Thursday, April 17, 2014

புறநானூற்றுவழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள் - பகுதி 4

'வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரிஎன்று பட்டினப் பாலை ஆசிரியரால் பாராட்டப்பெறுகின்ற காவிரியன்னை தாலாட்டும் சோழவள நாட்டின் அரசனாய்ப் புலவர்கள் போற்றும் சிறப்போடு விளங்கியவன் நலங்கிள்ளி. அவனுக்கு நெருங்கிய உறவினனான நெடுங்கிள்ளி என்பவன் உறையூரைத் தலைநகராய்க் கொண்டு சோழநாட்டின் மற்றோர் பகுதியை ஆண்டு வந்தான். யாது காரணத்தாலோ அவர்கள் இருவருக்கும் சுமுக உறவு நிலவவில்லை.

பெருவீரனாய் விளங்கிப் புகழ்பெற்றான் நலங்கிள்ளி. அவனுடைய உடன்பிறந்த தம்பியானமாவளத்தானும்போர்களிலும், இன்னபிற அரசியல் செயற்பாடுகளிலும் அண்ணனுக்குப் பெரிதும் உதவி வந்தான். ஆனால் நெடுங்கிள்ளியைப் பெருவீரன் என்று சொல்வதற்கில்லை. அரசியல் பகையினால் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்குமிடையே அடிக்கடிப் போரும், பூசலும் நிகழ்ந்தவண்ணமே இருந்தது.

 ஒருமுறைச் சோழநாட்டைச் சார்ந்தஆவூர்என்ற இடத்தில் நெடுங்கிள்ளி தங்கியிருந்தபோதுமாவளத்தான்ஆவூரை முற்றுகையிட, அதுகண்டு அஞ்சிய நெடுங்கிள்ளி தனக்குச் சொந்தமானஉறையூருக்குச் சென்றான்; அங்கும் அவனைத் துரத்திச் சென்றனர் நலங்கிள்ளியும் அவன் தம்பியும். நெடுங்கிள்ளியின் நிலை இரங்கத் தக்கதாய் இருந்தது. அவன் தன் கோட்டைக்குள்ளேயே அஞ்சிப் பதுங்கியிருந்தான்.

இந்நிகழ்வுகளையெல்லாம் கண்டும், கேட்டும் பெரிதும் வருத்தமுற்ற செந்தமிழ்ப் புலவரும் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி இருவர்மாட்டும் பேரன்பு கொண்டவருமானகோவூர் கிழார்நலங்கிள்ளியின் அரண்மனைக்குச் சென்று அவனைக் கண்டார். கோவூர் கிழாரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தநலங்கிள்ளிஅவரை அன்போடு வரவேற்று ஆரத்தழுவிக் கொண்டான். பின்பு,”‘புலவர் பெருமானே! அவசர வேலையாக உறையூர்

நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன்; அதனால் உங்களோடு அதிகநேரம் அளவளாவ அவகாசம் இல்லை; மன்னித்து விடை கொடுங்கள்!” என்று பரபரப்போடு பேசியபடியே அவையிலிருந்து நகர முயன்றான்.

அவன் எங்கு அவ்வளவு அவசரமாகப் போகிறான் என்பதை நன்கு அறிந்த புலவர்பெருமான், “பொறு நலங்கிள்ளி! இவ்வளவு அவசரமாக எங்கேயப்பா புறப்பட்டுவிட்டாய்? உன் உறவினான நலங்கிள்ளியோடு போர் புரியத்தானே?” என்றார் அமைதியாக.

 

ஆச்சரியத்தோடு புருவத்தை உயர்த்திய நலங்கிள்ளி புலவரை நோக்கி, “அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?” என்று வினவினான்.

”எனக்கு மட்டுமா…..சோழ நாட்டிலுள்ள அனைவருக்குமே தெரிந்த செய்திதானே உங்கள் இருவரின் பகை” என்றார் குரலில் வேதனை தொனிக்க.

“என்ன செய்வது புலவரே….? ஆதியிலிருந்தே எனக்கும் நெடுங்கிள்ளிக்கும் ஒத்துவரவில்லை. அதனால் முற்றுகையும், போரும் தவிர்க்க இயலாதவையாகிவிடுகின்றனவே….?”

