புதுவையில்
பிறந்து புதுமைச் சிந்தனைகளில் வளர்ந்து பாரதியைத் தன் ஆசானாக ஏற்றுக் கனகசுப்புரத்தினம்
எனும்தன் இயற்பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டவர், ’புரட்சிக்கவிஞர்’ என்று பெரியாராலும்,
’புரட்சிக்கவி’ என்று அறிஞர் அண்ணாவாலும் அன்போடு அழைக்கப்பட்ட கவிஞர் பாரதிதாசன்.
சமத்துவம்,
பொதுவுடைமை, பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், கருத்தடையின் அவசியம், முதியோர் காதல் எனப்
பல்வேறு புரட்சிக்கருத்துக்களை மிகத் துணிச்சலாக அன்றே தன் கவிதைகள் வாயிலாய் வலியுறுத்தியவர்
அவர். அற்புதமான படைப்புக்கள் பலவற்றைத் தந்து நம் சிந்தனைக்கு விருந்து படைத்த பாவேந்தர்,
அத்தோடு நில்லாமல் நம்மை விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் நகைச்சுவை வித்தகராகவும்
விளங்கியிருக்கின்றார் என்பதற்கு அவர்தம் படைப்புக்களே சான்று பகர்கின்றன.
அவருடைய
ஆக்கங்களில் நகைச்சுவை வலிந்து திணிக்கப்பட்டதாயில்லாமல் மிக இயல்பாக அமைந்திருப்பதைக்
காணும்போது அவருடைய நகைச்சுவை உள்ளம் நமக்குத் தெற்றெனப் புலனாகின்றது. அவ்வாறு
நான் இரசித்த பாவேந்தரின் நகைச்சுவைகள் சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.
ஒரு
குடும்பத்தை விளங்கச் செய்பவள், அதற்கு விளக்காயிருப்பவள் பெண்ணே என்பது உலகறிந்த உண்மை.
’மங்கலம் என்ப மனைமாட்சி’ என்பது தெய்வப்புலவரின் திருவாக்கு. அத்தகைய குடும்பவிளக்காகத்
’தங்கம்’ என்ற பெண்ணரசியை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் கவிஞர் தன்னுடைய குடும்பவிளக்கு
எனும் காவியத்தில்.
அனைவரும் படித்துமகிழவேண்டிய ஓர் அருமைக் காவியமிது!
அதிலிருந்து
ஓர் நகைச்சுவைக் காட்சி…
வெளியூருக்குச்
சென்றுவிட்டுத் தன்மகன் வீட்டுக்குத் திரும்புகிறார்கள் தங்கத்தின் மாமியும், மாமனும்.
அவர்கள் வீட்டிற்கு வாங்கிவந்திருக்கும் பொருள்களைப் பார்த்தால் நாம் வியப்பில் வாய்பிளப்போம்.
(அவற்றில் பல இன்றைய தலைமுறையினருக்குப் பரிச்சயமே இல்லாதவை என்றுகூடச் சொல்லலாம்.)
ஓர்
கூண்டுவண்டி திணறும் அளவிற்குத் தங்கத்தின் வீட்டுவாயிலில் வந்திறங்கிய அந்தப் பொருள்களை
நாமும்தான் தெரிந்துகொள்வோமே!
கொஞ்ச நாள் முன்வாங்கிட்ட
கும்ப கோணத்துக் கூசா,
மஞ்சள், குங்குமம், கண்ணாடி,
மைவைத்த தகரப் பெட்டி,
செஞ்சாந்தின் சீசா, சொம்பு,
வெற்றிலைச் சீவற் பெட்டி,
இஞ்சியின் மூட்டை ஒன்றே,
எலுமிச்சைச் சிறிய கோணி
கும்ப கோணத்துக் கூசா,
மஞ்சள், குங்குமம், கண்ணாடி,
மைவைத்த தகரப் பெட்டி,
செஞ்சாந்தின் சீசா, சொம்பு,
வெற்றிலைச் சீவற் பெட்டி,
இஞ்சியின் மூட்டை ஒன்றே,
எலுமிச்சைச் சிறிய கோணி
புதியஓர் தவலை நாலு,
பொம்மைகள், இரும்புப் பெட்டி,
மிதியடிக் கட்டை, பிள்ளை
விளையாட மரச்சா மான்கள்,
எதற்கும்ஒன்றுக்கி ரண்டாய்
இருக்கட்டும் வீட்டில் என்று
குதிரினில் இருக்கும் நெல்லைக்
குத்திட மரக்குந்தாணி
பொம்மைகள், இரும்புப் பெட்டி,
மிதியடிக் கட்டை, பிள்ளை
விளையாட மரச்சா மான்கள்,
எதற்கும்ஒன்றுக்கி ரண்டாய்
