Friday, September 18, 2015

மதவெறியால் மாய்ந்த மாதரசி!

புவியையே புரட்டிப்போட்ட புரட்சியாளர், தத்துவத்துறையில் முத்திரை பதித்த வித்தகர், பல்கேள்வித் துறைபோகிய நல்லறிஞர் என்றெல்லாம் போற்றப்படுவோர் யார் என்று ஆராய்ந்தால் அவர்களில் அநேகர் ஆண்களாகவே இருந்துவிடக் காண்கிறோம். இவற்றைக் காண்கையில், ஏன்பெண்களில் சீரிய சிந்தனை வாய்க்கப்பெற்றோர், அறிவுத்தளத்தில் ஆற்றலோடு இயங்கக்கூடியோர் யாருமே இல்லையா? என்றொரு ஏக்கம் நம் மனத்தின் ஓரம் மெலிதாய் எட்டிப்பார்க்கின்றது.

அந்த ஏக்கத்தைப் போக்கிப் பெண்ணினத்தைப் பூரிக்கச்செய்யும் பெயர்தான்ஹைப்பாட்டியா’ (Hypatia). ஆம்! பேரறிவோடும், பெரும் புலமையோடும்தன் கருத்துக்களைத் துணிச்சலாகவும், சுதந்திரமாகவும் வெளியிட்ட பெண்ணறிஞர்தான் ஹைப்பாட்டியா!

எகிப்தின் பெருநகரங்களில் ஒன்றான அலெக்சாண்டிரியாவில் (it was founded by Alexander the Great, in 331 B.C.) கி.பி. 300-களின் இறுதியில் பிறந்தவர் ஹைப்பாட்டியா. அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய்ப் பணியாற்றிவந்த புகழ்பெற்ற கணிதவியலாளரும், வானியலறிஞருமான தியோன் அலெக்சாண்டிரிகஸ் (Theon Alexandricus) என்பவரின் அருமை மகள்தான் இவர்.

தொடக்கத்தில், ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த பிரபல வரலாற்றாசிரியரும், கட்டுரையாளருமான புளுடார்ச்சிடம் (Plutarch the younger) கல்வி பயின்றார் ஹைப்பாட்டியா. பின்பு தன் தந்தையிடம் கணிதம், வானியல் துறைகளைக் கற்றுத்தேர்ந்தார். இவையேயன்றித் தத்துவத்துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு அதிலும் ஆழ்ந்தபுலமை பெற்றவரானார்.

கி.பி. 400-களின் வாக்கில் அலெக்சாண்டிரியாவின் நவபிளேட்டோனியப் பள்ளி (Neo-Platonic School) ஒன்றை நிறுவி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஹைப்பாட்டியா, அங்கு பிளேட்டோ (Plato), அரிஸ்டாட்டில் (Aristotle) போன்றோரின் செறிவான சிந்தனைகளையும், பிளேட்டோவின் சிந்தனைகளில் புதிய வளர்ச்சிநிலையை ஏற்படுத்தியவரும், நவபிளேட்டோனியத்தைத் (Neo-Platonism) தொடங்கிவைத்தவருமான பிளோட்டினஸின் (Plotinus) சித்தாந்தங்களையும், தம்மிடம் கல்விபயின்ற கிறித்தவ, பேகனிய (people who follow the religions other than Christianity or Judaism) மற்றும் இதர பிரிவைச் சார்ந்த மாணாக்கர்களுக்குக் கற்பித்தார்.

அவரிடம் பயின்ற மாணாக்கர்களில் குறிப்பிடத்தக்கவர்சைரின்என்ற நகரைச் சேர்ந்தஸைனிசியஸ்’ (Synesius of Cyrene) ஆவார். பிற்காலத்தில், கிரேக்கத்திலுள்ள தோலிமெய்ஸ் என்ற பகுதியின் தலைமைக் குருவாய்ப் (Bishop of Ptolemais) பதவியேற்ற ஸைனிசியஸ், தன் ஆசிரியையான ஹைப்பாட்டியாவிடம் தான் கற்றறிந்த நவபிளேட்டோனியச் சிந்தனைகளைத் தோலிமெய்ஸில் பரப்பினார் என்று கூறப்படுகின்றது. பல கடிதங்களைத் தன் ஆசிரியருக்கு எழுதியிருக்கின்றார் ஸைனிசியஸ். அக்கடிதங்கள், தன் ஆசிரியர்பால் அவர் கொண்டிருந்த மட்டற்ற மதிப்பையும் மரியாதையையும் புலப்படுத்துவனவாகவும், ஆசிரியரின் அறிவியல் புலமையைப் பெரிதும் போற்றுவனவாகவும் அமைந்திருப்பதாய் அறிகின்றோம்.

