பெண்களின் உள்ளம் அருள் நிறைந்தது;
அன்பு வடிவானது. எனினும், எல்லாத் தருணங்களிலும் எல்லாரிடத்திலும் அவர்களுக்கு அன்பு
பிறந்துவிடும்; அருள் சுரந்துவிடும் என்று உறுதி கூறுவதற்கில்லை. காதலுக்கும் இது பொருந்தும்.
அதனைப் பின்வரும் நிகழ்வு விளக்குகின்றது.
குறிஞ்சிநிலத் தலைவன் ஒருவன் தலைவி
ஒருத்தியின்பால் காதல் கொண்டான். அவளுடைய காதலை விரும்பியவனாய்த் தினந்தோறும் அவள்
தன்தோழியுடன் இருக்கும் இடங்களுக்கெல்லாம் அலுப்பின்றிச் சலிப்பின்றி வந்து, அன்பான
மொழிகளை அவளிடம் கூறிநின்றான். அதன்பின்னரும் தலைவின் நெஞ்சம் அவன்பால் திரும்பவில்லை;
அவனை விரும்பவில்லை. ஆனால் இவற்றையெல்லாம் கூர்ந்துகவனித்துவந்த தோழியின் நெஞ்சமோ அவன்நிலைகண்டு
உருகியது.
இவ்வாறு நாள்தவறாது தலைவியைக்காண
வந்துகொண்டிருந்த தலைவனைச் சின்னாட்களாகக் காணவில்லை. அதுகண்டு வருந்திய தோழி, தலைவியை
நோக்கி, ”பெண்ணே! ஒருநாளா? இருநாளா? உன்னைக்காண பன்னாள் (பல நாள்கள்) வந்து பணிமொழிகளை
மீண்டும் மீண்டும் கூறி, உன் காதலையும், கனிவையும் எதிர்பார்த்துநின்றான் தலைவன். அவனுடைய
இரங்கத்தக்க செய்கைகண்டு (உனக்கு நன்மையையே எப்போதும் எண்ணுகின்ற) என் நன்னெஞ்சு நெகிழ்ந்தது.
இப்போதோ மலைமீது தூங்கும் முற்றிய தேனிறால் கீழேவீழ்ந்து மறைவதைப்போல் அவன் காணாமற்போயினான்.
நமக்குப் பற்றுக்கோடாய்த் திகழ்ந்த, எந்தையான அவன் எங்குச் சென்றானோ யானறியேன்; அதனால்
வேற்றுப்புலத்திலுள்ள நல்லநாட்டில் பெய்தமழை பாய்ந்துவருதலால், நம்புலத்து நீர் கலங்கிப்போதல்போல
என்னுள்ளம் கலிழ்கின்றது (கலங்குகின்றது)” என்றாள்.
ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை
வரைமுதிர் தேனிற் போகி யோனே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
வேறுபுல னன்னாட்டுப் பெய்த
ஏறுடை மழையிற் கலிழும்என் னெஞ்சே. (குறு: 176)
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை
வரைமுதிர் தேனிற் போகி யோனே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
வேறுபுல னன்னாட்டுப் பெய்த
ஏறுடை மழையிற் கலிழும்என் னெஞ்சே. (குறு: 176)
”ஒருநாளா? இருநாளா? பலநாள் வந்தானே
உன்னைத்தேடி; உன்அன்பை நாடி” எனும் தோழியின் மொழிகளில், கஜினி முகம்மதுபோல் அயராதுதொடர்ந்த
தலைவனின் விடாமுயற்சிக்காகவாவது நீ அவனை ஏற்றுக்கொண்டிருக்கலாகாதா?!” எனும் ஆற்றாமை
தொனிக்கின்றது.
இப்பாடலில் கவனிக்கத்தக்க இன்னொரு
சொல்லாட்சி ’ஆசாகு எந்தை’ என்பது. ”நமக்குப் பற்றுக்கோடாகிய எந்தை போன்றவன்” என்று
தலைவனைத் தோழி அழைக்கிறாளென்றால் அவன்பால் எத்துணைப் பரிவும் பாசமும் அவள் கொண்டிருக்கின்றாள்
என்பதனை நாம் உய்த்துணரலாம். தலைவிக்கு எப்போதும் நன்மையையே எண்ணுகின்ற தன் நெஞ்சை
‘நன்னர் நெஞ்சம்” என்று தோழி பெருமிதத்தோடு கூறிக்கொள்வதும் இங்கே கவனிக்கத்தக்கது.
மலையில் தொங்கிக்கொண்டிருந்த சுவையான
தேனடை யாருக்கும் பயனின்றிவீழ்ந்துபோதல்போல், தலைவனின் இனிய காதலும் தலைவியின் காதல்
கிடைக்கப்பெறாமையால் பயனற்று அழிந்தது என்பதை இப்பாடலின் உள்ளுறையாகக் கொள்வர்.
சிறிய பாடலாயினும் ஒவ்வொரு சொல்லிலும்
ஆழ்ந்தபொருளை இப்பாடலின் ஆசிரியரும் பெண்பாற்புலவருமான வருமுலையாரித்தியார் பொதிந்துவைத்திருப்பது
அவருடைய நுண்மாண் நுழைபுலத்திற்குச் சான்றாகின்றது. இவர் பாடியதாய்ச் சங்க இலக்கியத்தில்
இந்த ஒருபாடல் மட்டுமே கிடைத்திருப்பது நம் தவக்குறைவே!
இந்தத் தலைவனைப் போன்றே நிதமும்
தலைவியைச் சந்திக்கவரும் தலைவனொருவன், தன் வாயால் தன்காதலை வெளியிடத் தயங்கியவனாய்
வந்துதிரும்பும் காட்சியைக் கலித்தொகை 37-ஆம் பாடலும் அழகாய்ப் பதிவுசெய்திருக்கின்றது.
கய மலருண் கண்ணாய் காணாயொருவன்
வயமான் அடித்தேர்வான் போலத் தொடைமாண்ட
கண்ணியன் வில்லன் வருமென்னை நோக்குபு
முன்னத்திற் காட்டுதல்லது தானுற்ற
வயமான் அடித்தேர்வான் போலத் தொடைமாண்ட
கண்ணியன் வில்லன் வருமென்னை நோக்குபு
முன்னத்திற் காட்டுதல்லது தானுற்ற
நோய்உரைக்
கல்லான் பெயரும்மன் பன்னாளும்… (கலி- 37)
பேசும் பொருளடிப்படையில் வேறுபட்டாலும்,
ஒருமை, இருமை, பன்மை எனும் சொற்களின் கட்டமைப்பில் ஒத்திருக்கும்,
ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ… (புறம்: 101) என்று ஔவையார் அதியனைப்
போற்றிப்பாடிய புறநானூற்றுப் பாடலும் இந்தக் குறுந்தொகைப் பாடலோடு ஒப்பிட்டு மகிழத்தக்கதன்றோ?