(தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி சித்திரைக்கும் எனக்கும் நிகழ்வதாக எழுதப்பட்ட ஓர் கற்பனை உரையாடல்)
அதிகாலை
நேரம். வாசல்கதவு பலமாகத் தட்டப்படும் ஓசைகேட்டது. உறங்கிக்கொண்டிருந்த நான் மெல்ல
எழுந்து கண்ணைக் கசக்கியபடியே வாசல் கதவைத் திறந்தேன். பார்த்தால்….என்னெதிரில் ’கோடி
சூரியப் பிரகாசத்தோடு’ ஓர் மனிதர் நின்று கொண்டிருந்தார்!
தலையிலே
பொற்கிரீடம், பொன்வண்ண உடைகள், தோளிலே உத்தரீயம் என்று கம்பீரமாக நின்றிருந்த அந்த
மனிதரைப் பார்த்து, ”ஐயா! நீங்கள் யார்? இதுவரை நான் உங்களைப் பார்த்ததில்லையே?” என்று
வினவினேன்.
புன்முறுவல்
பூத்த அம்மனிதர் ’மேகலையார்’ நீங்கள்தானே? என்றார்.
இவ்வளவு
மரியாதையுடன் பெயரின் இறுதியில் ‘ஆர்’ விகுதி சேர்த்து ஆ(யா)ரும் என்னை இதுவரை அழைத்ததில்லையா…அதனால்
மிகுந்த ஆச்சரியத்துடன் நான் அவரைப் பார்த்து ‘மேகலை’ நான்தான் நீங்கள்…? என்று இழுக்க,
அவரோ, ”அம்மணி! என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களை நானறிவேன்; இனியும் புதிர்
எதற்கு..? நான்தான் ”சித்திரைச் செல்வன்” என்றார்.
சித்திரையே
என் வீடு தேடி வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நான், ”வரவேண்டும் வரவேண்டும்!” என்
குடிசையில் தங்கள் பாததூளி பட்டது அடியாள் செய்த பாக்கியமே! என்று அவரை வரவேற்று அழைத்துச்சென்று
உள்ளேயிருந்த இருக்கையில் அமரச் செய்தேன்.
வீட்டை
நோட்டம் விட்டவண்ணம் அமர்ந்திருந்தவரிடம், “உங்கள் பிறந்தநாளான இன்று நீங்கள் என் வீட்டிற்கு
வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இன்று நீங்கள் இங்குதான் விருந்து சாப்பிடவேண்டும்” என்று
வேண்டுகோள் விடுத்தேன்.
சித்திரைச்
செல்வன் முகத்தில் பயத்தின் அறிகுறி தென்பட்டது. “என்ன விருந்தா?” என்று அதிர்ந்த அவர்,
“அதனால் என் உடலுக்கு ஏதும்…?” என்று பீதியோடு கேட்க, பெரிய சமையல் எக்ஸ்பர்ட் என்று
என்னை நினைத்துக் கொண்டிருந்த எனக்கு மிகுந்த அவமானமாய்ப் போய்விட்டது.
”என்ன
இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? நான் நன்றாகச் சமைப்பேன்; நளபாகத்தின் அனைத்து பாகத்தையும்
ஒன்றுவிடாமல் அறிந்தவள்; அதனால் நீங்கள் தைரியமாக இங்கே சாப்பிடலாம்” என்று கூறி அவரது
பயத்தைப் போக்க முயன்றேன். :-)
விருந்தாளி
முகத்தில் இப்போது சற்றே பயம் தெளிந்தது. “உங்கள் சமையல் புலமை(!!) பற்றி அறியாததால்
ஏதோ வாய்தவறிக் கூறிவிட்டேன்; தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்” என்று என்னைச் சமாதானப்படுத்திவிட்டு,
“அதுசரி, இன்று நீங்கள் எனக்குத் தரப்போகும் விருந்தைப் பற்றி என்னிடம் தெரிவிக்கலாம்
அல்லவா? அல்லது அது பரம ரகசியமா?” என்றார்.
“பரம ரகசியமும் இல்லை….திருமால்
ரகசியமுமில்லை; அது ஊரறிந்த ரகசியம்தான்! இதோ உங்களுக்கான என் ’மெனு லிஸ்ட்’ என்று
கூறி நான் அவருக்குத் தரவிருக்கும் பதார்த்தங்களைப் பட்டியலிட்டேன்.
சாதம்
பல
காய்கறிகளுடன் கூடிய ‘அரைத்துவிட்ட’ ஸ்பெஷல் சாம்பார்.
உருளைக்கிழங்கு
ரோஸ்ட்
உளுந்து
வடை
பயற்றம்பருப்புப்
பாயசம் என்று நான் சொல்லச் சொல்ல வாய் ஊறிப்போன செல்வனார் ”அப்புறம்?” என்றார் ஆவலாக.
