வட அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு
(Washington D.C.) அருகிலுள்ள மேரிலாந்தில் (Maryland) ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இருநாட்களும் நடைபெற்ற முதல் பன்னாட்டுப் புறநானூற்று மாநாடு பரவலாக அமெரிக்கவாழ் தமிழர்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றிருந்தது. அம்மாநாட்டு நிகழ்வுகள் குறித்துச் சுருக்கமாக நம் ‘வல்லமை’ வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். இனி மாநாட்டிற்குள் செல்வோம் வாருங்கள்!
மேரிலாந்திலுள்ள “கல்சுரல் ஆர்ட்ஸ் சென்டரில்’ ஆகஸ்ட் 31,
2013 அன்று சரியாக மதியம் 2 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் புறநானூற்று மாநாடு இனிதே தொடங்கியது. சுமார் 500 பேர் அமர்வதற்கான இடவசதி கொண்டது இந்த அரங்கு. தமிழன்னையை வாழ்த்தியபின் குழந்தைகளுக்கான ‘புறநானூறு – ஒப்புவித்தல் போட்டி’ நடைபெற்றது. புறநானூற்றுப் பாடல்கள் பத்தினை மனப்பாடமாகச் சொல்லிச் சிறுகுழந்தைகள் பரிசுகளைத் தட்டிச் சென்றது உள்ளம் கவர்ந்தது.
புறநானூற்று
மாநாட்டுப்
பதாகை
அதனைத் தொடர்ந்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு. பிரபாகரன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். இம்மாநாட்டிற்கு அடித்தளமாகவும், ஆணிவேராகவும் அமைந்தது அவருடைய முயற்சியும், ஆர்வமுமே எனலாம். கடந்த நான்காண்டுகளாகப் புறநானூற்றுப் பாடல்களை அமெரிக்கத் தமிழர்கள் அனைவருக்கும் பயிற்றுவித்ததோடல்லாமல், அதற்குப் புதிய எளிய உரை ஒன்றையும் வரைந்த சாதனையாளர் அவர்.
முனைவர் மருதநாயகம்,
முனைவர்
பிரபாகரன்
மற்றும்
முனைவர்
முருகரத்தினம்
(இடமிருந்து
வலம்)
அடுத்துப் புறநானூறு குறித்தச் சிறப்புக் கருத்தரங்கிற்கான முதல் அமர்வு (first
panel) நடைபெற்றது. இதனைக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் திரு. அறிவுமதி அவர்கள் நெறிப்படுத்தி நடத்தினார்.
இவ்வமர்வில் முனைவர் திரு. சங்கரபாண்டி அவர்கள் ‘சங்க காலத்தில் சாதி – புதிய ஆய்வு முடிவுகள்’ என்ற தலைப்பிலும், பேராசிரியர் திரு. சிவயோகநாதன் அவர்கள் ‘அஞ்சாமை புலவரின் உடமையடா’ என்ற தலைப்பிலும், மருத்துவர் திருமதி. சரோஜா இளங்கோவன் அவர்கள் ’புறநானூற்றில் சமூக விழிப்புணர்வு’ என்ற தலைப்பிலும், மென்பொருள் பொறியாளர் திருமதி. மேகலா இராமமூர்த்தி அவர்கள் ’புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள்’ என்ற தலைப்பிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். இச்சொற்பொழிவுகள் அரங்கில் நிறைந்திருந்த மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது அவர்கள் அடிக்கடி எழுப்பிய கரவொலிகளால் நன்கு புலனானது.
முனைவர் சங்கரபாண்டி
(உரை
நிகழ்த்துபவர்),
முனைவர்
சிவயோகநாதன்,
மருத்துவர்
சரோஜா
இளங்கோவன்
மற்றும்
மென்பொருள்
பொறியாளர்
மேகலா
இராமமூர்த்தி
(இடமிருந்து
வலம்)
இரவு உணவு இடைவேளைக்குப் பின் இந்தியாவிலிருந்து வருகை புரிந்திருந்த தலைமை விருந்தினர், முனைவர் திரு. மருதநாயகம் அவர்களின் பேருரை இடம்பெற்றது. ’புறநானூறு போற்றும் வாழ்வியல் நெறிகள்’ என்ற பொருளில் அவர் ஆற்றிய உரை மிகச் சிறப்பானதாக இருந்தது எனலாம். நம் சங்க இலக்கியத்தைக் கிரேக்க மற்றும் ரோம இலக்கியங்களோடு ஒப்பிட்டு அவர் நிகழ்த்திய பேருரை பல புதிய தகவல்களை வெளிச்சமிட்டுக் காட்டியது. சங்க இலக்கியத்தில் பேசப்படுகின்ற ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உலக சகோதரத்துவக் கோட்பாடு வேறு எந்த நாட்டு இலக்கியத்திலுமே பேசப்படவில்லை என்று முடித்து அனைவரின் கைத்தட்டல்களையும் அள்ளிக்கொண்டு போனார் அவர்.
