பெருமூச்செறிந்தபடி எங்கோ வெறித்த பார்வையோடு வீட்டில்
அமர்ந்திருந்தாள் தலைவி. அதுகண்டு வருத்தமடைந்த தோழி, ”அடி பெண்ணே! இப்படி விட்டத்தையே
வெறித்துப் பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரந்தான் உட்கார்ந்திருப்பாய்; என்ன நடந்தது?
உண்மையைச் சொல்!” என்று வினவ, தலைவியின் கண்களிலிருந்து ’குபுக்’ என எட்டிப் பார்த்தது
கண்ணீர்! பதறிப்போன தோழி…”என் கண்ணே அழாதே! உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்
உதிரம் கொட்டாதா? அழுகையை நிறுத்து. நடந்ததைச் சொல்!” என்று கேட்டவாறு தலைவியின் கூந்தலை
அன்பாக வருட, தலைவி தொடர்ந்தாள்…..
”உன்னிடம் சொல்வதற்கென்ன…என் உயிர்த் தோழியிடம்தானே
என் உயிர்க் காதலையும் வெளியிட முடியும்! அன்றொரு நாள் நாம் அருவியில் நீராடிவிட்டுத்
திரும்பும்போது யானை ஒன்று துரத்திவந்ததே உனக்கு ஞாபகம் இருக்கிறதா?”
”யானையையும் ஞாபகம் இருக்கிறது. அந்த யானையிடமிருந்து
நம்மைக் காப்பாற்றிய ’காளை’யையும் ஞாபகம் இருக்கிறது” என்று கூறிவிட்டுக் குறுகுறுவென்று
தலைவியைப் பார்த்தாள் தோழி.
”பலே குறும்புக்காரியாயிற்றே நீ” என்று அவள் கன்னத்தைத்
தட்டிய தலைவி, ”அந்தக் காளை பின்பு அடிக்கடி என்னைச் சந்திக்க வந்தான்…உனக்குத் தெரியாமல்
நானும் அவனும் பல முறை சந்தித்தோம்.”
”அடி! கள்ளி!!”
”நான் கள்ளியில்லை. அவன் தான் என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்ட
கள்வன்!”
”சரி சரி, மேலே சொல்!” என்றாள் தோழி ஆர்வத்தோடு.
என்னைச் சந்தித்து ஆசை வார்த்தைகள் பேசினான். மறக்கமாட்டேன்;
உன்னைத் துறக்கமாட்டேன்; விரைவில் மணம் செய்துகொள்வேன் என்றெல்லாம் (நீர்த்துறையில்)
சூளுரைத்தான்.
”அப்புறம்?”
”அப்புறமென்ன…ஆயிற்று இரண்டு மாதங்கள்! என்னைப்
பார்க்கவே வரவில்லையடி!” என்று வேதனையோடு நெட்டுயிர்த்தாள் தலைவி.
”அப்படியா சேதி…? இதை முன்னமே என்னிடம் கூறியிருக்கக்கூடாதோ?
இந்நேரம் உங்கள் திருமணத்தையே நடத்தி முடித்திருப்பேனே? போகட்டும்! அவன் சூளுரைத்தான்
என்றாயே…அதற்கு வேறு யாராவது சாட்சி உண்டா?”
”சாட்சியா…அந்தக் கள்வனைத் தவிர வேறு சாட்சி ஏது?
என்றவள் சற்று யோசித்துவிட்டு….ஆங்…..இன்னொரு சாட்சி இருக்கிறது!”
”அது என்ன உடனே சொல்!” - பரபரத்தாள் தோழி.
”அப்போது நீர்த்துறையில் மீனைப் பிடிப்பதற்காக நீரையே
பார்த்துக்கொண்டிருந்த குருகு (நாரை) ஒன்று இருந்தது. அதுதான் ஒரே சாட்சி. ஆனால் அது
வாய்திறந்து பேசாதே? சாட்சி சொல்ல வாராதே?” என்றாள் தலைவி கவலையோடு.
”நல்ல சாட்சி பிடித்தாயடி!” என்று நகைத்த தோழி,
”விரைவில் தலைவனைச் சந்தித்துப் பேசி இதற்கோர் நல்ல முடிவு காணவேண்டும்” என்று தனக்குள்
தீர்மானித்து, ”அஞ்சாதே பெண்ணே! விரைவில் நல்லது நடக்கும்!” என்று தலைவிக்கு ஆறுதல்
கூறி அவளைத் தேற்றினாள்.
தலைவி தோழியிடம் கூறிய செய்திகளே பின்வரும் குறுந்தொகைப்
பாடல்.
திணை: குறிஞ்சி;
துறை: வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது;
பாடியவர்: கபிலர்.
’யாரு மில்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.’ (குறுந்: 25)
விளக்கம்: தோழி! தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாக இருந்தவர் வேறு ஒருவரும் இல்லை. அந்தக் கள்வன் ஒருவன்தான் இருந்தான். தலைவன் அப்பொழுது என்னை மணப்பேன் என்று
கூறிய சூளுரையிலிருந்து தப்பினால் நான் என்ன செய்வேன்? தினையின் அடியைப் போன்ற சிறிய பசிய கால்களை உடைய, ஓடுகின்ற நீரில் ஆரல் மீனின் வரவை (உண்ணும் பொருட்டு) ஆவலோடு பார்த்துக்கொண்டு
நின்றிருந்த நாரையும் அங்கே இருந்தது என்றாள் தலைவி. (அது சாட்சிசொல்ல வருமோ?!) :-)
No comments:
Post a Comment