அடுத்து
வரப்போவதுதான் சித்திரை ஸ்பெஷல் ’மாங்காய்ப்
பச்சடி’ என்றேன்.
”மாங்காய்ப்
பச்சடி நான் ஏற்கனவே நிறையச் சாப்பிட்டிருக்கிறேனே… அதிலென்ன ஸ்பெஷல்” என்றார் சிறிதே
ஏமாற்றத்துடன்.
”பொறுங்கள்
சித்திரையாரே…இது வழக்கமான மாங்காய்ப் பச்சடி இல்லை. வழக்கமான பச்சடியில் வெறும் மாங்காய்த்
துண்டுகள், காரப்பொடி, உப்புக் கலவைதான் இருக்கும். ஆனால் இன்று நான் செய்யப்போகும்
மாங்காய்ப் பச்சடி அப்படிப்பட்டதில்லை; இது அறுசுவைகளின் கலவை” என்றேன்.
“ஓ” அப்படியா? இதை எப்படிச் செய்வீர்கள்
என்றார் ஆர்வம் மேலிட.
”வேகவைத்த
மாங்காய்க் கதுப்புகள், வெல்லம், வறுத்த வேப்பம்பூ, அரிந்த பச்சைமிளகாய், கரைத்துவிட்ட
புளி, சிறிது உப்பு என்று எல்லாம் சேர்த்துச் சித்திரைப் புத்தாண்டன்று மட்டும் நாங்கள்
செய்யும் ஸ்பெஷல் பச்சடியல்லவோ இது!” என்றேன்.
”அப்படியா
சமாசாரம்? சித்திரைப் புத்தாண்டன்று மட்டும் இதைச் செய்வதன் நோக்கம் என்ன?” என்றார்
செல்வனார் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்.
”ஐயா!
புத்தாண்டு என்பது ஆண்டின் தொடக்கம் அல்லவா? அன்றைய நாளை நாம் எவ்வாறு ஆரம்பிக்கிறோமோ
அதுபோலவே அவ்வருடம் முழுவதும் இருக்கும் என்று ஒரு நம்பிக்கை எங்களுக்கு. அதனால்தான்
இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உப்பு என்ற அறுசுவைகளையும் உள்ளடக்கிய
இப்பச்சடியைச் செய்கிறோம்” என்றேன்.
”பேஷ்
பேஷ்!” என்றவர் எனக்கு ஒரு சந்தேகம் என்று இழுத்தார்.
”கேளுங்கள்!”
”வாழ்க்கை எப்போதும் இனிப்பாகவே
இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதுதானே மனித இயல்பு. அப்புறம் ஏன் உங்கள் பச்சடியில்
கசப்பைச் சேர்க்கிறீர்கள்” என்றார் குழப்பத்தோடு.
”நல்ல கேள்விதான் ஐயா! ஆனால் அதிகப்படியான
இனிப்பும் திகட்டிவிடுமே….அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே? அதுமட்டுமல்லாமல்
வாழ்வில் எல்லா சுவைகளையும் கண்டால்தான் மனித மனம் பக்குவப்படும்; அவன் மனிதனாக வாழ்வான்.
அதற்காகத்தான் எங்கள் முன்னோர்கள் மிகுந்த முன்யோசனையோடு இப்படி ஓர் பச்சடியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்
என்றேன் பெருமிதத்தோடு.
”பலே…பலே!
உங்கள் முன்னோர்கள் வெகு கெட்டிக்காரர்கள்தான்!” என்று பாராட்டிய சித்திரைச் செல்வனார்
அடுத்து என்ன கேட்பது என்று யோசித்தவராய் அமர்ந்திருந்தார்.
’இதுதான்
சமயம்’ என்று நான் பேச்சை ஆரம்பித்தேன்.
”ஐயா…
தங்களிடம் கேட்பதற்கு எனக்கும் சில கேள்விகள் இருக்கின்றன கேட்கலாமா?”
”தாராளமாகக்
கேளுங்கள்” என்றார் அவர்.
இந்த
ஆண்டை நாங்கள் ‘ஜய’ வருடம் என்ற பெயரால்
அழைக்கிறோம்; இவ்வாண்டின் பலன்கள் எப்படி இருக்கின்றன. பெயருக்கு ஏற்றபடி இவ்வாண்டு
எங்கள் மக்களுக்கு வெற்றிகளைத் தரும் ஆண்டாக இருக்குமா? என்றேன் கவலையோடு.
”இதோ
இந்த ஆண்டுக்கான பலன்!” என்று தான் கொண்டுவந்திருந்த பையிலிருந்து ஒரு மஞ்சள் புத்தகத்தை
எடுத்துப் பிரித்துப் பாடத் தொடங்கினார் கர்ணகடூரமான குரலில்.
