Wednesday, May 14, 2014

தன்னேரிலாத தாயன்பு!

amma pic with a poem for megala's article

ஒவ்வோர் ஆண்டும் மே இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை உலகின் பெரும்பான்மையான நாடுகள் அன்னையர் தினமாகக் கொண்டாடி வருவது நாமறிந்ததே. அன்னையரின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் ஓர் நாள் கொண்டாடப்படவேண்டும் என்ற எண்ணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ’அன்னா ஜார்விஸ்’ என்ற அமெரிக்கப் பெண்மணிக்குத் தோன்றியது. அந்நாளை ஓர் விடுமுறை நாளாக அரசாங்கம் அறிவிக்கவேண்டும் என்றும் அவர் முனைப்போடு செயல்பட்டுத் தன் கோரிக்கையில் அவர் வெற்றி பெற்றுள்ளார். (பின்பு அன்னையர் தினம் வணிகமயமாக்கப்பட்டபோது அதன் தோற்றத்துக்குக் காரணமாக இருந்த அன்னாவே அன்னையர் தினத்தை எதிர்த்தது வேறு விஷயம்!)

அன்னையர் தினத்தின் தோற்றம் அமெரிக்காவில் நிகழ்ந்தபோதிலும் உலகம் முழுவதும் இந்நாள் ஓர் திருநாள்போல இப்போது கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்னையர்க்குப் பரிசுப் பொருட்களைக் கொடுப்பது, வாழ்த்து அட்டைகளை வழங்குவது, அவரோடு சுற்றுலாவுக்குச் செல்வது, விருந்துண்பது  என்று பல்வேறு வகைகளில் கேளிக்கை நிறைந்ததாக இந்நாளைக் கொண்டாடிவருகின்றனர் மக்கள்.

எனினும் முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாள் சுமந்து குழந்தைகளை ஈன்று புறந்தருகின்ற அன்னையரைக் கொண்டாடுவதற்கு (ஒரே) ஒருநாள் போதுமா?

அன்னையர் தம் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பது பரிசுப் பொருள்களோ, வாழ்த்து அட்டைகளோ இல்லை; அவர்கள் என்றும் வேண்டுவது தம் பிள்ளைகளின் (நீங்காத) அன்பையே! பிள்ளைகள் தன்னை மறந்தாலும் அவர்கள்மீது மாறாத அன்பு பாராட்டுபவள் இவ்வுலகில் அன்னை எனும் உன்னத உயிர் ஒன்றுதானே?

ஒரு தாய் தன் மகள்மீது கொண்டிருந்த அளவிடமுடியாத அன்பை அழகாய் வெளிப்படுத்தும் ஓர் காட்சி ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்திலிருந்து…

தன்னருமைத் தாயையும், அவளின் தூய அன்பையும் மறந்து தான் விரும்பிய காதலனோடு சென்றுவிடுகின்றாள் ஒரு பேதைப் பெண். அருமையாகவும் பெருமையாகவும் பாலூட்டிச் சீராட்டி வளர்த்த தன் அன்புமகள் தன்னைத் தவிக்கவிட்டுச் சென்றுவிட்ட அவலத்தைத் தாங்கவொண்ணாது தவிக்கின்றாள், துடிக்கின்றாள் அந்த அன்னை!

உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் கண்ணனாகவே கண்ட ஆழ்வார்கள்போல், வீட்டில் கண்ணில்படும் பொருள்களிலெல்லாம் தன் அருமை மகளைக் காண்கிறாள் அந்த அபலைத் தாய்! அவை ஒவ்வொன்றையும் கையில் எடுத்து ஏக்கத்தோடு பார்த்து, ”இது என் மகள் வைத்து விளையாடிய பொம்மையாயிற்றே! இது ஒளிமிக்க நெற்றியையுடைய என்னருமைப் பைங்கிளி எடுத்து வளர்த்த பைங்கிளியாயிற்றே! இவற்றைக் காணும்போதெல்லாம் என் கண்கள் கலங்குமாறு என்னுயிரினும் இனிய மகள் என்னைவிட்டு நீங்கிச் சென்றாளே!” என்று கண்ணீரோடு புலம்புகின்றாள்.

”இதுஎன் பாவைக்கு இனியநன் பாவை
இதுஎன்
பைங்கிளி எடுத்த பைங்கிளி
இதுஎன்
பூவைக்கு இனியசொல் பூவைஎன்று
அலமரு
நோக்கின் நலம்வரு சுடர்நுதல்
காண்தொறும்
காண்தொறும் கலங்க
நீங்கினளோ
என் பூங் கணோளே!” (ஐங்குறுநூறு: 375)

பெத்த மனம் பித்து…பிள்ளை மனம் கல்லு என்பது இதைத்தானோ?

’அன்னையர் தினம்’ என்றதும் என் நினைவுக்கு வரும் மற்றொன்று, பள்ளி இறுதிவகுப்பில் நான் படித்த ஆங்கிலப் பாடமான ’The Mother’s Day.’

அன்று அன்னையர் தினம்! தங்கள் அன்னையை எங்கேனும் வெளியே சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று மகிழ்விக்கவேண்டும் என்று விரும்பிய அவள் பிள்ளைகள், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்வதற்கு ஏற்றவகையில் ஓர் வேனை ஏற்பாடு செய்கின்றனர்.

சுற்றுலாவுக்கு எடுத்துச் செல்லவேண்டிய தின்பண்டங்கள் தயாரிப்பதில் அவர்களின் அன்னை மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருக்கப் (பாவம்! அந்தத் தாய்க்கு அன்றுகூட ஓய்வு இல்லை!) பிள்ளைகள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு வேனில் இடம்பிடித்து அமர்கின்றனர். கடைசியில் மிஞ்சியிருந்ததோ ஒரே ஓர் இடம்! ஆனால் அங்கே அமர்வதற்காக எஞ்சியிருந்ததோ இருவர்!

ஒருவர் அந்த அன்னையின் கடைசிப் பிள்ளையான ராஜூ, இன்னொருவர் ’விழா நாயகியான’ அந்த அன்னை. இருவரில் யாரை அழைத்துச் செல்வது என்று புரியாமல் வண்டியில் அமர்ந்திருந்தோர் விழிக்க…..சுற்றுலாச் செல்லவேண்டும் என்று மிகுந்த ஆசையோடு புத்தாடைகளையெல்லாம் அணிந்துகொண்டு வண்டியில் ஏறத் துடித்துக் கொண்டிருந்த அந்தக் கடைக்குட்டிப் பையன் ராஜூ, தன் அன்னையின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தான். அந்தப் பார்வையின் பொருளை உடனே புரிந்துகொண்டுவிட்டாள் அன்புவடிவான அந்த அன்னை!

உடனே, ”நான் வயதானவள்; பிறிதொரு சமயம் சுற்றுலாவுக்கு வருகிறேன். ராஜூவை அழைத்துச் செல்லுங்கள்! அவன் மகிழ்ச்சியாக இருக்கட்டும்!” என்று அன்போடு கூறித் தன் மகனை வேனில் ஏற்றி அமரச் செய்கிறாள்.

வண்டியில் அமர்ந்திருந்த அனைவருக்கும் அந்த அன்னை அன்போடு கையசைத்து  விடைகொடுக்க, அவளை ஏற்றிக்கொள்ளாமலேயே அந்த வேன் மற்றவர்களோடு சுற்றுலாவுக்குப் புறப்பட்டுச் சென்றது என்பதே The Mother’s Day’ என்ற அந்தப் பாடத்தின் சாரம். வேதனையான வேடிக்கை இல்லையா?

’தியாகம் செய்வதற்கென்றே பிறந்தவர்கள் அன்னையர்!” என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்துகின்றது மேற்கண்ட நிகழ்வு!

ஆம்…அன்னையரே எப்போதும் தங்கள் ஆசைகளைத் துறக்கவேண்டும்; மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து நடந்துகொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே நம் சமுதாயத்தில் (பெரும்பாலும்) பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்நிலை மாறவேண்டும். அன்னையானால் என்ன…அவளுக்கும் ஆசைகள் இருக்குமல்லவா? எனவே அவளுடைய உணர்வுகள் மதிக்கப்படவேண்டும்; விருப்பங்கள் தடையின்றி நிறைவேற்றப்படவேண்டும்!

இறைவன் தன்னால் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்ல முடியாது என்று கருதித்தான் அன்னையரை வீடுகள்தோறும் அனுப்பினான் என்று சொல்லப்படுவதுண்டு. இல்லத்திலே உறைகின்ற தெய்வம் அன்னை! அந்த அன்னையின் காலடியில்தான் சுவனம் (சொர்க்கம்) இருக்கின்றது என்கிறது இஸ்லாம். ”தெய்வீகத் தாயைப் பெற்றிருக்கும் எந்த மனிதனுமே ஏழையில்லை!” என்பது அமெரிக்க முன்னாள் அதிபர் அபிரகாம் லிங்கனின் அமுதமொழி!

இவ்வாறு எண்ணற்ற சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் தன்னேரிலாத தாயை, அவளின் பெருமையை அன்னையர் தினத்தில் நினைந்து போற்றுவோம்!