இடும்பைக்
கஞ்சாது இன்னலில் துவளாது
நாட்டுக்
குழைத்தனர் அன்று! – தம்
குடும்பம்
செழிப்பதே கொள்கையென் றானபின்
மற்றோரை
மறந்தனர் இன்று!
அரசியல்
பிழைத்தோரை அறமே கூற்றமாய்
அழித்து
ஒழித்தது அன்று!
அரசியல்
என்றேநல் லறத்தைக் கொன்றிட்டுப்
பிழைப்புச்
செய்கின்றார் இன்று!
விலங்கொன்று
கேட்டதற் கேநீதி நல்கினான்
மனுநீதி
மன்னனும் அன்று!
கலங்கிநின்
றழுதிடும் மக்களே கேட்பினும்
எட்டாக்
கனியது இன்று!
வெல்லமாய்
இனித்திடும் நம்தமிழ் சிறந்திடக்
காவியம்
பலகண்டார் அன்று!
கல்வியில்
தமிழினிக் கூடாதென் றெண்ணியே
’சிலையினில் தமிழ்கண்டோம்’ இன்று!!
உற்றாரும்
பெற்றோரும் கூடியே யிருந்ததால்
பிள்ளைகள்
சிறந்தனர் அன்று!
சுற்றமும்
நட்புமே கணினியென் றானபின் – நற்
பண்புகள்
பறந்தன இன்று!
நாக
ரிகம்தனை உலகுக் குணர்த்தினர்
தமிழச்
சாதியார் அன்று!
போகத்தின்
மீதிலே மோகங்கொண் டலைவதால்
ஒழுக்கத்தை
மறக்கின்றார் இன்று!
அன்றும்
இன்றுமே நாட்டின் நிலைதனைப்
பாட்டில்
எழுதிட நீளும்..….
நன்னெறி
நின்றுநம் ’மொழியினைக் காத்தால்’
நாளைய
வரலாறு போற்றும்!