முத்துலட்சுமி ரெட்டியார், மூவலூர்
இராமாமிர்தத்தம்மையார் போன்று களப்பணியாற்றிப்
பெண்ணுரிமைக்கு உழைத்தோர் சிலர்; அதுபோல் கவிப்பணியாற்றி பெண்டிர்தம் முன்னேற்றத்திற்குப்
பாடுபட்டோர் வேறுசிலர். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர், இருபதாம் நூற்றாண்டு கண்ட
இணையற்ற கவிஞரான புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார். தீப்பொறி பறக்கும் தன் கவிதைகள்
வாயிலாகப் பெண்ணுரிமைக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் குரல் கொடுத்தவர் அவர்.
பெண்ணடிமை ஒழிப்பு, பெண்ணுரிமை,
பெண்கள் முன்னேற்றம், பெண்டிர்தம் நல்வாழ்வு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, விதவைப்
பெண்களின் மறுவாழ்வு, மணமுறிவு பெற்றவர்களின் மறுவாழ்வு என்று பல தளங்களில் தன் விரிந்த
சிந்தனையைச் செலுத்தி இவையனைத்திற்கும் தம் புரட்சிப் பாக்கள் வாயிலாகத் தீர்வு கண்டுள்ளார்
பாவேந்தர். அகண்ட, விசாலப் பார்வையும், சமூகச் சீர்திருத்த எண்ணங்களும் இயல்பிலேயே
அமையப்பெற்ற பாவேந்தர், சமுதாயத்தின் கண்களாய் விளங்கிடும் பெண்களின் அவலநிலை துடைத்திட
ஆற்றிய கவிதைப் பங்களிப்பு மகத்தானது.
இந்தியத் திருநாட்டில் மண்ணடிமை
ஒழிய வேண்டுமானால் முதலில் நம் வீடுகளில் பெண்ணடிமை ஒழியவேண்டும் என்ற கருத்தைக் கொண்ட
பாரதிதாசன், தன் ’சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’
என்ற காவியத்தில்,
”பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே
ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும்
உள்ளடங்கும்
ஆமை
நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு”
என்று அக்காவிய நாயகியின் மூலம்
ஓர் எச்சரிக்கை விடுக்கின்றார்.
பெண்கல்வியின் அவசியத்தை மிகவும்
வலியுறுத்திச் சொல்லுகின்ற கவிவேந்தர், ஒரு பெண் பெறுகின்ற கல்வியே அவள் சார்ந்த குடும்பத்தையும்,
அந்தச் சமுதாயத்தையும் மேம்படுத்தும், முன்னேற்றும் என்பதில் ஆழமான, அசைக்கமுடியாத
நம்பிக்கை கொண்டவராய்த் திகழ்கின்றார்.
”பெண்கட்குக் கல்வி வேண்டும்
குடித்தனம்
பேணு
தற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
பெண்கட்குக் கல்வி வேண்டும்
மக்களைப்
பேணுதற்கே!
…………………………………
கல்வியில் லாத பெண்கள்
…………………………………
கல்வியில் லாத பெண்கள்
களர்நிலம்;
அந்
நிலத்தில்
புல்விளைந் திடலாம்; நல்ல
புல்விளைந் திடலாம்; நல்ல
புதல்வர்கள்
விளைதல்
இல்லை!
கல்வியை உடைய பெண்கள்
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய
கழனி;
அங்கே
நல்லறி வுடைய மக்கள்
நல்லறி வுடைய மக்கள்
விளைவது நவில வோநான்?”
என்று
பெண்கல்வியின் அவசியத்தைத் தன் ’குடும்ப
விளக்கு’ என்ற நூலில் தெளிவாக விளக்குகின்றார்.
புரட்சிச்
சிந்தனைகளையும், முற்போக்குக் கொள்கைகளையும் பாவேந்தரின் பாடல்கள்தோறும் காணமுடிவது ஓர்
சிறப்பாகும். அதற்குப் ’பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரோடு பாவேந்தர்
கொண்டிருந்த நட்பும் ஓர் முக்கியக் காரணம் என்று கூறலாம்.
பெண்கள்
தங்கள் மணாளனைத் தாங்களே முடிவு செய்தல் வேண்டும் என்றும் பெற்றோரின், மற்றோரின்
கட்டாயத்திற்காக மணத்தல் தவறு எனவும் அறிவுரை கூறுகின்றார் இந்தப் புதுவைக்
கவிஞர். இக்கருத்து எல்லாக் காலத்திற்கும் பொருந்தக்கூடியதே!
’கல்யாணம்
ஆகாத பெண்ணே! – உன்
கதிதன்னை
நீநிச்ச யம்செய்க கண்ணே!
வல்லமை
பேசியுன் வீட்டில் – பெண்
வாங்கவே
வந்திடு வார்கள்சில பேர்கள்;
நல்ல
விலை பேசுவார் – உன்னை
நாளும்
நலிந்து சுமந்து பெற்றோர்கள்,
கல்லென
உன்னை மதிப்பார் – கண்ணில்
கல்யாண
மாப்பிள்ளை தன்னையுங் கண்டார்;
வல்லி
உனக்கொரு நீதி – இந்த
வஞ்சத்
தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம்
…………………………………………………………………………………………………………..
