செல்லாச் செல்வன்
கருணை மறவனாக விளங்கி அந்தண முதியவர்
ஒருவரை மதயானையிடமிருந்து காத்த கோவலன், இன்னொரு சந்தர்ப்பத்தில் ஓர் பார்ப்பனப் பெண்ணுக்கு
நேர்ந்த மிகப் பெரிய கொலைப் பாவத்திலிருந்து அவளைக் காத்து, அவளிடம் கோபித்துச் சென்ற கணவனை அவளோடு சேர்த்துவைத்த பெருந்தகையாளனாகத் திகழ்கின்றான்.
சுவையான அந்த வரலாற்றை இனிக் காண்போம்.
புகார் நகரில் வசித்துவந்த ஓர்
பார்ப்பனத் தம்பதிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறின்மையால் அவர்கள் (தம்மை அண்டி
வந்த) ஓர் கீரிப்பிள்ளையைத் தம் பிள்ளையாகவே எண்ணி வளர்த்துவந்தனர். அந்தக் கீரி வந்த
நல்ல நேரமோ என்னவோ..அவர்களின் பிள்ளையில்லாக் குறைக்கும் ஓர் விடிவு ஏற்பட்டது. அந்தப்
பெண் அழகான ஆண் மகவு ஒன்றைப் பெற்றெடுத்தாள். அந்தக் கீரியும் அக் குழந்தையிடம் மிகுந்த
அன்போடு பழகி வந்தது.
ஒரு நாள் தண்ணீர் எடுப்பதற்காகக்
குடத்தோடு வெளியே சென்றாள் அந்தப் பெண். தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில்
அவள் கண்ட காட்சி அவளைத் துணுக்குற வைத்தது. அவள் அன்போடு வளர்த்துவந்த அந்தக் கீரிப்பிள்ளை
தன் வாயில் இரத்தம் வழிய அவளை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதனைக் கண்டவுடன் மிகவும்
பதற்றமடைந்த பார்ப்பனி, சற்றும் சிந்தியாமல், என்ன நடந்தது என்பதனை நேரில் கண்டு தெரிந்துகொள்ளாமல்
தன் குழந்தையைத்தான் அந்தக் கீரிப்பிள்ளைக் கொன்றுவிட்டு வாயில் இரத்தத்தோடு வந்துகொண்டிருக்கிறது
என்று அவசரப்பட்டு முடிவுகட்டித் தன் கையில் இருந்த குடத்தால் அந்தக் கீரியைக் கொன்றுவிட்டு
வீட்டை நோக்கி அழுதவண்ணமே விரைந்து வந்தாள்.
ஆனால் அங்கே அவள் கண்ட காட்சியோ
அவளை வெட்கித் தலைகுனிய வைப்பதாகவும், மிகுந்த வேதனையில் ஆழ்த்துவதாகவும் இருந்தது.
ஆம்..அங்கே அவளுடைய அருமைக் குழந்தை யாதொரு அபாயமும் இல்லாமல் தொட்டிலிலே தூங்கிக்
கொண்டிருந்தது. ஆனால் அத்தொட்டிலின் கீழே ஓர் பாம்பு இறந்து கிடந்தது. அங்கே நடந்தது
என்ன என்று இப்போது அவளுக்கு நன்றாகவே விளங்கிவிட்டது. ”தான் தண்ணீர் எடுக்கச் சென்றிருந்த
வேளையில் ஒரு பாம்பு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தீண்ட வந்திருக்கிறது,
அதைக் கண்ட கீரிப்பிள்ளை அப்பாம்பினைக் கொன்றுக் குழந்தையைக் காத்திருக்கின்றது. அடடா!
எப்பேர்ப்பட்ட மகத்தான செயலைச் செய்திருக்கின்றது அன்பே உருவான அந்தக் கீரிப்பிள்ளை!
தன் குழந்தைக்கு மறுவாழ்வு அல்லவா கொடுத்திருக்கின்றது! இதனை அறியாமல் பூசிக்க வேண்டிய
அந்தக் கீரியை ஈவு இரக்கமில்லாமல் கொன்றுவிட்டல்லவா வந்திருக்கிறோம்?” என்று எண்ணி
அவள் வருத்தம் மேலிட இருந்த வேளையில் வெளியில் சென்றிருந்த அவள் கணவன் வீட்டிற்குத்
திரும்பி வந்தான்.
