ஜார்ஜ் பெர்னார்ட்
ஷா (George Bernard Shaw)
அயர்லாந்தைச் சேர்ந்த
புகழ்பெற்ற நாடக
ஆசிரியரான ஜார்ஜ்
பெர்னார்ட் ஷா,
அதன் தலைநகரான
டப்ளின் (Duplin) எனும்
பெருநகரில் 1856-ஆம்
ஆண்டு ஜூலை
மாதம் 26-ஆம்
தேதி பிறந்தவர்.
அயர்லாந்தின் மெதாடிஸ்ட்
தேவாலயத்தினரால் (Methodist Church in Ireland) நடத்தப்பட்ட
வெஸ்லி கல்லூரியில்
(Wesley College, Dublin) சிலகாலம் கல்வி
பயின்றார் பெர்னார்ட்
ஷா. பின்பு
வெவ்வேறு பள்ளிகளுக்கு
அவருடைய படிப்பு
இடம்மாறிக்கொண்டே இருந்திருக்கின்றது.
பள்ளிக்கல்வியில் கசப்பான
அனுபவங்கள் ஏதேனும்
அவருக்கு ஏற்பட்டனவோ
என்னவோ… கல்விக்கூடங்கள்
மீதும் ஆசிரியர்கள்
மீதும் அவர்கொண்டிருந்த
வெறுப்பு கடைசிவரை
அவரைவிட்டு அகலவில்லை.
“கல்விக்கூடங்கள்
சிறைச்சாலைகளாகவும் (prisons), ஆசிரியர்கள்
அதன் பொறுப்பாளிகளாகவும்
(turnkeys) திகழ்ந்து (பிள்ளைகளால்
பெற்றோருக்கு ஏற்படும்
தொல்லைகளைத் தடுத்து)
அப்பிள்ளைகளைக் கண்காணித்து
வருகின்றனர்” என்று
பள்ளிக்கல்வியை அவர்
விமரிசித்திருக்கின்றார். அப்போதைய
கல்வித் திட்டங்களின்மீதும்
கடுமையான அதிருப்தி
கொண்டிருந்த அவர்,
அவை மாணவர்களின்
சிந்திக்கும் திறனை,
சுய அறிவை
மழுங்க வைப்பதைத்
தவிர வேறொன்றையும்
செய்யவில்லை” என்றும்
குற்றஞ்சாட்டியுள்ளார். 19-ஆம்
நூற்றாண்டின் அயர்லாந்துக்
கல்விமுறையைப் பற்றி
பெர்னாட்ர்ட் ஷா
கூறிய கருத்துக்கள்
இன்றைய நம்
கல்விமுறைக்கும் பொருந்துவதாகவே
உள்ளன அல்லவா?
இளமை முதலே
புத்தகங்கள் படிப்பதில்
மிகுந்த ஆர்வம்
கொண்டிருந்த ஷா,
தன்னுடைய பத்து
வயதிலேயே விவிலியம்
(Bible) தொடங்கி ஷேக்ஸ்பியரின்
நாடகங்கள் வரை
அனைத்தையும் படித்து
முடித்திருந்தார் என்று
கூறப்படுகின்றது.
அயர்லாந்தில் வசித்துவந்த
பெர்னார்ட் ஷா
தம் 20-ஆவது
வயதில் துடிப்புள்ள
இளைஞராய் இங்கிலாந்துக்குக்
குடிபெயர்ந்திருக்கின்றார். எழுதுவதில்
அவருக்கிருந்த ஈடுபாட்டின்
காரணமாக கதை,
கட்டுரை என
நிறைய எழுதிப்
பத்திரிகைகளுக்கு அனுப்பத்
தொடங்கினார். ஆரம்பத்தில்
அவருடைய எழுத்துக்களைப்
பிரசுரிக்காது பத்திரிகைகள்
திருப்பியனுப்பிய போதிலும்,
அதற்காகச் சோர்ந்துவிடாது
தம் எழுத்துக்களின்மேல்
அசையாத நம்பிக்கை
கொண்டவராய் அவர்
தொடர்ந்து எழுதி
அனுப்பிக்கொண்டே இருந்தார்.
அவரது விடாமுயற்சி
வீண்போகவில்லை. ஒருகட்டத்தில்
பத்திரிகைகள் அவர்
எழுத்தை உச்சிமீது
வைத்துக் கொண்டாடத்
தொடங்கின; அவர்
எதையெழுதி அனுப்பினாலும்
பிரசுரித்தன. அக்காலகட்டத்தில்,
நிறைய நாடகங்களை
எழுதினார் பெர்னார்ட்
ஷா. அவருடைய
நாடகங்கள் 1890-ஆம்
ஆண்டு முதல்
அரங்கேற்றம் காணத்தொடங்கின.
