நம் இந்தியத்
துணைக்கண்டத்தின் வலிமைவாய்ந்த பேரரசாக முதன்முதலில் திகழ்ந்தது மௌரியப் பேரரசே ஆகும்.
கங்கைச் சமவெளியில், இன்றைய பீகார், வங்காளம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய அன்றைய மகத
நாட்டில் முகிழ்த்த இப்பேரரசு தோற்றம்பெறுவதற்குப் பெரிதும் காரணமாயிருந்தவர் அரசியல்
தந்திரங்களில் வல்லவரான சாணக்கியர் (கௌடில்யர் என்றும் கூறுவர்) ஆவார். மௌரியர்களுக்கு
முன்பு மகதத்தை ஆண்டுவந்த நந்தவம்சத்தின் அரசனான தனநந்தனுக்கும் அவனுடைய அமைச்சராயிருந்த
சாணக்கியருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டினால், நந்த வம்சத்தையே கருவறுக்க முடிவுசெய்தார்
சாணக்கியர்.
ஒருநாள்
தட்சசீலத்தை (It was in Rawalpindi District, Punjab) நோக்கிச் சென்றுகொண்டிருந்த சாணக்கியர்,
தாம் செல்லும்வழியில் காட்டில் வேட்டையாடிக்கொண்டிருந்த ஓர் இளைஞனைக் கண்டார். அவனிடம்
காணப்பட்ட வீரம் அவர் உள்ளங் கவர்ந்தது. அவனை
வைத்தே நந்த வம்சத்தின் வரலாற்றை முடித்துவிட எண்ணிய அவர், அவ்விளைஞனைத் தன்வயப்படுத்தி,
நந்த அரசனுக்கு எதிராகப் போர் தொடுக்கவைத்து அச்சாம்ராஜ்யத்தின் அழிவுக்கு அடிகோலினார்.
பின்பு, தன் எண்ணப்படியே அந்த இளைஞனை மகத நாட்டரசனாக்கினார். அந்த இளைஞன் வேறுயாருமில்லை!
மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த முதலாம் சந்திரகுப்தனே அவன்! (’மௌரியர்’ என்ற பெயர் சந்திரகுப்தனின்
தாய் ’முரா’வின் பெயரடிப்படையில் தோன்றியது என்று கூறப்படுகின்றது.)
ஓர் அரசனுக்குத்
தேவையான சகல கலைகளையும் சந்திரகுப்தனுக்குக் கற்பித்த சாணக்கியர், அவனைப் பெருவீரனாகவும்
அறிஞனாகவும் மாற்றினார். அரசின் நிலப்பரப்பை விஸ்தரித்தார். அத்தகைய புகழ்வாய்ந்த மௌரிய
வம்சத்தில் சந்திரகுப்தனின் வழித்தோன்றலான பிந்துசாரனின் மகனாகத் தோன்றியவர்தான் மாமன்னர்
அசோகர்.
’அசோகன்’
என்ற சொல்லுக்குச் ’சோகமற்றவன்’…அதாவது ’துயரமற்றவன்’ என்பது பொருள். கி.மு. 304-இல் பிறந்தவர் என்று (தோராயமாகக்)
கணிக்கப்படும் அசோகர், தம் பெயருக்கேற்பவே தாம் துயரமற்றவராய்த் திகழ்ந்து
மற்றவர்க்கே துயரத்தைப் பரிசளித்துவந்தார். தம் தந்தை பிந்துசாரரின் பல (மனைவியரின்)
பிள்ளைகளையும் கொன்றுகுவித்து அவர்களின் அரத்த ஆற்றில் நீந்தித்தான் ஆட்சிபீடத்தை அவர்
கைப்பற்றினார் என்கின்றனர் வரலாற்றறிஞர்கள். அதுபோல், இளவயதில் சிங்கம் ஒன்றைக் கட்டையால்
அடித்துக்கொன்ற அவருடைய சாகசச் செயலும் வியந்துபேசப்படும் ஒன்றாகும். (புலியை முறத்தால்
அடித்த மறத்தமிழச்சியின் வீரச்செயல் இத்தருணத்தில் நம் நினைவிற்கு வருகின்றது அல்லவா!).
