தம் சொந்தப் பெயர் ஒன்றாய் இருக்க மக்களால்
அறியப்படும் பெயர் வேறொன்றாய் இருப்பதென்பது எல்லாருக்கும் சாத்தியப்படாத ஒன்று.
இவ்வாறு சொந்தப் பெயர் மறைந்து புதிதாய் வந்த அல்லது புனைந்த பெயர்களில் நின்று நிலைத்துவிட்டோர் பலருண்டு. அவர்களில் சிலரை மீள் அறிமுகம் செய்வதே என் நோக்கம்.
பொதுவாக எழுத்தாளர்கள்/கவிஞர்கள் போன்றோர்தான் புனைபெயர் விரும்பிகள்.
பொறியாளரும், சிறந்த
எழுத்தாளருமான சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன் என்பது. அவர்
தன் மனைவியின் பெயரான சுஜாதாவைத் தனதாக்கிக் கொண்டுப் பிரபல எழுத்தாளராக வலம் வந்தவர். (சுஜாதா
ஒரு பெண் எழுத்தாளர் என்று நம்பியிருந்தவர்களும் உண்டு.) :-)
அதுபோல், ரங்கராஜன்
என்ற இயற்பெயர் கொண்ட இன்னொருவரும் மிகப் பிரபலமானவரே. அவர்
வேறு யாருமில்லை...கடைசி
வரை இளமை ததும்பும் பாடல்களை எழுதி வந்த ‘வாலிபக்
கவிஞர்’ வாலியே அந்தப் பிரபலம்! (எனக்கொரு
சந்தேகம்...பொதுவாக
வைணவர்கள் இராமாயண வாலியை விரும்புவதில்லை; அப்படியிருக்க நம் கவிஞர் அந்தப் பெயரைத் துணிச்சலாக வைத்துக்கொண்டது எப்படி? விவரமறிந்தோர் கூறவும்.)
தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆரின் அன்புக்குப் பாத்திரமாக விளங்கிய மற்றொரு கவிஞர் ‘புலமைப்பித்தன்’. இப்பெயரும் புனைபெயரே என்பது பார்த்த அளவிலேயே தெரிகிறது; தமிழ்க்
கல்வியை முறையாகப் பயின்று தமிழாசிரியராகப் பணிபுரிந்த இவர் பின்னாளில் திரைப்படப் பாடலாசிரியராய்ப் புகழ்பெற்றார். ‘ஆயிரம்
நிலவே வா...ஓராயிரம்
நிலவே வா! என்ற
இவர் பாடல் பிரபலமான ஒன்று. பின்னாளில்
இவர் எழுதிய ’கல்யாணத்
தேன்னிலா’ (படம்:
மௌனம் சம்மதம்) பாடலும்
பிரபலமானது. இவரின்
இயற்பெயர் அறியக் கூடவில்லை.
‘கவிஞர் புலமைப்பித்தனைப் போலவே சிறுகதைகளின் ’முடிசூடா
மன்னனாக’த் திகழ்ந்த புதுமைப்பித்தனின்’ பெயரும் புனைபெயரே. புரட்சிச்
சிந்தனைகளுக்குச் சொந்தக்காரரான இவருடைய இயற்பெயர் விருத்தாசலம் என்பது. இவருடைய
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. நகைச்சுவை
இழையோட இவர் படைக்கும் சிறுகதைகளின் சுவையே அலாதிதான்!
இந்த வரிசையில் அடுத்து நான் குறிப்பிட விரும்புவது பாஷ்யம் ஐயங்காரை. பெயரைக்
கேட்டதும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு ‘பாஷ்யம்’
எழுதிய ஐயங்காராய் இருப்பாரோ இவர்...என்ற
ஐயம்கூட எழலாம். ஆனால்...அதுதான் இல்லை! வரலாற்றுப்
புதினங்கள் பல எழுதிப் பெரும்புகழ்பெற்ற ‘சாண்டில்யன்’தான் அந்த பாஷ்யம் ஐயங்கார்! பெண்களை வர்ணிப்பதில் இவரை அடித்துக்கொள்ள இனி ஒருவர் புதிதாகப் பிறந்துதான் வரவேண்டும்! :-) இவருடைய கடல் புறா, யவன
ராணி போன்ற புதினங்கள் சுவையானவை.
