’சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!’ என்பார்கள் முருக பக்தர்கள். ’முருகன்’ என்ற சொல் போலவே ‘தேன்’ என்ற சொல்லைச் சொல்லும்போதும் நம் நாவும் மனமும் இனிக்கவே செய்கின்றன. அதனால்தான், மணிவாசக அடிகளும் தம் திருவாசகத்தில் ’தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்’ என்று சிவனைத் தித்திக்கும் தேனுக்கு ஒப்புமை காட்டுகின்றார். இனிமைக்கு மட்டுந்தான் தேன் உரியதா? இல்லை…அதையும் தாண்டிய அபூர்வ மருத்துவ குணங்கள் பலவும் நிறைந்த அருமருந்து தேன்!
தேனுக்கு நீண்ட மருத்துவ வரலாறு இருக்கின்றது. என்ன நம்ப முடியவில்லையா? ஆனால் அதுதான் உண்மை. தேனின் மருத்துவ மகிமையை வெகு காலத்திற்கு முன்பே மாந்தகுலம் உணர்ந்துகொண்டுவிட்டது. பண்டைய எகிப்தில் கடவுளருக்குத் தேனைப் படையல் செய்ததோடு அல்லாமல், உடலில் ஏற்படும் காயங்களுக்கும் மேல்பூச்சு மருந்தாக (topical medicine) அதனைப் பயன்படுத்தி வந்துள்ளனர். தேனை உண்டால் நீண்டநாள் உயிர்வாழலாம் எனும் நம்பிக்கையை அன்றைய கிரேக்க மக்கள் கொண்டிருந்தனர். தேனின் பெருமையை இஸ்லாமிய மறைநூலான குரானும், கிறித்தவர்களின் மறைநூலான விவிலியமும்கூடப் பேசுகின்றன.
இன்றைய நவீன அறிவியல் தேனின் நற்குணங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து கண்டு, பண்டைய மக்களின் நம்பிக்கைகளை உறுதி செய்துள்ளது.
நுண்ணுயிரிகளை, குறிப்பாக நாமுண்ணும் உணவிலிருந்து தோன்றும் e-coli, Salmonella
போன்ற நுண்ணுயிரிகளை அழிப்பதில் தேனின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதுபோல் உடலில் ஏற்படும் அழற்சிகளுக்கு எதிராகவும் (anti-inflammatory) தேன் வலிமையோடு செயல்படுகின்றது.
சளித் தொல்லை, இருமல் போன்றவற்றை நீக்குவதில் தேன் மிகுந்த ஆற்றல் வாய்ந்தது என்கிறார் அமெரிக்காவிலுள்ள மேரிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் (family physician) அரியேன் கொமோட்டா (Ariane Cometa).
இருமலால் அவதியுற்ற குழந்தைகளை இரு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவினருக்கு மருந்துக்கடைகளில் கிடைக்கும் டெக்ஸ்ட்ரோமெதார்ஃபன் (Dextromethorphan) எனும் இருமல் தடுப்பானையும் (cough suppressant) மற்றொரு பிரிவினருக்கு பக்வீட் (buckwheat) எனும் (புல்வகையைச் சேர்ந்த) செடியின் பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட தேனையும் கொடுத்து ஆய்வு செய்ததில், அதிசயிக்கத்தக்க வகையில் தேனுண்ட குழந்தைகள் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகளைக் காட்டிலும் விரைவில் நிவாரணம் பெற்றது கண்டறியப்பட்டிருக்கின்றது. இஃது இருமலைப் போக்குவதில் தேனின் அளப்பரிய ஆற்றலை உறுதிப்படுத்தியுள்ளது எனலாம்.
தேனைத் தொடர்ந்து உண்டுவந்தால் கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். எளிதில் நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் (immune power) மிகும். தேனுடன் எலுமிச்சம் சாற்றைக் கலந்து பருகிவர வாந்தி, தலைவலி போன்றவை குணமாகும்.
வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து (வெறும் வயிற்றில்) பருகிவரப் பருத்த உடல் மெலியும். மெலிந்த உடலை பருக்கச் செய்வதற்கும் தேனே உதவுகின்றது. ஆம்! காய்ச்சிய பாலில் சிறிதளவு தேன் கலந்து தொடர்ந்து பருகிவர உடல் பூசினாற்போல் மாறும். இவையெல்லாம் மக்கள் அனுபவத்தில் கண்ட உண்மைகள்.
எவ்வளவு நாள் ஆனாலும் கெடாத தன்மை கொண்டது தேன். அதனால்தான் சித்த மருந்துகள் பலவற்றிற்கும் தேனே ஆதாரப் பொருளாய்த் திகழ்கின்றது. சூரணங்கள் பெரும்பாலும் தேனில் குழைத்துச் சாப்பிடும் வகையிலேயே சித்த மருத்துவர்களால் தயாரிக்கப்படுவதை நாம் அறிவோம்.
மருந்துப் பொருளாய் மட்டுமின்றி அழகுசாதனப் பொருளாகவும் தேன் பயன்படுகின்றது. பாலும் தெளிதேனும் இறைவனுக்குப் படைப்பதற்கு மட்டுமல்லாமல் நம் முகத்துக்கும் ஏற்றவையே. பாலோடு தேனைக் கலந்து பூசுவதால் முகம் மிருதுத்தன்மை பெறும். தேனோடு சிறிது கடலைமாவு கலந்து முகத்துக்கு பேஸ்பேக் (face pack) போட்டுவிட்டு, பதினைந்து நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் கழுவினால் முகம் கண்ணாடிபோல் பளபளக்கும். வெயிலினால் கருத்த சருமத்தை மாற்றச் சிறிது ஆலிவ் எண்ணெயுடன் தேன் கலந்து தடவி இளஞ்சூடான நீரில் கழுவி வர நல்ல பலன் தெரியும்.
இவ்வாறு, சர்வரோக நிவாரணியாக, சிறந்த அழகு சாதனப் பொருளாகத் திகழ்ந்துவரும் தேனை அன்றாடம் பயன்படுத்துவோம். நோய்களை வென்று நல்வாழ்வு பெறுவோம்!
No comments:
Post a Comment