கி.பி.
7—ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகைபுரிந்த சீன யாத்ரீகர் யுவான்சுவாங் (Xuanzang) அசோகரின் ஆரம்பகால ஆட்சியில் குற்றவாளிகளின் நிலையைப் பின்வருமாறு வருணிக்கிறார்:
”தம்
ஆட்சியில் குற்றவாளிகளை அசோகர் தண்டித்தமுறை கற்பனைக்கு எட்டாதவகையில் மிகக் கொடூரமானது;
தலைநகரான பாடலிபுத்திரத்தின் (இன்றைய பாட்னா) வடக்கே கைதிகளைச் சித்திரவதை செய்வதற்கென்றே
அழகிய மாளிகை ஒன்றை அமைத்திருந்தார் அசோகர்; வெளித்தோற்றத்தில் சொர்க்கலோகம்போல் காட்சியளித்த
அம்மாளிகை உண்மையில் கைதிகளுக்கு நரகமாகவே இருந்ததால் அதைச் ’சொர்க்க நரகம்’ (Paradisal
Hell) என்றே அழைக்கலாம்” எனக் குறிப்பிடுகின்றார் யுவான்சுவாங்.
இவ்வாறு
கண்டோர் நடுங்கும்படி கொடுங்கோலாட்சி செலுத்தி, ’தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்’ என்று
இறுமாந்திருந்த அசோகரின் பார்வை, மகதத்துக்கு அதுவரை அடிபணியாதிருந்த கலிங்கத்தின்மீது
(Present day states of Odisha and North Coastal Andra Pradesh) விழுந்தது. அதன் கொட்டத்தை
அடக்கி அடிப்படுத்த விரும்பிப் போர்முரசு கொட்டினார். உக்கிரமாக நடைபெற்ற அப்போரில்
கலிங்க வீரர்கள் இலட்சக்கணக்கானோர் மடிந்தனர்; மீதமிருந்தோர் சிறைப்பட்டனர் என்ற விவரங்கள்
அசோகரின் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளதாய் அறிகின்றோம்.
கலிங்கப்போரில்
அசோகர் வெற்றித்திருமகளைக் கைப்பற்றியபோதினும், வீரர்களின் பிணக்காடாய்க் காட்சியளித்த
போர்க்களத்தைக் கண்ட அவருடைய கொடூர உள்ளமும் கலங்கித்தான் போனது. அக்கோரக்காட்சிகள்
அவருக்குள் மிகப்பெரிய மனமாற்றத்தை நிகழ்த்தத் தொடங்கின. “ஐயோ! என்ன காரியம் செய்துவிட்டேன்?
இத்துணை உயிர்களைக் கொன்றுவித்தது எனக்குக் கிடைத்த வெற்றியா? இல்லை தோல்வியா? அப்பாவி
மக்களையும் குழந்தைகளையும் அழித்த இச்செயலுக்குப் பெயர்தான் வீரமா? அந்தோ! தந்தையரையும்,
கணவரையும், பிள்ளைகளையும் போரில் பறிகொடுத்துக் கதியற்றுக் கலங்கிநிற்கும் இப்பெண்களுக்கு
நான் என்ன பதில் சொல்லப்போகிறேன்?” என்றெல்லாம் கேள்விக்கணைகள் அவரைத் துளைக்கத் தொடங்கின.
கழிவிரக்கமும்
தன்மீதே அளவற்ற வெறுப்பும் ஏற்பட்டது அவருக்கு. ”போதும்! மறத்தொழில் செய்து நான் நாடுபிடித்தது
போதும்! இனியேனும் அறத்தின்பால் திரும்புகின்றேன்!” என்று தீர்மானித்து, கருணையே வடிவான
புத்தர்பிரான் காட்டிச்சென்ற அருள்நெறியே இனியென் வாழ்க்கை நெறி!’ எனத் தெளிந்தார்
அசோகர் என்கிறது அவரது வாழ்க்கை வரலாறு.
