிராமல்
பிறர்க்காகப் பாடுபடுவோரால்தான் உலகம் உயர்வடையும்’ என்பதையே தன் வாழ்வின்
தலையாயக் கொள்கையாய்க் கொண்டிருந்தவர் சுவைட்சர்.
”தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே” என்ற புறப்பாட்டின் வரிகளும் இதைத்தானே செப்புகின்றன.
சுவைட்சரின் பேச்சுக்கள் அவர் உள்ளத்தின்
ஆழத்திலிருந்து எழுந்தவை; ஆகவே அவைப் பிறர் உள்ளத்தை எளிதில் தொடுவனவாயின.
நாள்தோறும் பிறர்க்கு உழைப்பதையே கடமையாய்க் கொண்டிருந்த சுவைட்சரைப்
பார்த்து அவர் மனைவி ஒருநாள், “எவ்வளவு நாட்களுக்கு இப்படி ஊருக்காகவே
உழைத்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள்?” என்று வினவியதற்கு, “என் மூச்சு
உள்ளவரையில்” என்று புன்னகையோடு பதிலளித்தாராம் சுவைட்சர். இவரன்றோ
பேராண்மையாளர்!
திருக்குறள்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டஅவர், ”வாழ்வுக்குரிய அன்பு நெறியையும், உயர்ந்த ஞானத்தையும்
புகட்டும் ஒப்பற்ற நூல் திருக்குறள்; இதுபோன்றதொரு நூல் உலக இலக்கியத்தில்
வேறெங்குமே இல்லை” என அறுதியிட்டு உறுதிபட உரைத்துள்ளார்.
”மனித நாகரிகம் என்பது ஆடம்பரங்களில்
இல்லை; அஃது ஆன்ம வளர்ச்சியில் இருக்கின்றது” என்று முழங்கிய அப்பேரறிஞர்,
ஒல்லும் வாயெல்லாம் வினையாற்றிய பேரருளாளரும் ஆவார். பொறிகளைக் கையாளுவதில்
மக்களுக்கிருக்கும் ஆர்வம், நல்ல நெறிகளைக் கைக்கொள்வதிலும் இருத்தல்
அவசியம் என்றார்.
தன் வாணாளின் கடைசி நிமிடம்வரைப்
பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த மகாத்மாவான சுவைட்சரின் வாழ்க்கையும், அவரின்
அறவுரைகளும் நாமனைவரும் படித்துப் பின்பற்றவேண்டியவை.
No comments:
Post a Comment