தமிழ்மறையென்றும், உலகப் பொதுமறை என்றும் அனைவராலும் கொண்டாடப்படுவது திருக்குறள் ஆகும். இத்தகைய உயரிய வாழ்க்கை வழிகாட்டி நூலைப் பெற்ற தமிழர்களாகிய நாம் பேறுபெற்றோர் என்பதில் ஐயமில்லை. இந்நூல் பொய்யாமொழி, முப்பானூல், தெய்வநூல் என வேறுபல் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.
அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பகுப்புக்களை உடைய இந்நூலின் முதலிரண்டு பகுப்புக்கள் அறியப்பட்ட அளவில் மூன்றாம் பகுப்பாகிய காமத்துப்பால் பாடல்கள் அறியப்படவில்லை என்றே தோன்றுகின்றது.
அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் சொல்லப்பட்டது போலவே அருமையான, இனிய, காதல் மற்றும் இல்லற வாழ்விற்குச் சுவைதரும் பல செய்திகள் காமத்துப்பாலிலும் சொல்லப்பட்டுள்ளன. காமத்துப்பாலில்தான் வள்ளுவப் பேராசானின் கற்பனைத் திறனும், காட்சிகளை நாடகப் பாங்கில் நம் கண்முன் நிறுத்தும் ஆற்றலும், ஏன்….அவரின் மெல்லிய நகைச்சுவை உணர்வும் சிறப்பாக வெளிப்படுகின்றன எனலாம். அவரை ஓர் சிறந்த கவிஞராகவும் அடையாளம் காட்டுவது காமத்துப்பாலே எனலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த காமத்துப்பால் பாக்களில் சிலவற்றைக் குறித்துச் சிந்திப்பதும், காட்சிப்படுத்துவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.
இனிப் பாடல்களுக்குச் செல்வோம்…
தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைக் கண்டு காதல் கொள்கின்றான். அவளுக்கும் அவன்மீது அன்பு தோன்றுகின்றது. ஆயினும், பெண்மைக்கே உரிய நாணம் தடை போடுவதால் தலைவன் தன்னை நோக்கும் போது நிலத்தை நோக்குகின்றாள். அவன் தன்னைப் பார்க்காத தருணத்தில் அவனை நோக்கி மெல்லப் புன்னகைத்துக் கொள்கின்றாள். இதனையே,
“யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.” என்கின்றார் வள்ளுவப் பேராசான்.
இக்குறளைப் படித்தவுடனேயே நமக்கு ஓர் திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகின்றது. ஆம்…”உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே, விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே” என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் தானே அவை?
இதோ காதல் வயப்பட்ட தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டிருக்கின்றனர். அங்கே வாய்ச்சொற்களுக்கு வேலையேயில்லாமல் போய்விடுகின்றது. (காதல் கடிதங்களும் தேவையற்றவை ஆகிவிடுகின்றன). கண்கள் பேசாதவற்றையா வாயும், எழுத்துக்களும் பேசிவிடப் போகின்றன??
”கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.” என்கின்றது வள்ளுவரின் அமுதமொழி.
என்ன பயனும் இல.” என்கின்றது வள்ளுவரின் அமுதமொழி.
வெண்மதியையும், பெண்ணின் முகத்தையும் ஒப்புமைப்படுத்திப் பாடாத தமிழ்ப் புலவர்களோ, கவிஞர்களோ இல்லை என்றே கூறலாம். வள்ளுவரும் அதற்கு விதிவிலக்கல்ல.
இரவு நேரத்தில் தன் காதலியைச் சந்திக்க வருகின்ற ஒரு தலைவன் (இரவுக்குறி என்று இஃது அகத்திணையில் குறிக்கப்படும்) வானத்தை அண்ணாந்து பார்க்கின்றான். அங்கே அழகான முழுநிலாக் காட்சியளிக்கின்றது. அந்நிலவோடு தன் காதலியின் முகத்தை அங்கே அழகான முழுநிலாக்
காட்சியளிக்கின்றது. அந்நிலவோடு தன் காதலியின் ஒப்பிட்டுப் பார்க்கின்றான். உடனேயே ஒரு முடிவுக்கு வந்தவனாக நிலவைப் பார்த்து ”உன்னோடு என் காதலியின் எழில் முகத்தை ஒப்பிடுவதே தவறு. நீயோ களங்கம் உடையாய்! அதுமட்டுமன்று, தேய்கின்றாய்…வளர்கின்றாய். ஆனால், என் காதலியின் முகமோ களங்கம் சிறிதுமற்றது” என்று தன் காதலிக்குப் புகழ்மாலை சூட்டுகின்றான்.
