சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த
பாண்டிய நாடு வீரத்துக்கும் விளைநிலமாய்த் திகழ்ந்தது. அந்நாட்டில் ஆட்சிபுரிந்த குறுநில
மன்னர்கள் பலர் பெருவீரமும், அதற்கிணையான ஈரமும் மிக்கவர்களாய் வாழ்ந்திருந்தனர் என்பதைச்
சங்க இலக்கியங்கள் வாயிலாய் அறிகின்றோம்.
அவ்வீர மண்ணில் நிலவளமும் நீர்வளமும்
நிறைந்த ஊர்கள் பலவுண்டு. அத்தகைய வளமிகு ஊர்களில் ஒன்றுதான் ‘கானப்பேர்.’ எழிலால்
மட்டுமின்றி எயிலாலும் (மதில்) சிறப்புப்பெற்றது அவ்வூர். அப்பகுதியை ஆண்டுவந்தான்
குறுநில மன்னன் ஒருவன். அவன் பெயர் ’வேங்கைமார்பன்’ என்பதாகும். தோள்வலியும் வாள்வலியும்
கொண்ட பெருவீரனான அவன், வான்தொடும் உயரத்தோடு கூடிய எயிலையும், காவற்காடுகளையும் அரணாய்க்
கொண்ட வளமனையில் வாழ்ந்துவந்தான். வன்மையும் வனப்பும் மிக்க அந்த எயிலானது ‘கானப்பேரெயில்’
என்று இலக்கியங்களில் குறிக்கப்படுகின்றது.
அந்நாளைய அரசர்கள், தம்மோடு முரணியோரிடமிருந்து
(பகைவர்) தம்மையும், தம் நாட்டையும் காப்பதற்காகப் பல்வேறு அரண்களைக் கொண்டிருந்தனர்.
அவற்றில் சில இயற்கையாய் அமைந்தவை; சில செயற்கையாய் அரசர்களால் அமைக்கப்பட்டவை.
”மணிநீரும்
மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்” என்று அரண்களை அழகாய் வகைப்படுத்துவார் வள்ளுவப்
பெருந்தகை. அவ்வகையில், நாட்டைச் சுற்றியிருக்கும் கடல், மலை, காடு போன்றவை இயற்கையாய்
ஒரு நாட்டிற்கு அமைந்திருக்கும் அரண்கள். அவையேயன்றி, பெரிய மதில்கள், அகழிகள் (எனும்
செயற்கை நீர்நிலைகள்) முதலியவற்றை ஏற்படுத்தியும் தங்கள் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவர்
அரசர்கள்.
பேரெயிலைப் பாதுகாப்பாய்க் கொண்டு
ஆட்சி புரிந்ததாலேயே தருக்கும் செருக்கும் மிக்கவனான் வேங்கைமார்பன். அப்போது மதுரையில்
ஆட்சிபுரிந்துவந்தான் பாண்டிய மன்னன் ’உக்கிரப்பெருவழுதி’ என்பான். உக்கிரமான கோபத்தோடு
பகைவர்களைப் பந்தாடும் மாவீரம் பொருந்தியவன் அவன். இப்பாண்டிய மன்னன் காலத்தில்தான்
அதிசயிக்கத்தக்க வகையில் தமிழகத்தின் மூவேந்தரும் ஒற்றுமையாய் இருந்திருக்கின்றனர்(!).
இதனைக் கண்ணுற்று மகிழ்ந்த அவ்வையார் எனும் பெண்பாற்புலவர் இதுபோன்ற ஒற்றுமையோடு இவர்கள்
என்றும் வாழவேண்டும் என்று வாழ்த்திப்பாடிய பாடலொன்று புறநானூற்றில் (புறம்: 367) இடம்பெற்றுள்ளது.
வீரமும், பெருவேந்தர்களின் நட்பும்
கொண்ட வழுதியோடு யாது காரணத்தாலோ வேங்கைமார்பனுக்குக் கடும்பகை ஏற்பட்டுவிட்டது. அதன்
விளைவு பெரும்போராய் வெடித்தது. கானப்பேரில் நிகழ்ந்த அப்போரில்
உக்கிரப்பெருவழுதி வலிமைமிகு கானப்பேரெயிலை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றிவிட, வேங்கைபோல்
வீரப்போர் புரிந்தும் தன் வீரம் வென்றியை விளைவிக்காததை உணர்ந்த வேங்கைமார்பன், மாறுகோலம்
பூண்டு கானப்பேரைக் கடந்து ஓடிமறைந்தான்!