இருக்கட்டும் வீட்டில் என்று
குதிரினில் இருக்கும் நெல்லைக்
குத்திட மரக்குந்தாணி
தலையணை, மெத்தைக் கட்டு,
சல்லடை, புதுமு றங்கள்,
எலிப்பொறி, தாழம் பாய்கள்,
இப்பக்கம் அகப்ப டாத
இலுப்பெண்ணெய், கொடுவாய்க் கத்தி,
இட்டலித் தட்டு, குண்டான்,
கலப்பட மிலாநல் லெண்ணெய்,
கைத்தடி, செந்தாழம்பூ
திருமணம் வந்தால் வேண்டும்
செம்மரத் தினில்முக் காலி,
ஒருகாசுக் கொன்று வீதம்
கிடைத்த பச்சரிசி மாங்காய்,
வரும்மாதம் பொங்கல் மாதம்
ஆதலால் விளக்கு மாறு,
பரிசாய்ச் சம்பந்தி தந்த
பாதாளச் சுரடு, தேங்காய்…
செம்மரத் தினில்முக் காலி,
ஒருகாசுக் கொன்று வீதம்
கிடைத்த பச்சரிசி மாங்காய்,
வரும்மாதம் பொங்கல் மாதம்
ஆதலால் விளக்கு மாறு,
பரிசாய்ச் சம்பந்தி தந்த
பாதாளச் சுரடு, தேங்காய்…
இப்படியாக
இன்னும் நீளுகிறது வாங்கிவந்த பொருள்களின் பட்டியல்! அப்பப்பா! படிக்கின்ற நமக்கே மூச்சுவாங்குகிறதே…இவற்றைச்
சுமந்துவந்தவர்களின் நிலை என்னவோ!
மலையளவு
சாமான்களை மாமனும், மாமியும் வீட்டுவாயிலில் இறக்கிக்கொண்டிருப்பதைக் கண்ட தங்கம் வீட்டினுள்ளிருந்து
விரைந்து வருகின்றாள். பொருள்களின் குவியலைப் பார்த்து மலைத்தவள், “இவ்வளவு சாமான்களும்
வண்டிக்குள் இருந்ததென்றால் பூச்சிகள்கூட வண்டிக்குள் நுழைய இடமிருக்காதே! நீங்களிருவரும்
எங்கே அமர்ந்திருந்தீர்கள்?” என்று வினவினாள் திகைப்புடன்.
அதற்கு
அவள் மாமியார், ”அதையேன் கேட்கிறாய் தங்கம்! இவ்வளவு பொருள்களையும் வண்டிக்குள் நிரப்பிய
உன் மாமன் குன்றின்மீது அமர்ந்திருக்கும் குரங்குபோல் என்னை அவற்றின்மீது உட்கார வைத்தார்;
என்னாலோ தலையை நிமிர்த்தவே முடியவில்லை. அதனால், வண்டியின் உச்சியில் ஓர் பொத்தலிட்டார்.
அதன் வழியாகத்தான் நான் தலையை வெளியில் நீட்டினேன்” என்றார்.
பீறிட்டுக்
கிளம்பிய சிரிப்பை அடக்கிக்கொண்ட தங்கம், ”அப்படியானால் மாமா…?” என்று இழுத்தாள்.
”அவருக்கு
வண்டியில் உட்கார ஏது இடம்? அவர் வண்டியுடன் கூடவே நடந்துவந்தார்; இந்தக் காட்சியைப்
பார்த்து ஊரே சிரித்தது” என்றார் தங்கத்தின் மாமியார் சலிப்புடன்.
ஊர்
மட்டுமா சிரித்தது? நமக்கும் சிரிப்பு வரத்தானே செய்கிறது.
இதுபோல்
மற்றுமோர் மறக்கமுடியாத நகைச்சுவைக் காட்சி புரட்சிக்கவிஞரின் ’இருண்டவீடு’ காவியத்திலிருந்து…
குடும்ப
விளக்கு காவியத் தலைவிக்கு நேர்மாறான பாத்திரப் படைப்பு இருண்டவீட்டின் தலைவி. அவளுடைய
சோம்பேறித்தனமும் மதியீனமும் எவ்வாறு அந்தக்குடும்பத்தைச் சின்னாபின்னமாக்குகின்றது
என்பதைப் பாவேந்தர் ஒருவரால் மட்டுமே இவ்வளவு நயத்துடன் விளக்கமுடியும் என்பதை இக்காவியம்
படிப்போர் நன்குணருவர்.
இதோ…காலைப்பொழுது
புலர்ந்து சூரியன் வானின் மேலேறி வலம்வரத் தொடங்கிவிட்டான். இருண்டவீட்டின் இல்லத்தரசியோ
இப்போதுதான் மெதுவாகச் சோம்பல்முறித்தபடி படுக்கையைவிட்டு எழுகின்றாள். கவனமேயில்லாமல் தூக்கக்கலத்தோடு தள்ளாடி அவள் நடந்துவரும்
நிலைகண்டாலே ’அடுத்து என்ன விபரீதம் அங்கு நடக்கப்போகிறதோ?’ எனும் கலக்கம் நமக்கு ஏற்படுகின்றது.
