Wednesday, August 19, 2015

தமிழன்னையின் தவப்புதல்வர்!

நம் தாய்த்திருநாடாம் இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கி 2015 ஆகஸ்ட் 15-ஆம் நாளோடு 68 ஆண்டுகள் நிறைவுற்றுவிட்டன. இவ்வேளையில், சுதந்திரப் பயிரைத் தண்ணீர்விட்டு வளர்க்காமல் தம் கண்ணீரால் காத்த விடுதலைவீரர்கள் அனைவரையும் நன்றியோடு நினைவுகூர்ந்து போற்றுதல் நம் கடன்!

இந்தியா எங்கிலுமே அன்று கொழுந்துவிட்டு எரிந்த விடுதலை வேள்வியில் நம் தமிழகத்து தீரர்களும் திரளாகப் பங்குகொண்டு தம் இன்னுயிரைத் துச்சமென மதித்து அவ் வேள்வித்தீக்கு நெய் வார்த்தனர். தம் எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் மக்கள் மனத்தில் விடுதலை வேட்கையை ஊட்டிய பெருமக்கள்தாம் எத்தனை பேர்! அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்ஜீவாஎன்று தமிழக மக்களால் அன்பொழுக அழைக்கப்பட்ட அமரர். . ஜீவானந்தம் ஆவார்.

அறிஞர்கள் பலரை ஈன்றெடுத்த நாஞ்சில் (கன்னியாகுமரி) மண்ணைச் சார்ந்த பூதப்பாண்டி எனும் கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி, பட்டம் பிள்ளை - உமையம்மாள் இணையருக்கு இணையில்லா மகனாய்ப் பிறந்தார் ஜீவா. பெற்றோர் அவருக்கு இட்டபெயர் சொரிமுத்து என்பதாகும்; அஃது அவர்களின் கிராமதெய்வமான ஐயனாரின் பெயராகும். பின்னாளில் அவர்பெயர்ஜீவானந்தம்என்றானதாகவும், தம் தனித்தமிழ்ப்பற்றின் காரணமாக அவர் தம் பெயரைஉயிரின்பன்என்று மாற்றிக்கொண்டதாகவும் அறிகின்றோம்.

தொடக்க காலத்தில் காந்தியக்கொள்கைகளில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தவர் ஜீவா. சிராவயல் என்ற ஊரில் அவர் நடத்திவந்த காந்தி ஆசிரமத்துக்கு அவருடைய அழைப்பின்பேரில் மகாத்மா காந்தி 1927-இல் வருகை புரிந்திருக்கின்றார். அப்போது ஜீவா தன் கையாலேயே நூற்றுவைத்திருந்த பத்தாயிரம் கெஜம் நூலை காந்தியாரிடம் வழங்கினாராம்

இருபத்தோரு வயதே நிரம்பிய இளஞ்சிங்கமான ஜீவாவின் கம்பீரத் தோற்றத்தையும், கேட்டார்ப் பிணிக்கும் நாவன்மையையும் கண்டுவியந்த காந்தியார், ஜீவாவின் ஆசிரமப் பணிகளை வெகுவாகப் பாராட்டிவிட்டு, “உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கின்றது?” என்று கேட்டிருக்கின்றார். புன்முறுவல்பூத்த ஜீவா, “இந்தத் தேசம்தான் என் சொத்து!” என்று சற்றும் தயங்காது பதிலளிக்க, திகைத்துப்போன காந்தியார்இல்லையில்லை நீங்கள்தான் இந்தத் தேசத்தின் சொத்து!” என்று புகழாரம் சூட்டினாராம். காந்தியின் வார்த்தைகள் உண்மைவெறும் புகழ்ச்சியில்லை என்பதைப் பின்னால் காலம் நிரூபித்தது.

காங்கிரஸ் கட்சியின் தொண்டராக ஜீவா இருந்தபோதிலும் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளில் நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டு, பல சுயமரியாதைக் கூட்டங்களில் கனல் கக்கும் சீர்திருத்தக் கருத்துக்களை முழங்கியிருக்கின்றார். அரசியலில் அவருக்கிருந்த அதே வேகமும் வீரியமும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதிலும் அவருக்கு இருந்தது.

சட்டமறுப்பு இயக்கக் கூட்டங்களில் இடம்பெற்ற ஜீவாவின் கருத்தாழமிக்க பேச்சுக்கள் மக்களைக் காந்தம்போல் கவர்ந்திழுத்தன. மக்கள் மத்தியில் அவர் பேச்சுக்களுக்கு இருந்த செல்வாக்கைக் கண்டு அஞ்சிய வெள்ளை ஏகாதிபத்திய அரசு, ஜனவரி 7, 1932 அன்று ஜீவா காரைக்குடியில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது, ’அதற்கு அடுத்தநாள்முதல் அவர் பொதுக்கூட்டங்கள் எதிலும் பேசக்கூடாதுஎன்று வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. அச்சட்டத்தைத் துச்சமென மதித்த ஜீவா, மறுநாள் கோட்டையூரில் தடையை மீறிப் பேசியபோது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதுவே ஜீவாவின் முதல் சிறைவாசமாகும். பல்வேறு சிந்தனை மாற்றங்களை அச்சிறைவாசம் தமக்கு அளிக்கக் காத்திருந்ததை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

ஆம்! அச்சிறைவாசம் ஜீவாவின் வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே கூறவேண்டும். அப்போதுதான், பஞ்சாப் சிங்கமான பகத்சிங்கின் தோழர்கள் சிலரையும், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி ஆகியோரையும் சிறையில் சந்தித்தார் ஜீவா. அவர்களோடு, சோஷலிஸம், கம்யூனிஸம் முதலிய சித்தாந்தங்கள் பற்றியும், சோவியத் யூனியன் பற்றியும் நிறையவே விவாதிக்கக்கூடிய சூழல் அவருக்கு வாய்த்தது. அத்தோடு, பொதுவுடைமைசார் புத்தகங்கள் பலவற்றைப் படிக்கக்கூடிய அரிய வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது. இவையனைத்தும், அவர் உள்ளத்தின் ஆழத்தில் ஊறிக்கொண்டிருந்த பொதுவுடைக் கருத்துக்களுக்கு உரமூட்டின. அதன் பயனாய், 1932 ஜனவரியில் ஒரு காங்கிரஸ்காரராகச் சிறைசென்ற ஜீவா அவ்வாண்டு இறுதியில் ஒரு கம்யூனிஸ்ட்டாக சிறையிலிருந்து வெளியே வந்தார்.

ஆயினும், சிறைச்சாலை நோக்கிய அவருடைய பயணங்கள் அதன்பிறகும் தொடர்கதை ஆயின. 1942-இல் தடுப்புக் காவல் சட்டத்தின்படி மீண்டும் சிறை, நாடுகடத்தல் என்று அலைக்கழிக்கப்பட்ட அவர் அனுபவித்த இன்னல்கள் ஏராளம் ஏராளம்! “ஜீவா ஏறினா ரயிலு; இறங்கினா ஜெயிலுஎன்று அவருடைய தொண்டர்களே வேதனையோடு குறிப்பிடுமளவிற்குத் தம் வாழ்க்கையின் கணிசமான பகுதியை (பத்தாண்டுகள்) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறையில் கழித்த செம்மல் அவர்!

அரசியல் குறித்த ஜீவாவின் பார்வை வித்தியாசமானதும் போற்றுதலுக்குரியதுமாகும். ”அன்பும் அரசியலும் வேறு வேறல்ல; அன்பையும் சகோதரத்துவத்தையும் இவ்வுலகெங்கும் நிலவச்செய்வதே உண்மையான அரசியல் தத்துவமாகும். அன்பினை அழிக்கக்கூடிய எதுவும் அரசியலாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது!” என்றார் ஜீவா.

மகாகவி பாரதியின் மீதும் அவர் கவிதைகள் மீதும் பேரன்பு கொண்டிருந்த ஜீவா, பாரதி குறித்து எழுதியுள்ள நூல்களும், கட்டுரைகளும் பலவாகும். 1942-இல் தமிழகமெங்கும் பாரதிக்கு விழா எடுத்த சாதனையாளர் அவர். பாரதியின் மீது கடுமையான விமரிசனங்கள் இருந்து வந்த காலகட்டம் அது; அவ் விமரிசனங்களுக்கெல்லாம் துணிச்சலுடன் பதிலளித்த ஜீவா, பாரதியையும் அவரின் புரட்சிக்கொள்கைகளையும் தூக்கிப் பிடித்தார். பாரதி இருட்டடிப்பு செய்யப்படாமல் இன்றும் புகழொளியில் இருப்பதற்கு ஜீவாவும் ஒரு முக்கியக்காரணம் எனில் அது மிகையன்று!

வங்க மாகவி இரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளிலும் பெரும் ஈர்ப்பும் ஈடுபாடும் இருந்தது ஜீவாவுக்கு. அதனால் தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழில் அழகாய் மொழிபெயர்த்தார்.

