Thursday, January 15, 2015

உவகை பொங்கும் உழவர் திருநாள்!






      விண்ணில் விரிந்த கதிராலே
      வையம் இருளற் றொளிர்ந்ததுவே!
      மண்ணில் விளைந்த கதிராலே
      உழவர் உவகை கொண்டனரே!

      புத்தம் புதிய அரிசியிலே
      பொங்கல் பொங்கிப் பூரிப்பாய்த்
      தித்திப் பான கரும்புடனே
      படைய லிட்டு மகிழ்கின்றார்!

      நித்தம் உழைப்பைத் தான்நல்கி
      நிலத்தை உழுதிடும் காளைகட்கும்
      சித்தம் மகிழும் வண்ணத்தில்
      சிறப்புச் செய்து களிக்கின்றார்!

      கத்தும் கடலின் அழகதனைச்
      சுற்றத் தாருடன் கண்டிடவே
      முத்தாய் ஒருநாள் தெரிவுசெய்தே
      ‘காணும் பொங்கல்’ காண்கின்றார்!

            உழவர் சிறப்பை உலகறியச்
      செய்யும் நன்னாள் தைத்திருநாள்!
      அழிவின் பாதையில் பயணிக்கும்
      உழவைக் காப்போம்! உயர்ந்திடுவோம்!