Thursday, April 17, 2014

வடக்கிருத்தல்

இப்போதெல்லாம் செய்தித்தாளைப் பிரித்தாலே ஏதேனும் ஓர் அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவரோ அல்லது அவருடைய தொண்டரடிப்பொடிகளோ உண்ணாநோன்பு இருப்பது குறித்த செய்திகள் கட்டாயம் கண்ணில் படுகின்றன. இவர்கள் மேற்கொள்ளும் உண்ணாநோன்புகள் தங்கள் (அரசியல்சார்) கோரிக்கை நிறைவேறவில்லை என்பதற்காகவோ அல்லது எதிர்க்கட்சியினருக்கு தம் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவோ பயன்படுத்தப்படும் ஓர் ஆயுதமாகவே விளங்கிவருகின்றன. இவை பெரும்பாலும் ’ஒரு பகல் வாழ்க்கை கொண்ட ஈசல்’ போலச் சிலமணி நேரங்களிலேயே முடிந்துவிடுகின்றன. மற்றும்சில உண்ணாநோன்புகள் அதிசயிக்கத்தக்க வகையில் ஓரிரு நாட்கள் நீடிப்பதும் உண்டு.

இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் சமுதாய நலனையும், நம் இந்தியச் சுதந்திரத்தையுமே நோக்கமாகக் கொண்ட உண்ணாநோன்புகள் பலவற்றை நம் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் சென்ற நூற்றாண்டில் மேற்கொண்டிருந்தார் என்பதனை நாம் அறிவோம். அவ்வுண்ணாநோன்புகளில் சில மாதக் கணக்கில் கூட நீடித்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் ‘நவகாளி’யில் மேற்கொண்ட உண்ணாவிரதம் இன்றும் நினைவுகூரப்படுகின்ற, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஓர் நிகழ்வாகத் திகழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் நோக்கும்போது, இந்த உண்ணாநோன்புகள் எப்போது, யாரால் தொடங்கப்பட்டன? இவற்றின் உண்மையான நோக்கம் என்ன என்று அறிந்துகொள்ளும் ஆவல் நமக்கு எழவே செய்கின்றது அல்லவா! இவற்றின் தொடக்கம் குறித்தும், இவற்றை ஆரம்பித்து வைத்தவர்கள் யார் என்பது பற்றியும் சற்று ஆய்ந்து பார்ப்போம்.
உண்ணாநோன்பிருந்து ’உயிர்நீத்தல்’ என்ற கொள்கையை முதன்முதலில் நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ‘சமணர்கள் என்பது நமது பண்டைய தமிழிலக்கியங்கள் மூலமாகத் தெரியவருகின்றது; ’சல்லேகனை’ என்ற பெயரில் அவர்கள் இதனை வழங்கிவந்துள்ளனர். எந்தச் சூழ்நிலையில் இந்த ’சல்லேகனை’ மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை ‘அருங்கலச் செப்பு என்ற சமண நூல் அழகாகத் தெளிவுபடுத்துகின்றது.

”இடையூறு ஒழிவில்நோய்  மூப்பிவை வந்தால்
கடைதுறத்தல் சல்லே கனை.”

தாங்கமுடியாத அளவிற்குப் பிறரால் ஏற்படுகின்ற தொல்லை, தீராத நோய், மிகுந்த மூப்பு ஆகியவை வரும்காலத்துச் ’சல்லேகனை’ செய்து உயிர்விடலாம் என்கின்றது இந்நூல். இவையல்லாது பஞ்சம் (வற்கடம்) வந்தகாலத்தும் ‘சல்லேகனை’ மேற்கொள்ளலாம் என அனுமதி அளிக்கின்றது, இரத்தின கரண்டக சிராவகாசாசரம் என்னும் மற்றொரு சமண நூல்.

தூய எண்ணத்தோடு பற்றற்றவராய் இருந்து வீடுபேறு ஒன்றையே நோக்கமாகக் கொண்டுசல்லேகனை’ இருக்கவேண்டும் என்பதும் இந்நூல்களால் வலியுறுத்தப்படுகின்றது. ஆகவே சல்லேகனையைத் ’தற்கொலை’ என்று கொச்சைப்படுத்தலாகாது; அஃது எத்தகைய பலனையும் எதிர்பாராது அறவழியில் உயிர்விடும் ஓர் உயரிய முறையே என்கிறது ‘நீலகேசி’ என்னும் சமண நூல்.