சுவையான அத்திருக்குறள் இதோ…
”அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.”
அத்தோடு விட்டானா? நிலவே! நீ என் தலைவியின் முகத்தை ஒத்திருக்க விரும்பினாயானால் இப்படி நாணம் இல்லாமல் எல்லாரும் காணும்படி வானில் தோன்றாதே என்றுவேறு கூறுகின்றான்! புதுமையான வேண்டுகோள் இல்லையா?
”மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.” என்பது அக்குறட்பா.
இப்போதெல்லாம் கணவனும், மனைவியும் தாங்கள் நல்ல நண்பர்கள் போலப் பழகுவதாகக் கூறிக்கொள்கின்றார்கள் அல்லவா? இதற்கு முதன்முதலில் அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் நம் வான்புகழ் வள்ளுவரே.
தலைவன் ஒருவன், தனக்கும் தன் தலைவிக்குமுள்ள உறவைப் பற்றிக் “காதற் சிறப்புரைத்தல்” என்ற அதிகாரத்தில் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகின்றான்…
”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.”
மாந்தர்களே! இத்தலைவியொடு எனக்குள்ள நட்பு எப்படிப்பட்டது தெரியுமா? உடம்புக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது என்கின்றான். இங்கே உறவு என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் நட்பு என்ற சொல்லை அவன் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. காதலுக்கு இதைவிட அருமையான விளக்கம் எதனையும் கொடுத்துவிட முடியாதென்றே தோன்றுகின்றது.
அதே அதிகாரத்திலேயே தலைவனின் இருப்பிடத்தைப் பற்றித் தலைவி கூறும் மொழிகள் நமக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன. தலைவி சொல்கின்றாள்…..”என் காதலர் என் நெஞ்சத்திலேயே எப்போதும் குடியிருக்கின்றார். அதனால் நான் சூடான பொருள்களையே உண்பதில்லை. அவை அவரைச் சுட்டுவிடுமோ என அஞ்சுகின்றேன்” என்கின்றாள். கேட்பதற்குச் சற்று வேடிக்கையாகக்கூட இருக்கின்றது இல்லையா? இதோ அக்குறட்பா…
”நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.”
இதே குறட்பாவைப் படியெடுத்தது (photocopy) போலக் கவிஞர் வைரமுத்துவின் பாடல் ஒன்று சமீபத்திய திரைப்படம் ஒன்றில் வந்தது. அவ்வரிகள் இதோ..
“ஹாட்பாக்சில் (hotbox) வைத்த ஃபுட் (food) உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும், என் உள்ளமெங்கும் நீ நின்றிருக்க உனை உஷ்ணம் தாக்கக் கூடும்….”
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும் வள்ளுவர் பேராசானாக இருந்து காதல் பாடல்கள் பல எழுதத் துணைபுரிந்து வருகின்றார் என்பதனையே திரைப்பாடல்கள் (அன்றும், இன்றும்) மெய்ப்பிக்கின்றன.
அடுத்து, தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள காதல் ஊரிலுள்ளோர்க்குத் தெரிந்துவிடுகின்றது. அவர்கள் அலர் (காதலர்களைப் பொது இடத்தில் அவர்கள் காதுபடப் பழித்தல்) கூறத் தொடங்குகின்றனர். அதனைக் கண்ட தலைவி மிகவும் வேதனையுற்று “நான் என் காதலரைக் கண்டதென்னவோ ஒருநாள் தான், ஆனால் இந்த அலரோ திங்களைப் பாம்பு கொண்ட செய்தி (சந்திர கிரகணம்) போல் ஊரெங்கும் பரவிவிட்டதே” என வருந்துகின்றாள்.
”கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.”
மற்றொரு சமயம் தலைவன் பொருள்தேடும் பொருட்டுத் தலைவியைப் பிரிய நேரிடுகின்றது. அவன் பிரிவை ஆற்றமுடியாமல் தலைவி அவன் சென்ற வழியையே பார்த்துச் சோர்ந்து கிடக்கின்றாள். அப்போது அவள் வேதனையை அதிமாக்கும் மாலைப்பொழுது வந்தது. இம்மாலைப் பொழுது இவ்வளவு துன்பம் தருவது என்று நான் தலைவனோடு ஒன்றாகச் சேர்ந்திருந்த காலத்தில் அறியவில்லையே எனப் புலம்புகின்றாள்.
“மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்.”
