உலகின் மிகச்சிறந்த புதின எழுத்தாளர்களில் ஒருவராக இன்றளவும் கருதப்படுபவர், லியோ டால்ஸ்டாய் என்றழைக்கப்பட்ட லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய் (Lev Nikolayevich
Tolstoy). இவர் ரஷ்யாவிலுள்ள யாஸ்னயா போல்யானா (Yasnaya Polyana) எனும் ஊரில் செப்டம்பர் 9, 1828-இல் மிகவும் புகழ்வாய்ந்த பிரபுத்துவப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே தாய் தந்தை இருவரையும் இழந்த டால்ஸ்டாய் உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்தார்.
1848-ஆம் ஆண்டு ரஷியாவின் பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான கசான் பல்கலைக்கழகத்தில் (Kazan University) அடியெடுத்துவைத்த டால்ஸ்டாய், கிழக்கத்திய மொழிகளையும் (Oriental Languages) பின்பு சட்டத்தையும் தன் விருப்பப் பாடங்களாகப் பயிலத் தொடங்கினார். கல்வியில் பின் தங்கியவராகவே அவரைக் கருதிய அவருடைய பேராசிரியர்கள், ’படிப்பதில் விருப்பமில்லாதவர், அதற்கான தகுதியும் இல்லாதவர்’ என்றெல்லாம் அவர்மீது முத்திரை குத்தவே, மனவருத்தமுற்றுக் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டுத் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். பின்பு இராணுவத்தில் வேலை செய்துகொண்டிருந்த தன் மூத்தசகோதரர் நிக்கொலேவைப்போல (Nikolay) தானும் இராணுவத்தில் சேர்ந்தார். அப்போதுதான் அவருடைய எழுத்துப்பயணம் ஆரம்பித்தது எனலாம். இராவணுப்பணியிலிருந்து விலகிய பின்னும் தன் எழுத்துப்பணியிலிருந்து அவர் விலகவில்லை.
டால்ஸ்டாயின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புக்களாக இன்றளவும் பேசப்படுவவை ’போரும் அமைதியும்’, ’அன்னா கரீனினா’ ஆகிய இரு நாவல்கள். சாகாவரம் பெற்ற இவ்விரு நாவல்களும் உலகின் தலைசிறந்த நாவல்களின் வரிசையில் இன்றளவும் தொடர்ந்து இடம்பிடித்து வருபவை.
’போரும் அமைதியும்’ எனும் நாவல், ரஷ்யாவில் நிகழ்ந்த நெப்போலியன் போனபார்ட் (Nepoleon Bonaparte) தலைமையிலான பிரெஞ்சு ஊடுருவலை, ஐந்து (ரஷிய) பிரபுக் குடும்பங்களின் பார்வையில் பேசுகின்றது. ஆனால் இந்நாவலின் இறுதி அத்தியாயங்கள் முந்தைய கதைப்போக்கிலிருந்து பெரிதும் விலகி, தத்துவங்களை உரையாடல் நடையில் பேசுவதாய் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாவலுக்குரிய இலக்கணங்களிலிருந்து மாறியிருப்பதாலோ என்னவோ, ’”போரும் அமைதியும் எனும் இந்நாவலை, ஒரு நாவல் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; வேண்டுமானால் அதனை வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பாய்க் கொள்ளலாம்” என்று டால்ஸ்டாயே கூறியிருக்கின்றார். தன்னுடைய அடுத்த நாவலான ”அன்னா கரீனினாவே (Anna Karinina) தனது உண்மையான முதல் நாவல்” என்பது அவருடைய கருத்தாகும்.
அக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், அன்னா கரீனீனா மிக நேர்த்தியான வடிவம் கொண்ட ஒரு நாவல் என்பது பெரும்பான்மையான உலக எழுத்தாளர்கள், விமரிசகர்கள் மற்றும் வாசகர்களின் எண்ணமாய்ப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. டால்ஸ்டாயினால் புனையப்பட்ட மாபெரும் உணர்ச்சிக் காவியம் அன்னா கரீனினா; அஃதோர் உயிருள்ள கலைப்படைப்பு எனில் மிகையில்லை.
காதலுக்காகக் குடும்ப வாழ்க்கையைத் துறப்பதா? அல்லது குடும்ப வாழ்க்கையைத் துறப்பதால் ஏற்படும் களங்கத்திற்கும் ஒழுக்கக்கேட்டிற்கும் பயந்து காதலில்லாத திருமண வாழ்வையே தொடர்வதா? எனும் மிகச் சிக்கலான கேள்வியும் அதற்கான பதிலுமே இந்நாவலின் பயணமாய் நீண்டிருக்கின்றது.