பத்தாண்டுகளுக்குள் புகழ்பெற்ற
நாடக ஆசிரியராக
அவர் வளர்ச்சியடைந்திருந்தார்.
60-க்கும் மேற்பட்ட
நாடகங்களை அவர்
எழுதியுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
அதிகார வர்க்கத்தை
எதிர்த்து உழைக்கும்
வர்க்கத்துக்கு ஆதரவாகவே
அவருடைய ஆக்கங்கள்
அமைந்திருந்தன. சொல்லவந்த
கருத்துக்களை அழகாகவும்
ஆழமாகவும் சொல்வதில் வல்லவரான
ஷா, தம்
எழுத்துக்களில் எள்ளல்
சுவையையும் துள்ளி
விளையாடச் செய்வதில்
கைதேர்ந்தவர்; அதுவே
அவருடைய தனித்தன்மையாய்
இன்றுவரை போற்றப்படுகின்றது.
நாடகம், கதை,
கட்டுரை, கடிதம்,
விமரிசனம் என
எழுத்துத்துறையின் அனைத்துப்
பிரிவுகளிலும் கோலோச்சிய
பெர்னார்ட் ஷா,
குறும்பு கொப்பளிக்கப்
பேசும் நாவன்மையும்
பெற்றிருந்தார். சான்றாக
ஒரு நிகழ்வு…
ஒருமுறை அவர்
அமெரிக்கா சென்றிருந்தபோது
அங்கே மக்களவைக்
கூட்டத்தில் பேசுவதற்கு
அழைக்கப்பட்டிருந்தார். அவையில்
பேசத்தொடங்கியவர், எடுத்த
எடுப்பிலேயே “இங்குள்ளவர்களில்
பாதிபேர் முட்டாள்கள்”
என்று ஒருபோடு
போட்டிருக்கின்றார். அதனைக்கேட்டுக்
கடுங்கோபம் கொண்ட
மக்களவை உறுப்பினர்கள்,
”பெர்னார்ட் ஷா
தம் கருத்தைத்
திரும்பப் பெறவேண்டும்”
என்று கூச்சலிட்டனர்.
அந்தக் களேபரத்தைக்
கண்டு சற்றும்
கலங்காத ஷா
புன்னகைத்தபடி, “சரி…இங்கிருப்பவர்களில்
பாதிபேர் புத்திசாலிகள்”
என்று சற்றும்
தாமதியாமல் மாற்றிச்சொல்ல
(இதுதான் மாற்றி
யோசிப்பது என்பதோ!)
உறுப்பினர்கள் வாயடைத்துப்போய்
ஒன்றும்பேசாமல் அமர்ந்தனராம்.
தம் வாழ்நாளில்
மொத்தம் 2,50,000 கடிதங்களை
அவர் எழுதியிருக்கின்றார்
என்ற செய்தி
நம்மை வியப்பிலாழ்த்துவதாய்
உள்ளது.
உலகமக்களை ஆச்சரியத்தில்
மூழ்கடிக்கும் பண்பொன்றும்
பெர்னார்ட் ஷாவிடம்
இருந்திருக்கின்றது. அதுதான்
விருதுகள், பட்டங்கள்
எதற்கும் ஆசைப்படாத
அவருடைய விந்தை
குணம். ஆம்!
நோபல் பரிசே
தன்னைத் தேடிவந்தபோதும்
அதனை வேண்டாம்
என மறுத்தவர்
பெர்னார்ட் ஷா
என்றால் நம்ப
முடிகின்றதா? ஆனால்
அதுதான் உண்மை!
அந்த அதிசய
நிகழ்வு நடைபெற்ற
ஆண்டு 1925. நோபல்பரிசுக்
குழுவினர் பெர்னார்ட்
ஷாவை அணுகி
அவ்வாண்டிற்கான இலக்கிய
நோபல் பரிசை
(Nobel Prize in Literature) அவருக்கு வழங்க
விரும்புவதாகத் தெரிவிக்க,
அதுகேட்ட ஷா
மகிழ்ச்சியில் துள்ளாட்டம்
போடவில்லை. மாறாக,
“இவ்வாண்டிற்கான நோபல்பரிசு
எனக்கா…எதற்கு?
இந்த ஆண்டுதான்
நான் ஒன்றுமே
எழுதவில்லையே” என்று
பதில் கூறியிருக்கின்றார்.
பரிசுக் குழுவினரோ
“நீங்கள் இந்த
ஆண்டு எழுதாவிட்டால்
என்ன? ஏற்கனவே
நீங்கள் எழுதியவைகளுக்காகத்தான்
இந்த நோபல்பரிசு!”