அதற்கேற்றாற்போலவே அவள் தன்வீட்டு வேலைக்காரன் கறந்துவைத்திருந்த பாலை, ’தண்ணீர்’ என்று
நினைத்துக்கொண்டு அதில் சாணத்தைக் கலந்து வாசல் தெளிக்கின்றாள். அவள் தோற்றம்கண்டு
பகலவனே நடுங்குகின்றானாம்!
தலைவிக்கு
முன்பாகவே அவளுடைய மூத்தபையன் எழுந்து உட்கார்ந்திருக்கின்றான் காலைச் சிற்றுண்டிக்காக.
அப்போது கதவு தட்டப்படுகின்றது. பாய்ந்து கதவைத் திறக்கின்றான் பையன். அங்கே பிட்டுக்காரி
நின்றுகொண்டிருக்கின்றாள். அவளுக்காகவே காத்திருந்தவன் அவளிடமிருந்து பிட்டையும் வடையையும்
வேகமாகத் தட்டில் வாங்கி உண்ண வசதியாக அங்கிருந்த பெட்டியின்மீது அமர்ந்துகொள்கின்றான்.
அந்தநேரம்
பார்த்து அவனுக்கு நடுவயிறு வலிக்கத் தொடங்குகின்றது. அவசரமாகக் காலைக்கடன் கழிக்கவேண்டும்
என்பதை உணர்ந்தான். ஆனால் வடையின் சுவையோ அவனை ’விடேன்’ என்றது. கொல்லை நோக்கிச் செல்லத்துடித்தது
ஒரு மனம்; வடையை விட்டுச் செல்வதா? என்று கேள்வியெழுப்பியது இன்னொரு மனம். இயற்கையை
வெல்லமுடியாததால் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல் விரைந்து கொல்லை நோக்கிச் சென்றவன்
கவனக்குறைவாய் நடுவில் கிடந்த நாயை மிதித்து, ஓரமாயிருந்த பானைகளைப் படபடவெனத் தள்ளி,
கன்றுக்குட்டியைக் கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி அருகில் நின்றிருந்த பசுவின் நெற்றியில்
பலமாக மோதிக்கொண்டதில் முன்வரிசைப் பற்கள் இரண்டைத் தொலைத்துக் கீழே உருண்டுபுரண்டு
கொல்லையை அடைந்தான் ஒருவழியாக!
இதைக்
கவிஞரின் விவரிப்பில் காணுங்கள்…
பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான்
பெட்டி மீதில் இட்டுட்கார்ந்தான்.
ஆவலாய் அவற்றை அருந்தத் தொடங்கினான்
நாவில் இடுகையில், நடுவயிறு வலித்தது!
வெளிக்குப் போக வேண்டுமென்றுணர்ந்தான்
வடையின் சுவையோ விடேன்விடேன் என்றது!
கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான்!
மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்!
வில்லம்பு போல மிகவிரைவாக
நடுவிற் கிடந்த நாயை மிதித்துப்
படபட வென்று பானையைத் தள்ளிக்
கன்றின் கயிற்றால் கால்தடுக்குற்று
நின்ற பசுவின் நெற்றியில் மோதி
இரண்டு பற்கள் எங்கேயோ போட்டுப்
புரண்டெழுந் தோடிப் போனான் கொல்லைக்கு!
பெட்டி மீதில் இட்டுட்கார்ந்தான்.
ஆவலாய் அவற்றை அருந்தத் தொடங்கினான்
நாவில் இடுகையில், நடுவயிறு வலித்தது!
வெளிக்குப் போக வேண்டுமென்றுணர்ந்தான்
வடையின் சுவையோ விடேன்விடேன் என்றது!
கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான்!
மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்!
வில்லம்பு போல மிகவிரைவாக
நடுவிற் கிடந்த நாயை மிதித்துப்
படபட வென்று பானையைத் தள்ளிக்
கன்றின் கயிற்றால் கால்தடுக்குற்று
நின்ற பசுவின் நெற்றியில் மோதி
இரண்டு பற்கள் எங்கேயோ போட்டுப்
புரண்டெழுந் தோடிப் போனான் கொல்லைக்கு!
எப்படி
இருக்கிறது? சிரித்துச் சிரித்து நமக்கும் வயிற்றுவலி வந்துவிட்டதல்லவா?
இதுபோல்
இன்னும் பல நகைச்சுவைக் காட்சிகளை நாம் கண்டு இரசிக்கலாம் இருண்டவீட்டில் தொடர்ந்து
பயணித்தால்!
இப்போது
சொல்லுங்கள்! பாவேந்தர் நகைச்சுவையிலும் தனிமுத்திரை பதித்திருக்கும் வித்தகர்தானே?
No comments:
Post a Comment