தமிழகத்தில்
ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனையோ அறிஞர்களும், புலவர் பெருமக்களும் தோன்றித்
தமிழின் வளர்ச்சிக்கும், தமிழரின் மறுமலர்ச்சிக்கும் வித்திட்டுள்ளனர்.
அவ்வகையில், தமிழரின் தலைசிறந்த அடையாளமாய்த் திகழும் சங்கத்தமிழ் நூல்களையெல்லாம்
கரையானிடமிருந்து காத்து, நம் கைகளில் தவழச் செய்தவர் ’தமிழ்த்தாத்தா’ உ.வே.சா.
எனில், அவ்விலக்கியங்களையெல்லாம் எளிய தமிழ் நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும்
வகையில் பல கட்டுரைகளாகவும், ஆராய்ச்சி நூல்களாகவும் எழுதி வெளியிட்ட பெருமை ’மு.வ’
என்று தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற முனைவர் மு.
வரதராசனார் அவர்களைச் சாரும்.
அறிவு
முதிர்ச்சிக்கு அடையாளமான அகன்ற நெற்றி, அன்பும் அறிவும் சுடர்விடும் ஒளி
பொருந்திய கண்கள், வெள்ளை உள்ளத்தை வெளிக்காட்டும் பளிச்சென்ற புன்னகை இவற்றோடு
கூடிய தோற்றப் பொலிவினாலும், தமிழுக்குப் புதிய வரலாறு படைத்த தன் அற்புத
எழுத்துக்களாலும் அனைவரையும் ஈர்த்த மு.வ., ஏப்ரல் 25, 1912-ஆம் ஆண்டு
திருப்பத்தூரில் பிறந்தார். வேலம் என்ற ஊரிலும் பின்பு வாலாசாவிலும் தொடக்கக்கல்வி
பயின்ற அவர், பின்னர் 1935-ஆம் ஆண்டு தமிழ்ப் புலவர் தேர்வு எழுதி அதில்
மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்தார். தணியாத ஆர்வமும், புலமையும்
தமிழ்பால் கொண்ட வரதராசனார் 1948-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்
பெற்ற பெருமைக்குரியவர்.
1928-ஆம்
ஆண்டு எழுத்தராகத் தன் பணியைத் தொடங்கிய அவர் பின்பு மாநகராட்சிப் பள்ளியொன்றில்
தமிழாசிரியராகவும், அதனைத் தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்
பேராசிரியராகவும், பின்னர் அங்கேயே தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.
மு.வ. அங்கு பணிபுரிகின்றார் என்ற காரணத்திற்காகவே ‘பச்சையப்பனில் படிக்க இச்சை
கொண்டோர் பலர்’ இருந்திருக்கின்றனர் அப்போது. (எப்படி அறிஞர் அண்ணா அங்குப்
படித்தார் என்று விரும்பிச் சேர்ந்தார்களோ அதுபோல் இதுவும்!) :-)
சென்னைப்
பல்கலைக்கழகத்திலும் சில காலம் தமிழ்த்துறைத் தலைவராகப் பதவி வகித்த வரதராசனார்,
தன் பணிக்காலத்தின் இறுதிப் பகுதியில் (1971-74 வரையிலான காலகட்டத்தில்) மதுரைப்
பல்கலைக்கழகத்தின் புகழ்சால் துணைவேந்தராகவும் பதவி வகித்திருக்கின்றார்.
சிறந்த
தமிழறிஞரும், சிந்தனையாளருமான மு.வ. சமுதாய ஒழுக்கத்திலும், தனிமனித
ஒழுக்கத்திலும் பெரிதும் அக்கறை கொண்டவர். தன் படைப்புக்கள் அனைத்திலும் இதனை அவர்
வலியுறுத்தத் தவறவில்லை என்றே கூறலாம். நாவல், சிறுகதை, நாடகம், இலக்கியக்
கட்டுரைகள், சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று நூல்கள்,
மொழியியல் நூல்கள் என்று நம் தாய்த்தமிழில் அவர் தொடாத - அவர் கரம் படாத துறைகளே
இல்லை எனும் அளவிற்குப் பல்வேறு களங்களிலும் தன் ஆக்கங்களைத் தந்து அன்னைத்
தமிழுக்கு அணிசேர்த்துள்ளார் அப்பேரறிஞர்!
