Monday, August 4, 2014

ஆடிப்பெருக்கும் ஆட்டனத்தியும்!


ஆடித் திங்கள் பதினெட்டாம் நாளை 'ஆடிப்பெருக்கு' என்று நாம் கொண்டாடி வருகின்றோம். இந்நாளில் சித்திரான்னங்கள் பலவற்றைத் தயாரித்து காவிரியாற்றங்கரையில் அமர்ந்து உண்டு மகிழ்வது வழக்கம். அத்தோடு, பல மங்கலப் பொருட்களை ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரிக்குப்’ படைத்தின்புறுவது உள்ளிட்ட பல்வேறு நற்செயல்களும் நடைபெறும். அவ்வினிய வேளையில் காவிரியின் புதுவெள்ளத்தோடு மக்களின் மகிழ்ச்சி வெள்ளமும் சேர்ந்தே பாயும் என்பதில் ஐயமில்லை!

ஆயினும், ஆடிப்பெருக்கை ஒரு பெருவிழாவாகக் கொண்டாடும் வழக்கம் நம் பண்டைத் தமிழகத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை இவ்விழாவும் பின்னாளில் ஆன்மீக அருளாளர்கள், பௌராணிகர்கள் போன்றோரால் ஏற்படுத்தப்பட்டுப் பிரபலம் அடைந்திருக்கக் கூடும். ’கங்கையின் மேலாய காவிரி’ என்று போற்றி, பூவிரியும் சோலைகள் நிறைந்த இக்காவிரியை ஓர் புனித ஆறாக – வழிபடு தெய்வமாக மாற்றிவிட்டனர் நம் சமயச் சான்றோர் என எண்ணுதற்கும் இடமுண்டு. எனவே ஆடிப் பெருக்கை மகத்துவம் நிறைந்த ஓர் திருநாளாகக் காட்டுதற்கு இலக்கியச் சான்றுகள் ஏதும் கிடைத்தில.

எனினும், ஆடியின் புதுப்புனலில் நிகழ்ந்த ஓர் அற்புத (இலக்கிய) நிகழ்வை இத்தருணத்தில் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.

கி.பி முதல் நூற்றாண்டின் பிற்பகுதி…
அளவற்ற பொன்னும் மணியும் துஞ்சும் எழில்கொஞ்சு காவிரிப்பூம்பட்டினப் பெருநகர். அதனை ஆண்டு வருகின்றான் பீடும், பெருமையும் மிக்க சோழ மன்னனான கரிகாற் பெருவளத்தான்!

புதுப்புனல் பாய்ந்துவரும் ஆடி மாதத்தின் ஒரு நன்னாளில் ’கழாஅர்’ எனும் காவிரியாற்றின் துறையில் கரிகாலன் நீர்விழாக் கொண்டாடிக்கொண்டிருந்த சமயமது…
ஆட்டத்தில் வல்லவனான சேர மன்னன் ’ஆட்டன் அத்தி’ அவ்விழாவில் நீர் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தான். அப்போது காவிரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் எதிர்பாராதவண்ணமாய் அடித்துச் செல்லப்பட்டுவிட்டான் அவன். என்னே விபரீதம்!

விழாவைக் காணவந்திருந்த அனைவரும் இந்த அசம்பாவிதம் கண்டு செய்வதறியாது திகைத்து நின்றனர். இவ்விபத்தினை நேரில் கண்டு பெரிதும் அதிர்ச்சி அடைந்த கரிகாலன் மகளும், ஆட்டன் அத்தியின் மனைவியுமான ஆதிமந்தி, “என் கணவரைக் காப்பாற்றுவார் இல்லையா? காவிரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அவரைக் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று கூக்குரலிட்டுக்கொண்டே கண்ணீரருவி பாய்ந்தோடக் காவிரியின் கரையோரமாய் வெகுதூரம் ஓடினாள்; காவிரி கடலில் கலக்கும் இடத்தருகே வந்து நின்றாள் மூச்சிரைக்க!

அப்போது அங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ஆம்..! திடீரென்று ஒரு இளம் பெண் தோன்றினாள் கடலின் நடுவே. சுயநினைவற்ற நிலையில் இருந்த அத்தியைத் தன் கையில் பிடித்து இழுத்துக்கொண்டு கடற்கரையோரமாய் வந்தாள் அந்த அணங்கு. அதனைக் கண்ட ஆதிமந்தியால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. விரைந்தோடிச் சென்று தன் கணவனைப் பற்றினாள். நல்ல வேளை! அவன் உயிரோடுதான் இருந்தான். ஆதிமந்தி அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் ஏது? மறுவாழ்வு கிடைத்த மகிழ்ச்சியில் தன் கணவனை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினாள் அவள்.
அது சரி….கடல் நடுவே திடீரென்று தோன்றி ஆட்டன் அத்தியைக் காத்த அந்தக் கன்னி யார்? ஒருவேளை…தன் கடற்காதலனோடு கலந்திருந்த காவிரியன்னைதான் அந்த அதிசயப் பெண்ணோ?

’இல்லை’ என்கிறது தமிழிலக்கியம். அவள் பெயர் ‘மருதி.’ அவளை அத்தியின் காதலி என்று சொல்வாரும் உண்டு. எது எப்படியோ…அத்தியைக் காத்த அந்த மாதரசி மருதி பாராட்டப்பட வேண்டியவளே அல்லவா!

இந்த இனிய வரலாற்று நிகழ்வால் ஈர்க்கப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் ஆட்டனத்தி ஆதிமந்தி வரலாற்றைச் ’சேர தாண்டவம்’ எனும் பெயரில் நாடகமாகவும், கவியரசு கண்ணதாசன் ‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ எனும் பெயரில் சுவையான குறுங்காவியமாகவும் இதனைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (தமிழில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ’மன்னாதி மன்னன்’ திரைப்படம்கூட இக்கதையின் தழுவலே என்று கூறப்படுகிறது.)

சோழன் கரிகாலனின் அருமை மகளாகிய இந்த ஆதிமந்தியே தமிழிலக்கியத்தில் பெண்பாற் புலவர்களில் ஒருவராகப் போற்றப்படும் ஆதிமந்தியார் ஆவார்.

ஆதிமந்தியார் எழுதிக் குறுந்தொகையில் இடம்பெற்ற பாடலொன்று…

மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக் 
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே. (குறுந்: 31)

(இதன் பொருள்: வீரர்கள் கூடியுள்ள சேரி விழாவின் கண்ணும், மகளிர் ஆடுகின்ற துணங்கைக் கூத்தின் கண்ணும் பெருமைமிக்க என் தலைவனை நான் கண்டேனில்லை. யானும் ஆடுகின்ற களத்திற்குரிய ஒரு மகளே; என் கையிலுள்ள சங்கு வளையல்களை நெகிழச் செய்த தலைவனும் ஓர் ஆடுகள மகனே.)

தன் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தைத்தான் இப்பாடலாய் வடித்துள்ளாரோ ஆதிமந்தியார்?