ஸைனிசியஸ் தன் கடிதங்களில் குறிப்பிட்டபடி, அறிவியல் துறையில் ஆழங்காற்பட்ட புலமையுடனேயே ஹைப்பாட்டியா திகழ்ந்திருக்கின்றார் என்பதை அவரின் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மெய்ப்பிக்கின்றன. திரவங்களின் அடர்த்தியை நீரோடு ஒப்பிட்டு அறிய உதவும் திரவமானி (Hydrometer), நீருக்கு அடியிலிருக்கும் பொருள்களை ஒளிவழியாய்க் காண உதவும் சோதனைக்கருவி (hydroscope), வானியலாளர்கள் சூரியன், சந்திரன், மற்றும் பிற கோள்களின் இடத்தைக் கண்டறிய உதவும் கருவி (astrolabe) முதலியவை ஹைப்பாட்டியாவின் கண்டுபிடிப்புக்களே என்று சொல்லப்படுகின்றது.

சிறந்த கணிதவியலாளராகவும் திகழ்ந்த ஹைப்பாட்டியா, ’அல்ஜீப்ராவின் தந்தைஎன்று புகழப்படும் தியோஃபாந்தஸ் (Diophantus) எனும் கிரேக்கக் கணிதவியலாளரின் நூலான அரித்மெட்டிகாவுக்கு (Diophantus’s Arithmatica) விளக்கக் குறிப்புகள் வரைந்துள்ளார். அக்காலத்தில், அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்த புகழ்வாய்ந்த வானியலறிஞர்தாலமியின் (Claudius Ptolemy) வானியல் நூலுக்கும் அவர் உரை எழுதியுள்ளார். இவையேயன்றி, தன் தந்தை தியோனின் நூலெழுதும் பணிகளுக்கும் ஹைப்பாட்டியா பேருதவி புரிந்திருக்கின்றார்.

புகழ்பெற்ற ஆசிரியராகவும், பிற அறிஞர்களின் நூல்களுக்கு உரையாசிரியராகவும் திகழ்ந்ததோடல்லாமல் சிறந்த பேச்சாளராகவும் அலெக்சாண்டிரியா மக்களைக் கவர்ந்தவர் ஹைப்பாட்டியா. ஓர் ஆசிரியருக்கு ஏற்ற வகையில் மிகவும் கண்ணியமான உடையுடனேயே எப்போதும் காட்சியளித்த அவர், தனக்கென்று வைத்திருந்த தேரைத் (Chariot) தானே செலுத்திக்கொண்டு வீதிகளில் கம்பீரமாக வலம்வருவாராம். தெளிந்த அறிவும், தேர்ந்த சிந்தனையும் பெற்றிருந்த ஹைப்பாட்டியாவைப்பெண்ணியச் சிந்தனையாளர்களின் முன்னோடிஎன்று பெருமையோடு சுட்டுகின்றனர் இன்றைய பெண்ணியவாதிகள்.

அளவற்ற திறனும் மாணாக்கர்களின் மட்டற்ற அன்பும் வாய்க்கப்பெற்றிருந்தும், ஹைப்பாட்டியாவின் மரணம் என்னவோ இயற்கையானதாய் அமையவில்லை. மாறாக, நம்மால் கனவிலும் கற்பனை செய்யவியலாத வகையில் மிக்கொடூரமான ஒன்றாக அதனை அமைத்துவிட்டது விதி! இல்லை..வஞ்சகர்களின் சதி!

ஆம்! அவருடைய சிந்தனைகள் கிறித்தவத்திற்கு எதிரானவை, பேகனியத்திற்கு (Paganism) ஆதரவானவை என்று கருதிய அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த (கிறித்தவ மதவெறி மிகுந்த) சிரில் (Cyril) என்ற மதகுரு, கலகக்காரர்களை ஹைப்பாட்டியாவுக்கு எதிராக ஏவிவிட, அக்கூட்டமோ வீதியில் தேரில் சென்றுகொண்டிருந்த அப்பெண்ணரசியை வழிமறித்தது. தேரினின்றும் அவரைப் பலவந்தமாகக் கீழிறக்கி, அவர் ஆடைகளைக் கிழித்துக் கொடூரமாகத் தாக்கிக் கொலைசெய்திருக்கின்றது இரக்கமற்ற அந்த அரக்கக் கூட்டம்!

அத்தோடு விட்டதா? அலெக்சாண்டிரியாவில் அவரால் நிர்மாணிக்கப்பட்டிருந்த நூலகத்தையும், அவருடைய ஆக்கங்களையும் தீக்கிரையாக்கி ஆனந்தக் கூத்தாடியது. அறிவுக்கண்ணை முழுக் குருடாக்கிவிட்ட மதவெறியானது, நற்பண்பாளரும், சிறந்த அறிஞருமான பெண்மணி ஒருவரின் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிக் கோரமாய்ச் சிதைத்திருப்பதை இப்பயங்கர நிகழ்வு நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

ஹைப்பாட்டியாவின் சமகாலத்தவரும் வரலாற்றறிஞருமான (historiographer) சாக்ரடிஸ் ஸ்கோலாஸ்டிகஸ் (Socrates Scholasticus) என்பவர், ஹைப்பாட்டியாவைப் பற்றிப் பின்வருமாறு பதிவுசெய்திருக்கிறார்:

அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த பெண்மணியும், தியோன் எனும் அறிஞரின் மகளுமான ஹைப்பாட்டியா, இலக்கியம், அறிவியல், தத்துவம் போன்ற பல்துறைகளிலும் தன்காலத்தைச் சேர்ந்த அனைத்து அறிஞர்களினும் விஞ்சிய திறன்வாய்ந்தவராய்த் திகழ்ந்தார். பிளேட்டோ, மற்றும் புளோட்டினஸின் சிந்தனைகளைக் கற்பிக்கும் பள்ளியொன்றை நிறுவி, அச்சிந்தனைகளை மக்கள் மன்றத்தில் துணிச்சலோடும் ஆற்றலோடும் கொண்டுசேர்த்தார். ஆண்களின் சபைகண்டு அவர் அஞ்சியதில்லை; அவருடைய கண்ணியமும், உயர்ந்த ஒழுக்கமும் அனைவராலும் மெச்சப்பட்டது.”

நண்பர்களே! சாக்ரடீஸை விஷமருத்திக் கொன்றது கிரேக்கம்; அதுபோல் ஹைப்பாட்டியாவைக் கொடூரமாய்த் தாக்கிக்கொன்றது அலெக்சாண்டிரியா. இவ்விரு அறிஞர்களின் மரணத்திற்கும் அடிப்படைக் காரணம், அப்பகுதி மக்களின் இறைநம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை இவர்கள் பரப்பிவந்தனர் என்ற மதவாத எண்ணமே!

இதில் விந்தை என்னவென்றால்அனைத்து மதங்களும்தம் ஆண்டவர் அன்பே வடிவானவர்என்றுதான் சொல்லிக்கொள்கின்றன. ’அன்புவழியே அறவழிஎன்று முழக்கமிடுகின்றன. ஆனால், அம்மதங்களைப் பின்பற்றும் மக்களோ அன்புவழியைப் பிரசாரம் செய்கின்ற அளவிற்கு வாழ்வில் பின்பற்றுவதில்லை என்பதையே இச்சிந்தனையாளர்களின் மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஆயினும், செயற்கரிய செய்யும் சான்றோர் என்றுமே அழிவதில்லை; தம் சாதனைகளாலும், போதனைகளாலும், அரிய கண்டுபிடிப்புக்களாலும் மன்னாவுலகத்தில் மன்னுபுகழ் பெற்றுவிடுகின்றனர்.

அவ்வகையில், 20-ஆம் நூற்றாண்டின் முண்டாசுக் கவிஞன் படைத்துக்காட்டிய புதுமைப்பெண்ணாய் 4-ஆம் நூற்றாண்டிலேயே வாழ்ந்து காட்டிய அறிவுலகமேதை ஹைப்பாட்டியா அம்மையார், வையத்து மா(ந்)தரனைவரும் என்றும் நினைந்து போற்றவேண்டிய மாதரசியே அல்லவா!


No comments:

Post a Comment