ஒருநாள், விவசாயி ஒருவனுக்குச்
சொந்தமான கழுதையொன்று தவறிப்போய்ப் பாழுங்கிணற்றில் விழுந்துவிட்டது. கிணற்றில்
விழுந்த கழுதை வெகுநேரமாகப் பரிதாபமாக ஓலமிட்டுக்கொண்டிருந்தது. அதுகண்ட விவசாயி
என்னசெய்வதென்று புரியாமல் தவித்தான். ஒருவழியும் புலப்படாத நிலையில், “கழுதைக்கோ
வயதாகிவிட்டது; அதனைக் காப்பாற்றுவதால் பயனொன்றுமில்லை. அதுபோல், கிணறும்
வறண்டுபோய்விட்டதால் மூடப்பட வேண்டியதே; எனவே கிணற்றையும் கழுதையையும் சேர்த்து
மூடிவிடுவதே நல்லது” என்ற முடிவுக்கு வந்தான்.
தன் எண்ணத்தை உடனடியாகச் செயற்படுத்த
நினைத்த விவசாயி அக்கம்பக்கத்தவரிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கோர, அவர்களும் உடனே
அவனுக்கு உதவ முன்வந்தனர். மண்வெட்டிகளோடு வந்த அவர்கள் அருகிலிருந்த
அழுக்கையெல்லாம் அள்ளியெடுத்துக் கிணற்றுக்குள் வீசினர். மக்களின் இச்செயல்கண்ட கழுதை
முதலில் மிகவும் பயந்துபோய்க் கதறியது. ஆனால் சிறிது நேரத்தில் அனைவரும்
வியக்கும்வண்ணம் அமைதியானது.
அழுக்குளையும், சகதிகளையும் கிணற்றில் வீசுவதிலேயே
குறியாயிருந்த மக்கள் உள்ளேயிருந்த கழுதையின் நிலையென்ன என்பதில் கவனம்
செலுத்தவில்லை. சிறிதுநேரம் கழித்து எதார்த்தமாக உள்ளே பார்த்தவர்களுக்கு அங்கே
ஓர் அதிசயம் காத்துக்கொண்டிருந்தது. ஆம்…மக்கள் அழுக்குகளைத் தன்மீது அள்ளி
வீசும்போதெல்லாம் தன் உடலைக் குலுக்கிய கழுதை அவற்றைக் கீழே விழச்செய்து படிபோல்
மாற்றிக்கொண்டு மெதுவாக மேலேறி வந்துகொண்டிருந்தது.
இதுகண்டு உற்சாகம் கொண்ட மக்கள்
மேலும் மேலும் அழுக்குகளை உள்ளே வீசக் கழுதையும் சளைக்காமல் அவற்றையே படிகளாக்கித்
தொடர்ந்து முன்னேறியது. வெகு விரைவிலேயே கிணற்றின் விளிம்பை அடைந்த கழுதை
உற்சாகத்தோடு துள்ளிக்குதித்து வெளியே ஓடியது.
பார்த்தீர்களா நண்பர்களே! மனிதர்கள்
அழுக்கைவீசி அந்தக் கழுதையின் கதையை முடிப்பதற்குக் காலம் குறிக்க, கழுதையோ
அவர்களைப் பேதைகளாக்கித் தன் விடாமுயற்சியால் தன் விதியையே மாற்றி எழுதிவிட்டது!
இக்கதை நமக்குணர்த்தும் நீதியென்ன?
வாழ்க்கை நம் மீது அனைத்துவிதமான
சேற்றையும் சகதியையும் வாரியிறைக்கலாம். அவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு முன்னேற
வேண்டும். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிக்கலையும் தடைக்கல்லாக எண்ணாமல் நம்மை
உயர்த்தும் படிக்கல்லாக எண்ணினால் எத்தகைய ஆழமான கிணற்றிலிருந்தும் (அதாவது
துன்பத்திலிருந்தும்) நாம் வெளிவர முடியும்; தேவை தளர்வற்ற விடாமுயற்சி!
துன்பத்தைக் கண்டு துவளாதவர்
துன்பத்துக்கே துன்பம் தந்துவிடுவர் என்ற பொய்யில் புலவரின் பொருளுரையை இக்கழுதை
மெய்யுரையாக்கிவிட்டதே!
இடும்பைக்கு இடும்பை படுப்பர்
இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். (குறள்: 623)
இடும்பை படாஅ தவர். (குறள்: 623)
வாழ்வில் என்றும்
மகிழ்ச்சியோடிருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய 5 விதிமுறைகள்:
- பிறரை வெறுக்கும் பண்பை இதயத்திலிருந்து நீக்குங்கள்! மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!
- மனத்தைக் கவலைகளிலிருந்து விடுவியுங்கள். கூடுமானவரை அதற்குக் கவலைகளை அளிக்காமல் இருங்கள்!
- எளிமையாக வாழப் பழகுங்கள்! இருப்பதில் நிறைவு காணுங்கள்!
- உங்களிடம் இருப்பதைப் பிறருக்குத் தாராளமாக வழங்குங்கள்!
- நீங்கள் பிறரிடம் எதிர்பார்ப்பது குறைவாகவும் உங்களிடம் (நீங்கள்) எதிர்பார்ப்பது அதிகமாகவும் இருக்கட்டும். (நம் தகுதிகளை, திறமைகளை அதிகப்படுத்தி முன்னேறுவதே நாம் நம்மிடம் கொள்ளும் எதிர்பார்ப்பு எனலாம்.)
இவ்விதிமுறைகளை நடைமுறைப்படுத்தினால்
வாழ்க்கை இனிக்கும்; வானம் வசப்படும்!
(முகநூலில் படித்த கதையின் தமிழாக்கம் இது!)
No comments:
Post a Comment