மாந்தஇனம் முதன்முதலில் தோன்றி வாழ்ந்தஇடம் மலையும் மலைசார்ந்த பகுதியுமே என்பது மானுடவியலாளர்களின் கருத்து. இப்பகுதியைத்தான் ’குறிஞ்சி’ என்று குறிப்பிட்டனர் தமிழ்ச்சான்றோர். வானுயர்ந்த மலையும், அம்மலைமீது காய்கதிர்ச்செல்வன் பாய்ச்சிடும் பொன்னொளிக் கிரணங்களும், வெள்ளைப் பட்டாடையைக் கீழே விரித்ததுபோல் மலைமீதிருந்து பாய்ந்துவீழும் அருவிகளுமாய் இயற்கையன்னையின் படைப்புக்கலையின் உச்சம் இந்தக் குறிஞ்சி எனலாம்!
மலைச்சாரலில் வானுயர ஓங்கிவளர்ந்திருக்கும் மரங்களில் தூங்கிக்கொண்டிருக்கும் நறுந்தேனின் இறால்கள், ”என்னைக்கொஞ்சம் அருந்தேன்! அருந்தேன்! என்று நம்மை வருந்தியழைப்பது போலிருக்கும். கொடிகளில் கணக்கின்றிக் காய்த்துக்கிடக்கும் வள்ளிக்கிழங்குகள், காண்போர் நாவின் சுவையரும்புகளைச் சுண்டியிழுக்கும்!
(வள்ளி என்ற பெயரால் நாம் கிழங்கை அழைத்தாலும் அஃது உண்மையில் அதனை விளைவிக்கும் கொடியின் பெயரேயாகும். சினையாகுபெயராய் அதுவே கிழங்குக்கும் வழங்கலாயிற்று.)
வள்ளிக்கிழங்கு என்றதுமே குறிஞ்சிக் கபிலரின் நறுந்தமிழ்ப்பாட்டு ஒன்று நினைவுக்கு வருகின்றது. அதனைப் பார்ப்போம்!
குறுநிலமன்னர்களில் பெரும்புகழ்பெற்றவனாய்த் திகழ்ந்தவன் பறம்புமலைத் தலைவன் பாரி. அவனுடைய வள்ளன்மையும், அதனால் அவனடைந்துவரும் வான்புகழும் கண்டு அழுக்காறுகொண்ட தமிழகத்தின் மூவேந்தரும், அவன் பறம்புமலையை முற்றுகையிட்டனர். மலைமீது குடியிருக்கும் பாரியும் அவன் கூட்டத்தாரும் எப்படியும் உணவுதேடி அடிவாரத்திற்கு வந்துதானே ஆகவேண்டும். அப்போது அவர்களை வளைத்துப் பிடித்துவிடலாம் என்பது அவர்களது மனக்கோட்டை. ஆனால் வாரங்கள் கடந்தன; அவை மாதங்களாக மாறின. பாரியோ அவன் குடிகளோ அடிவாரம்நோக்கி அடியெடுத்தும் வைக்கவில்லை. கீழே, மரத்துக்கு மரம் யானையைக் கட்டிவிட்டு மேலேயே அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த மாமன்னர்களின் வியப்புக்கோர் அளவில்லை! ”ஈதென்ன அதிசயம்! பாரியும் பிறரும் உணவுக்கு என்ன செய்கின்றனர்? எவ்வளவுதான் உணவுப்பொருள்களைச் சேமித்து வைத்திருந்தாலும் இதற்குள் அவை தீர்ந்துபோயிருக்கவேண்டுமே!” என்று யோசித்துயோசித்து மனங்குழம்பிக்கொண்டிருந்தனர் மாமன்னர் மூவரும்.