கடித
இலக்கியம் என்ற புதியதோர் இலக்கியத்துறையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய
பெருமையும் இவருக்கு உண்டு. தம்பிக்கு, தங்கைக்கு, அன்னைக்கு, நண்பர்க்கு என்று
அனைத்து உறவுகட்கும், நண்பர்கட்கும் ’நயத்தகு நாகரிக நடையில்’ மடல் வரையக்
கற்றுத்தந்த பண்பாளர் மு.வ. அவர்கள். (பின்பு இக்கடித இலக்கியத்தை அரசியல்
துறையில் பயன்படுத்திப் பெருவெற்றி கண்டவர் அறிஞர் அண்ணா என்பது நாமறிந்ததே.)
மு.வ.வின்
கதைகளில்கூட வட்டார வழக்கை நாம் காணமுடியாது. கதை மாந்தர்களிடையே நிகழும்
உரையாடல்கள் அனைத்துமே அவர்கள் பாமரராயினும் சரி, படித்தோராயினும் சரி
வேறுபாடுகளற்ற தரமான ஒரே மொழி நடையையே கொண்டிருந்தன என்பது ஈண்டுக்
குறிப்பிடத்தக்கது.
அவருடைய
கள்ளோ காவியமோ?, கரித்துண்டு, அகல் விளக்கு முதலிய நாவல்கள் அன்றைய தமிழ்ச்
சமுதாயத்தினரிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியிருந்தன எனில் மிகையில்லை. அவருடைய ’அகல் விளக்கு’ சாகித்திய
அகாதெமியின் பரிசை வென்ற சிறந்த நாவலாகும்.
இலக்கியத்
திறன், இலக்கியச் செல்வம், இளங்கோவடிகள், கண்ணகி, மாதவி, குறுந்தொகை விருந்து,
நெடுந்தொகை விருந்து (அகநானூற்றிற்கு நெடுந்தொகை என்றோர் பெயருண்டு), ஓவச்
செய்தி...இப்படி எண்ணிறந்த இலக்கியக் கட்டுரைகளை எழுதிக் குவித்து, கற்க அரிதான
சங்க நூல்கள்மீது தமிழ் மக்களுக்கு ஆழமான காதலை ஏற்படுத்தியவர் வரதராசனார்.
சாகித்திய
அகாதமியின் வேண்டுகோளுக்கிணங்கத் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் அரும்பணியை
மேற்கொண்டு அம்முயற்சியில் பரவலான வரவேற்பும், வெற்றியும் கண்டவர் மு.வ. 62
ஆண்டுகளே வாழ்ந்த மு.வ., எண்பதுக்கும் மேற்பட்ட சிறந்த நூல்களைப் படைத்த
சாதனையாளர். அவருடைய நூல்கள் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது அவற்றின்
தரத்திற்கும், மு.வ.வின் திறத்திற்கும் சான்று பகர்கின்றன.
எல்லாவற்றிற்கும்
மேலாக இன்று(ம்) மு.வ. அனைவராலும் நினைவுகூரப்படுவது அவருடைய எளிய திருக்குறள்
தெளிவுரைக்காக. அழகுத் தமிழில் அனைத்துத் தமிழரும் எளிதில் விளங்கிக்கொள்ளுகின்ற
வகையில், அரசியல் சார்போ, மதச் சாயமோ, அறிவுக்குப் பொருந்தாத புதிய விளக்கங்களோ இன்றி
இத்தெளிவுரையைத் ’தெளிந்ததோர் நல்லுரை’யாய்ப் படைத்த தமிழ்ச் சான்றோர் மு.வ.
அவர்கள்.
தன்
உயரிய படைப்புக்களாலும், சிந்தனைகளாலும் தமிழ்கூறு நல்லுலகில் நிலைத்ததோர்
இடத்தைப் பெற்றுவிட்ட மு.வ.,
’மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே’ என்ற புறப்பாட்டிற்கு இலக்கணமாய்த் திகழ்கின்றார் என்பதில் ஐயமுண்டோ?
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே’ என்ற புறப்பாட்டிற்கு இலக்கணமாய்த் திகழ்கின்றார் என்பதில் ஐயமுண்டோ?