அம்மாலைப் பொழுதின் மயக்கத்திலே தலைவி ஓர் கனவு காண்கின்றாள். அக்கனவில் தன் தலைவனைக் கண்டு மகிழ்கின்றாள். கண்விழித்துப் பார்க்கின்றாள்; தான் தலைவனைக் கண்டது கனவில்தான் என்பதனை அறிந்து பெருத்த ஏமாற்றம் அடைகின்றாள். அடடா! நனவு என்ற ஒன்று மட்டும் இல்லாதிருப்பின் நான் கனவில் என் தலைவனைப் பிரியாமல் இருப்பேனே என்று எண்ணித் துயருறுகின்றாள்.
“நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்” என்கின்றது வள்ளுவம்.
தலைவனையே எதிர்பார்த்துக் காத்திருப்பதனால் தலைவியின் அழகமை தோள்கள் மெலிந்தன. உடலில் பசலை படர்ந்தது. (பசலை என்பது உடலில் ஏற்படும் ஓர் பசிய நிறமாற்றத்தைக் குறிப்பது, மற்றபடி பசலைக் கீரைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை). கை வளையல்கள் கழன்றன. அழுது அழுது கண்கள் ஒளியிழந்தன. தலைவன் சென்ற நாட்களைக் கோடிட்டுக் குறித்துக் கொண்டே வருவதனால் விரல்களும் தேய்ந்தன. இதனையே வள்ளுவப் பெருந்தகை,
”வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.” என்கின்றார்.
பிறகு அவள் தன்னைத்தானே தேற்றிக் கொள்கின்றாள், “என் இனிய நெஞ்சே, நீ தலைவனை உன்னிடத்தில்தானே வைத்திருக்கின்றாய், பின்பு ஏன் அவர் பிரிந்து சென்றுவிட்டார் என எண்ணி உடலை வருத்திக் கவின் இழந்து மெலிந்து வருகின்றாய்” என வினவிக்கொள்கின்றாள்.
”துன்னத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.”
சில காலத்திற்குப்பின், தலைவனும் தலைவியும் மறுபடியும் ஒன்றாய் இணைகின்றனர். அவர்கள் மகிழ்ச்சியாய்ப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் தலைவனுக்குத் தும்மல் வருகின்றது. அவன் தும்முவதைக் கண்ட தலைவி, ”வாழ்க!” என வாழ்த்துகின்றாள். உடனேயே, ”யார் உம்மை நினைத்தார்கள், ஏன் உமக்குத் தும்மல் வந்தது?” எனத் தலைவனைப் பல கேள்விகள் கேட்டு, அழுது அவனோடு ஊடல் கொள்கின்றாள். இன்றும் நம் கிராமங்களில் யாருக்காவது தும்மல் வந்தாலோ அல்லது புரையேறினாலோ அவ்வாறு செய்பவர்களை யாரோ நினைக்கின்றார்கள் என்று எண்ணும் வழக்கம் உள்ளது தானே?
இவ்வழக்கம் வள்ளுவர் காலந்தொட்டு இருந்து வருகின்றது போலும்.
“வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.” என்கிறார் தெய்வப்புலவர்.
தலைவனுக்கு மீண்டும் தும்மல் வருகின்றது. (பாவம், சளித்தொல்லையால் அவதியுறுகின்றான் போலிருக்கின்றது. :-)) தலைவி தன்னைச் சந்தேகிப்பாளே, கோபித்துக்கொள்வாளே என எண்ணித் தும்மலை அடக்க முற்படுகின்றான். அப்போதும் தலைவி அவனை விடவில்லை. உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை என்னிடமிருந்து மறைக்க முயல்கின்றீரோ? எனக் கேட்டு அழுகின்றாள்.
”தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.”
என அவர்களிடையே அரங்கேறும் ஊடல் நாடகத்தை நகைச்சுவை ததும்பப் பாடல் வடிவில் நம் கண்முன் நிறுத்துகின்றார் வள்ளுவப் பெருந்தகை.
இவ்வாறு காமத்துப்பாலில் படித்து இன்புறத்தக்கக் குறட்பாக்கள் பல குவிந்து கிடக்கின்றன. சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களின் சுருங்கிய வடிவாகவே (abridged version) காட்சியளிக்கின்றன இக்குறட்பாக்கள். களவு என்று சொல்லப்படுகின்ற காதல் வாழ்வையும், கற்பு என்று அறியப்படுகின்ற இல்லற வாழ்வையும் இருபத்தைந்து (25) அதிகாரங்களில் வள்ளுவப் பெருந்தகை சுவைபட நகர்த்திச் செல்லும் பாங்கு படித்து இன்புறத்தக்கது. காமத்துப்பால், கற்புநெறி பிறழா நல்லதோர் இல்லறத்திற்கு வழிகாட்டியாய்த் திகழ்கின்றது எனலாம்.
No comments:
Post a Comment