கற்றவளே
ஒன்று சொல்வேன் – உன்
கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்!’
பெண்ணை
விலைபேசும் இத்தகைய வழக்கம் ’வரதட்சணை’ என்னும் பெயரில் இன்றும்
தொடர்ந்துகொண்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரிய ஒன்றாகும்.
கைம்பெண்களின்
நல்வாழ்விற்கும் அதிகம் குரல்கொடுத்தவர் புரட்சிக் கவிஞரே என உறுதியாகக் கூறலாம். இக்கைம்மைக்
கொடுமைக்கு ஓர் முடிவு கட்டவேண்டும், முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்னும் ஆவேசம்
கொண்டவராய்,
”ஆடவரின் காதலுக்கும், பெண்கள் கூட்டம்
அடைகின்ற காதலுக்கும், மாற்ற முண்டோ?
பேடகன்ற
அன்றிலைப்போல், மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட் கின்றான்!
வாடாத
பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன்
இறந்தால்பின் மணத்தல் தீதோ? என்று
சீறுகின்றார்.
காதல்
என்ற உணர்வு ஆண், பெண் இருவருக்குமே பொதுவான ஒன்றுதானே….அதிலென்ன பேதம்? ஆண்மகன் வயதுசென்ற கிழவனாக இருந்தாலும் தன் மனைவி
செத்தால் மறுநாளே புதுமாப்பிள்ளை ஆகிவிடுகின்றான். அது சரியே என்று ஒத்துக்
கொள்ளும் இச்சமூகம் ’வாடாத பூப்போன்ற ஓர் மங்கை நல்லாள்’ கைம்மை அடைந்துவிட்டால்
அவளின் நல்வாழ்வு குறித்தோ, எதிர்காலப் பாதுகாப்பு குறித்தோ சற்றும் சிந்திக்காமல்
அவள் மறுமணம் புரிவது தவறு என்றும் தீது என்றும் சொல்வது எவ்விதத்தில் நியாயம்?
என்று வினவுகின்றார். அதனை விளக்குவதற்கு அவர் எடுத்தாண்டுள்ள உவமைகள் சிறப்பானவை;
சிந்தனையைத் தூண்டுபவை.
”பாடாத
தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”
என்று பெண்ணிற்குத் தீங்கிழைக்கும்
இச்சமூகத்தை நோக்கி வினா எழுப்புகின்றார்.
அடுத்து, ஆண்களும், பெண்களும்
சரிநிகர் சமானமாக நடத்தப்படும் நாள் தமிழ்நாட்டில் என்று வருமோ? என்ற தன் ஏக்கத்தை
அழகாய்ப் பதிவுசெய்துள்ளார் ஒரு பாடலில்…
”கண்களும்
ஒளியும்
போலக்
கவின்மலர் வாசம் போலப்
பெண்களும் ஆண்கள் தாமும்
பெருந்தமிழ் நாடு தன்னில்
தண்கடல் நிகர்த்த அன்பால்
சமானத்தர் ஆனார் என்ற
பண்வந்து காதிற் பாயப்
பருகுநாள் எந்த நாளோ ?”
அதுமட்டுமன்று,
திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே ஒன்றாய் இணைந்து வாழ்வதில் ஏதேனும் சிக்கல்
ஏற்படும்போது, தகுந்த காரணங்களின் அடிப்படையில் அந்த ஆணோ அல்லது பெண்ணோ விலகி வாழ
விரும்பினால் அஃது அனுமதிக்கப்படவேண்டும்; மேலும் (மணமுறிவு பெற்ற) அவர்கள் வேறு
ஆடவனையோ, பெண்ணையோ மணந்து கொள்வதிலும் தவறில்லை என்ற கருத்துடைய பாவேந்தர்,
புரட்சிக் கவிஞராக மட்டுமின்றிப் புரட்சிச் சிந்தனையாளராகவும் தோன்றுகின்றார்.
”-------------------------------காதல்
உடையார்தம் வாழ்வில்
உடையார்தம் வாழ்வில்
உளம்வேறு
பட்டால்
மடவார் பிறனை
மடவார் பிறனை
மணக்க-விடவேண்டும்
ஆடவனும் வேறோர்
ஆடவனும் வேறோர்
அணங்கை
மணக்கலாம்.”
என்பது பாவேந்தரின் சித்தாந்தம்.
இவற்றோடு நில்லாமல், குழந்தைகள்
திருமணத்தைத் தடை செய்யவேண்டும், குழந்தைகளை அளவோடு பெற்று வளமோடு வாழக் கருத்தடை முறையினைப்
பின்பற்றவேண்டும் என்பன போன்ற சமூக நலத்திற்கானச் சீரிய கோட்பாடுகள் பலவற்றையும்
தன் கவிதைகள் மூலம் பதிவுசெய்துள்ளார் பாவேந்தர்.
பெண்களின் முன்னேற்றத்திற்கும்,
அவர்தம் நல்வாழ்விற்கும் பாடுபட்டோர் வரிசையில் பாவேந்தருக்கும் ஓர் முக்கிய
இடமுண்டு என்பதில் ஐயமில்லை.