வெற்றிவாகை சூடிய பாண்டியனின் மீனக்கொடி கானப்பேரில் உயரப் பறந்தது!
”உக்கிரப் பெருவழுதியால் கைப்பற்றப்பட்ட
கானப்பேர், கொல்லனுடைய காய்ச்சிய இரும்பில்பட்ட நீர்த்துளி போன்றது; வெம்மையான இரும்பால்
உண்ணப்பட்ட நீர் எவ்வாறு மீளாதோ அதுபோல் கானப்பேரும் இனி வேங்கைமார்பனிடம் மீளாது!”
என்று வழுதியின் வெற்றிச் சிறப்பை வியந்து பாடியுள்ளார் ஐயூர் மூலங்கிழார் எனும் நல்லிசைப்
புலவர்.
புலவரை யிறந்த புகழ்சால் தோன்றல்
நிலவரை இறந்த குண்டுகண் அகழி
வான்தோய் வன்ன புரிசை விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங்குறும்பு உடுத்த கானப் பேரெயில்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புண் நீரினும் மீட்டற்கு அரிதென
வேங்கை மார்பன் இரங்க வைகலும்
ஆடுகொளக் குறைந்த தும்பைப் புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே. (புறம்:21)
நிலவரை இறந்த குண்டுகண் அகழி
வான்தோய் வன்ன புரிசை விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங்குறும்பு உடுத்த கானப் பேரெயில்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புண் நீரினும் மீட்டற்கு அரிதென
வேங்கை மார்பன் இரங்க வைகலும்
ஆடுகொளக் குறைந்த தும்பைப் புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே. (புறம்:21)
அதுமுதல், உக்கிரப்பெருவழுதி
’கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி’ என்று போற்றப்பட்டான். போரில் வெற்றித் திருமகளைத்
பற்றிடத் தவறினாலும், கானப்பேர் தந்த வேங்கையாம் வேங்கைமார்பனின் வீரம் வழுதியின் வீரத்துக்குக்
குறைந்ததன்று!
எயிலால் பெயர்பெற்ற கானப்பேர்,
’திருக்கானப்பேர்’ எனும் பெயரோடு பாண்டிநாட்டுச் சிவத்தலங்களுள் ஒன்றாகவும் விளங்கும்
பெருமைக்குரியது.
காலம் மாறியது; கூடவே கானப்பேரின்
பெயரும் மாற்றம் கண்டது. ஆம், சங்க காலத்தில் கானப்பேராக இருந்த அவ்வூர், பின்னாளில்
’காளையார்கோயில்’ என்று வழங்கப்படுவதாயிற்று. பெயர் மாறியபோதினும் அப்பகுதி மக்களின்
வீரம் மாறவில்லை.
காளையார்கோயிலின் வீர வரலாற்றிற்குச்
சிறப்புச் சேர்த்தனர் சகோதரர்கள் இருவர்! 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராகப்
புரட்சிசெய்துப் பரங்கியரை எதிர்த்த முன்னோடிகளாய்த் தமிழத்தில் திகழ்ந்தவர்கள் இவர்களே.
அஞ்சாமையைத் தம் உடைமையாய்க் கொண்டிருந்த இவ்வீரர்கள், தம் நெஞ்சுரத்தாலும் நாட்டுப்பற்றாலும்
வெள்ளையருக்குச் சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்தனர்.
அவர்கள் வேறுயாருமல்லர்! சிவகங்கைச்
சீமையின் சிங்கங்களாய் இன்றளவும் போற்றப்படும் ’மருது சகோதரர்களே’ அவர்கள்! இவ்விருவரில்
மூத்தவர் ’பெரிய மருது’ (இவருக்கு வெள்ளை மருது என்ற பெயருமுண்டு) என்றும், இளையவர்
’சின்ன மருது’ என்றும் மக்களால் அழைக்கப்பட்டிருக்கின்றனர். (In his book ‘A
History of Tinnevelly’, Bishop R. Caldwell says, Marudu was their family title,
not a personal name). காட்டுவேட்டையில் ஆர்வம் மிக்கவராயிருந்த பெரிய மருது, நாட்டு
நிர்வாகத்தில் சிறிதும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆகவே, ஆட்சிப்பொறுப்பை மாட்சியோடு
செய்துவந்தவர் சின்ன மருதுவே!