’சல்லேகனை’ செய்வோர் தருப்பைப் புல்லின்மேல் வடக்கு நோக்கி அமர்ந்து சாகிற வரையில் உணவுகொள்ளாமல் இருக்க வேண்டும். தேவையாயின் நீர் மட்டும் உட்கொள்ளலாம். வடக்கு திசை நோக்கி அமர்ந்து உயிர்துறக்கின்ற காரணத்தினாலேயே இஃது ‘வடக்கிருத்தல்’ என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். பின்பு அப்பெயரே பரவலான வழங்குபெயராகத் தமிழரிடையே நிலைத்துவிட்டது.

சமண முனிவர்களால் ஏற்படுத்தப்பட்ட ’வடக்கிருத்தல்’ என்ற இம்முறையினைப் பின்பற்றி உயிர்துறந்தோரில் பெரும்பாலோர் தீர்த்தங்கரர்களே (சமண முனிவர்கள்). அவர்களேயல்லாது, வேறு சில தமிழ்ச் சான்றோரும் வடக்கிருந்து உயிர்துறந்திருப்பது நம் சங்க இலக்கியங்கள் வாயிலாகத் தெரியவருகின்றது. இம்முறையில் பொன்னுடலை நீத்தும் புகழுடம்பால் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உயர்ந்தோர் சிலர் குறித்து இங்கே காண்போம்.



’வடக்கிருந்து உயிர்துறந்தவர்’ என்று சிந்திக்கும்போதே, சட்டென்று நம் நினைவுக்கு வருவது கோப்பெருஞ்சோழன் என்னும் பெயரே! ஆம்..கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்துறந்தது உண்மையே என்பதனை ஆதாரங்களோடு விளக்குகின்றது புறநானூறு. அடடா…இது என்ன கொடுமை! அவன் மன்னனாயிற்றே, அவனுக்கு என்ன துன்பம் இருக்கமுடியும்? பஞ்சம் பசி போன்றவை அவன் அரண்மனை இருக்கும் திசைப்பக்கம் கூட வர வாய்ப்பில்லையே! பின்பு யாது காரணத்தினால் அவன் வாழ்வையே வெறுத்து உயிர்துறக்க முடிவெடுத்தான் என ஆராயும்போது….அவனுடைய பிள்ளைகள் தம் தீயொழுக்கத்தின் காரணமாக அவனுக்கு எதிராகக் கலகம் விளைவித்து ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்ற விழைந்தனர் எனவும், அதனை விரும்பாத அவன் அவர்களோடு போர் புரிய எத்தனித்த வேளையில் அவனுடைய அவைக்கண் வீற்றிருந்த அறிவுசால் புலவர்பெருமக்கள், ”பிள்ளைகளுக்கெதிராய்த் தந்தை போர்புரிவது பீடன்று” என்று அவனைத் தடுத்துவிட்டனர் எனவும், அதன்பிறகும் உயிர்வாழ்தலை விரும்பாத அவன் ‘வடக்கிருந்து’ உயிர்துறந்தான் எனவும் கூறுகின்றது புறப்பாட்டு.

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்துறக்க முடிவுசெய்த வேளையில் தன் ஆருயிர் நண்பர் ’பிசிராந்தையாரும்’ தன்னோடு உயிர்துறக்க அவ்விடத்திற்கு வருவார் என்று உறுதியாக நம்பியவனாக அவருக்கும் ஓர் ஆசனம் இடச் சொல்கின்றான். இதில் விந்தை என்னவென்றால், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அதுநாள் வரைப் பார்த்ததுகூடக் கிடையாது. கோப்பெருஞ்சோழன் சோழ நாட்டின் அரசன்; பிசிராந்தையாரோ பாண்டிய நாட்டில் வாழ்ந்துவந்த ஓர் புலவர் பெருந்தகை. இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட அதிசய நட்போ இன்றளவும் நமக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் அள்ளி வழங்கும் ’முகமறியாத அகம் ஒத்த நட்பு’; இதைக் காணும்போது இவ்வாறெல்லாம்கூட நட்பு மலர முடியுமா? என்று நமக்கு ஐயம் ஏற்படுகின்றது இல்லையா? ஆனால் அந்த ஐயத்தை அழகாகத் தெளிவுபடுத்திவிடுகிறார் நம் வள்ளுவப் பேராசான்,

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.(குறள்: 785) என்ற இந்தக் குறள் வாயிலாக.

