Thursday, April 17, 2014

வள்ளுவ நெறியில் சிலம்பு!



File:MarinaBeach IlangoAdigal statue 2Feb2013.jpg 
இளங்கோவடிகள்

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை 

என வாயூறிப் பேசுகின்றான் மகாகவி பாரதி. இந்த வரிசையிலே காலத்தால் மூத்தவர் வள்ளுவப் பேராசான். அவரை அடுத்து வருபவர் சேரமன்னனின் இளவலான இளங்கோ. இவ்விரு இணையற்ற நூல்களிலும் எடுத்தாளப்பட்டுள்ள அறக்கருத்துக்கள் அளவற்றவை

சான்றோர் சான்றோர் பாலராவர் (great minds think alike) என்பது பெரியோர் வாக்கு. இக்கருத்தை மெய்ப்பிப்பது போலவே குறளில் கூறப்பட்டுள்ள அதே அறக் கருத்துக்களை, வாழ்வியல் தத்துவங்களைப் பலவிடங்களில் சிலப்பதிகார ஆசிரியரும் எடுத்தியம்புகின்றார். இவ்விருவரின் ஒத்த சிந்தனைகளை ஒப்புநோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

சிலப்பதிகாரத்திலுள்ள மதுரைக் காண்டத்தில் வருகின்ற ஓர் அற்புதமான பகுதி ’அடைக்கலக் காதையாகும்’. அதிலே சமணத் துறவியான கவுந்தியடிகள் பத்தினிப் பெண்டிரின் சிறப்பைப் பற்றித் தன்னைக் காணவந்த இடைக்குல முதுமகள் மாதரியிடம் கூறும்போது, ”பத்தினிப் பெண்டிர் உள்ள நாட்டில் மழை பொய்க்காது; வளம் குன்றாது; நிலத்தை ஆளுகின்ற வேந்தரின் கொற்றம் சிதையாது எனும் சான்றோர் கூற்றை நீ அறிவாயல்லவா?” என வினவுகின்றார். இதோ அவ்வரிகள்

வானம் பொய்யாது; வளம் பிழைப் பறியாது
நீணீல வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடெனும்
அத்தகு நல்லுரை அறியாயோ நீ?” (அடைக்கலக் காதை: வரிகள்: 145-148)

இவ்வரிகள்,
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.” (குறள்: 55)  என்னும் திருக்குறளை நினைவுக்குக் கொண்டுவருகின்றன அல்லவா?

அதுபோலவே, சிலம்பில் மற்றுமோர் விறுவிறுப்பான காட்சி, வழக்குரை காதையில்

ஆவேசத்தோடு தன் கணவன் கோவலன் கொலையுண்டதைப் பற்றித் தன்முன்னே சொல்லிக்கொண்டிருந்த கண்ணகியைப் பார்த்துப் பாண்டிய மன்னன் புன்சிரிப்பைச் சிந்திவிட்டு, பெண்ணே…!
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று!
வெள்வேற் கொற்றம்- காண்!” (வழக்குரை காதை: வரிகள் 64-65) என்றல்லவா கூறுகின்றான்!

 இஃது,
குடிப்புறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.” (குறள்: 549)  என்னும் குறட்கருத்தின் பிரதிபலிப்பாகவே தோன்றுகின்றது.

அடுத்து, சிலப்பதிகாரத்தின்வஞ்சின மாலையில் மாபத்தினி கண்ணகி, ஆவேசத்தோடு பாண்டியஅரசி கோப்பெருந்தேவியைப் பார்த்துக் கூறும் வரிகள் இவை:

முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூம் பெற்றியகாண்!” (வஞ்சின மாலை: வரிகள் 3-4)

என்ன விந்தை!! தெய்வப் புலவரின் தமிழ்மறையும் இதே கருத்தைஇன்னா செய்யாமைஎன்னும் அதிகாரத்தில் பறைசாற்றியுள்ளது நாம் அறிந்ததே அல்லவா!

பிறர்க் கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.” (குறள்: 319) என்பதே அக்குறள்.

சிலம்பின்வஞ்சிக் காண்டம்சேரன் செங்குட்டுவன் கண்ணகித் தெய்வத்திற்குச் சிலை எடுத்துச் சிறப்பித்த வரலாற்றை விரித்துரைக்கின்றது. அதில், மாடல மறையோன்யாக்கை நிலையாமையைப் பற்றியும், மறக்கள வேள்வியைத் தவிர்த்துஅறக்கள வேள்விசெய்யவேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் செங்குட்டுவனுக்கு வலியுறுத்தும்போது இவ்வாறு கூறுகின்றான்….