இளமைக்காலம் தொட்டே தமிழ்ப்பற்று மிகுந்தவராய்த் திகழ்ந்த ஜீவா, பின்பு சிராவயல் ஆசிரமத்தில் பணிபுரிந்தபோது தமிழிலக்கியங்களிலும் நல்ல புலமையும் தேர்ச்சியும் பெற்றார். தொல்காப்பியம் தொடங்கி பாரதியார் கவிதைகள் வரை அனைத்தையும் ஆய்வுக்கண்ணோட்டத்தோடும் சமுதாய நோக்கோடும் அணுகிய அவர், பண்டை இலக்கியங்களில் காணப்பட்ட பெண்ணுரிமைக்கெதிரான கருத்துக்களைச் சுட்டிக்காட்டவும் தயங்கவில்லை.

சான்றாக, தான் எழுதியபுதுமைப்பெண்எனும் நூலில் (இந்நூல் ஓர் சிறந்த கடித இலக்கியம்) அவர் குறிப்பிட்டுள்ள சில அரிய கருத்துக்களைக் காண்போம்:

அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப(தொல்களவியல்)

எனும் தொல்காப்பிய நூற்பாவைச் சுட்டிக்காட்டிய ஜீவா, அச்சமும் நாணமும் மடமையும் பெண்டிரின் இயல்புகள் என்ற தொல்காப்பியரின் கருத்து அவருடைய காலத்திற்கு வேண்டுமானால் ஏற்புடைத்தாகலாம்; ஆனால் இருபதாம் நூற்றாண்டின் புதுமைப்பெண்களுக்கு இஃது ஒவ்வாத கருத்தாகும்என்று கூறிவிட்டுப் பாட்டுக்கொரு புலவன் பாரதி பகன்ற,
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம் என்பதே இன்றைய புதுமைப் பெண்களுக்குப் பொருந்தும் குணங்கள் என்கிறார்.

இதுபோலவே, காலத்தை விஞ்சிநிற்கும் முற்போக்குக் கருத்துக்கள் பலவற்றைத் தாங்கிநிற்கும் வான்மறையாம் வள்ளுவத்திலும் பெண் குறித்தும் பெண்ணுரிமை குறித்தும் பேசப்படும் கருத்துக்களில் சில தமக்கு உடன்பாடானவை அல்ல என்கிறார் இந்தப் புரட்சிச் சிந்தனையாளர்.

அதற்குச் சான்றுகளாக, வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச் சேறல் முதலிய அதிகாரங்களிலுள்ள குறட்பாக்களை எடுத்துக்காட்டுகின்றார் அவர்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை என்ற குறளில் ஆணுக்கு ஏவல் செய்வதே பெண்ணுக்குத் தெய்வ வழிபாடு என்று கூறும் வள்ளுவப் பேராசன், இதுபோன்றதொரு நடைமுறையை ஆணுக்கு விதிக்கவில்லை.  
மாறாக,
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல் என்றுகூறிப் பெண்ணேவல் செய்யும் ஆண்களைக் கண்டிக்கிறார் என்றுகூறி வருந்துகிறார் ஜீவா.

இவ்வாறு, காலத்திற்கொவ்வாத கருத்துக்கள் அருமையான நூல்களில் இருந்தாலும்கூட அவை கொள்ளத்தக்கவையல்ல; புறந்தள்ளத்தக்கவையே என்ற ஜீவாவின் நிலைப்பாட்டை இன்றைய புதுமைப் பெண்கள் நிச்சயம் வரவேற்பர்.

மதமும் மனித வாழ்வும், சோஷலிஸ்ட் தத்துவங்கள், இலக்கியச்சுவை,
சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள் ஆகியவை ஜீவாவின் கைவண்ணத்தில் உருவான வேறுசில நூல்கள் ஆகும்.

சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த ஜீவா, கம்பராமாயணம் குறித்து உரையாற்றத் தொடங்கினால் உலகையே மறந்து மக்களனைவரும் அந்த அற்புதவுரையை வாய்பிளந்தபடி கேட்டுக்கொண்டிருப்பராம்!

சரிமீண்டும் அவருடைய அரசியல் பணிகளுக்கு வருவோம்.