இக்குறளுக்கு இவர்களினும் சிறந்த ஓர் சான்றை நாம் காட்டிவிட முடியுமா?
பிசிராந்தையாருக்குத் தன்னருகே ஆசனமிடச்சொன்ன கோப்பெருஞ்சோழன் அவர் பாண்டிய நாட்டிலிருந்து (தன்னிடம்) வந்து சேரும் வரை உயிரோடு இல்லை. அதற்கு முன்னரேயே உண்ணாநோன்பின் காரணமாக உயிர்துறந்து விடுகின்றான். அங்கே குழுமியிருந்த அரசவைப் புலவோர், இனியும் பிசிராந்தையார் வர வாய்ப்பில்லை என்றே எண்ணினர். ஆனால் நடந்ததோ வேறு. அவர்கள் அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் பிசிராந்தையார் அங்கே வந்து விடுகிறார். அதுமட்டுமல்ல…..தன் நண்பன் கோப்பெருஞ்சோழன் உயிர்துறந்து ’நடுகல்லான’ இடத்திற்கருகிலேயே தனக்காக இடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்து தன் இன்னுயிரையும் நீத்துச் ’சான்றோர் சான்றோர் பாலராப’ என்ற சான்றோரின் உயர்ந்த நட்பிற்கும் இலக்கணம் வகுத்துவிடுகின்றார்.

இந்நிகழ்வினைக் கண்டு நெகிழ்ந்துபோன கோப்பெருஞ்சோழனின் அரசவைப் புலவர்களில் ஒருவரான ‘பொத்தியார்’ என்பவர், ”தன் நண்பன் தன்னைக் காண வருவான் என்றெண்ணிய மன்னனின் சிறப்பும், அந்தச் சொல் பழுதாகாதவாறு வந்துவிட்ட இப்புலவரின் அறிவும் வியக்குந்தோறும், வியக்குந்தோறும் வியப்பை மிகுதியாக்குகின்றதே” என்று இவ்விரு நண்பர்களையும் போற்றிப் புகழ்கின்றார்.

”……..வருவ னென்ற கோனது பெருமையும்
அதுபழு தின்றி வந்தவ னறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே….” (புறம்: 217)
   
கோப்பெருஞ்சோழனின் அன்பிற்குப் பாத்திரமாக விளங்கிய ’பொத்தியார்’ என்னும் அப்புலவரும் பின்பு வடக்கிருந்து உயிர்துறக்கிறார் என்ற செய்தியையும் புறநானூறு புலப்படுத்துகின்றது. இப்புலவர் பெருமக்களுக்குத்தான் கோப்பெருஞ்சோழன்மீது எத்துணை பேரன்பு!!

இதுபோன்று வடக்கிருந்து உயிர்நீத்ததாகப் புறநானூறு போற்றும் மற்றோர் அரசன் ’சேரமான் பெருஞ்சேரலாதன்’ ஆவான். இவனுக்கும் சோழன் கரிகாற் பெருவளத்தானுக்கும் ’வெண்ணிப் பறந்தலை’ என்னும் இடத்தில் நடைபெற்ற போரில், வளவன் செலுத்திய நெடுவேல் இச் சேரமான் மார்பில்பட்டு முதுகின் புறத்தே உருவிச் சென்று புண் செய்தது. மார்பிலும் முகத்திலும் படும் புண்ணையே விழுப்புண்ணென வீரர்கள் விரும்புவர். மார்பில்பட்ட கருவியால் முதுகிலும் இச் சேரமானுக்குப்புண் ஏற்பட்டதால், இவன் மிகவும் நாணம் கொண்டு வடக்கிருந்து உயிர்துறந்தான் எனப் புறநானூறு 65, 66-ஆம் செய்யுள்களும் அவற்றின் உரைகளும் எடுத்தியம்புகின்றன.

கழாஅத்தலையார்’ எனும் புலவர் சேரமான் பெருஞ்சேரலாதனின் வடக்கிருத்தலைப் புகழ்ந்து பாடிய பாடல் இது…

”…….தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த
புறப்புண் ணாணி மறத்தகை மன்னன்
வாள்வடக் கிருந்தன னீங்கு……………………….” (புறம்: 65)

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.” (குறள்: 969) என்ற குறளுக்கு இலக்கணமாகவன்றோ திகழ்கின்றான் இச்சேரமான்!!

கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பைப் போலவே காலத்தை வென்ற காவிய நட்பு மற்றொன்றையும் நம் தமிழிலக்கியம் காட்டுகின்றது. ’புலனழுக்கற்ற அந்தணாளன்’ என்று ’மாறோக்கத்து நப்பசலையார்’ என்னும் புலவரால் பாராட்டப் பெறும் கபிலரும், ’பறம்பு மலையை’ ஆண்ட குறுநில மன்னன் பாரியுமே அந்த நண்பர்கள்.
பாரியையும், அவன் ஆண்ட பறம்பு மலையையும் பாடுவதற்காகவே பிறந்த புலவராகக் கபிலர் காட்சியளிக்கிறார். பாண்டிய நாட்டைச் சுற்றியிருந்த பகுதியான ‘பறம்பு மலை’யை ஆண்ட வேள்பாரியும், திருவாதவூரில் பிறந்த பெரும்புலவரான கபிலரும் இனிய நண்பர்களாய் விளங்கினர்.

கடையெழுவள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்த பாரி, பற்றிப்படரக் கொழுகொம்பு இன்றிக் காற்றில் அலைந்த முல்லைக் கொடியைக் கண்டு உள்ளம் வருந்தித் தன் தேரையே அது படர்வதற்காக விட்டு வந்தவன். அத்தகைய அருள் உள்ளமும், வள்ளன்மையும் வாய்ந்தவனாயிருந்ததனால் மக்கள் கூட்டம் எப்போதும் அவனைச் சூழ்ந்திருந்தது. இரவலர்கள் வந்து பரிசல்பெற்றுச் சென்றவண்ணம் இருந்தனர். பாரியின் சிறப்புமிகு வள்ளன்மையை (வஞ்சப் புகழ்ச்சியாக) கபிலர் பாடிய ஓர் இனிய பாடல்.

”பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.” (புறம்: 107)

”பாரி..பாரி என்று ஏன் எல்லாரும் அவனையே போற்றிப் புகழ்கிறீர்கள்? அவன் ஒருவன்தான் இருக்கிறானா உங்களைக் காக்க? ஏன் மாரி(மழை) இல்லையா? என்று மக்களைக் கேட்கும் வகையில் கபிலர் இப்பாடலை அழகுற அமைத்துள்ளார். இதில் பாரியை இகழ்வதுபோல் ‘மாரி’ நிகர்த்தவன் என்று அவனுக்குப் புகழ்மாலை சூட்டுகின்றார்.
பேரும், புகழும் பெற்றவனாக ஓர் குறுநில மன்னன் விளங்குவது கண்ட மூவேந்தர்களும் அவன்பால் பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் கொண்டு அவனைத் தந்திரமாகக் கொன்றுவிடுகின்றனர். அதுகண்டு பாரியின் உயிர் நண்பரான கபிலர் பெருந்துயர் அடைகின்றார்.

பாரியின் புதல்வியர் (பாரி மகளிர்) இருவரையும் தாமே தந்தைபோல் இருந்து காத்து அவர்கட்குத் திருமணம் செய்வித்தபின்பு, தன் உயிர்நண்பன் பாரியை நினைந்தேங்கி ‘வடக்கிருந்து’ உயிர்துறக்கிறார் என்ற செய்தியைப் புறம் நமக்குச் சுட்டுகின்றது. நெஞ்சை நெகிழ வைக்கும் எத்தகைய அரிய நட்பு இவர்களுடையது!

