தமிழகத்தின்
அன்றைய நிலையை (ஏன்...இன்றைய நிலையும் அப்படித்தான் இருக்கிறது!) மிக அழகாகத் தன் கவிதை
வரிகளில் காட்சிப்படுத்துவதில் பாவேந்தரை விஞ்சிய ஒரு தமிழ்க் கவிஞன் இல்லை இன்றுவரை!
தமிழ் அவர் கரங்களில் பூனைக்குட்டிபோல் கொஞ்சி விளையாடியது; இழுத்த இழுப்பிற்கு வளைந்து கொடுத்தது!
நம்
மக்களிடம் நெடுங்காலமாக மாற்றமுடியாமல் இருக்கும் ஒரு பழக்கம், வீட்டைவிட்டு
வெளியே கிளம்பிவிட்டால் நகைகளை அள்ளிப் போட்டுக்கொள்வதும், விலையுயர்ந்த ஆடைகளை அணிந்துகொள்வதும்!
எளிமை என்பதை ஏட்டில் எழுதிப் பார்க்கவும் பலர் விரும்புவதில்லை. (எளிமை விரும்பியான)
இறைவனைத் தொழுவதற்கு ஆலயம் செல்லும்போதும் இதே நிலைதான்!
இதையெல்லாம்
கண்ணுற்ற பாரதிதாசன் நகைச்சுவையோடும்…அதே நேரம் மக்களுக்கு புத்தி புகட்டும் வகையிலும்
ஓர் அழகிய பாடலை இயற்றியுள்ளார். எனக்கு மிகவும் பிடித்த பாவேந்தரின் பாடல்களில் இப்பாடலுக்கு
எப்போதும் ஓர் முக்கிய இடமுண்டு!!
’ஏசுநாதர் ஏன் வரவில்லை?’ என்பது அப்பாடலின் தலைப்பு. தலைப்பே வேடிக்கையாக இருக்கிறதல்லவா?
பாடலிலும் ’பகடி’ கபடி விளையாடுகின்றது!
பாடலின் கருத்து: தேவாலயத்தில் எளிமையை விரும்பும் பாதிரியார் ஒருவர் ஒருநாள்,
“இனிமேல் யாரும் தலை, காது, மூக்கு, கழுத்து, கை, மார்பு, விரல், கால் போன்ற எட்டு
உறுப்புக்களிலும் நகைகள் அணிந்துகொண்டு வந்து தேவகுமாரனைத் தரிசிக்கக் கூடாது! அதுமட்டுமல்ல….ஆடம்பரமான
ஆடைகளும் உதவாது; எளிமையான, விலைமலிவான ஆடைகளை அணிந்துவந்தால்தான் தேவாலயத்திற்குள்
அனுமதிக்கப்படுவீர்கள்” இல்லையென்றால் no entry" என்று (தெரியாத்தனமாக) ஓர் உத்தரவு
போட்டுவிட்டார்!
உத்தரவு
போட்டதுதான் தாமதம்…அதன்பிறகு தேவாலயத்தின் பக்கம் ஓர் ஈ, காக்காய் கூட எட்டிப்
பார்க்கவில்லை. தேவாலயமே வெறிச்சோடிப் போனது; வெலவெலத்துப்போனார் பாதிரியார்.
நீண்ட
நேரம் (குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி) ஆழ்ந்த யோசனை செய்துவிட்டுத் தேவாலய வாசலில்
ஓர் அறிவிப்புப் பலகை வைத்தார். அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்…”இனிமேல் பக்தகோடிகள்
அனைவரும் தலை, காது உள்ளிட்ட எட்டுறுப்புக்கள் மட்டுமின்றி இமைகள், உதடு, நாக்கு போன்ற உறுப்புக்களிலும் நகைகள் போடலாம்! அதுமட்டுமா?
நீங்கள் உங்கள் அழகைப்(!) பார்த்து ரசிப்பதற்கு வசதியாகப் புதிதாக ரசம்பூசப்பட்ட பளபளப்பான
ஆளுயரக் கண்ணாடி ஒன்றும் (உடனடியாகத்) தேவாலயத்தில் மாட்டப்படும்!”
அறிவிப்பைப்
படித்தனர் மக்கள்; மகிழ்ச்சியில் மலர்ந்தன அவர்தம் முகங்கள்! அலைகடலெனத் திரண்டுவந்தனர்
தேவாலயத்திற்கு. ஆனால் ஒருவர்மட்டும் தேவாலயத்திற்கு வரமறுத்துவிட்டார்! அவர் யார்
என்று அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறதா? அவர்தான் ’ஏசுநாதர்!’
கோயிலுக்குச்
செல்லும்போதேனும் நம் மக்கள் எளிமையைக் கடைப்பிடிக்கக் கூடாதா என்ற பாவேந்தரின் ஏக்கமே
இந்தப் பாடல்!
தலைகாது மூக்கு கழுத்துகை மார்புவிரல்
தாள்என்ற எட்டுறுப்பும்
தங்கநகை வெள்ளிநகை ரத்தினமி ழைத்தநகை,
தையலர்கள் அணியாமலும்,
விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர
வேண்டுமென் றேபாதிரி
விடுத்தஒரு சேதியால் விஷமென்று கோயிலை
வெறுத்தார்கள் பெண்கள்புருஷர்!
தாள்என்ற எட்டுறுப்பும்
தங்கநகை வெள்ளிநகை ரத்தினமி ழைத்தநகை,
தையலர்கள் அணியாமலும்,
விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர
வேண்டுமென் றேபாதிரி
விடுத்தஒரு சேதியால் விஷமென்று கோயிலை
வெறுத்தார்கள் பெண்கள்புருஷர்!
நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப் பேயன்றி
நீள்இமைகள் உதடுநாக்கு
நிறையநகை போடலாம் கோயிலில் முகம்பார்க்க
நிலைக்கண்ணா டியும்உண்டென
இலைபோட் டழைத்ததும் நகைபோட்ட பக்தர்கள்
எல்லாரும் வந்துசேர்ந்தார்
ஏசுநா தர்மட்டும் அங்குவர வில்லையே
இனியபா ரததேசமே!
நீள்இமைகள் உதடுநாக்கு
நிறையநகை போடலாம் கோயிலில் முகம்பார்க்க
நிலைக்கண்ணா டியும்உண்டென
இலைபோட் டழைத்ததும் நகைபோட்ட பக்தர்கள்
எல்லாரும் வந்துசேர்ந்தார்
ஏசுநா தர்மட்டும் அங்குவர வில்லையே
இனியபா ரததேசமே!
இதைத்தான்
”ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை” என்று குறிப்பிடுகிறார் கவியரசர்!