(நான் கேள்விப்பட்ட ஒரு செய்தி: சாண்டில்யனின் கதைகளைப் படித்துவிட்டு இவ்வாறு பெண்களைத் தன் கதைகளில் (விழுந்து
விழுந்து) வர்ணிப்பவர்
ஓர் இளைஞராகத்தான் இருக்கவேண்டும்; அந்த
இளைஞரைச் சந்தித்து ‘ஆட்டோகிராப்’
வாங்கவேண்டும் என்று சென்றிருக்கிறார் சாண்டில்யனின் ரசிகை ஒருவர். சாண்டில்யனின் வீட்டைத் தேடிக்கண்டுபிடித்துக் கதவைத் தட்டியிருக்கிறார். கதவைத்
திறந்த முதியவரிடம் ஆவலோடு ’தான்’
சாண்டில்யனைப் பார்க்கவந்திருப்பதாகக் கூற, அந்த
முதியவரோ ‘சாக்ஷாத்
நானே சாண்டில்யன்’ என்று
பொக்கை வாயோடு புன்னகைக்க.. அதிர்ச்சியில் அந்தப் பெண்ணுக்கு மயக்கமே வந்துவிட்டதாம்! இதிலிருந்து
பெறப்படும் நீதியாவது: வயதுக்கும்
எழுதுகின்ற விஷயங்களுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை என்பதே!) :-)
எழுத்திலும் பேச்சிலும் வல்லவரான அறிஞர் அண்ணாவும் புனைபெயர்களில் ஈடுபாடு கொண்டவராகவே இருந்திருக்கிறார். சௌமியன்,
பரதன், சம்மட்டி என்று பல பெயர்களைப் புனைந்துகொண்டு எழுத்துலகில் கோலோச்சியிருக்கிறார்..
கதைகளை நயத்தகு நாகரிகத்தோடு எழுதுவதில் மு.வ.வைப் போலவே நா.பா.என்று அழைக்கப்பட்ட நா. பார்த்தசாரதியும் சிறந்து விளங்கியவர். பார்த்தசாரதி
என்ற பெயரல்லாமல் மணிவண்ணன், அரவிந்தன்,
தீரன், வளவன் எனப் பல புனைபெயர்களில் நெடுங்கதைகள் எழுதிப் புகழ்பெற்றவர் இவர். ’தீபம்’
எனும் பத்திரிகையை இவர் நடத்திவந்ததால் ’தீபம்’
பார்த்தசாரதி என்றே பரவலாக அறியப்பட்டவர். கண்ணதாசனின்
ஆப்த நண்பர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நா.பா.வின் ’குறிஞ்சி மலர்’ அக்காலத்தில் மிகப் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று. (எனக்கும் மிகப் பிடித்தமானது. கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு அடுத்தபடியாக நான் திரும்பத் திரும்ப வாசித்தது இந்நாவலைத்தான்!). ’குறிஞ்சி மலர்’ நாவலைப் போலவே அதன் நாயக நாயகியரின் பெயர்களான அரவிந்தனும், பூரணியும்கூட வாசகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். அந்தப் பெயர்களில் ஏற்பட்ட ஈர்ப்பால் பல வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்குக்கூட அப்பெயர்களை அன்று சூட்டி மகிழ்ந்திருக்கின்றனர். (என் தந்தையின் நண்பரும் அவர்களில் ஒருவர்!)