வடக்கிருந்து உயிர்துறந்த உத்தமர்கள் வரிசையில் அடுத்து நம் நினைவுக்கு வருபவர் சமணத் துறவியான ‘கவுந்தியடிகள்’ என்னும் பெண்மணி. சிலப்பதிகாரத்தில் ஓர் முக்கியப் பாத்திரமாகத் திகழ்கின்ற இவ்வம்மையார் கோவலனும், கண்ணகியும் மதுரைக்குப் பயணப்பட்டபோது அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும், வழித்துணையாகவும் உடன்சென்றவராவார். ‘மாதரி’ என்ற ஆயர்குல முதியவளிடம் கண்ணகியையும், கோவலனையும் அவர் அடைக்கலமாகக் கொடுக்கின்றார். கண்ணகியின் பெருமையைக் கவுந்தியடிகள் மாதரியிடம் விளக்கும் அற்புதமான பாடல் வரிகள் நம்மைக் கண்ணகிபால் பெருமதிப்பு கொள்ள வைக்கின்றன.

 கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது,
 பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்” (சிலம்பு: அடைக்கலக் காதை: 143-144).

உயர்ந்த தவசீலராக விளங்கிய கவுந்தியடிகள் பின்பு கோவலன் கொலையுண்டது, பாண்டியனும் அவனுடைய மனைவியாகிய கோப்பெருந் தேவியும் உயிர்நீத்தது, அரண்மனை எரியுண்டது, மாதரி என்னும் மூதாட்டி தன்னிடம் அடைக்கலமாக வந்த கோவலன், கண்ணகியைக் காக்கத் தவறிவிட்டோமே என்று துயருற்றுத்  தீயில் பாய்ந்து உயிர்விட்டது ஆகிய அவலச் செய்திகளையெல்லாம் கேள்வியுறுகின்றார்; ஆற்றொணாத் துயரம் அடைகிறார். இத் துயரச் செயல்களுக்கும் தமக்கும் தொடர்புண்டு என்று எண்ணி வருந்துகிறார். மாசற்ற தூய மனம் படைத்த அவருக்குத் தாங்கவியலா மனவேதனை ஏற்படுகின்றது. ஆகவே, சமணசமயக் கொள்கைப்படி உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறார்

 இதனை,
”தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம்
நிவந்தோங்கு செங்கோல் நீணில வேந்தன்
போகுயிர் தாங்கப் பொறைசா லாட்டி
என்னோ டிவர்வினை யுருத்த தோவென
உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும்..”     (சிலம்பு: நீர்ப்படைக் காதை: 79-83) என்று சிலப்பதிகாரத்திலுள்ள ‘நீர்ப்படைக் காதை’ குறிப்பிடுகின்றது.

இவ்வாறு சமணர்களால் தொடங்கப்பட்டு, பின்னர் ஏனைய தமிழ்ச் சான்றோராலும் பின்பற்றப்பட்ட பொருள்பொதிந்த ஓர் உயிர்நீத்தல் முறையே வடக்கிருத்தல் எனப்படும் சல்லேகனை. இம்முறையைத் தகுந்த, உயர்ந்த காரணங்களுக்காகவே நம் முன்னோர் பின்பற்றி வந்திருக்கின்றனர் என்பது மேற்கூறப்பட்ட நிகழ்வுகளால் உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புலப்படும்.

அதைவிடுத்து, வடக்கிருத்தலை அவமதிக்கும் விதமாகவும், கேலிக்கூத்தாக்கும் வகையிலும், தற்காலத்தில் ’உண்ணாநோன்பு’ என்ற பெயரில் பலரும் இதனைத் தம் ’சுய லாபம்’ கருதி மேற்கொள்வது மிகவும் வருந்தத்தக்கது. அந்நாளில் மேற்கொள்ளப்பட்ட (உண்மையான) வடக்கிருத்தல் முறையானது நமது பண்டைய நாகரிகத்தின் சிறப்பினையும், மேன்மையையும் தெளிவாய்ப் படம்பிடித்துக் காட்டித் தமிழர்களாகிய நம்மை இன்றும் பெருமைகொள்ளச் செய்கின்றது என்பதில் ஐயமில்லை. 
 
 

No comments:

Post a Comment