”ஜய வருடந் தன்னிலே செய்புலங்களெல்லாம்
வியனுறவே பைங்கூழ் விளையும் –
நயமுடனே
அஃகம்பெரிதா மளவில் சுகம்பெருகும்
வெஃகுவார் மன்னரிறை மேல்”
”ஐயா
பாட்டு நல்லா இருக்கு…இது நீங்க எழுதினதா? என்றேன் அப்பாவியாக.
”சரியாப்
போச்சு! இது உங்கள் முன்னோர்கள் எழுதிய (பஞ்சாங்கத்திலுள்ள) ’ஜய வருடத்திற்கான பலன்களைச்
சொல்லும் வெண்பா’.
”அப்படியா
ஐயா! இது தமிழ்ப் பாட்டுன்னு தெரியுது ஆனா..இதோட பொருள் என்னன்னு தெரியலயே? என்று கௌரவம்
சிவாஜி ஸ்டைலில் நான் கேட்கவும், புன்னகை சிந்திய சித்திரைச் செல்வனார் ”இதுக்குத்தான்
பள்ளிக்கூடத்தில தமிழ்ப் பாடத்த ஒழுங்காப் படிக்கணுங்கறது” என்று சொல்லிவிட்டுப் பாட்டின்
பொருளை விளக்க ஆரம்பித்தார்.
”அதாவது இந்த வருடம் வயல்களிலெல்லாம்
நல்ல விளைச்சல் இருக்கும்; செல்வங்கள் பெரிதாகும்; அதனால் சுகம் பெருகும்” என்றார்.
”இன்னொரு
முக்கியமான விஷயம்” என்று குரலைத் தாழ்த்தினார்.
”என்ன
ஐயா அது?” என்று நானும் கிசுகிசுப்பான குரலில் கேட்டேன்.
”நாட்டிலே
அரசியல்வாதிகளெல்லாம் ஆட்சி எனக்கு வேண்டும்..உனக்கு வேண்டும் என்று போட்டிபோடுவார்கள்!”
என்றாரே பார்க்கலாம்.
ஆச்சரியத்தில்
வாயைப் பிளந்த நான், ”அது எப்படிச் செல்வனாரே இவ்வளவு துல்லியமாப் பஞ்சாங்கத்தில நாட்டு
நடப்ப எழுதியிருக்காங்க…? நீங்க சொன்ன மத்ததெல்லாம் உண்மையோ இல்லையோ..இது நூத்துக்குநூறு
உண்மை. இப்ப எங்க நாட்டுல பாராளுமன்ற எலக்ஷன் நடக்குது. அரசியல்வாதிகள் அத்தனை பேரும்
பிரதமர் பதவிக்கு அடிச்சுக்கிட்டுல்ல நிக்குறாங்க” என்ற என்னைப் பார்த்துச் சிரித்த
செல்வனார் ”உங்கள் முன்னோர்களின் தீர்க்க தரிசனத்திற்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு!”
என்று கூறியவாறு இருக்கையைவிட்டு எழுந்தார்.
”என்ன
ஐயா அதுக்குள்ள எழுந்துட்டீங்க….இன்னிக்கு நீங்க எங்க வீட்டுல விருந்து சாப்பிட்டுட்டுத்தான்
போகணும்!” என்றேன் நான் விடாப்பிடியாக.
”முக்கியமான
வேலை ஒன்று இருக்கிறது; அதைமுடித்துவிட்டு மதியச் சாப்பாட்டிற்குக் கட்டாயம் வருகிறேன்”
என்றுகூறிப் புறப்பட்டவரை, ”ஐயா…ஐயா..இன்னும் ஒரே ஒரு கேள்வி” என்று கூறி நிறுத்தினேன்.
”என்ன?”
”அரசியல்வாதிகளெல்லாம்
பதவிக்குப் போட்டி போடுவாங்கன்னு சரியாச் சொன்னீங்க! ஆனா…நல்லாட்சி மலருமா? மக்கள்
பிரச்சனை தீருமா?” அதையும் சொல்லிட்டுப் போங்கய்யா!”
”அது
நீங்கள் போடும் ஓட்டில் இருக்கிறது; உங்கள் ஓட்டுரிமையைச் சரியாகப் பயன்படுத்திச் சரியான
நபரைத் தேர்ந்தெடுங்கள்!” என்றார் கம்பீரமாக.
”என்ன
இது? இவரும் அரசியல்வாதிகள் பாணியில் பேசறாரே!” என்று மனத்தில் எண்ணிக்கொண்டு அவருக்கு
விடைகொடுத்தேன்.
No comments:
Post a Comment