நா.பா.வின் ’குறிஞ்சி மலர்’ அக்காலத்தில் மிகப் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று. (எனக்கும் மிகப் பிடித்தமானது. கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு அடுத்தபடியாக நான் திரும்பத் திரும்ப வாசித்தது இந்நாவலைத்தான்!). ’குறிஞ்சி மலர்’ நாவலைப் போலவே அதன் நாயக நாயகியரின் பெயர்களான அரவிந்தனும், பூரணியும்கூட வாசகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். அந்தப் பெயர்களில் ஏற்பட்ட ஈர்ப்பால் பல வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்குக்கூட அப்பெயர்களை அன்று சூட்டி மகிழ்ந்திருக்கின்றனர். (என் தந்தையின் நண்பரும் அவர்களில் ஒருவர்!)
ஆண் எழுத்தாளர்களின் கொடி உயரப் பறந்த காலத்தில் தன் அற்புத எழுத்துக்களால் தனக்கென ஓர் தனியிடத்தைப் பெற்றவர் ’திரிபுரசுந்தரி’ என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் லட்சுமி அவர்கள். தொழில்
முறையில் இவர் ஓர் மருத்துவர். இவர்
எழுதிய ’பெண் மனம்’ என்ற பிரபல நாவலே பின்பு ’இருவர் உள்ளம்’ என்ற திரைப்படமாக மலர்ந்தது. அதில்
இடம்பெற்ற 'இதயவீணை
தூங்கும்போது பாடமுடியுமா?' பாடல்...one
of the evergreen songs of Kannadasan!
இவ்வாறு புனைபெயரில் பிரபலமாக
விளங்கும் எழுத்தாளர்கள் அன்றும் இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர்.
புனைபெயர் எழுத்தாளர்களுக்கு
அடையாளமாக விளங்கிவருவதுபோல் திரைத்துறையில் அடைமொழிகளாலும், புதிய பெயர்களாலும்
பிரபலமானவர்கள் உண்டு.
ஆமாம், திரையுலகில் நுழைந்த பலபேர் தம் சொந்தப் பெயர்களை இழந்து புதிய நாமங்களைப் பெற்றுள்ளனர். சிவாஜி
ராவ் ‘ரஜினிகாந்த்’ ஆனார்.
அந்தப் பெயரின் வசீகரத்தையும், வெற்றியையும்
கண்ட மேலும் சிலர் தங்கள் பெயர்களுடன் ’காந்தை’
இணைத்துக்கொண்டனர் (எ:கா: நளினிகாந்த், விஜயகாந்த்).
:-)
நடிகைகளுக்குப் பெயர் மாற்றம் செய்வதில் இயக்குநர் பாரதிராஜா கைதேர்ந்தவர். அவருடைய
அறிமுகங்கள் அனைவருமே ‘ரகர’
வரிசைப் பெயர்களைப் பெற்றுப் புகழ்பெற்றனர். ராதா,
ராதிகா, ரேவதி, ரேகா,
ரமா, ரஞ்சிதா என்ற நீ...ளமான
பட்டியல் அது.
சிவாஜி, ஜெமினி போன்றோர்
தங்கள் பெயர்களோடு அடைமொழிகளைப் பெற்றனர். 'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' என்ற
நாடகத்தில் வி.சி. கணேசனின்
உணர்ச்சி கொப்பளிக்கும் நடிப்பைக் கண்ட பெரியார்(?) சிவாஜி
என்ற அடைமொழியைக் கணேசனுக்கு வழங்கினார் என நினைக்கிறேன்.
ஜெமினி ஸ்டுடியோவில் (ஏதோ)
வேலை செய்துகொண்டிருந்த காரணத்தால் மற்றொரு கணேசனுக்கு ‘ஜெமினி’ எனும் அடைமொழி கிடைத்தது. இதுபோல்
’ஏ.வி.எம்’ ஸ்டுடியோவோடு தொடர்புடைய ராஜன் ஏ.வி.எம். ராஜன்
ஆனார்.
இவைகளேயல்லாமல் தாங்கள் நடித்த முதல் படத்தின் பெயரோடு அடையாளப்படுத்தப்பவர்கள் உண்டு; தாங்கள்
பேசிய புகழ்பெற்ற வசனங்களைச் சேர்த்து அடையாளப்படுத்தப்பட்ட நடிகர்களும் உண்டு!
இப்படிப் பெயர் பெற்றவர்கள் பலர்!