என்று கூறியிருக்கின்றனர்.
அதுகேட்டுக் கடகடவென
நகைத்த பெர்னார்ட்
ஷா, ”ஒருவன்
நடுக்கடலில் தத்தளித்துச்
சிரமப்பட்டுக் கரையேறியபின்பு
அவனைக் காப்பாற்ற
காற்றடித்த இரப்பர்
குழாயைக் கொடுப்பது
போலிருக்கின்றது இந்தப்
பரிசு” என்று
தமக்கே உரித்தான
கிண்டலோடு சொல்லிவிட்டு,
அப்பரிசை மறுத்திருக்கின்றார்.
அப்படியும் விடாது
அந்த நோபல்பரிசு
அவர் வீடுதேடிவந்துவிட,
அதனை அப்படியே
மற்றொரு எழுத்தாளரின்
இலக்கியப் பணிகளுக்காகக்
கொடுத்தவிட்டாராம் அந்த
அதிசய மனிதர்!
Pygmalion என்ற
அவருடைய நாடகம்
1938-ஆம் ஆண்டு
திரைப்படமாக்கப்பட்டபோது, அப்படத்தில்
பணிபுரிந்ததற்காக அவருக்கு
ஆஸ்கர் விருது
வழங்கப்பட்டது. நோபல்,
ஆஸ்கர் ஆகிய
இரண்டு மிகப்பெரிய
விருதுகளைப் பெற்ற
ஒரே மனிதர்
பெர்னார்ட் ஷாவே!
விருதுகளை வெறுத்த
அவரை விருதுகள்
வெறுக்கவில்லை; ’விலகிச்
சென்றால் விரும்பிவரும்’
என்பது ஷாவின்
விஷயத்தில் உண்மையானது!
புரட்சிகரமான கருத்துக்களைத்
துணிச்சலுடன் வெளியிட்டுவந்த
பெர்னார்ட் ஷா,
இல்லறம் குறித்த
தம் கருத்துக்களையும்
ஒளிவுமறைவின்றி உலகிற்கு
விளம்பியவர். “மனையறம்
மாட்சியோடு திகழ,
மனைவிக்குக் கணவன்மார்கள்
மதிப்பும் மரியாதையும்
தரவேண்டும்; மனையாளே
கணவனை நன்னெறிக்கண்
செலுத்துபவள்; அவளால்தான்
அவன் வாழ்வு
ஏற்றம் பெறுகின்றது”
என்று கூறியிருக்கின்றார்.
இக்கருத்துக்களால் கவரப்பட்ட
நம் புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன், பெண்களைப்
போற்றிய ஷாவைப்
போற்றிக் கவியொன்று
வடித்துவிட்டார்.
புவிப்பெரியான் ஜார்ஜ்
பெர்னார்ட் ஷாவுரைத்த
பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில் உள்ளீர்!
உவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்நடத்த
உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்!
அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்!
அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்!
குவியுமெழிற் பெண்களுக்கே ஊறுசெய்யும்
குள்ளர்களே, கேட்டீரோ ஷாவின் பேச்சை!
அவனியிலே ஒருவனுக்கு மனைவியின்றேல்
அவனடையும் தீமையை யார் அறியக்கூடும்?
கவலையுற ஆடவர்கள் நாளும் செய்யும்
கணக்கற்ற ஊழல்களை யெல்லாம் அந்த
நவையற்ற பெண்களன்றோ விலக்குகின்றார்?
நானிலத்தில் மார்தட்டும் ஆடவர்கள்
சுவைவாழ்விற் கடைத்தேறத் தக்கதான
சூட்சுமமும் பெண்களிடம் அமைந்ததன்றோ!
கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள்!
புல்லென்றே நினைக்கின்றீர் மனைவிமாரைப்
புருஷர்களின் உபயோகம் பெரிதென்கின்றீர்!
வல்லவன்பே ரறிஞன்ஷா வார்த்தைகேட்டீர்
மனோபாவம் இனியேனும் திருந்தவேண்டும்.
இல்லையெனில் எதுசெயலாம்! பெண்ஆண்என்ற
இரண்டுருளை யால்நடக்கும் இன்பவாழ்க்கை!
பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில் உள்ளீர்!
உவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்நடத்த
உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்!
அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்!
அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்!
குவியுமெழிற் பெண்களுக்கே ஊறுசெய்யும்
குள்ளர்களே, கேட்டீரோ ஷாவின் பேச்சை!
அவனியிலே ஒருவனுக்கு மனைவியின்றேல்
அவனடையும் தீமையை யார் அறியக்கூடும்?
கவலையுற ஆடவர்கள் நாளும் செய்யும்
கணக்கற்ற ஊழல்களை யெல்லாம் அந்த
நவையற்ற பெண்களன்றோ விலக்குகின்றார்?
