Wednesday, April 23, 2014

பாடுபொருள்















 



(எழுது)கோலைக் கையில் பற்றிய படியே
 (கவி)பாடு பொருள்தனைச் சிந்தித் திருந்தேன்!
காலைக் கதிரோன் ஒளிமுகம் காட்டி
 ஏந்திழையே எனைப் பாடுக என்றான்!

காலை ஆட்டித் தூங்கும் குழந்தையோ
 நானே கவிதை அறிகிலை நீஎன,
கோலம் போட்டு நிமிர்ந்த அன்னையின்
 முறுவல் கூடக் கவிதையாய்த் தோன்றச்

சாலை யோரம் நின்ற மரங்கள்
 மங்கையே என்னைப் பாடுவாய் என்றன!
சேலை யணிந்து சென்ற பெண்ணோ
 நடக்கும் கவிதை(நான்) எனைப்பா டென்றாள்!

வாலை ஆட்டியே சென்ற நாயுமென்
 நன்றி குணத்தைப் போற்றிப்பா டென்றது!
வேலையில் மூழ்கிப் போனத னாலே
 கவியெழு திடநான் மறந்தஅவ் வேளையில்

மாலை மயங்கி இருளும் வந்தது
 கோல நிலவும் குளிர்முகங் காட்டி
வாலைக் குமரியே எனை மறந்தனையே….
 வடித்திடு கவியொன் றென்மேல் என்றது!

இயற்கை அன்னையின் இனிய அழகில்
 பாடு பொருளுக்கோர் பஞ்சமு மில்லை!
வியக்க வைத்திடும் அவளின் படைப்பில்
 ஒவ்வொரு பொருளும் கவிதையே அன்றோ!!