மனைவியின் முகவாட்டத்தைக் கண்டவன்
அதன் காரணம் என்ன என்று வினவ, பார்ப்பனி நடந்தவற்றைக் கண்ணீரோடு அவனிடம் விவரிக்கின்றாள்.
அது கேட்டு வெகுண்டெழுந்த பார்ப்பனன், ”மிகப்பெரும் கொலைப் பாதகத்தைச் செய்த உன்னோடு
இனி என்னால் வாழ இயலாது. உன் கையால் சமைத்த உணவை நான் இனி உண்ணவும் மாட்டேன்!” என்று
கடுங்கோபத்தோடு கூறிவிட்டு வடமொழி வாசகம்1
எழுதிய ஏடு ஒன்றை அவள் கையில் திணித்துவிட்டு, ”இதன் பொருள் உணர்வாரிடம் இதனைக் கொடு”
என்று சொல்லிவிட்டு வடதிசை நோக்கிப் புறப்பட்டுவிட்டான். (அப்பார்ப்பனி வடமொழி அறியாதவள்
என்பது இதன் மூலம் தெரியவருகின்றது.)
என்ன செய்வது என்று புரியாது திகைத்த
அப்பெண், தன்னை மன்னிக்கும்படிக் கணவனிடம் கெஞ்சியபடியே அவன்பின்னே தொடர்ந்து செல்கின்றாள்.
ஆனால், அவள் கணவன் அவள் செய்த பாவத்தை மன்னிக்க விரும்பாதவனாய் அவளைத் திரும்பியும்
பாராமல் தனியே விட்டுவிட்டுக் கங்கைக்கு நீராடச் சென்றுவிடுகின்றான்.
இவ்வாறு கீரிப்பிள்ளை இறந்ததனால்
கணவனுக்கும், மனைவிக்குமிடையே பிரிவு ஏற்பட்டுவிடுகின்றது. இச்சம்பவத்தை இளங்கோவடிகள்
பின்வரும் அடிகளில் காட்சிப்படுத்துகின்றார்.
”பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல
வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகம் செய்தநல் ஏடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கென...” (அடைக்கலக் காதை: 54-59)
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல
வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகம் செய்தநல் ஏடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கென...” (அடைக்கலக் காதை: 54-59)
இப்பாடலில்
’பிள்ளை நகுலம்’ என்ற அழகான சொற்றொடர்
கீரிப்பிள்ளையைக் குறிக்கின்றது.
பின்பு அப்பார்ப்பனி அவ்வாசக ஏட்டைக்
கையில் ஏந்தியவளாய் கடைவீதிகளிலும், வணிகர் வாழும் தெருக்களிலும் கண்ணீரோடு சுற்றித்
திரிந்து ”இந்த வடமொழி வாசகத்தை யாரேனும் படித்துச் சொல்லுங்கள்; என் பாவத்தினைப் போக்கிப்
புண்ணியப் பயனை அடையுங்கள்!” என்று கண்ணில்படுவோரிடமெல்லாம் இரந்து கேட்கின்றாள். ஆனால்
அங்கே ஒருவருக்கும் அவள் கையில் உள்ள ஏட்டில் என்ன எழுதியிருக்கின்றது என்பதனை விளங்கிக்கொள்ள
இயலவில்லை. இவ்வாறு அப்பார்ப்பனி துயருற்றுத் திரிவதை ஒருநாள் கோவலன் காண்கின்றான்.
அவளை அருகில் அழைத்து, “அம்மா! உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் இவ்வாறு வருத்தத்தோடு
போவோர் வருவோரிடமெல்லாம் ஏதோ கேட்டுக்கொண்டிருக்கிறாய்? கையில் வைத்திருக்கும் இந்த
ஏடு யாது?” என இரக்கத்தோடு வினவுகின்றான்.
