Friday, June 19, 2015

இயற்கைக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth)

இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியிலுள்ள காக்கர்மவுத் (Cockermouth) எனும் இயற்கையெழில் கொஞ்சுமிடத்தில், ஜான் வேர்ட்ஸ்வொர்த் மற்றும் ஆன் குக்ஸன் எனும் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகளுள் இரண்டாவதாகப் பிறந்தார் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த். அவருடைய உடன்பிறப்புக்களில் அவரை அடுத்துப் பிறந்த சகோதரியான டோரதி வேர்ட்ஸ்வொர்த் என்பவரும் சிறந்த கவிஞராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்திருக்கின்றார். அண்ணனோடு இறுதிக்காலம்வரை நெருக்கமான உறவைப் பேணியவரும் அவரே.

வேர்ட்ஸ்வொர்த்தின் தந்தைதான் இளமையில் அவருக்கு ஷேக்ஸ்பியர், மில்டன், ஸ்பென்ஸர் போன்ற புகழ்பெற்ற கவிஞர்களின் படைப்புக்களை அறிமுகப்படுத்தி அவற்றைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

1787-ஆம் ஆண்டு தன்னுடைய முதல் படைப்பான பதினான்கு வரிப் பாடலொன்றை (Sonnet) ஐரோப்பியச் சஞ்சிகையில் (The European Magazine) பிரசுரித்து எழுத்துத்துறையில் தன் பாதம் பதித்தார் வேர்ட்ஸ்வொர்த்.

தொடர்ந்து கவிதைகள் படைத்துவந்த அவர், 1793—ஆம் ஆண்டு தன் கவிதைகளைத் தொகுத்து மாலை நடையுலாவும் கவிதைத் தீற்றல்களும்(Evening walk and Descriptive Sketches) எனும் பெயரில் கவிதை நூலாய்ப் பதிப்பித்தார்.

சாமுவெல் டெய்லர் கோல்ரிட்ஜ் (Samuel Taylor Coleridge) எனும் ஆங்கிலக் கவிஞரோடு இணைந்து ஆங்கில இலக்கியத்தில், அகத்திணைக் காலத்தைத் (Romantic age in English literature) முதலில் தொடங்கிய முன்னோடிக் கவிஞர் எனும் பெருமைக்குரியவர் வில்லியம்  வேர்ட்ஸ்வொர்த்.

பிற கவிஞர்களால் அதிகம் பதிவுசெய்யப்படாத, அடித்தட்டு மக்களையும் (people from the lower classes), தங்க இடமின்றித் திரிவோரையும் (wanderers), உழவர் பெருமக்களையும் (peasants), சிறு வணிகர்களையும் (peddlers) பாடுபொருளாக்கிப் பெருமை சேர்த்தவர் வேர்ட்ஸ்வொர்த். எல்லாவற்றிற்கும் மேலாக, இயற்கையன்னையின்மீது தணியாத காதல் கொண்ட தனயன் இவர். அதனாலல்லவோ தன்னுடையThe Tables Turned’ (அட்டவணைகள் மாறுகின்றன) எனும் கவிதையில், புத்தகங்களை வீசியெறிந்துவிட்டு இயற்கையிடம் பாடம்கேட்கப் பள்ளிப் பிள்ளைகளை அன்போடு அழைக்கின்றார்.

அக்கவிதை

Up! up! My Friend, and quit your books;
Or surely you’ll grow double
Up! up! my Friend, and clear your looks;
Why all this toil and trouble?
[…]
And hark! how blithe the throstle sings!
He, too, is no mean preacher
Come forth into the light of things,
Let Nature be your teacher…

தனியே வயலில் அறுவடை செய்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மதுர கானத்தைப் போற்றி, அவர் எழுதியThe Solitary Reaperஎன்ற கவிதையும் மிகவும் புகழ்வாய்ந்தது.

அக்கவிதை

Behold her, single in the field,
Yon solitary Highland Lass!
Reaping and singing by herself;
Stop here, or gently pass!
Alone she cuts and binds the grain,
And sings a melancholy strain;
O listen! for the Vale profound
Is overflowing with the sound
[…]
Will no one tell me what she sings?
Perhaps the plaintive numbers flow
For old, unhappy, far-off things,
And battles long ago
Or is it some more humble lay,
Familiar matter of to-day?
Some natural sorrow, loss, or pain,
That has been, and may be again?
…………………………………………….

மிகவும் இளகிய மனம் படைத்தவராகவும் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் திகழ்ந்திருக்கின்றார் என்பதைப் பின்வரும் நிகழ்வால் அறியலாம்.

ஒருமுறை வேர்ட்ஸ்வொர்த் ஒரு மலைச்சாரல் பக்கமாய் நடந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த பாறை இடுக்கிலிருந்து ஒரு மலர் எட்டிப்பார்த்ததாம். அதைக் கண்டவுடன், வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, ஆதரிப்பார் யாருமின்றி அநாதையாய் உயிர்விட்ட இளங்கவிஞன் சாட்டர்டனின் நினைவு அவருக்கு வந்துவிட, “சாட்டர்டன் நீ இங்கேயா இருக்கிறாய்?” என்று அந்த ஒற்றை மலரைப் பார்த்துக் கேட்டுவிட்டுக் கண்ணீர் சிந்தினாராம். முல்லைக்கொடி பற்றிப்படரக் கொழுகொம்பில்லாமல் வாடுவதைக் கண்டு மனங்கசிந்த வள்ளல் பாரியை  இத்தருணத்தில் நம்முள்ளம் நினைவுகூர்கின்றது இல்லையா? பாரி புவியரசன், எனவே தேரைத் தந்தான் கொடிக்கு; வேர்ட்ஸ்வொர்த்தோ கவியரசன் மட்டுமேஆதலால் கண்ணீரைத்தான் அவரால் தர முடிந்திருக்கின்றது மலருக்கு!

தன் சுயசரிதையைக் கருவாகக்கொண்டு அவர் எழுதிய 'முன்னுரை' (The prelude) எனும் கவிதை, கவிஞர் மில்டனின் 'இழந்த சொர்க்கத்திற்கு'ப் (The Paradise Lost) பின்பு எழுதப்பட்ட மிக நீண்ட கவிதை எனும் சிறப்பைப் பெற்றதோடல்லாமல், வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகளிலேயே  சிறந்தவொன்று எனும் அங்கீகாரத்தையும் உலக மக்களிடம் பெற்றிருக்கின்றது.

சிறந்த கவிஞராகவும், அருளுள்ளம் கொண்ட மனிதராகவும் வாழ்ந்து மறைந்த வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், காலத்தைவென்ற தன்னுடைய அமர கவிதைகளால் என்றும் நிலைத்து வாழ்வார் என்பதில் ஐயமில்லை.



No comments:

Post a Comment