அடுத்த நிகழ்வாகவும் முதல்நாள் மாநாட்டின் இறுதி நிகழ்வாகவும் அமைந்தது, ‘புறநானூற்றுப் பாடல்களுடன் முத்தமிழ் முழக்கம்’ என்ற பெயரில் வந்த இயல், இசை, நாடகம் மூன்றும் கலந்த முத்தமிழ் நிகழ்ச்சி. அதுவே அன்றைய விழாவின் மணிமகுடமாய்த் திகழ்ந்த நிகழ்ச்சியுமாகும். பள்ளிப் பிள்ளைகள் பலர் இணைந்து ‘தகடூரான் தந்த கனி’ என்ற பெயரில் அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி வழங்கித் தமிழ்ப் புலவரைச் சிறப்பித்த வரலாற்றைச் சுவைபட மேடையில் நடித்துக் காட்டினர்.
‘புறநானூற்றுப்
பாடல்களுடன்
முத்தமிழ்
முழக்கம்’
நாடகத்திலிருந்து
ஒரு
காட்சி..
அடுத்துத் ’தலை கேட்டான் தம்பி’ என்ற பெயரில் குமண வள்ளலின் வரலாறு அரங்கேறியது. குமணனின் தம்பி இளங்குமணன் அண்ணனிடமிருந்து ஆட்சியைப் பறித்துகொண்டதோடல்லாமல் ’அவன் தலையைக் கொண்டு வருவோர்க்குப் பத்தாயிரம் பொன் பரிசு’ என்றுவேறு அறிவித்தான். அவ்வேளையில் தமிழ்ப்புலவர் ஒருவர் குமணனைக் கண்டு பரிசில் பெறுவதற்காக அவன் தங்கியிருந்த கானகத்திற்குச் செல்கின்றார். புலவருக்கு ஏதும் கொடுக்கவியலாத நிலையில் இருந்த குமணன் ’தன் தலையை வெட்டித் தம்பியிடம் கொடுத்துப் பரிசு பெற்றுச் செல்க!’ என்று வாளைப் புலவரிடம் நீட்டிய காட்சி காண்போர் கண்களில் நீர்மல்கச் செய்தது.
அடுத்து இடம்பெற்றது ‘கவரி வீசிய காவலன்’ என்ற தலைப்பில் தமிழ்ப்புலவர் மோசிகீரனார்க்குச் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை கவரி வீசித் தமிழைப் பெருமைப்படுத்திய வரலாறு. நிகழ்ச்சியின் முடிவில் அரங்கத்தினரின் கரவொலி விண்ணைப் பிளந்தது என்றால் மிகையில்லை.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் காலை 9 மணிக்குத் தொடங்கின. ’புறநானூற்றில் எனக்குப் பிடித்த பாடல்’ என்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் பலர் அவர்களுக்குப் பிடித்த புறநானூற்றுப் பாடலையும் அதற்கான காரணத்தையும் தங்கள் மழலைக் குரலில் கூறி அனைவரையும் மகிழ்வித்தனர். ’கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே’ எனத்தொடங்கும் ’ஒக்கூர் மாசாத்தியார்’ என்ற பெண்பாற் புலவரின் புறப்பாடலையே தங்கள் விருப்பப் பாடலாகப் பல குழந்தைகள் குறிப்பிட்டனர்.
அடுத்து மாணவர்களுக்கான ‘புறநானூறு – வினாடிவினாப் போட்டி’ நடைபெற்றது. அதில் பங்குபெற்ற குழந்தைகள் புறநானூற்றிலிருந்து கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்குக்கூடச் சிறப்பாய் பதிலளித்து அரங்கத்தை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.
மாணவர்களுக்கான
‘புறநானூறு
– வினாடிவினாப்
போட்டி’
அடுத்ததாக, புறநானூற்றுக் கருத்தரங்கின் இரண்டாவது அமர்வு (second
panel) தொடங்கியது. அதில் பேராசிரியர் முருகரத்தினம் அவர்கள் ‘புறநானூறு பேசும் வாழ்வியல் விழுமியங்கள்’ என்ற தலைப்பிலும், பேராசிரியர் அறிவுநம்பி அவர்கள் ‘புறநானூறு – பலதுறைப் பேழை’ என்ற தலைப்பிலும், பேராசிரியர் வாசு. அரங்கநாதன் அவர்கள் ‘உவமைகள் வழிச் சங்கத் தமிழகம்’ என்ற தலைப்பிலும் தங்கள் கருத்துக்களை வழங்கினார்கள். இவ்வமர்வை முனைவர் மருதநாயகம் அவர்கள் நெறிப்படுத்தி நடத்தினார்.
