இடது பதம்தூக்கி ஆடியே என்னுளத்தில்
இன்பகீதம் இசைத்தா னடி!
விடமுண்ட கண்டனாம் விண்ணுலக வேந்தனாம்
விந்தையென்ன
சொல்வே னடி!
நடராசன் என்றபெயர் கேட்டிட்ட நாள்முதலாய்
நங்கையென்பேர் மறந்தே னடி!
கடலளவு ஆசைதான் அவன்மீது பெருகுதே
கன்னியென்னைக்
காண்பா னோடி!
உண்ணவும் மறந்தேனே உன்மத்தம் கொண்டேனே
உறக்கத்தைத் தொலைத்திட் டேனே!
கண்காட்டும் பொருளெல்லாம் பரம்பொருளாய்த் தோன்றுதே
கண்கட்டு
வித்தை என்பதோ?!
தில்லையிலே கோயில்கொண்டு திருநடம் புரிபவன்என்
உள்ளமதில் உறைந்தா னடி!
வல்லிஎந்தன் நெஞ்சிலே நேற்றுவந்த கனவினில்என்
நாதனைக்
கண்டே னடி!
புலியாடை தரித்தவனோ புன்னகைதான் சிந்திட்டான்
பேரின்பம் கொண்டே னடி!
சிலசொற்கள் அவனுந்தான் செந்தமிழில் செப்பிட்டான்
செவியினிலே
பாய்ந்ததடி தேன்!
எத்தனை பிறவிகள்நான் எடுத்தாலும் பிறையணிந்த
பித்தனை மறவே னடி!
நித்தமும் ஐந்தெழுத்தை ஓதியே மகிழ்ந்திடுவேன்
சித்தங்களி
கொள்ளு மடி!