காளையார்கோயில் வட்டத்திலுள்ள
’சிறுவயல்’ எனும் ஊரில் அரண்மனை அமைத்து ஆட்சிசெய்துவந்த சின்ன மருது, குடிகள் போற்றும்
கோனாய்த் திகழ்ந்திருக்கின்றார். மருதுவை நாடித் தமிழ்ப்பாவலர்கள் பலரும் வந்து பாடிப்
பரிசில் பெற்றுச் சென்றிருக்கின்றனர். மருது சகோதரர்கள் ஆட்சியில் காவல் சிறப்பாய்
இருந்தமையால் மக்கள் கவலையேதுமின்றிக் களிப்போடு வாழ்ந்திருந்தனர். ”வெள்ளிநிலா வானில்
விளையாடும் நள்ளிரவு வேளையில் காட்டுவழியில் சென்றால்கூடக் கள்ளர்பயம் ஏதுமில்லை எம்
தலைவனின் ஆட்சியில்” என்று குடிகள் சின்ன மருதுவைக் கொண்டாடினர். சகோதரர்களை ’மருதுபாண்டியர்’
என்றே மக்கள் அன்போடு அழைத்துவரலாயினர்.
மருதுபாண்டியர், காளையார்கோயிலில்
ஆட்சிபுரிந்துவந்த அதேசமயத்தில், நம் இந்தியாவோ அந்நியரான ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக்
கிடந்தது. மருதுவின் ஆட்சியின்போது, அவர் மாளிகையில் விருந்தினனாய்த் தங்கியிருந்த
ஜெனரல் வெல்ஷ் (General Welsh) எனும் ஆங்கிலப் படைத்தலைவன் ஒருவன் தன்னுடைய நூலில்
சின்ன மருதுவைப் பற்றிப் பின்வருமாறு செப்புகின்றான்:
”சின்ன மருது காட்சிக்கு எளியவர்;
கடுஞ்சொல் அற்றவர்; கருணை மிக்கவர். இவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் மக்கள்.
இவருடைய அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யார் வேண்டுமானாலும் உள்ளே செல்லலாம்;
வெளியே வரலாம். அத்துணைச் சுதந்திரம் அங்கே நிலவியது!”
அடையா நெடுங்கதவமாய் அனைவருக்கும்
திறந்தே இருந்திருக்கின்றது மருதுவின் அரண்மனைவாயில் என்பதை மேற்காணும் விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன
அல்லவா?
நாற்பது மைல் சுற்றளவுள்ள மருது
சகோதரர்களின் நாட்டின் நடுவே அமைந்திருந்தது காளையார் கோட்டை. அதனைச்சுற்றி ஆடு, மாடுகளைத்
தம் செல்வமாய்க் கொண்ட முல்லைநிலத்து மக்கள் பல்லாயிரவர் வாழ்ந்திருந்தனர். வீரத்தில்
தம் தலைவனுக்குச் சற்றும் சளைக்காத அம் மறக்குடியினர், மாற்றார் படையெடுத்துவந்தால்
வேலையும், வாளையும், குத்துக்கோலையும், துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு புறப்படுவர்
போர்முனை நோக்கி; அழிப்பர் பகைவர் படையைக் கடுமையாய்த் தாக்கி!
மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சிப்
பாளையக்காரரான ஊமைத்துரையோடு (இவர் கட்டபொம்மனின் சகோதரர்) நட்பு பூண்டிருந்தனர். இவர்கள்
அனைவருமே அன்னை பூமியை அந்நியனுக்கு அடகுவைக்க விரும்பாத மானவீரர்கள் ஆவர். ஆதலால்
அந்நியரின் சீற்றத்துக்கு ஆளாயினர்; தமக்கு அடிபணிய மறுத்த காளையார்கோயிலைக் கைப்பற்ற
விழைந்தனர் வெள்ளையர். ஆனால் அரணமைந்த அவ்வூரைப் பிடிப்பது அத்துணைச் சுலபமான காரியமாய்
இருக்கவில்லை அவர்களுக்கு!