இவர்களின் குழப்பத்தைத் தெளிவாய் உணர்ந்த பாரியின் ஆருயிர் நண்பரான கபிலர், “தாய்த்தமிழ் வேந்தர்களே! ஈண்டு, நீங்கள் மூவரும் ஒருங்கேகூடி முற்றுகையிடினும், மாவீரன் பாரியை வெல்லவும் முடியாது; அவன் பறம்பைக் கொள்ளவும் முடியாது. உண்டிக்கு நாங்கள் திண்டாடுவோம்; உங்களிடம் உதவிகேட்டு மன்றாடுவோம் என்பதுதானே உங்கள் எண்ணம். அது ஒருநாளும் ஈடேறப்போவதில்லை. என்ன திகைக்கிறீர்! பறம்புமலையின் வளப்பத்தை நீங்கள் அறியமாட்டீர். உழவன் விளைவிக்காமலேயே நான்குவகையான உணவுப்பொருள்களை விளைவிக்கக் கூடியது எங்கள் பறம்பு. ஆம்! வித்திடாமலே இங்குள்ள மூங்கிலின் இலைகளில் நெல்விளையும்; பலா மரங்கள் தீஞ்சுவைக்கனிகளை ஊழ்க்கும்; கொழுவிய வள்ளிக்கொடிகள் கிழங்குகளை வீழ்க்கும்; திணிநெடுங்குன்றமோ தேனை வார்க்கும். ஆதலால் அரசர்களே…!எங்களுக்கு என்றும் வாராது உணவுப்பஞ்சம்! அடையமாட்டான் பாரி உம்மிடம் தஞ்சம்!” என்று கம்பீரமாய் முழங்கினார்.
…உழவர் உழாதன நான்குபய னுடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க்கும்மே
நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே…. (புறம்: 109)
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க்கும்மே
நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே…. (புறம்: 109)
வள்ளிக்கிழங்குகள் மூன்று வகையின.
அவை:
1. மாவள்ளிக்கிழங்கு
2. மரவள்ளிக்கிழங்கு
3. சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியன.
1. மாவள்ளிக்கிழங்கு
2. மரவள்ளிக்கிழங்கு
3. சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியன.
இதில் முதலாவது வகையைச் சார்ந்த மாவள்ளிக் கிழங்கே (Smilax ornata or sarsaparilla) நாளடைவில் மாவலிக்கிழங்காகத் திரிந்து, பின்பு மா’காளி’க்கிழங்காகவும் மாற்றம் பெற்றுவிட்டது (எதையுமே கடவுள் பெயரோடு பொருத்திப்பார்ப்பதில் நம் தமிழ்மக்களுக்கு ஓர் அலாதி விருப்பம் போலிருக்கின்றது!).
இந்நாளைய மக்கள் மாவள்ளி எனுமிந்த மாகாளிக்கிழங்கை ஊறுகாய்ப் போடுவதற்கும், குளிர்பானங்களுக்குமே பெரிதும் பயன்படுத்துகின்றனர். நன்னாரி சர்பத் என்று நாவினிக்கப் பருகுகின்றோமே அதில் ’நன்னாரி’யாய்க் காட்சியளிப்பவர் சாட்சாத் மாகாளியார்தான்!
தோல்நோய்களைத் தீர்ப்பதிலும், வயிற்றுக்கோளாறுகளைப் போக்குவதிலும்
இக்கிழங்கு திறன்வாய்ந்தது. ஆயுர்வேத மருத்துவத்தில் நீண்டகாலமாகவே பயன்பாட்டிலிருக்கும் கிழங்கு இது. உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு இரத்தத்தையும் சுத்திகரிக்கின்றது இக்கிழங்கு. பால்வினை நோய்களைக் குணப்படுத்துவதிலும், டெஸ்டோஸ்ட்ரோன் (Testosterone) எனும் ஹார்மோன் சுரப்பை அதிகப்படுத்துவதிலும் இதன் பங்கு மகத்தானது.
வள்ளிக்கிழங்கின் மற்றொருவகையே மரவள்ளிக்கிழங்கு
(Cassava or tapioca). மாவள்ளியைப் போன்றே இதற்கும் பலபெயர்கள் வழக்கத்தில் உள்ளன. மரச்சீனிக்கிழங்கு என்று நாட்டார்மக்களும், மரவள்ளிக்கிழங்கு என்று நகரத்து மக்களும், கப்பக்கிழங்கு என்று கேரள மக்களும், தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர்களும் வாஞ்சையோடு அழைப்பது இக்கிழங்கையே. இவையேயன்றி, ‘ஏழிலைக்கிழங்கு’ எனும் எழிலான பெயரும் இதற்குண்டு!