இவ்விடத்தில்
நமக்கோர் ஐயம் எழுகின்றது. அசோகரின் பாட்டனாராகிய சந்திரகுப்த மௌரியர், தம் வாணாளின்
இறுதியில் சமணத்துறவியாகி கர்நாடகத்திலுள்ள சிரவணபெலகுலாவில் தங்கி உண்ணாநோன்பிருந்து
உயிர்துறந்தார்; அசோகரின் தந்தை பிந்துசாரரோ ஆசீவகத்தின் ஆதரவாளராய் இருந்தார். ஆனால்
அசோகர்…தம் தகப்பனாரும் பாட்டானாரும் பின்பற்றிய அறநெறிகளில் ஒன்றையும் தேர்வுசெய்யாது
(திடீரென்று) பௌத்தத்தின்பால் ஈர்க்கப்பட்டதேன்? இதனை ஆராயும்போதுதான் ஓர் உண்மை வெளிச்சத்திற்கு
வருகின்றது.
ஆம்!
அசோகரைப் பௌத்தத்தின்பால் திருப்பியது கலிங்கப்போரின் கோரக் காட்சிகள் மட்டுமல்ல! ஓர்
பௌத்தமதப் பெண்மணியோடு அவருக்கு ஏற்பட்ட ஆழமான நட்பும்தான் என்பதே அந்த உண்மை!
அந்தப்
பெண்மணி யார் என்று அறிந்துகொள்ளும் ஆவல் எழுகிறதல்லவா?
அந்தப்
பெண்மணியின் பெயர் ‘காருவகி’’
(Karuvaki or Karuwaki) என்பதாகும். மீனவ குலத்தில் தோன்றிய காருவகி, பௌத்தமதக் கொள்கைகளினால்
ஈர்க்கப்பட்டு அம்மதத்தில் சேர்ந்து துறவியானவர். இவருக்கும் மன்னர் அசோகருக்கும் ஏற்பட்ட
நட்பால், இப்பெண்ணின் தருமோபதேசங்களைக் கேட்கக்கூடிய அரிய வாய்ப்பு அசோகருக்கு ஏற்படுகின்றது.
அஃது அவருக்குள் நிகழ்த்திய மிகப்பெரிய மனமாற்றமே, அவரை உயிர்களை இரக்கமின்றி அழித்தொழிக்கும்
யுத்தத்தை விட்டுவிட்டு அன்பையும், உயிரிரக்கத்தையும் போதிக்கும் புத்தத்துக்கு மடைமாற்றியது
என்று தெரியவருகின்றது. பௌத்த மதத்தில் சேர்ந்த அசோகர், பின்பு காருவகியை மணம்புரிந்துகொள்கின்றார்.
இப்பெண்ணரசியின் வழிகாட்டுதலின்படியே அசோகர் தம் நாடுமுழுவதும் பௌத்தத்தைப் பரப்பினார்.
நாம்
வரலாற்றுப் பாடத்தில் படிக்கின்ற ’அசோகர் சாலையின் இருமருங்கிலும் கனிதரும் மரங்களை
நட்டார்; ஊரெங்கும் குளங்களை வெட்டினார்’ எனும் அறச்செயல்களுக்கெல்லாம் வினையூக்கியாய்
(catalyst) விளங்கியவர் இந்தக் காருவகியே. நாடெங்கும் பௌத்தப்பள்ளிகள் நிறுவி, புத்தரின்
கொள்கைகளைப் பரப்ப அளவற்ற நிதியுதவி நல்கினார் இப்பெண்மணி. தம் மனைவியின் அறச்செயல்களையும்,
தொண்டுகளையும் தமக்குரியதாய் அறிவித்துக்கொள்ளாமல் மனைவியின் பெயராலேயே அவற்றைக் கல்வெட்டுக்களில்
பொறிக்கச்செய்திருக்கின்றார் அசோகர்; இஃது அவருடைய பெருந்தன்மைக்குச் சான்றாகும்!
மனிதர்களுக்கு
மட்டுமல்லாது, விலங்குகளுக்கும் மருத்துவமனைகளைக் கட்டிய அசோகர், ஏழைகளின் பசிப்பிணி
போக்குதற்கு அன்னசத்திரங்களையும் அமைத்தார். கட்டடக்கலையில் ஆர்வம் மிகக்கொண்டிருந்த
அவர், மலைகளைக் குடைந்து கோயில்கள், தூண்கள் முதலியவற்றை நிர்மாணித்தார்; ஆயிரக்கணக்கில்
ஸ்தூபிகளை எழுப்பினார். ’சாரநாத்’ எனுமிடத்தில் அவர் எழுப்பிய ஸ்தூபியில் காட்சியளிக்கும்
நான்கு சிங்க வடிவங்களை நம் இந்தியஅரசு தன் இலச்சினையாகப் பயன்படுத்திவருகின்றது; அதுபோல்,
அச்சிங்கங்களின் கீழிருக்கும் 24 ஆரங்களைக் கொண்ட அசோகச் சக்கரத்தையே இந்திய தேசியக்கொடியின்
மையத்தில் கம்பீரமாய்ப் பொறித்திருக்கின்றது. இவையெல்லாம் நாமறிந்த செய்திகளே.
உலகெங்கும்
பௌத்தம் தழைக்கவேண்டும் எனும் பேரவா கொண்ட அசோகர், தமிழகம், இலங்கை போன்ற பகுதிகளுக்குத்
தம் மைந்தரான மகேந்திரனையும், (சிலர் இவரை அசோகரின் தம்பி என்பர்) மகள் சங்கமித்திரையையும்
அனுப்பினார் என்று இலங்கையின் அரசவரலாறு கூறுகின்ற ’மகாவம்சம்’ எனும் நூல் நவில்கின்றது.
ஆகவே, அசோகரின் ஆட்சிக் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவிலேயே பௌத்தம் தமிழகத்திற்கு
வந்துவிட்டது என்பது புலப்படுகின்றது. இதே காலகட்டத்தில் அசோகரின் தீவிர முயற்சியால்
பௌத்தம் கடல்கடக்கும் வாய்ப்பையும் பெற்றுச் சீனம், பர்மா, தாய்லாந்து போன்ற அயல்நாடுகளிலும்
பரவிற்று.
கொடுங்கோலராய்த்
தம் ஆட்சியைத் தொடங்கிய அசோகர், பின்பு மாபெரும் அருளாளராய் மாறி, ’யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்’ என்று புத்தரின் அறக்கொள்கைகளை உலகெங்கும் பரப்பினார்; அன்புநெறியை
அகிலமெங்கும் தழைக்கச் செய்தார்.
”உலக
வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள் தங்களைத் தாங்களே மாட்சிமை பொருந்தியவர், மாமன்னர் என்றெல்லாம்
அழைத்துக்கொண்டனர். அத்தகைய மாட்சிமை பொருந்திய மாமன்னர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட
காலம்மட்டுமே மின்னி மறைந்துவிட்டனர்; ஆனால், ஒரேயொருவர் மட்டுந்தான் வரலாறு உள்ளவரை
மறையாத நட்சத்திரமாக ஒளிவீசிக் கொண்டிருப்பார்; அவர்தாம் அசோகர்!” என்று ஆங்கில எழுத்தாளர்
ஹெச். ஜி. வெல்ஸ் (Herbert George
Wells) தன்னுடைய ’The
Outline of History’ எனும் நூலில் அசோகருக்குச் சூட்டியுள்ள புகழாரம்
ஈண்டு குறிப்பிடத்தக்கது.
இன்றளவும்
நினைந்து போற்றப்படும் அசோகரின் அகிம்சை நெறியும், பௌத்த சமயத்தொண்டுகளும், திருவாளர்
வெல்ஸின் கூற்று முற்றிலும் உண்மையே என்பதை அறுதியிட்டு உறுதிகூறுகின்றன.
No comments:
Post a Comment