பின்பு, புறநானூற்று ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய ’மாநாட்டு மலர்’ ஒன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்த முக்கிய நிகழ்வுகளாக மற்றுமொரு புறநானூற்றுக் கருத்தரங்கம் மற்றும் சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள திருமதி. வைதேகி ஹெர்பர்ட் அம்மையாருடன் ஓர் கலந்துரையாடல் ஆகியவை இடம்பெற்றன. வேறு யாருடைய உதவியும் இல்லாமல் தாம் தனியாகவே சங்கத்தமிழ் நூல்கள் பன்னிரண்டை இதுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பதாகத் திருமதி. வைதேகி அவர்கள் தெரிவித்தது அனைவரையும் வியப்பிலாழ்த்தியது. அவருடைய முயற்சியையும், ஆர்வத்தையும் விழாவைக் காண வந்திருந்தோர் பலரும் பாராட்டினர். உண்மையிலேயே போற்றத்தக்க அரும்பணிதானே இது!
அதற்கடுத்தபடியாக விழாவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரபாகரன் அவர்கள் ‘புறநானூறு காட்டும் தமிழ்ச் சமுதாயம்’ என்ற பொருளில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். திருக்குறளோடு புறநானூற்றை ஒப்பிட்டு அவர் வழங்கிய அவ்வுரை மிகச் சிறப்பாகவும், சுவையாகவும் அமைந்திருந்தது.
நாட்டிய நாடகம் ஒன்று அடுத்து அரங்கேறி அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் பெற்றது. தன் தந்தையையும், பின்பு கணவனையும் போரில் இழந்த பெண்ணொருத்தி மீண்டும் ஒலிக்கின்ற போர்ப்பறை முழக்கத்தைக் கேட்டு வீரம் கொண்டு தன் இளம் புதல்வனையும் போருக்குச் செல் என்று அனுப்புவதை மையக்கருவாகக் கொண்டிருந்தது அந்நாடகம்.
பின்பு மாலை 4 மணியளவில் புறநானூற்றில் பல்லூடக (multi-media) வினாடிவினா ஒன்று நடைபெற்றது; இஃது பெரியவர்களுக்கானது. ‘கடையெழு வள்ளல்கள் அணி’ மற்றும் ‘மூவேந்தர் அணி’ என்ற இரண்டு அணிகள் இவ்வினாடிவினாப் போட்டியில் பங்கேற்றன. இறுதியில் ‘கடையெழு வள்ளல்கள் அணி’ பரிசினைத் தட்டிச்சென்றது (வென்ற அவ்வணியில்தான் நானும் இடம்பெற்றிருந்தேன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே).
புறநானூற்றில் பல்லூடக வினாடிவினா
(பெரியவர்களுக்கானது)
பின்பு தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் திரு. அறிவுமதி அவர்கள் ‘புறநானூற்றில் முதியோள் சிறுவர்கள்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். திரைத்துறையைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பழகுவதற்கு மிகவும் இனியவராகவும், எளியவராகவும் திரு. அறிவுமதி திகழ்ந்தார் என்பதனை இங்கு நான் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.
இரவு உணவு இடைவேளைக்குப் பின்பு ’அமரர் கல்கி’ அவர்கள் எழுதி இன்றும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கும் ‘சிவகாமியின் சபதத்தை’ நாட்டிய நாடகமாக அரங்கேற்றினர்.
’சிவகாமியின்
சபதம்’
நாட்டிய
நாடகத்திலிருந்து….
மிகச் சிறப்பான முறையிலே அமைக்கப்பட்டிருந்த காட்சிகள், நாட்டியங்கள், பங்கேற்ற கலைஞர்களின் தேர்ந்த நடிப்பு எல்லாமும் சேர்ந்து அந்நிகழ்ச்சியை அனைவரும் பிரமிக்கும்வண்ணம் மாற்றியிருந்தன. விழாவைக் காணவந்திருந்தோர் யாவரும் இந்நாட்டிய நாடகத்தை வெகுவாக இரசித்து மகிழ்ந்தனர் என்று சொல்லவும் வேண்டுமோ!!
இவ்வாறு இரண்டு நாள் நிகழ்வுகளை உள்ளடக்கிய முதல் பன்னாட்டுப் புறநானூற்று மாநாடு ’வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்’, மற்றும் ’வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு’ (FeTNA) ஆகியவற்றின் சீரிய தலைமையிலும், உழைப்பிலும் தமிழ்கூறு நல்லுலகே வியந்து பாராட்டும் ஓர் வெற்றி மாநாடாய்த் திகழ்ந்தது எனில் மிகையில்லை.
No comments:
Post a Comment