கிழங்குகளிலேயே மாவுச்சத்து (carbohydrate) அதிகம்கொண்டது இந்தக் கிழங்குதான். மிகக்குறைந்த கொழுப்புச்சத்தும், மிகஅதிக அளவிலான புரதச்சத்தும் கொண்ட இக்கிழங்கிலிருந்து கிடைக்கும் புரதத்தில் ‘சிலியாக்’ எனும் நோயை ஏற்படுத்தும் ஒருவிதத் தானியப் புரதமான ‘குளூட்டின்’ இல்லை என்பது குறிப்பிடவேண்டிய ஒன்றாகும். (Gluten is a form of protein
found in some grains, which creates an auto-immune disorder Celiac.)
வர்த்தகத்திற்காகப் பெருமளவில் மாவுப்பொருள்
(starch) மரவள்ளிக் கிழங்கிலிருந்தே
தயாரிக்கப்படுகின்றது. ஜவ்வரிசி (பாயசம், வடகம் போன்றவற்றிற்குப் பயன்படுவது) தயாரிக்கப்படுவதும் இந்தக் கிழங்கிலிருந்துதான். இக்கிழங்கு புற்றுநோயை ஒழிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகின்றது என்று சொல்லப்படுகின்றது. (More evidences are needed to confirm the anti-cancer activity
of Cassava). இக்கிழங்கின் தோல், வேர் மற்றும் இலைகளில் நச்சுத்தன்மைமிக்க சயனைடு இருப்பதால் அவற்றை உண்ணக்கூடாது. (Cassava roots, peels and leaves should not be consumed raw
because they contain two cyanogenic
glucosides, linamarin and lotaustralin.
They liberate hydrogen cyanide (HCN)).
வள்ளிக்கிழங்கின் மூன்றாவது வகைதான் இனிப்புச்சுவை நிறைந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு (Ipomoea batatas). இக்கிழங்கில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. நோய்எதிர்ப்புச்சக்தியை மிகுவிக்கக்கூடிய ஆண்டி-ஆக்ஸிடென்டுகள் (anti-oxidants), உடலுக்குத் தேவையான தாதுஉப்புக்களான இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், சோடியம் போன்றவையும் இதில் நிறைந்துள்ளன. இக்கிழங்கில் காணப்படும் பீட்டா காரட்டீன் (β-Carotene) எனும் கரிமக் கூட்டுப்பொருள்
(oraganic compound), முதுமையில் மனிதர்களுக்கு வரக்கூடிய கண்நோய்களைத் தடுக்கின்றது
(age-related macular degeneration).
இதிலுள்ள கார்போஹைட்ரேட் எளிதில் சீரணிக்காத சிக்கலான வகையைச் சார்ந்திருப்பதால் (complex carbohydrates) இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும். ஆகவே, நீரிழிவு நோயாளிகளும் குறைந்த அளவில் இக்கிழங்கை உண்டுவரலாம். உலகில் நீண்ட ஆயுள்படைத்த மனிதஇனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜப்பானிலுள்ள ஒகினாவா தீவு (Okinawa Island – Land of longevity) மக்களின் உணவுப்பட்டியலில் சர்க்கரைவள்ளிக்கிழங்குக்கோர் நிரந்தர இடமுண்டு!
இத்துணை நன்மைகளை அள்ளித்தரும் வள்ளிக்கிழங்குகளைத் தள்ளிவைத்துவிட்டு, நம்மக்கள் உடலுக்குத் தீங்குபயக்கும் விரைவு உணவுகளையும், பிஸ்ஸா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுவகைகளையும் அரவணைத்துக்கொண்டிருப்பது வருந்தத்தக்கதே.
உடல் நலத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் உத்தரவாதம் தருகின்ற வள்ளிக்கிழங்குகளை நம்மனோர் விரும்பியுண்டால் மறலியை வென்று வாழலாம் நன்றாய்!
No comments:
Post a Comment