வழிமறித்துநின்ற காடுகளைக் கொன்றாலொழியக்
கோட்டையை நெருங்கமுடியாது என்ற நிலை. பல மைல் தூரத்துக்குப் பரவியிருந்த அந்தக் காட்டையழிப்பது
வெள்ளையருக்குச் சாத்தியப்படாத நிலையில், அக்காட்டில் மறைந்திருந்த மருது சகோதரர்களும்,
அவர்தம் மக்களும் ஆங்கிலப்படையைக் கடுமையாய்த் தாக்கினர். இதனால் மனச்சோர்வுற்ற ஆங்கிலேயர்,
நேரிய வழியில் மருது சகோதரர்களை வீழ்த்தமுடியாது என்றுணர்ந்து, தமக்கே உரித்தான நரித்தனத்தால்
அவர்களை வெல்லக் கருதினர். அப்பகுதியைச் சேர்ந்த மறக்குலத் தலைவன் ஒருவனை அவ் வட்டத்திற்குரியவன்
என்று பட்டங்கட்டி அவன் மூலமாக மருது சகோதரர்களை மடக்கிப் பிடித்தனர் என்று சொல்லப்படுகின்றது.
(மருதுசகோதரர்கள் பிடிபட்டது குறித்து வேறுவிதமான செய்திகளும் சொல்லப்படுகின்றன.)
பிடிபட்டதற்கு யார் அல்லது எது
காரணமாயிருந்தபோதிலும், தம் இன்னுயிரைத் தந்து, தமிழனின் மானத்தைத் தலைநிமிரச் செய்தவர்கள்
இச் சோதரர்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
ஆங்கிலேயரிடம் பிடிபட்டபோது, அன்னை
பூமியின் விடுதலைக்காகத் தாம் உயிரழிக்கவிருப்பது குறித்துப் பெருமிதமும் மகிழ்ச்சியுமே
அடைந்தனர் மருது சகோதரர்கள். அதேநேரத்தில், எக்காரணமுமின்றித் தம் குடும்பத்தைச் சேர்ந்த
இளம்பிள்ளைகளைக் கும்பினியார் கொல்லமுயன்றதை ஏற்கமுடியாதவர்களாய், “ஐயா! வயதில் இளையவர்களான
இப்பிள்ளைகள் உமக்குச் செய்த தீங்குதான் என்ன? இவர்களை எதற்காகக் கொல்ல முற்படுகின்றீர்?”
என்று வெள்ளையரை வினவியிருக்கின்றனர்.
மலையமானின் சின்னஞ்சிறு பிள்ளைகளை
(மலையமான்மீது கொண்ட பகையால்) யானையின் காலால் இடறமுற்பட்ட கிள்ளிவளவனிடம் இதே போன்றதொரு
கேள்வியை எழுப்பினார் கோவூர்கிழார் எனும் புலவர் பெருந்தகை. வளவன் சிந்தித்தான்; தகப்பனோடு
ஏற்பட்ட பகைக்குப் பாவமேதும் அறியாத பச்சிளம் பிள்ளைகளைப் பலியிடுவது முறையன்று என்று
தன்னுடைய கொலை முயற்சியைக் கைவிட்டான் என்கின்றது சங்க இலக்கியம். ஆனால் அத்தகைய கருணையுள்ளத்தை
இரக்கமேயற்ற அரக்கர்களான வெள்ளையரிடம் நாம் எதிர்பார்க்க முடியுமா? மருது சகோதரர்களின்
கோரிக்கை, செவிடன் காதில் ஊதிய சங்காய்ப் பயனற்றுப்போனது.
1801-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம்
நாள் மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டுக் கொன்றது வெள்ளை அரசு. இவர்களோடு, ஊமைத்துரை,
மருது சகோதரர்களின் உறவினர்கள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என 500-க்கும் மேற்பட்டோரை
ஆங்கில அரசாங்கம் ஈவு இரக்கமின்றிக் காவு கொடுத்திருக்கின்றது. நாட்டு விடுதலைக்காக
எத்துணை வீரர்களைக் களபலியாக்கியிருக்கின்றோம் என்பதை அறிய நெஞ்சு பதைக்கின்றது.
நண்பர்களே! கானப்பேரின் ’பெயரை’
இலக்கியத்தில் நிலைநிறுத்திய பெருமைக்குரியவன் வேங்கைமார்பன் என்றால், காளையார்கோயிலாக
மாறிய அவ்வூரை இந்திய வரலாற்றின் பொன்னேடுகளில் இடம்பெறச்செய்த பெருமைக்குரியவர்கள்
மருது சகோதரர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
No comments:
Post a Comment