மண்ணில் பிறந்த மனிதர்க் கெல்லாம்
உண்மையில் உயர்ந்த உறவவள்!
உண்மையில் உயர்ந்த உறவவள்!
கண்ணின் மணிபோல் குடும்பம் காக்கும்
விளக்காய் என்றும் திகழ்பவள்!
இன்னல்கள் எத்தனை வந்தா லென்ன…
தானே தாங்கும் கொள்கலம்!
தன்னலம் என்ற சொல்லே அறியா(து)
தரணியில் வாழும் நல்லுளம்!
அன்ன தானம் செய்வதி னாலே
வந்திடும் புகழோ கொஞ்சமே!
அன்னையைத் தனமாய்க் காப்பதில் தானே
மகிழ்ந்திடும் உயர்ந்த நெஞ்சமே!
ஊதியம் இல்லை ஓய்வும் இல்லை
அன்னை பணியே அருட்பணி!
ஆதி சக்தியின் வடிவம் அவளே
என்றும் அன்னையின் பதம்பணி!
பொறுமை என்னும் அணியால் வீட்டின்
பெருமை காப்பவள் அன்னையே!
வெறுமை யாகும் மானுட வாழ்வும்
அவளின் அன்பு இல்லையேல்!
சொல்லில் விளக்கிடக் கூடுமோ அந்தத்
தூயவள் சேவையை மொத்தமாய்!
இல்லில் உறையும் தெய்வம் அந்தத்
தாயினைப் போற்றுவோம் நித்தமும்!