நானிலத்தில் மார்தட்டும் ஆடவர்கள்
சுவைவாழ்விற் கடைத்தேறத் தக்கதான
சூட்சுமமும் பெண்களிடம் அமைந்ததன்றோ!
கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள்!
புல்லென்றே நினைக்கின்றீர் மனைவிமாரைப்
புருஷர்களின் உபயோகம் பெரிதென்கின்றீர்!
வல்லவன்பே ரறிஞன்ஷா வார்த்தைகேட்டீர்
மனோபாவம் இனியேனும் திருந்தவேண்டும்.
இல்லையெனில் எதுசெயலாம்! பெண்ஆண்என்ற
இரண்டுருளை யால்நடக்கும் இன்பவாழ்க்கை!
என்பதே அந்தக்
கவிதை!
ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாக
ஆங்கில இலக்கிய
உலகம் கண்டெடுத்த
மிகச் சிறந்த
நாடக ஆசிரியர்
பெர்னார்ட் ஷா.
The Devil’s Disciple, The apple cart,
and the doctor’s dilemma போன்றவை அவருடைய
புகழ்பெற்ற நாடகங்களில்
சில.
இனி, பெர்னார்ட்
ஷாவின் சிந்தனைச்
செறிவுமிக்க பொன்மொழிகள்
சிலவற்றைக் காண்போம்.
1. இவ்வுலகத்திலிருந்து
தாம் பெற்றதைவிட
அதிகமாக யார்
இந்த உலகிற்குத்
திருப்பிக் கொடுக்கின்றார்களோ
அவர்களே பண்புள்ள
மனிதர்களாவர்.
2. எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையைவிட, எதையாவது செய்யும்போது ஏற்படும் தவறுகள் பயனுள்ளதும், கண்ணியமானதும் ஆகும்.
2. எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையைவிட, எதையாவது செய்யும்போது ஏற்படும் தவறுகள் பயனுள்ளதும், கண்ணியமானதும் ஆகும்.
3. மகிழ்ச்சி
என்ற உணர்ச்சி
இல்லாவிட்டால் வாழ்க்கை
சுமக்க முடியாத
பெரிய சுமையாகிவிடும்.
4. ஒரு
மனிதன் புலியைக்
கொன்றால் அது
வீரம்; அதுவே
ஒரு புலி
மனிதனைக் கொன்றால்
அது கொடூரம்.
5. புரட்சிகள் என்றுமே கொடுங்கோன்மை எனும் சுமையை (சமுதாயத்திலிருந்து) அகற்றிவிடவில்லை; மாறாக அவை அச்சுமையை ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கு இடமாற்றும் வேலையையே செய்திருக்கின்றன.
5. புரட்சிகள் என்றுமே கொடுங்கோன்மை எனும் சுமையை (சமுதாயத்திலிருந்து) அகற்றிவிடவில்லை; மாறாக அவை அச்சுமையை ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கு இடமாற்றும் வேலையையே செய்திருக்கின்றன.
6. மனிதன்
துன்பமாக இருப்பதற்குக்
காரணம் தான்
மகிழ்ச்சியாக இருக்கிறோமா
இல்லையா என்று
ஆராய்வதற்கு அவனுக்குக்
கிடைக்கும் ஓய்வே!
இவ்வாறு, சீர்திருத்தச்
சிந்தனைகளையும் சீரிய
கருத்துக்களையும் அஞ்சாமல்
தம் எழுத்துக்களிலும்
பேச்சுக்களிலும் எதிரொலிக்கச்
செய்தவர் பெர்னார்ட்
ஷா.
ஆசைகளற்ற மனம்,
நகைச்சுவை உணர்வு,
மது, புகை
முதலிய தீயபழக்கங்கள்
தவிர்த்த எளிய
வாழ்க்கைமுறை ஆகியவற்றைக்
கைக்கொண்டிருந்ததன் பயனாய்,
நீண்டகாலம் நல்ல
உடல்நலத்தோடும் மனவளத்தோடும்
வாழ்ந்த பெர்னார்ட்
ஷா, 1950-ஆம்
ஆண்டு நவம்பர்
2-ஆம் நாள்
தன்னுடைய 94-ஆம்
அகவையில் முதுமை
காரணமாக இயற்கை
எய்தினார்.
நண்பர்களே! அறிவுலக
மேதையாய்த் திகழ்ந்த
ஜார்ஜ் பெர்னார்ட்
ஷாவின் ஆக்கங்களை
நாமும் ஆர்வத்தோடு
படிப்போம்; அறிவை
விரிவு செய்வோம்!
No comments:
Post a Comment