தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலைவாணரும் இவள் என்று பிறந்தவள் என்று உணரமுடியாத தொன்மையுடையவள் நம் தமிழன்னை. நெஞ்சையள்ளும் சிலம்பும், மனங்கவரும் மேகலையும், சிந்தை மயக்கும் சிந்தாமணியும் அன்னையவள் எழிலைக் கூட்டின. தேவாரமும் திருவாசகமும் திருவாய்மொழியும், இன்னபிற பனுவல்களும் பக்திமணம் பரப்பி அவளைப் பரவசமாக்கின. ஆனால் காலப்போக்கில் நம்மனோர் தாய்த்தமிழின் சிறப்பை மறந்து வடமொழிபால் அதிகவேட்கை கொள்வாராயினர்.
வடமொழியும் தமிழும் கலந்து எழுதுவது மணியும் முத்தும் கலந்ததுபோல் அதிக அழகுடைத்து என்றெண்ணியவராய், ’மணிப்பவள நடை’யை உருவாக்கி அதில் எழுதலாயினர். இதனால் தாய்த்தமிழின் தூய்மை அழிந்ததேயொழிய அதன் அழகு சிறக்கவில்லை. இதனைக் கண்ணுற்ற தமிழறிஞர் சிலர் மணிப்பவள நடைக்கு விடைகொடுத்து, மணியான தமிழ்நடையிலேயே எழுதுதல் வேண்டும் எனச் சிந்திக்கத்தொடங்கினர். இந்தத் தனித்தமிழ்ச் சிந்தனையைத் தமிழ்மண்ணில் விதைத்த முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர் சூரியநாராயண சாஸ்திரியார் எனும் திருநாமம் கொண்ட பெருந்தகையாளர்.
மாடமலி கூடலில் (மதுரையில்) பரங்குன்றிற்கு அருகிலுள்ள விளாச்சேரி எனுமிடத்தில் 1870-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 11(?)-இல் கோவிந்த சாஸ்திரி – இலட்சுமி அம்மாள் இணையருக்குத் தவப்புதல்வராய்த் தோன்றினார் சூரியநாராயண சாஸ்திரியார். தந்தையிடம் சமஸ்கிருதமும், மதுரை சபாபதி முதலியாரிடம் தமிழும் பயின்ற சாஸ்திரியார், மதுரை உயர்நிலைப்பள்ளியில் தம் பள்ளிப்படிப்பை நிறைவுசெய்து, இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் உதவித்தொகையுடன் சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் மாணாக்கராய்ச் சேர்ந்தார். அதில், மாநிலத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேறிய அவருக்கு அதே கல்லூரியில் நிறைந்த ஊதியத்துடன் தத்துவத் துறையில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தும் அதனை மறுத்துக் குறைந்த ஊதியத்தில் தமிழ்த்துறை ஆசிரியராய்ப் பணியமர்ந்தார். அப்போது கிறித்தவக் கல்லூரியின் முதல்வராயிருந்த டாக்டர் மில்லர் (A Scottish Educationalist), சாஸ்திரியாரின் தமிழார்வத்தைக் கண்டு வியந்து, பிறதுறை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அதே (உயர்)ஊதியத்தை அவருக்கும் வழங்கினார். கல்லூரியளவில் தமிழாசிரியர் பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட முதல் பட்டதாரி சூரிய நாராயணரே என்பது குறிப்பிடத்தக்கது.
கேட்டார்ப் பிணிக்கும் பைந்தமிழ் நடையில் அவர் நடாத்தும் பாடங்களைக் கேட்டின்புறுவதற்காகப் பிறதுறை மாணாக்கரும் மலரை மொய்க்கும் வண்டுகளாய் அவர் வகுப்பில் வந்து கூடுவராம். தமிழறிவும் ஆர்வமும் மிகுந்த மாணாக்கர்கட்குத் தம் இல்லத்திலும் தனியாக வகுப்புக்கள் எடுத்துத் தமிழ்த்தேனை அவர்களுக்கு அள்ளி வழங்கியுள்ளார் சாஸ்திரியார்.
இவரது தேர்ந்த தமிழ்ப்புலமை கண்ட பதிப்புச்செம்மல், யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள், சூரியநாராயண சாஸ்திரியாரைத் ’திராவிட சாஸ்திரி’ எனும் பட்டம் தந்து சிறப்பித்திருக்கின்றார்.
தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் எனும் மும்மொழிப் புலமை நிரம்பப் பெற்றவர் சூரியநாராயண சாஸ்திரியார். ஆயினும், தமிழ்மீது தணியாத காதல்கொண்ட அவ்விளம் அறிஞர் வடமொழியில் அமைந்திருந்த தம் பெயரைத் தனித்தமிழில் ’பரிதிமாற் கலைஞர்’ என்று மாற்றிக்கொண்டதைத் ’தனிப்பாசுரத் தொகை’ எனும் அவருடைய செய்யுள்நூல் நமக்கு அறியத்தருகின்றது. இத்தனிப்பாசுரத் தொகையிலுள்ள செய்யுள்கள் அனைத்தும் ஆங்கிலத்திலுள்ள சானட்டைப் போல் (Sonnet – a poem of 14 lines) தமிழில் 14 அடிகளில் அழகுற இயற்றப்பட்டிருக்கின்றன.
காட்டாக, ’புள்’ எனும் தலைப்பில் பரிதிமாற் கலைஞர் எழுதிய அருமையான செய்யுளொன்று:
புள் (பறவை)
புள்ளே மென்சிறைப் புள்ளே பல்வகை
வண்ணமும் மேவிய வனப்புடைப் பறவாய்
எண்ணிய எண்ணமும் என்கொலோ அறியேன்
தானுமின் புற்றுத் தன்னிசை அதனால்
ஏனைய உயிர்க்கும் இன்பம் செய்குவை
வேண்டுழிச் செல்வை வேண்டுந புரிகுவை
வேண்டா என்றுநீ விழைசெயல் தகைக்குநர்
ஈண்டுச் சிலருளர் இன்ப உருவினோய்
கவற்சிகொண் டுழலும்அக் கண்ணில்புன் மாக்கள்
ஐயகோ நின்னை அருமையிற் பேணார்
வெய்ய கணைகொடு வீழ்ப்பர் அதான்று
நெய்பெய் தட்டுநிற் குய்ம்மணம் கமழ
எயிற்றிடை மென்று வயிற்றின்
இட்டு நாள்தொறும் கெட்டுலை வாரே!
வண்ணமும் மேவிய வனப்புடைப் பறவாய்
எண்ணிய எண்ணமும் என்கொலோ அறியேன்
தானுமின் புற்றுத் தன்னிசை அதனால்
ஏனைய உயிர்க்கும் இன்பம் செய்குவை
வேண்டுழிச் செல்வை வேண்டுந புரிகுவை
வேண்டா என்றுநீ விழைசெயல் தகைக்குநர்
ஈண்டுச் சிலருளர் இன்ப உருவினோய்
கவற்சிகொண் டுழலும்அக் கண்ணில்புன் மாக்கள்
ஐயகோ நின்னை அருமையிற் பேணார்
வெய்ய கணைகொடு வீழ்ப்பர் அதான்று
நெய்பெய் தட்டுநிற் குய்ம்மணம் கமழ
எயிற்றிடை மென்று வயிற்றின்
இட்டு நாள்தொறும் கெட்டுலை வாரே!
(தகைக்குநர்-தடுப்பவர்; அதான்று -அதுமட்டுமல்லாமல்; குய்ம்மணம் -தாளிக்கும் மணம்)
வண்ணத்தாலும் இசையாலும் மக்களை மகிழ்விக்கும் புள்ளின் பெருமையறியா ம(மா)க்கள் அதன் விருப்பப்படி அதனைச் சுதந்திரமாய்ப் பறக்கவிடாது, கணையால் வீழ்த்தி நெய்சொரிந்து அதனைச் சமைத்துண்ணும் அவலத்தை இச்செய்யுளில் கண்டிக்கின்றார் பரிதியார்.
தமிழை இயல், இசை, நாடகம் எனும் மூன்று துறைகள் கொண்ட ’முத்தமிழ்’ என்று தமிழர்கள் பெருமிதத்தோடு பகர்வதுண்டு. இவற்றில் முதலிரண்டையும் வளர்த்த அளவிற்கு நாடகத்தமிழை முனைப்புடன் வளர்க்கத் தவறிவிட்டனர் நம் முன்னோர். குற்றுயிரும் குலை உயிருமாக அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த அவ்வினிய நாடகத் தமிழுக்குப் புத்துயிர் ஊட்டத் தலைப்பட்டனர் மூவர். அவர்கள், சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், மற்றும் பரிதிமாற் கலைஞர் ஆகியோர்.
இவர்களைத் ’தமிழ் நாடக மூவர்’ என்று மக்கள் அன்போடு அழைத்துவருகின்றனர்.
நாடகக்கலைக்கு மறுவாழ்வளித்தவர்களில் ஒருவராகத் திகழும் பரிதிமாற் கலைஞர், கலாவதி, ரூபாவதி அல்லது காணாமற்போன மகள் முதலிய நாடகங்களை அழகிய உரைநடைத் தமிழில் படைத்தளித்துள்ளார். அதுமட்டுமல்லாது, நாடகங்களை எவ்வாறு இயற்றவேண்டும், அதற்குரிய இலக்கணங்கள் யாவை என்பவற்றை விளக்கி ‘நாடகவியல்’ எனும் அரிய நூலொன்றையும் யாத்துள்ளார்.
செய்யுள் வடிவில் இவரியற்றிய மற்றொரு நாடகம் ’மான விஜயம்’ (மானத்தின் வெற்றி) என்பதாகும். இந்நூலில் கோச்செங்கட் சோழனால் சிறைப்படுத்தப்பட்ட கணைக்கால் இரும்பொறை, மானமே பெரிதென்று சிறையில் உயிர்நீத்ததனை மிகவும் உயிரோட்டமாய்க் காட்சிப்படுத்தியுள்ளார். (இம்மன்னன் இறக்கும் தறுவாயில் எழுதிய ’குழவி இறப்பினும்’ என்று தொடங்கும் வீரம்செறிந்த பாடல் புறநானூற்றில் 74-ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளதை அறிக.)
இவையேயன்றி, ‘மதிவாணன்’ எனும் நாவல், `பாவலர் விருந்து’ `சித்திர கவி விளக்கம்’ போன்ற கவிதை நூல்கள், நற்றமிழ்ப் புலவோரின் வாழ்க்கை வரலாற்றைச் சுட்டும் ’தமிழ்ப்புலவர் சரித்திரம்’ எனும் கட்டுரை நூல் ஆகியவையும் பரிதிமாற் கலைஞரின் கைவண்ணத்தில் உருவாகியுள்ளன.
அவர் இயற்றிய நூல்களிலேயே பெரிதும் போற்றப்படுவது ‘தமிழ்மொழியின் வரலாறு’ எனும் ஆராய்ச்சி நூலேயாகும். அதில், தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழியாவது யாங்ஙனம்?’ என்பதைச் சுவைபட விளக்கியுள்ளார் அச்சான்றோர்.
அவ்விளக்கத்தை நாமும் அறிந்துகொள்வோமே…
”தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள பலமொழிகளினும் தலைமையுடையதும் அவற்றினும் மிக்க தகவுடையதுமான ஓர் மொழியே உயர்மொழியாகும். இவ்விலக்கணங்கொண்டு ஆராயுமிடத்து, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கெல்லாம் தலைமையுடையதும் அவற்றினும் மேதகவுடையதுமாகிய ’நம்தமிழ் ஓர் உயர்மொழி’யாகும்!
தான் வழங்கும் நாட்டில் பயின்றுவரும் பிறமொழிகளின் உதவியின்றித் தனித்தியங்கும் தன்மையுடைய மொழியே தனிமொழி எனும் தகுதியுடைத்து. தான் பிறமொழிகளுக்குச் செய்யும் உதவி மிகுந்தும், தனக்குப் பிறமொழிகள் செய்யும் உதவி குறைந்துமிருத்தலே வழக்காறு. தமிழின் உதவியின்றித் தெலுங்கு முதலிய மொழிகள் இயங்கமாட்டா. ஆனால் அவற்றின் உதவியின்றித் தமிழ் தனித்தியங்கும் பெற்றியது. ஆதலின் தமிழ் ஓர் தனிமொழியே!
இனிச் செம்மொழியாவது யாது?
’திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம்’ என்பது இலக்கணம். இம்மொழிநூல் இலக்கணத்திற்குச் சாலப் பொருத்தமுடையது தமிழ்மொழி. பிறமொழிச் சொற்களன்றித் தன்மொழிச் சொற்கள் மிகுந்திருத்தலே தூய்மொழியாகும். அவ்வகையில் தமிழ் தூய்மொழியுமாகும். அவ்வாறே தமிழில் ஆளப்படும் சொற்கள் நம் மக்களின் பண்பாலும் நாகரிகத்தாலும் செழுமையுற்றவை. எனவே தமிழ்மொழி ’செம்மொழி’ என்பது திண்ணம். இதனாலன்றோ நந்தமிழ் செந்தமிழ் என்று நல்லிசைப் புலவரால் தொன்றுதொட்டு நவின்றோதப்படுகின்றது. ஆதலால் செந்தமிழ் நாட்டின்கண் சிறந்தொளிரும் அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராயினும் உயர்தனிச் செம்மொழியே ஆகும் என்று தெளிக!” என்கிறார்.
நம்மொழியைச் செம்மொழி என்று முதன்முதலில் தமிழ்கூறு நல்லுலகுக்கு மெய்ப்பித்துக் காட்டிய பெருமை பரிதிமாற் கலைஞரையே சாரும். (He was the first person to campaign
for the recognition of Tamil as a classical language.)
இத்துணைச் சிறப்புக்கள் வாய்க்கப்பெற்ற தமிழை, கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து விலக்குவதற்குச் சென்னைப் பல்கலைக்கழகம் (University of Madras) 1902-ஆம் ஆண்டு முடிவெடுத்தது. என்னே நம் மக்களின் பேதைமை! அதனையறிந்த பரிதிமாற் கலைஞர், தமிழ்த்தொண்டர் மு.சி.பூரணலிங்கம் பிள்ளையுடன் இணைந்து அம்முடிவை முறியடித்தார். கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழ்மொழியும் தொடர வழிவகுத்தார் என்பது வரலாறு காட்டும் உண்மை.
தமிழ்க்குழந்தைகள் தம் தாய்மொழியாம் தமிழிலேயே கல்விகற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர் இந்நல்லறிஞர். தமிழ் வாழவும், தமிழர் வாழவும் தம் வாணாளின் இறுதிவரை உறுதியோடு பாடுபட்ட பரிதிமாற் கலைஞர், 1903-ஆம் ஆண்டு தம் 33-ஆம் அகவையில் பொன்னுடல் நீத்துப் புகழுடல் கொண்டார். ஆம்! இரக்கமற்ற எலும்புருக்கி நோய் (tuberculosis), தமிழ்வேட்கை மிகுந்த அவ்விளைஞரை அகாலத்தில் வாரிச்சென்றது நம் தவக்குறைவே!
பரிதிமாற் கலைஞரின் மறைவைக் கேட்ட கிறித்தவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மில்லர், ”என் புருவம் சுருக்கமேறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான்; ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே!” என்று கையற்றுக் கலங்கியுள்ளார்.
”இவர்மட்டும் அதிககாலம் வாழ்ந்திருந்தால் தமிழன்னையை அரியாசனத்தில்…அவளுக்கேற்ற சரியாசனத்தில் அமர்த்தி அழகுபார்த்திருப்பார்” என்று இத்தனித்தமிழ் மறவருக்குப் புகழாராம் சூட்டியுள்ளார் தமிழ்த்தென்றல் திரு.வி.க.
தமிழ் செம்மொழியாய்ப் போற்றப்படல் வேண்டும் எனும் பரிதிமாற் கலைஞரின் நற்கனவு நெடுங்காலத்திற்குப்பின் இப்போது நனவாகியிருப்பது அவரது அரிய முயற்சிக்குக் கிடைத்த பெரிய வெற்றியே!
தமிழெனும் தையல்நல்லாள் இத்தரணியில் பீடுநடை பயிலுங் காலம்வரைச் செம்பரிதியாய்ச் சுடர்விட்டுப் புகழ்பரப்பிக்கொண்டிருப்பார் பரிதிமாற் கலைஞர்!
No comments:
Post a Comment