நாளைச் செய்குவம் அறமெனின் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும் (நடுகல் காதை: வரிகள்: 179-180)

இதே பொருளில் பல குறட்பாக்களை நாம்நிலையாமைஎனும் அதிகாரத்தில் காண்கிறோமே
அவற்றுள் ஒன்று, இங்கே நம் சிந்தனைக்கு…..

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.” (குறள்: 335)

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல் அமைந்துள்ளது சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியானவரந்தரு காதை”. குறளும், சிலம்பும் கைகோர்த்துக்கொண்டு ஒத்த அறக்கருத்துக்களை ஓங்கி ஒலிக்கின்ற அழகை என்னவென்பது? தமிழன்பர்கள் அனைவரும் படித்து மகிழவேண்டிய பகுதியிது!

தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;
பொய்க் கரி போகல்மின்; பொருள்-மொழி நீங்கல்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்;
அற மனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும், களவும், காமமும், பொய்யும்,
வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்
இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது;
செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்-
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என்(வரந்தரு காதை: வரிகள்: 187-202)

இவை சிலம்பிலுள்ள வரந்தரு காதையின் வைர வரிகள்!

இவ்வரிகளுக்கு இணையான குறட் கருத்துக்களை இனிக் காண்போம்.

வள்ளுவத்தின், கடவுள் வாழ்த்து தெய்வம் தெளிவதற்கு நமக்குப் பேருதவி செய்கின்றது.

நீத்தார் பெருமை என்ற அதிகாரம், பற்றற்ற உயர்ந்தோரின் சிறப்பைப் பேசுகின்றது.

அதுபோன்று, புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தில்,
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா வுயிரும் தொழும்.” (குறள்: 260) என ஊனூண் துறப்பதன் அவசியத்தைக் குறள் கூறுகின்றது.

உயிர்க்கொலை அதைவிடக் கொடியது என்பதனை,

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.” (குறள்: 321) என்ற குறள் விளக்குகின்றது. இஃதுஉயிர்க் கொலை நீங்குமின்என்ற வரியின் விளக்கம் தானே?

தானம் செய்வதின் சிறப்பை ஈகையும், தவத்தின் பெருமையை தவம் என்ற திருக்குறள் அதிகாரமும் நமக்குத் தெளிவாய்ச் சொல்லவில்லையா?

செய்ந்நன்றி அறிதலையும், ”தீநட்பின்தன்மையையும் அறிதற்குத் திருக்குறளினும் விஞ்சிய வழிகாட்டி உண்டோ?

பொய்க் கரி போகல்மின்; பொருள்மொழி நீங்கல்மின்என்பதன் பொருள் என்ன? எப்போதும் வாய்மையே பேச வேண்டும் என்பதுதானே?

இதனைத்தான் நம் வான்புகழ் வள்ளுவரும்,

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.” (குறள்: 297) என்ற குறள்வழி செப்புகின்றார்.
 
அதுமட்டுமா? அறவோராகிய பெரியாரைத் துணைக்கோடல் வேண்டும் என்றும் பிறனில் விழையாமையே ஆண்மைக்கு அழகு எனவும் வள்ளுவர் வலியுறுத்துகின்றார். ”உண்ணற்க கள்ளை!” எனவும், ”கள்ளாமை காக்க!” எனவும் வள்ளுவப் பேராசான் நமக்கு அறிவுறுத்தத் தவறவில்லை.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.” (குறள்: 360) என்பது வள்ளுவரின் வாய்மொழியாகும்.

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.” (குறள்: 196) என்று பயனில சொல்லும்வெள்ளைக்கோட்டியைக் கடுமையாய்ச் சாடுகின்றார் வள்ளுவர்.

அதுபோல்,
நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.” (குறள்: 336) என்றுநிலையாமைகுறித்த உண்மைகளையும் நெகிழ்ச்சியாய் வெளியிடுகின்றார்.

இவ்வொப்பீடுகள் வாயிலாய் நாம் அறிவது என்ன? சிலம்பில் எங்கு நோக்கினும் குறட் கருத்துக்கள் குவிந்து கிடக்கின்றன என்பதைத்தானே!

இவ்வுயரிய அறக்கருத்துக்கள் படிப்போர் உள்ளங்களைப் பரவசப்படுத்துவதோடு அல்லாமல், வள்ளுவரின் வழித்தோன்றலாகவே இளங்கோவடிகளை எண்ணி மகிழச்செய்கின்றது. சான்றோரின் சிந்தனைகள் உயர்ந்திருப்பதும், ஒத்திருப்பதும் உண்மையே அல்லவா!



No comments:

Post a Comment