“நீ இப்படிப் பேசுவது நன்றாகயில்லை, நலங்கிள்ளி. இஃது உன் பேராண்மைக்கும் அழகன்று! போகட்டும், நான் கேட்கின்ற சில கேள்விகளுக்கு மட்டும் பதில்சொல்லிவிட்டு நீ புறப்படு! நான் தடுக்கவில்லை.”

”கேளுங்கள் புலவரே…உங்கள் கேள்விகளுக்குப் பதில்சொல்லிவிட்டே புறப்படுகின்றேன்”
“நல்லது நலங்கிள்ளி!” என்ற கோவூர் கிழார் தொடர்ந்து….”நீ ஒருவனை முற்றுகையிடச் செல்கிறாயே, அவன் பனம்பூ மாலை (பனம்பூ - சேரர்களின் அடையாளப்பூவாகக் கருதப்பட்டது) அணிந்த சேரனா?”

”இல்லை”

”அப்படியானால்….ஒருவேளை வேப்பம்பூ மாலை (வேப்பம்பூ - பாண்டியர்களின் அடையாளப்பூவாகும்) அணிந்த பாண்டியனோ?” 
 
“இல்லவேயில்லை புலவரே!”

”அப்படியானால் அவனும் உன்னைப்போல் ஆத்தி மாலை (ஆத்தி(ஆர்) – சோழர்களின் அடையாளப்பூவாகும்) அணிந்தவன்தானா?”

”கோவூர் கிழாரே! என்னைப் பரிகாசம் செய்கிறீர்களா என்ன..? நெடுங்கிள்ளியும் என்னைப்போல் ஆத்தி மாலை அணிந்த சோழ குலத்தவன்தான் என்பது தாங்கள் அறியாததா?”

”அறிவேன் நலங்கிள்ளி; நன்றாக அறிவேன். அதனை உனக்கு ஞாபகப்படுத்தவே இவ்வாறு கேட்டேன். அவனும் உன்னைப்போல் ஆத்தி மாலை அணிந்த சோழர் தொல்குடியைச் சேர்ந்தவன்தான்; அதனை நீ மறந்துவிட்டுப் போருக்குப் புறப்படுகிறாயே? இதன் பின்விளைவுகளை நீ உணரவில்லையே! என்ற வருத்தம்தான் எனக்கு.”

”என்ன சொல்லவருகிறீர்கள் புலவர்பெருமானே! சற்று எனக்கு விளங்குமாறு சொல்லுங்கள்!”

”தெளிவாக….உடைத்தே சொல்லிவிடுகிறேன் நலங்கிள்ளி. நீ யாரோடு போர் செய்ய விரும்புகிறாயோ, அவனும் உன்னைப் போலவே புகழ்வாய்ந்த சோழர்குடியைச் சேர்ந்தவனே. நீங்கள் இருவரும் மேற்கொள்ளப்போகும் போரில் இருவரும் வெற்றிபெறுவது என்பது இயற்கையில் நடவாத காரியம்; உங்களில் யார் தோற்றாலும் தோற்கப்போவது என்னவோ சோழர்குடிதான்! உங்கள் இருவரின் பகையும், பூசலும் உம்குடிக்குப் பீடுதருவதன்று! அதுமட்டுமா? ’கொடியால் பொலிகின்ற தேருடன் பவனிவருகின்ற’ உம்மைப் போன்ற மற்ற வேந்தர்களுக்குப் பேருவகையையும், பெருமகிழ்ச்சியையும் கொடுக்கக் கூடியது நும் பகை; இதனை மறவாதே!” என்றார் கோவூர் கிழார்.

அனுபவமும், அறிவும் செறிந்த கோவூராரின் மொழிகள் நலங்கிள்ளியைச் சிந்திக்க வைத்தன. அதன்காரணமாக அவன் நெடுங்கிள்ளிமீது மேற்கொள்ளவிருந்த முற்றுகைப் போரைக் கைவிட்டான். தனக்கு நல்லறிவு புகட்டிய புலவரை மீண்டும் அன்போடு அணைத்துக் கொண்டான்.

நலங்கிள்ளியின் மனத்தை மாற்றிப் போரைக் கைவிடவைத்த கருத்தாழம் மிக்க அப்பாடல் இதுவே..