அப்பெண் தன் நிலையைக் கோவலனிடம்
மிகுந்த வருத்தத்தோடு விளக்கி, ”இந்த ஏட்டில் குறிப்பிட்டுள்ளபடிப் பரிகாரம் செய்து
என் துயரத்தையும், பாவத்தையும் போக்குங்கள்!” என்று கோவலனிடம் மன்றாடுகின்றாள். அதுகேட்டு
அவள்பால் மிகுந்த பரிவு கொண்ட கோவலன், “கவலைப்படாதே அம்மா! தாளாமாட்டாத உன் துயரத்தை
நான் போக்குகிறேன்” எனக்கூறி, அந்தணர்களின் வேதநூலில் கூறியுள்ளபடி அந்தப் பார்ப்பனியின்
கொலைப் பாவம் நீங்குமாறு தானங்கள் பல செய்கிறான். அத்தோடு நில்லாமல் அவளைப் பிரிந்து
வடக்கே சென்ற அவள் கணவனையும் தேடிக் கண்டுபிடித்து அழைத்துவந்து அவளோடு சேர்த்து வைக்கிறான்.
இவ்வாறு அவர்களை நன்னெறிப்படுத்தியதோடு
அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய செல்வங்களையும் வரையாது வழங்கிய செல்வந்தனாகக்
கோவலன் விளங்குகின்றான். அப்பார்ப்பனியின் துயரத்தைக் கோவலன் போக்கினான் என்று இளங்கோ
குறிப்பிடுவதால் அவ்வேட்டில் எழுதப்பட்டிருந்த வடமொழி வாசகத்தை அவன் படித்து அதன் பொருளை
உணர்ந்தே அதில் குறிப்பிட்டிருந்தபடி கொலைப் பாவத்தைப் போக்குதற்குரிய பரிகாரத்தைச்
செய்திருத்தல் வேண்டும் என்பதனை நாம் உய்த்துணர முடிகின்றது. கோவலனின் வடமொழிப் புலமையை
ஆசிரியர் இந் நிகழ்வின்மூலம் குறிப்பாய் உணர்த்தியுள்ளார் என்று கொள்வதில் தவறில்லை.
கோவலன் பார்ப்பனியின் துயர்தீர்த்த
வரலாற்றை விளக்கும் சிலம்பின் வரிகள் இதோ…
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய்தவள் தன்துயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ! (அடைக்கலக் காதை: 68-75)
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்
தானஞ் செய்தவள் தன்துயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ! (அடைக்கலக் காதை: 68-75)
இப்பாடல் வரிகளில் கோவலனைத் ’தொலையாத
செல்வமுடையவனே’ என்ற பொருள்தரும் ”செல்லாச்
செல்வ!” என்ற சொல்லால் உயர்வுபடுத்துகின்றார் அடிகள்.
மிகுந்த செல்வம் படைத்திருந்ததோடல்லாமல்
அதனை மற்றவருக்கு வாரிக் கொடுக்கும் வள்ளலாகவும் அவன் திகழ்ந்திருக்கின்றான் என்பது
உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய உயர்பண்பு தானே?
கோவலனின் பொன் மனத்தை வெளிச்சமிடும்
மற்றொரு சம்பவம் அடுத்த பகுதியில்……
(தொடரும்)
******************************************************************************************************************************************************************
1.
வடமொழி வாசகமாகச் சிலப்பதிகார உரையாசிரியர்
‘அடியார்க்கு நல்லார்’ குறிப்பிடுவது "அபரீக்ஷ்ய நகர்த்தவ்யங் கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம், பச்
சாத்பவதி ஸந்தாபம்
ப்ராஹ்மணீ
நகுலம்யதா"
என்பதாகும்.
இதன் பொருள்: “எந்த செயலையும் ஆராயாமல் செய்யக்கூடாது; நன்கு ஆராய்ந்த பின்பே செய்யவேண்டும்;
இல்லையெனில் கீரிப்பிள்ளையைக் கொன்ற பார்ப்பனியைப் போல் பின்னால் வருந்த நேரிடும் என்பதாகும்.”
கீரிப்
பிள்ளையைக் கொன்ற பெண்ணின் கதை, குப்த அரசன் 2-ஆம் சந்திரகுப்தன் (also known
as
விக்கிரமாதித்தன்) காலத்தில் வாழ்ந்த ’விஷ்ணு சர்மா’ என்பவர் எழுதிய பஞ்சதந்திரக் கதைகளில்
(a collection of fables) ஒன்றாகவும் பின்னாளில் சொல்லப்பட்டுப் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment