Sunday, September 6, 2015

நானிலம் போற்றும் நல்லாசிரியர்!

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் அன்னை தந்தைக்கு அடுத்த உயரிய இடம் வழங்கப்படுவது குரு என்று போற்றப்படும் ஆசிரியர்களுக்கே. ‘ஆசுஎனும் அறியாமைக் குற்றந்தன்னை மாணாக்கர் மனத்தினின்று இரியச் (விலக) செய்பவரேஆசிரியர்ஆவார்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் என்பார் தெய்வப் புலவர்.

எனவே கல்வியெனும் கண்ணைத் திறந்து மாணாக்கரை மாண்புடையோராய் மிளிரச்செய்யும் ஆசிரியப்பணி ஓர் அருட்பணியே. ஆயினும், மாணாக்கரின் மனங்கொள்ளத்தக்க வகையில் கல்வி கற்பிக்கவில்லையாயின் அந்த அருட்பணியானது மருட்சி தருகின்ற மருட்பணியாய் மாறிவிடக்கூடிய அபாயமும் உண்டு.

அவ்வாறு மருட்சியை மாணாக்கரிடத்து ஏற்படுத்தி அவர்களை வெருண்டோடச் செய்திடாமல், மாணவமணிகள் விருப்பத்தோடு தம்மைச் சூழ்ந்திருக்கும்வகையில் கல்வி கற்பித்த, கற்பிக்கின்ற ஆசிரியப் பெருமக்கள் அன்றும் இன்றும் இருக்கவே செய்கின்றனர். அத்தகைய நல்லாசிரியர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் சர்வ பள்ளிகளும் இன்று போற்றிக் கொண்டாடும் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள்.

தமிழகத்தில் திருத்தணிக்கு அருகிலுள்ள சர்வபள்ளி எனும் கிராமத்தில் தெலுங்கு பிராமண வகுப்பைச் சேர்ந்த வீராசாமி மற்றும் சீதம்மா இணையருக்கு மகனாய் 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் பிறந்தார் இராதாகிருஷ்ணன். பூமகளின் (திருமகள்) பார்வைபடாத ஏழ்மையான நிலையில் அவர் குடும்பம் இருந்தபோதும், நாமகள் அங்கே கொலுவீற்றிருக்கத் தயங்கவில்லை. ஆம்! கலைவாணியின் கருணையை முற்றாய்ப் பெற்றிருந்த இராதாகிருஷ்ணன், தன்னுடைய அபார அறிவுக்கூர்மையாலும் அயரா உழைப்பாலும் கல்விக்கூடங்களில் அரசாங்க உதவித்தொகையைப் பெற்றுச் சிறப்பாய்க் கல்விபயின்று வந்தார்.

1906-ஆம் ஆண்டு, சென்னை கிறித்தவக் கல்லூரியில் தன்னுடைய இளங்கலைப் படிப்பைத் தொடங்கிய இராதாகிருஷ்ணன், எதிர்பாராத விதமாகவே தத்துவத்தை விருப்பப்பாடமாக எடுத்திருந்தார். (He studied Philosophy by chance rather than choice). மேற்கத்தியத் தத்துவவியலாளர்களான பிளேட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், ஸ்பென்ஸர், காந்த் போன்றோரின் சிந்தனைகளையெல்லாம் அறிந்துகொள்ளக்கூடிய நல்வாய்ப்பை அவருடைய கல்லூரிக்கல்வி அவருக்களித்தது. இவையெல்லாம் தத்துவத்துறையின்மீது அளவிறந்த காதலை அவருள் வளர்த்ததால் முதுகலைப் படிப்பையும் தத்துவத்துறையிலேயே தொடர்ந்தார் அப்பெருமகனார்.

தன்னுடைய முதுகலை ஆய்வேட்டை(Thesis) “The Ethics of the Vedanta and its Metaphysical Presuppositions” (வேதாந்தக் கோட்பாடுகளும் அவை சார்ந்த முன்முடிவுத் தீர்மானங்களும்) என்ற தலைப்பில் அவர் செய்திருந்தார். வேதாந்தத்தில், வரையறுக்கப்பட்ட கோட்பாடுகள் ஏதுமில்லை என்ற (மேற்கத்திய கிறித்தவ மதத்தினரின்) குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூறுமுகமாகவே இந்தஆய்வினை அவர் செய்திருந்தார். எனினும் தன் ஆய்வேடு குறித்துத் தன்னுடைய தத்துவத்துறைப் பேராசிரியர் ஆல்பிரட் ஜார்ஜ் ஹாக் (Dr. Alfred George Hogg) என்ன சொல்வாரோ என்ற அச்சமும் அவரை உள்ளூர அலைக்கழித்தது.

ஆனால் சற்றும் எதிர்பாராவிதமாய் இராதாகிருஷ்ணனின் ஆய்வேட்டையும் அதில் சொல்லப்பட்டிருந்த கருத்துக்களையும்வெகு அருமைஎன்று பாராட்டியிருக்கின்றார் பேராசிரியர் ஹாக். பேராசிரியரின் நன்மதிப்பைப் பெற்ற அந்த ஆய்வேடு விரைவில் நூலாகவும் வெளியீடு கண்டது.

கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாய் முடித்த இராதாகிருஷ்ணன், 1909-ஆம் ஆண்டு சென்னை பிரசிடென்சி கல்லூரியில் (Madras Presidency College) தத்துவத்துறை விரிவுரையாளராய்ப் பணியில் சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப்பின் மைசூர் மகாராஜா கல்லூரியில் (Maharaja’s College, Mysore) தத்துவத்துறைப் பேராசிரியராய்ப் பதவியேற்றார். தன்னுடைய கம்பீரத் தோற்றத்தாலும், கற்பித்தல் திறனாலும், கனிவான அணுகுமுறையாலும் மாணாக்கர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார் இராதாகிருஷ்ணன். நண்பனாய், நல்லாசிரியனாய், வழிகாட்டியாய் (friend, philosopher and guide) மாணாக்கர்களுக்குத் திகழ்ந்த அவருடைய புகழ் திக்கெட்டும் பரவியது.

இந்தியாவிலுள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களும் அவரைப் பணியமர்த்த விரும்பிப் போட்டிபோட்டுக்கொண்டு அழைத்தன. ஆனால் அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விரும்பினார். கல்கத்தாவிற்குத் தம்முடைய பேராசிரியர் புறப்படுகிறார் என்பதையறிந்து, மைசூர் மகாராஜா கல்லூரியே அவரை வழியனுப்பத் திரண்டுநின்றது. அச்சமயத்தில் அவருடைய மாணாக்கர்கள் செய்தசெயல் அனைவரையும் வியப்பின் உச்சிக்கே கொண்டுசென்றது.

அது என்ன தெரியுமா? கல்கத்தா செல்வதற்காகத் தொடர்வண்டி நிலையம் செல்லவிருந்த பேராசிரியர் இராதாகிருஷ்ணனுக்குக் குதிரை வண்டியொன்று ஏற்பாடாகியிருந்தது. தம் பேராசிரியர்மீது அளவுகடந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்த மாணாக்கர்கள் குதிரை வண்டியிலிருந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டுத் தாமே குதிரைகளாகி(!) அவ்வண்டியைத் தொடர்வண்டி நிலையத்திற்கு இழுத்துச் சென்றனராம். இக்காட்சியைக் கண்ட பொதுமக்கள் அதிசயித்து நின்றிருக்க, இராதாகிருஷ்ணனோ மாணாக்கர்களின் அன்பைக்கண்டு நெகிழ்ந்தநெஞ்சினராய்க் கைகூப்பி விடைபெற்றாராம்.

கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் தன் நாவன்மையால் புகழ்க்கொடி நாட்டினார் இராதாகிருஷ்ணன். பேராசிரியராய்ப் பணியாற்றிய காலத்திலேயே எழுத்துத் துறையிலும் முத்திரை பதித்திருந்தார் அந்தப் பேரறிவாளர். 1914 தொடங்கி 1920க்கு இடைப்பட்ட காலத்தில் The Quest, Journal of Philosophy, International Journal of Ethics, The monist, Mind போன்ற உலகத்தரம் வாய்ந்த பல பத்திரிகைகளில், இந்தியச் சமயங்கள், அத்வைத வேதாந்தம், இந்தியச் சமயங்களும் மேற்குலகச் சமயங்களும் ஓர் ஒப்பீடு எனப் பலதரப்பட்ட தலைப்புகளில் தத்துவக் கட்டுரைகள் எழுதி உலக வாசகர்களின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றார் இராதாகிருஷ்ணன்.

வங்கத்துக் கவிச்சிங்கம் தாகூரின் சிந்தனைகளில் பெரிதும் ஈர்ப்புடையவர் இராதாகிருஷ்ணன். கிழக்கு மேற்கு எனும் பேதமற்றனவாய் உலகனைத்திற்கும் பொதுவானவை தாகூரின் செழுமையான சிந்தனைகள் (நம் திருக்குறள் போல்!) எனும் எண்ணம் கொண்டிருந்த அவர், ‘வங்கக்கவியின் கருத்துக்களில்தான் இந்தியாவின் ஆன்மா கண்ணியமாய் வெளிப்படுகின்றது’ (Tagore’s philosophy was the genuine manifestation of the Indian spirit) என்று பகன்றார். அவ்வடிப்படையில், தாகூரின் தத்துவங்களை ஆய்ந்து வெளிப்படுத்துவதாகவே தன் முதனூலை அமைத்துக்கொண்டார் இராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

The Philosophy of Rabindranath Tagore’ எனும் அந்த அரியநூலைப் படித்துவியந்த தாகூர், “என்னுடன்நேரடியாகப் பழகாதபோதினும் என்னுடைய நூல்களைப் படித்தே என் எண்ணங்களை நன்கு உணர்ந்துள்ளீர்கள்! ​ உங்கள்பேரறிவுபோற்றுதலுக்குரியது; உங்களைப்போல்இவ்வளவு தெளிவாக என்னை உணர்ந்தவர் எவருமில்லை!” என்று இராதாகிருஷ்ணனைப் போற்றிப் புகழ்ந்திருக்கின்றார்.

புணர்ச்சி பழகுதல் வேண்டாம் உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும் எனும் வான்புகழ் வள்ளுவம் ஈண்டு நம் நினைவிற்கு வருகின்றது.

மடைதிறந்த வெள்ளம்போல் ஆங்கிலத்தில் உரையாற்றுவதில் வல்லவர் இராதாகிருஷ்ணன். அவருடைய சொல்லாற்றலின் சிறப்பு அன்னைபூமியைக் கடந்து அயல்நாடுகளுக்கும் பரவிற்று. ஆதலால், ‘பிரிட்டிஷ் அகாதெமிஇந்துமதத் தத்துவங்கள் குறித்துப்பேச அவருக்கு அழைப்புவிடுத்தது. இந்த அகாதெமியில் பேசுவதற்கு ஆசியாக் கண்டத்திலிருந்து முதன்முதலில் அழைக்கப்பட்டவர் இராதாகிருஷ்ணனே ஆவார்.

தொடர்ந்து, இங்கிலாந்து அமெரிக்கா போன்ற பல நாடுகளிலும் சொற்பொழிவாற்றிய தத்துவமேதை இராதாகிருஷ்ணன், தனது பொழிவை இந்திய விடுதலைக்கான ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தினார் எனலாம். மேற்கத்தியச் சிந்தனையாளர்களின் அனைத்துக் கருத்துக்களும் நம் இந்தியத் தத்துவங்களின் எதிரொலியாகவே உள்ளன என்ற அவர், இந்தியத் தத்துவங்களை மொழிபெயர்த்தால் அவை மேற்கத்தியச் சிந்தனைகளை விஞ்சிவிடும் ஆளுமையும் கருத்துச்செறிவும் உடையவை என்றுரைத்தார். இந்தியத் தத்துவங்களில் சாரமில்லை என்று நகையாடிய மேல்நாட்டினரின் எண்ணத்தை மாற்றி, உலக அரங்கில் இந்தியத் தத்துவங்களுக்கும் சமயங்களுக்கும் அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்தவர் சர்வபள்ளியாரே!

இராதாகிருஷ்ணனின் அயல்நாட்டுப் பயணங்கள், பலநாட்டுத் தலைவர்களையும் சந்தித்து நட்புபாராட்டக்கூடிய நல்வாய்ப்பை அவருக்கு நல்கின. ஒருமுறை இங்கிலாந்தின் மேனாள் பிரதமமந்திரியும், சிறந்த இராஜதந்திரியுமான வின்ஸ்டன் சர்ச்சில் இராதாகிருஷ்ணனை ஓர் விருந்துக்கு ழைத்திருந்தார். அவரது ழைப்பை ஏற்று விருந்துக்குச்சென்ற இராதாகிருஷ்ணன் அங்கே தம்கைகளால் சாப்பிடத்தொடங்கியதைக் கண்ட சர்ச்சில், “இந்தாருங்கள்டேபிள் ஸ்பூன்! ​கைகளால் சாப்பிடுவதைவிட ஸ்பூன்வைத்துச் சாப்பிடுவதுதான் சுத்தமானது; இந்தியர்களுக்கு இந்தச் சுத்தம்தெரியாமல்தான்கைகளால் சாப்பிடுகிறார்கள்; நாங்கள் சுத்தம்பற்றி நன்குஅறிந்தவர்கள்! அதனால்தான் ஸ்பூன்வைத்துச் சாப்பிடுகிறோம்என்றிருக்கிறார்.

இதைக்கேட்ட இராதாகிருஷ்ணன் முறுவலித்தபடி, “இல்லை சர்ச்சில்! ஸ்பூன்வைத்துச் சாப்பிடுவதைவிடவும் சுத்தமானதுகைகளால் சாப்பிடுவதே; னெனில் நமதுகைகளைவைத்துவேறுயாரும் சாப்பிடமுடியாது; ஆனால் நமது ஸ்பூனைவைத்து மற்றவர்கள் சாப்பிட முடியுமே? அதனால்தான் இந்தியர்கள்கைகளால் சாப்பிடுகிறார்கள்என்றாராம். அசடுவழிந்த சர்ச்சில், பதிலேதும்பேசாமல் தனதுபேச்சிற்கு இராதாகிருஷ்ணனிடம் வருத்தம்தெரிவித்தாராம்.

மதிநுட்பம் மிகுந்தவரான டாக்டர் இராதாகிருஷ்ணன், கல்வித்துறையில் பல உயர்பதவிகளை வகித்தவர். 1931-ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939-ஆம் ஆண்டு மதன்மோகன் மாளவியாவின் (இவர்தான் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர்) விருப்பத்திற்கிணங்க பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராய்ப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் பல அரியபதவிகள் அவரை அணிசெய்தன. அனைத்திற்கும் மகுடம் வைத்ததுபோல் 1952-ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவராய் இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1954-ஆம் ஆண்டு, இந்திய அரசு அவருக்குபாரத ரத்னாஎன்ற உயரிய விருதினை வழங்கிச் சிறப்பித்தது. இரண்டுமுறை குடியரசுத்துணைத்தலைவராய்ப் பணியாற்றியபின், 1962-ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவராய் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாக்டர் இராதாகிருஷ்ணன் குடியரசுத் லைவராயிருந்தபோது, அவருடைய பிறந்தநாளை விமரிசையாய்க் ​​கொண்டாட ஏற்பாடுகள் நடந்தன. அதையறிந்த அவர், தான் முதன்முதலில் செய்த அறப்பணியான ஆசிரியப் பணியைப் பெருமைப்படுத்தும் வகையில் தன் பிறந்தநாளைஆசிரியர் தினமாகக் கொண்டாட விரும்பினார். அவர் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அவ்வாண்டுமுதல் (1962) அன்னாரின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தன் அசாதாரண அறிவுத்திறத்தாலும் ஓய்வில்லா உழைப்பாலும் பல சிகரங்களைத்தொட்ட உன்னத மனிதர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். பெரும்பதவிகளில் இருந்தபோதும், ‘போதும்என்ற நிறைவோடு எளிமையாய் வாழ்ந்த ஏந்தல் அவர். அன்பால் மாணவர்களையும், பண்பால் மக்களையும், நாநலத்தால் உலகத் தலைவர்களையும் தன்பால் ஈர்த்தவர்.

இவ்வாறு பல்கேள்வித் துறைபோகிய நல்லாசிரியராய்த் திகழ்ந்து, இந்தியத் தத்துவங்களின் மேன்மையை மேற்குலகுக்கு உணர்த்திய சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறப்பால் நம் தாய்த்திருநாடு சிறப்படைந்தது. சான்றோர்கள் போற்றிய அச்சான்றோரை நாமும் போற்றுவோம். அவர்வழி நடப்போம்!

*****

கட்டுரைக்குத் துணைசெய்த தளங்கள்: