Wednesday, April 30, 2014

புரட்சிக் கவி!


’பில்கணீயம்என்ற வடமொழி நூலைத் தழுவித் தமிழில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய காவியம்புரட்சிக் கவி’. புரட்சிச் சிந்தனைகளும், பொதுவுடைமைச் சித்தாந்தங்களும் நிறைந்த இந்நூல் படிப்பதற்கு மிகவும் சுவையானது; ஆண்டான் அடிமையெனும் நடைமுறை ஒழியவேண்டும் என வலியுறுத்துவது.

அவ்வினிய காவியத்தின் சுருக்கம்...

தன்மகள் அமுதவல்லி தமிழில் சிறந்த புலமையடைய வேண்டும்; கவி புனையும் ஆற்றல் பெறவேண்டும் என்று விரும்புகின்ற மன்னன் ஒருவன், ”அவள் தமிழிலக்கணம் கற்கத் தக்கதோர் புலவனைத் தேடுக!” என்று தன் அமைச்சனிடம் கூறுகின்றான்.

அதுகேட்ட அமைச்சன், ”மிகச் சிறந்த தமிழ்ப் புலவனும் கவிஞனுமாகிய உதாரனே நம் அமுதவல்லிக்குத் தமிழ் கற்பிக்க ஏற்றவன்; ஆயினும் அவன் இளவயதும் அழகும் வாய்ந்தவன். அவனைக் கல்வி கற்பிக்க நியமிப்பதால் ஏதேனும் குறை வந்து சேராமல் இருக்கவேண்டுமே என்றுதான் யோசிக்கிறேன்எனப் பதிலளிக்கிறான்.

இதற்கு என்ன செய்வது?” என்று மன்னன் கவலையோடு வினவ, ”கண்டுபிடித்துவிட்டேன் உபாயம் ஒன்று!” என்று குதூகலித்தான் அமைச்சன்.

என்ன….என்ன?” என்று மன்னன் பரபரக்க, தன் திட்டத்தை விவரிக்கிறான் அமைச்சன்….”அரசே! அமுதவல்லிக்கும் உதாரனுக்கும் இடையே பெரிய திரை ஒன்றை இட்டுவிடுவோம். ஏனென்று இருவரும் காரணம் கேட்டால்உதாரன் குருடன் என்று அமுதவல்லியிடமும், அமுதவல்லி பெருநோய் உடையவள்; அவளைப் பார்ப்பது ஆபத்து என்று உதாரனிடமும் சொல்லிவிடுவோம்எப்படி என் யோசனை?” என்றான்.

பிரமாதம்!” என்று பாராட்டினான் அரசன்.

அவர்கள் திட்டப்படியே தமிழ் வகுப்பு ஆரம்பமாயிற்று. சில நாட்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் வகுப்புச் சுமுகமாகவே சென்றுகொண்டிருந்தது. ஆயினும், அரசனும் அமைச்சனும் சேர்ந்து நடத்திய கபட நாடகத்திற்கோர் முற்றுப்புள்ளி வைப்பதற்கென்றே ஓர் முழுமதி நாளும் வந்தது!

வானிலே அழகை வாரி இறைத்தபடி உலா வந்துகொண்டிருந்த நிலாவைக் கண்டதும் கவிஞனான உதாரனுக்குக் கற்பனை வெள்ளம் மடைதிறந்தது. “நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலா என்று உன் ஒளி முகத்தைக் காட்டுகின்றாயே! உன் கோலம் முழுவதையும் நீ காட்டிவிட்டால் உன்மீது காதல்பித்துக் கொண்டு அலையும் இவ்வுலகமே மடிந்துபோய்விடுமோ? நீ வானச் சோலையிலே பூத்த தனிப்பூவோ? பாற்குடமோ? அமுத ஊற்றோ?” என்றெல்லாம் விரிகின்ற அவன் கற்பனைச் சிறகில் பொதுவுடைமைத் தத்துவங்களும் தீப்பொறியாய்ச் சிதறுகின்றன. ”எம் நாட்டு ஏழை மக்கள் நித்தமும் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்தும் அவர்தம் தரித்திரம் தீராமல் பசித்த வயிற்றோடு உண்ணச் சிறிது கூழ் தேடும்போது, ஒரு பானை நிறைய வெண்சோற்றைக் காணும்போது அடையும் இன்பத்தை உனைக் காணும்போது அல்லவோ பெறுகின்றனர்!!” என்கிறான் இந்தப் புதுமைச் சிந்தனையாளன்.

மிகவும் புகழ்பெற்ற அவ்வழகிய பாடல்

நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து
நிலாவென்று காட்டுகின்றாய்  ஒளிமு கத்தைக்
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ அமுத ஊற்றோ!
…………………………………………………………..
   நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ

இப்பாடலைத் திரையின் மறுபுறம் அமர்ந்திருந்த அமுதவல்லி கேட்டு வியப்பில் ஆழ்ந்தாள். “ஓர் குருடன் முழுமதியின் அழகை எங்ஙனம் காணமுடியும்? காணாமலே….இவ்வளவு அழகாய்க் கவிபுனைவதும் சாத்தியமா?” என்று ஐயுற்றுத் திரையை விலக்கினாள்.

அங்கே வானை நோக்கிக் கொண்டிருந்த வாலிபனைக் கண்டாள். வானை நோக்கிக் கொண்டிருந்த கவிஞனும் இப்போது தன் முகத்தைத் திருப்பி அருகிலிருந்த மானை நோக்கினான். ”அடடா! வானில் இதுவரை பவனி வந்த நிலா எப்போது இந்த அவனி வந்தது?” என்று ஐயுற்று மீண்டும் அந்தப் பெண்ணிலவைப் பார்த்தான். அவன் குருடனில்லை என்பதை அவள் கண்டாள்; அவள் பெருநோயாளி இல்லை என்பதை அவனும் உணர்ந்தான். இவையெல்லாம் தாங்கள் ஒருவரை ஒருவர் காணக்கூடாது என்பதற்காகப் பின்னப்பட்டச் சூழ்ச்சி வலையே என்பதை உணர்ந்தனர் இருவரும். பின்பு அங்கே தமிழ்ப் பாடம் முடிவுற்றுக் காதல் பாடம் தொடங்கிற்று என்பதை நான் நவிலவும் வேண்டுமோ?

தன் மகளுக்கும் கவிஞனுக்கும் இடையே மலர்ந்திருந்த காதலைச் சிறிது நாட்களிலேயே அறிந்தான் மன்னன். “அரசனிடம் கைகட்டிச் சேவகம் செய்யும் ஒரு சாதாரணக் கவிஞன் அவன் மகளைக் காதலிப்பதா?” என வெகுண்டான். “கவிஞனைச் சிரச்சேதம் செய்யுங்கள்!” என்று தன் வீரர்களுக்கு உத்தரவிட்டான்.

இக்கொடுஞ்செய்தியைக் கேட்டு நிலைகுலைந்த அமுதவல்லி அதைத் தடுப்பதற்காக உதாரன் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த இடத்திற்கு ஓடிவந்தாள். இதனால் மன்னனின் சீற்றம் மேலும் அதிகரித்தது. ”இவளை இழுத்துச் சென்று சிறையில் அடையுங்கள்!” எனக் கட்டளையிட்டான்

அதுகேட்ட அமுதவல்லி, ”என் ஆருயிர்க் காதலன் இறந்துபட்டபின் நான் மட்டும் உயிர் வாழ்வேனோ? என்னுயிர் ஒன்றும் எனக்கு வெல்லமன்று!” என்று வீரத்தோடு செப்ப, கோபத்தில் சிவந்தன மன்னனின் விழிகள்.  ”இவளையும் அந்தக் கவிஞனுடனே சேர்த்துக் கொலை செய்யுங்கள்!” என்றான் வெறியோடு!

உதாரனையும், அமுதவல்லியையும் அரசன் கொல்லப்போகும் செய்தி அறிந்து ஊரே அந்தக் கொலைக்களத்திற்கு அருகில் திரண்டிருந்தது. கடைசியாகச் சிலவார்த்தைகள் பேசும் வாய்ப்பினைப் பெற்றிருந்த உதாரனின் வீர உரை உழைக்கும் வர்க்கத்தின் சிறப்பினைப் பேசும் அற்புத உரை எனில் சற்றும் மிகையில்லை

கனல் கக்கும் அவன் பேச்சிலிருந்து ஒரு பகுதி

பேரன்புகொண்ட பெரியோரே, தாய்மாரே! இளஞ்சிங்கங்களே!
காடுகொன்று நாடாக்கி, நிலந்திருத்திப் பாழ்நிலம் புதுக்கி அழகு நகராக்கியது யார்?

வாய்க்காலையும், வயல்களையும் வகைப்படுத்தி உழவுத்தொழில் செய்து உலக மக்களுக்கு உண்டி கொடுக்க உழைக்கும் தோள்கள் எவரின் தோள்கள்?

கல்லையும் மலையையும் பிளந்து சுரங்கங்களை வெட்டிப் பல்வேறு கருவிகளையும் செய்துதரும் கைகள் யாருடைய கைகள்?

பொன்னையும் மணியையும் முத்தையும் எடுப்பதற்காக அடக்கிய மூச்சு எவருடைய மூச்சு?

உழைக்கும் வர்க்கங்காள்! நீங்கள் எலிபோன்று பதுங்கிக் கிடப்பதால் அல்லவோ நாம் ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன் புலிவேஷம் போடுகின்றான்! உங்களைப் புல் என மதிக்கின்றான்! நீங்கள் என்னைக் காக்க வேண்டாம்! இதோ என்னைக் காதலித்த குற்றத்துக்காக என்னோடு உயிர்விடப் போகும் அரசன் மகளைஅமுதனைய அமுதவல்லியைக் காப்பீர்!” என இடிபோல் முழங்கினான்.”

இதோ பாவேந்தரின் வைர வரிகள்

பேரன்பு கொண்டவரே, பெரியோ ரேஎன்
பெற்றதாய் மாரே, நல் இளஞ்சிங் கங்காள்!
நீரோடை நிலங்கிழிக்க, நெடுமரங்கள்
நிறைந்துபெருங் காடாக்க, பெருவிலங்கு
நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்
நெடுங்குன்றில் பிலஞ்சேரப், பாம்புக் கூட்டம்
போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்
புதுக்கியவர் யார்? அழகு நகருண் டாக்கி!

சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?

கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
போய்எடுக்க அடக்கியமூச்சு எவரின் மூச்சு?

அவனுடைய வீரமொழிகளால், மக்களின் ஆவேசமும், விடுதலை உணர்ச்சியும் விழிப்புற்றன. வீறு கொண்டு எழுந்த மக்கள் கொலைஞர்கள் கையில் இருந்த கொலைக்கருவிகளைப் பிடுங்கி எறிந்தனர். உதாரனையும் அமுதவல்லியையும் விடுவித்தனர். மன்னனிடமிருந்து முடியாட்சி பறிக்கப்பட்டது; நானிலத்தோர் அனைவரும் பயன்பெறும் வகையில் நாட்டின் செல்வங்கள் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. வீழ்ந்தது மன்னராட்சி! மலர்ந்தது சமதர்ம மக்களாட்சி!

இதுவே புரட்சிக் கவியெனும் காவியம் நமக்குத் தரும் செய்தி! இத்தகைய அற்புதமான புரட்சிக் கவியைப் படைத்த புரட்சிக் கவிஞரைத் தொழிலாளர் தின நன்னாளில் நன்றியோடு நினைவுகூர்வோம்!

(மே 1, 2014 அன்று தொழிலாளர் தினத்தையொட்டி எழுதப்பட்ட கட்டுரை.)