Friday, April 25, 2014

முதியோர் காதல்!

பாவேந்தர் பாரதிதாசன் படைத்த காவியங்களில் கலங்கரை விளக்காகத் திகழ்ந்துவருவது குடும்ப விளக்கு! இக்காவியத்தின் தலைவி தங்கம், பெயருக்கேற்றபடி குணமும் வாய்த்தவள்! அவளும் அவள் அன்புக் கணவன் மணவழகனும் இளமையில் நடத்தும் இல்லறத்தை மிகவும் ரசனையோடு விவரிக்கும் பாவேந்தர், பின்பு அவர்களுடைய பிள்ளைகளான வேடப்பனும், வெற்றிவேலும் வளர்ந்து வாலிபர்கள் ஆவது, அவர்களுடைய திருமணம் என ஒரு குடும்பம் சந்திக்கின்ற எல்லா வாழ்வியல் நிகழ்வுகளையும் இக்காவியத்தில் விரிவாகவே காட்சிப்படுத்தியுள்ளார்.


 
 
குடும்ப விளக்கின் எல்லாப் பகுதிகளும் ஒளிமிகுந்தவையே! எனினும் மிகச் சிறந்த பகுதியாக – பொதுவாக மற்ற கவிஞர்கள் புனையாத காதல் பகுதியாகச் சுடர்விட்டுப் பிரகாசிப்பது காவியத்தின் இறுதிப் பகுதியான ’முதியோர் காதலே!’

மணமான புதிதில் புதுமணத் தம்பதியர் எவ்வாறு ஒருவர்மீது மற்றொருவர் அன்பும், காதலும் கொண்டிருப்பரோ அதனினும் அதிகமானஅளவு அன்பும் காதலும் கொள்வதென்பது நூறு வயதிலும் சாத்தியமே என்பதை விளக்கும் ஓர் அற்புதப் பகுதி இது!

மிகவும் தள்ளாத முதியவர்களாகிவிட்ட (குடும்ப விளக்கின் தலைமைப் பாத்திரங்களான) தங்கமும், மணவழகனாரும் தங்கள் மூத்த பிள்ளையான வேடப்பனோடு இன்பமாக வாழ்ந்து வருகின்றனர். மருமகளும் பேரப்பிள்ளைகளும் அவர்களை மிகவும் அன்போடும் பரிவோடும் பேணிவருகின்றனர்.

தங்கள் இல்லறக் கடமைகளைச் சரிவரச் செய்துவிட்ட மகிழ்ச்சியில் தங்கமும் மணவழகரும் பேசிக்கொள்வதை நாமும் சற்றுக் கவனிப்போம்…

”பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தோம்; சுற்றத்தார்க்குச் செய்ய வேண்டுவனவற்றைக் குறைவறச் செய்தோம்; நம் வாழ்க்கையில் ஒருநாளும் வாய்மை தவறியதில்லை; நாட்டின் நலத்திற்காக இயன்ற அறங்களைச் செய்தோம்; யாருக்கும் சிறிய தீங்கும் செய்தறியோம்; சின்னஞ்சிறு உதவியை யாரேனும் நமக்குச் செய்திருந்தாலும்கூட செய்ந்நன்றி மறந்தறியோம்!” என்பதாக நீள்கிறது அவர்களின் உரையாடல்…
  
”மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம்
மகள்மார்க்கும் அவ்வா றேயாம்
எம்தக்க கடன்மு டித்தோம்
இனிதாக வாழு கின்றோம்
முந்துறச் சுற்றத் தார்க்கும்
செய்வன முழுதும் செய்தோம்
இந்தநாள் வரைக்கும் வாய்மை
இம்மியும் மறந்த தில்லை

இந்நாட்டின் நலனுக்காக
நல்லறம் இயற்றி வந்தோம்
எந்நாளும் பிறர்க்குத் தீமை
எங்களால் நடந்த தில்லை.
சின்னதோர் நன்று செய்தார்
திறம்மறந் தறியோம் என்றே
இன்னிசை பாடும் அன்னார்
இரண்டுள்ளம் இன்பம் கொள்ளும்.”

இவ்வாறு மகிழ்வோடு உரையாடிய சிறிது நேரத்திலேயே மூதாட்டி தங்கம் சோர்ந்துபோய் கண்ணயர்கின்றாள்; மணவழகனாருக்கோ உறக்கம் வரவில்லை. அயர்ந்து உறங்குகின்ற தன் மனைவியைப் பார்க்கிறார். அழகு கொலுவிருந்த அவளுடைய முந்தைய இளமைத் தோற்றமும், உடல் தளர்ந்த இப்போதைய முதிய தோற்றமும் அவருடைய மனக் கண்ணிலே மாறி மாறி வந்துபோகின்றன.

காலம் செய்த கோலத்தை வியந்தவராய்த் தனக்குள்ளேயே பேசிக்கொள்கிறார், “புத்தம் புதுமலர் மேனியள் அல்லள் இவள் இப்போது! காய்ந்த புற்கட்டைப் போல் ஆகிவிட்டது இவள் தேகம்! நடையா…இது நாட்டியமா என நான் வியந்த ஒய்யார நடையளுமல்லள்! நடக்கவே தடுமாறித் தள்ளாடிவிழும் மூதாட்டி! வதனமே சந்திர பிம்பமோ...என்று இவள் மதிமுகத்தைப் பார்த்து மதிமயங்கி ஒரு காலத்தில் நான் பாடியதுண்டு! ஆனால் இப்போது குழிவிழுந்த கண்களோடு வறண்ட நிலம்போலல்லவா அந்த எழில்முகம் உருமாறிவிட்டது?!” எனப் பெருமூச்செறிகிறார்!

“மேனி அழகு குலைந்துபோய்விட்ட இவளிடம் எதுதான் எனக்கு இன்பம் இப்போது?” என்ற கேள்வி பிறக்கிறது அவருக்கு. ”இவள் இருக்கின்றாள் என்ற ஒன்றே!!” என்ற பதிலை அவர் ஆழ்மனம்….அன்பில் ஆழ்மனம் அவருக்குச் சொல்கின்றது. ”ஆமாம்…என் தங்கம் என்னோடு இருக்கின்றாள் என்றே ஒன்றே எனக்குப் போதும்!” என எண்ணியவராய், உறங்கும் அந்த மூதாட்டியைக் காதலோடு மீண்டும் பார்க்கிறார்; கண்கள் குளமாகின்றன அவருக்கு!

நெஞ்சை நெகிழச் செய்யும் அந்தப் பாடல்….
      
புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும்மூ தாட்டி!
மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம் குழிகள் கண்கள்
எதுஎனக் கின்பம் நல்கும்?
’இருக்கின்றாள்’ என்பது ஒன்றே!

 எவ்வளவு ஆழமான வாழ்க்கைத் தத்துவம் இதில் புதைந்துகிடக்கிறது!

உண்மையான காதலைக் கணவனும் மனைவியும் உணருவதே முதுமைப் பருவத்தில்தானே! கவிஞர் வைரமுத்து சொல்வதுபோல் ’உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறுகின்ற காதல்’ மனப்பக்குவம் வரவரக் காமக் கடலை நீந்திக் கரையேறி உள்ளமெனும் கோயிலில் குடியேறிவிடுகின்றது அமர காதலாய்!
 ’முதியோர் காதல்’ எனும் இப்பகுதி முதியோரின் காதலைச் சொல்வதாயினும் இளையோரும் படித்துப் பயன்பெறவேண்டிய ஒன்று! முதிய தம்பதியினரின் அன்பான, பண்பான இல்லறத்தை இளையோர் அறிந்துகொள்ளுதல் அவர்தம் இல்லற வாழ்வைச் செம்மையாய் நடத்த உதவும்.

அன்றைய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையின் மிகப்பெரிய பலமே ‘வாழ்க்கைக் கல்வி’தான்! வீட்டில் தம்மோடு ஒன்றாக வசித்துவந்த பெரியோரை/பெற்றோரைப் பார்த்து, அவர்தம் வாழ்வியல் நெறிகளை அருகிருந்து அறிந்து கடைப்பிடிக்க இளையோருக்கு வாய்ப்பிருந்தது. இன்றைய நவீன உலகில் அது சாத்தியப்படாமல் போனது இளைய தலைமுறையினருக்குப் பேரிழப்புதான்!

இத்தகைய சூழ்நிலையில் முதிய தம்பதியர் இருவர் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைச் சுவையாகப் பகிர்ந்துகொள்ளும் இப்பகுதி ’இல்லறத்தை நல்லறமாக்கும்’ வெற்றி ரகசியத்தை நமக்குச் சொல்லித் தருகின்றது!

வாழ்க்கை எனும் அனுபவக் கல்வியை ஏட்டின் மூலமாக அறிந்துகொள்ள வழிவகுத்த பாவேந்தரின் எழுத்துப் பணி போற்றத்தக்கதுதானே?