(சித்திரையைப் போற்றிப் பாடிய கவிதை!)
பகலவன் கதிரெனும் கம்பளம் விரிக்க
அகலுதே காரிருள் அகிலத்தை விட்டு!
மயில்களும் தோகையால் சாமரம் வீசக்
குயில்களும் இனிமையாய்க் கானங்கள் பாட
மன்றல் கண்டநல் சித்திரைப் பெண்ணும்
தென்றல் தேரிலே உல்லாச மாக
வசந்த நாயகன் வலக்கரம் பற்றிக்
கசந்த காலங்கள் மாற்றிட வந்தாள்!
எழில்மகள் அவளை வாழ்த்த விரும்பியே
பொழிந்தன மலர்களும் மாரியாய் எங்கும்!
இயற்கை அன்னையின் இனிய மகளிவள்
இன்பம் நல்கவே இங்கு வந்தனள்!
ஓடிப் போனது துயரங்கள் என்று
ஆடிப் பாடினர் மாந்தர்கள் எல்லாம்!
தோரணம் கட்டுங்கள் வாயில்கள் தோறும்
ஆரணங் கிவளை அன்பொடு போற்றியே!