1952-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை சட்டசபைக்கான பொதுத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக, வடசென்னை வண்ணாரப்பேட்டை தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஜீவா, சட்டமன்றத்தில் தமிழிலேயே பேசி அனைவரையும் வியக்கவைத்தார்; முதன்முதலில் சட்டமன்றத்தில் தமிழில் பேசிய சான்றோர் அவரே என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியில் இருந்தபோதும் சரிஅஃது இல்லாதிருந்தபோதும் சரிபிறரிடம் உதவிவேண்டா எளிய வாழ்விற்குச் சொந்தக்காரர் ஜீவா

அவரின் எளிமைக்குப் பின்வரும் நிகழ்வுகள் சான்றுகளாகும்.

காமராஜர் முதலமைச்சராக இருந்த காலமது! தோழர் ஜீவா தம் மனைவி பத்மாவதியோடு தாம்பரத்திலுள்ள ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்துவந்தார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்தப்பக்கம் வந்த காமராஜர், தன் காரோட்டியிடம், “இங்குதான் ஜீவாவின் வீடு இருக்கிறதாம்; வண்டியை அவர் வீட்டுக்கு விடு!” என்றிருக்கிறார். வண்டி அங்கிருந்த ஒரு குடிசையின் வாயிலில் வந்து நின்றது; இறங்கி உள்ளே போனார் காமராஜர். அங்கு அவர் கண்ட காட்சி அவரைக் கலங்க வைத்தது. ஆம்! அங்கே ஓர் கிழிந்த பாயில் படுத்திருந்தார் நாடறிந்த தலைவர் ஜீவா!

கலங்கிய கண்களுடன் ஜீவாவைப் பார்த்த காமராஜர், “என்னோடு புறப்படுங்கள்! நான் போகும் நிகழ்ச்சிக்கு நீங்களும் வாருங்கள்!” என்றாராம். ”சிறிது நேரம் ஆகுமேபரவாயில்லையா?” என்று கேட்டிருக்கின்றார் ஜீவா. ’சரியென்ற காமராஜரும் அவ்வாறே காத்திருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது; ஆனால் ஜீவா வரக்காணோம்! காரணம் என்னவென்று காமராஜர் பார்த்தபோதுதமக்கென்று இருந்த ஒரே வேட்டியைத் துவைத்து காயவைத்துக் கொண்டிருந்தாராம் எளிமையே வியக்கும் எளிமைவாதியான ஜீவா! பின்னர் இருவரும் நிகழ்ச்சிக்குப் புறப்பட்டுச் சென்றார்களாம்!

ஜீவா வசித்துவந்த குடிசைவீட்டின் மோசமான நிலைகண்ட காமராஜர்முதல்வர் கோட்டாவில் அவருக்கு அரசாங்க வீடுதர முன்வந்தபோதும் அதனை மறுத்து, ”என்று இந்த நாட்டில் வீடு இல்லாத ஏழைகள் அனைவருக்கும் குடியிருக்க வீடு கிடைக்கிறதோ அன்று எனக்குக் கொடுத்தால் போதும்என்றிருக்கிறார் ஏழைபங்காளன் ஜீவா.

அத்தகைய தவப்புதல்வர் 1963-இல் மறைந்தபோது தமிழகமே கதறியது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஜீவாவின் மறைவின்போது தாங்கொணாத் துயரத்தோடு எழுதிய பின்வரும் கவிதை ஜீவா என்ற மானுடனின் பண்புகளைச் சிறப்பாய் விளக்குகின்றது.

தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்
தீங்கு வரக்கண்டு சிரித்திடுவார்யாங்காணோம்
துன்பச் சுமைதாங்கி சீவானந்தம் போன்ற
அன்புச் சுமை தாங்கும் ஆள்.

ஈடு இணையற்ற மனிதராகவும், கொள்கைப்பிடிப்புள்ள குரிசிலாகவும், இலக்கியச் செல்வராகவும், எளிமைக்கு ஏற்றம்தந்த ஏந்தலாகவும் விளங்கியவர் அமரர் ஜீவா. பாரத மக்களின் மனத்தில் சோஷலிசக் கருத்துக்களை ஊன்றியவர் பண்டித நேரு என்றால், தமிழக மக்களின் மனத்தில் அக்கருத்துக்களை ஆழவிதைத்தவர் தோழர் ஜீவா!

தாம் ஏற்றுக்கொண்ட லட்சியத்துக்காகக் காலமெல்லாம் உழைத்த உத்தமர் ஜீவாவையும் அவருடைய கொள்கைகளையும் நம் நெஞ்சில் நிறுத்துவோம்! அம்மாமனிதரை மறவாது போற்றுவோம்!


No comments:

Post a Comment