“இரும்பனை   வெண்தோடு   மலைந்தோ   னல்லன்
கருஞ்சினை   வேம்பின்   தெரியலோ   னல்லன்
நின்னகண்ணியும்   ஆர்மிடைந்   தன்றே,   நின்னொடு
பொருவோன்   கண்ணியும்   ஆர்மிடைந்   தன்றே
ஒருவீர்   தோற்பினுந்   தோற்பதுங்   குடியே
இருவீர் வேறல்   இயற்கையு   மன்றே,   அதனால்
குடிப்பொரு   ளன்றுநும்   செய்தி   கொடித்தேர்
நும்மோ   ரன்ன   வேந்தர்க்கு
மெய்ம்மலி   யுவகை   செய்யுமிவ்   விகலே.” (புறம்: 45)

கோவூர் கிழாரின் பாடலை இன்றைய அரசியலோடு பொருத்திப் பார்க்கும்போது பல்வேறு எண்ண அலைகள் மனக் கடலில் கொந்தளிக்கவே செய்கின்றன. நம் தமிழர்கள் மட்டும் சாதி, மதம், அரசியல் என்ற பல்வேறு அற்பக் காரணங்களின் அடிப்படையில் சிதறிக் கிடக்காமல், தம் (அரசியல்) சுயலாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல் மனிதாபிமானத்தோடும், ஒற்றுமையோடும் ஒருமித்துக் குரல் எழுப்பியிருந்தால் - தம் எதிர்ப்பைப் பலமாக வெளிப்படுத்தியிருந்திருந்தால்… அண்டை நாட்டில் நம் சகோதரத் தமிழர்கள் இப்படி இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கமாட்டார்களே..! அதனைத் தவறவிட்டுவிட்டோமே! அவ்விழப்பை எப்படி ஈடுசெய்யப் போகிறோம்? அதனை எண்ணும்போது விழியோரம் அருவி பொழியவே செய்கிறது.     

இனியாவது தமிழர்களாகிய நாம் நமக்குள்ளிருக்கும் இனச் சண்டை, மதச் சண்டை, அரசியல் காழ்ப்பு ஆகியவற்றை உதறித் தள்ளிவிட்டு வெளியேவராமல் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டே இருப்போமானால் பேரழிவு நமக்குத்தான் என்பதில் எள்முனையளவும் ஐயமில்லை!

இக்கருத்தையே நம் மகாகவியும்,
“ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த”
ஞானம்வந் தால்பின் நமக்கெது வேண்டும்?” என்று எளிய தமிழில் எடுத்தோதினான்.

புறநானூற்றுப் புதையலை ஆராய, ஆராய அதிலிருந்து முத்துக்களாகவும், மணிகளாகவும் வெளிப்படும் அரசியல் சிந்தனைகளுக்கும், அறநெறிசார் வாழ்வியல் கோட்பாடுகளுக்கும் அளவேயில்லை. எனினும் காலஅளவு கருதி ஒருசிலவற்றை மட்டுமே தொட்டுக்காட்ட இயலுகின்றது.

ஒன்றுமட்டும் உறுதியாகக் கூறமுடியும்! புறநானூற்றைப் படித்தால் கோழையும் வீரனாவான்; அறிவிலியும் அறிஞனாவான்; சுயநலவாதியும் பொதுவுடைமையைப் போற்றுவான். எனவே தமிழர்களாகிய நாம் புறநானூற்றைக் கற்போம்; மற்றவர்க்கும் கற்பிப்போம். எலிப்பொறியில் சிக்குண்ட எலிபோல் எப்போதும் கணிப்பொறியே கதியென்று கிடக்காமல் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சங்கத் தமிழையும் சற்றே பருகுவோம். ‘புத்தகங்கள் வெறும் காகிதங்கள்தான்; ஆனால் படிக்கப் படிக்க அவை ஆயுதங்களாக மாறும்!” என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். நம் சங்கத்தமிழ் நூல்களும் அப்படிப்பட்டவையே!

என்னருமைத் தமிழ்மக்களே! நல்ல தமிழை நாளும் கற்போம்; வாழ்வில் உயர்வோம்!
வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திரு நாடு!!

(முற்றும்)

No comments:

Post a Comment