”‘மகிழ்ச்சியான குடும்பங்களெல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன; துயரமான குடும்பங்கள்தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன” (Happy families
are all alike; every unhappy family is unhappy in its own way). எனும் அன்னா கரீனினாவின் தொடக்க வரிகள் மிகவும் புகழ்வாய்ந்தவை.
ரஷியாவின் மேட்டுக்குடியைச் சேர்ந்த பெண்ணான ’அன்னா’வே இந்நாவலின் நாயகி. அவளுடைய மகிழ்ச்சியில்லா மண வாழ்க்கை, பின்பு மற்றொரு ஆடவனோடு (Vronsky) அவளுக்கு ஏற்படும் காதல், அதனால், கணவனையும் மகனையும் பிரிந்துசெல்லும் அன்னாவுக்குச் சிலகாலத்திற்குள்ளாகவே தன் காதலன் மீது ஏற்படும் அவநம்பிக்கை, ஐயம், தன் முந்தைய மண வாழ்க்கையை விட்டுவந்தது பற்றிய குற்ற உணர்வு இப்படிப் பல்வேறு நிலைகளில் அன்னாவின் மனஉணர்வுகளை மிக நுண்மையாகச் சித்தரித்திருக்கிறார் டால்ஸ்டாய். உலக இலக்கியத்தில் உளவியல் ரீதியாக அதிநுண்ணிய ஆய்வுகள் செய்யப்பட்ட வெகு சில நாவல்களில் அன்னா கரீனினாவும் ஒன்று என்பது ஆய்வாளர்கள் கருத்து.
உலக நாடுகளிலுள்ள பல்வேறு மதங்கள் பற்றியெல்லாம் ஆர்வத்தோடு அறிந்துவைத்திருந்த டால்ஸ்டாய், இந்தியாவின் வீரத்துறவி விவேகானந்தர் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார். “தன்னலமற்ற ஆன்மிக வழியில் சென்றவர்களில் இவரையும் விட அதிகமான உயர்ந்த நிலையை அடைந்தவர் எவரேனும் இருக்கிறாரா என்பது சந்தேகமே” என்பது விவேகானந்தரைப் பற்றிய ரஷிய இலக்கிய மேதையின் மதிப்பீடு.
அகிம்சையில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்த டால்ஸ்டாய், அதை வலியுறுத்தி எழுதிய ’பரலோக இராச்சியம் உன்னுள் இருக்கிறது’ (The kingdom of God is
within you) எனும் நூலே, டால்ஸ்டாயைத் தன் குருவாகக் கொண்டிருந்த மகாத்மா காந்திக்கு அறவழியில் போராட மிகப்பெரும் உந்துசக்தியாக இருந்திருக்கின்றது என அறிகின்றோம்.
இராமசேஷன் என்ற இந்தியப் பத்திரிகையாளர் ஒருவர், ’ஆங்கிலேயரின் கொடுமைகள் தாங்க முடியவில்லை. அதிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி சொல்லுங்கள் என்று குறிப்பிட்டு டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினாராம். அதற்குப் பதில் எழுதிய டால்ஸ்டாய், ‘ஹிண்டு குரலில்’ (திருக்குறளைத்தான் அவர் அப்படிக் கூறியுள்ளார்) உள்ள ’இன்னா செய்யாமை’ அதிகாரத்தின் ஆறு குறட்பாக்களைக் குறிப்பிட்டு, (அதன்படி) அறவழியில் போராடுங்கள்; அதுவே உங்கள் மண்ணுக்கு ஏற்றது என்று தன் பதிலில் தெரிவித்திருந்தாராம். (ரஷிய மேதையைக் கவர்ந்தவர் ஐயன் வள்ளுவர் என எண்ணும்போது நம் நெஞ்சு விம்மிதம் கொள்ளுகிறது!)
மிகவும் வசதியான குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் எளிமையை விரும்புபவராகவும், அறவழியில் போராடுவதில் நம்பிக்கை கொண்டவராகவுமே டால்ஸ்டாய் வாழ்ந்தார். அமர இலக்கியங்கள் பல படைத்து, இன்றும் உலக மக்கள் பலரும் போற்றும் ஓர் இலக்கியவாதியாக, தத்துவஞானியாக, ஆன்மிகப் போராளியாக அவர் திகழ்ந்து வருகின்றார்.
அம்மேதையின் நூல்களைக் கற்போம்! அவர் வாழ்ந்துகாட்டிய எளிய வாழ்க்கையை நாமும் பின்பற்றுவோம்!
No comments:
Post a Comment