பெயர்களைப் பார்த்ததும் சின்னப்
பையன் ஒருவனைப் பற்றியும், கொழுத்த மனிதன் ஒருவனைப் பற்றியும் ஏதோ சொல்லப் போகிறேன்
என்றுதானே நினைக்கிறீர்கள்?
நீங்கள் நினைப்பது சரிதான்…நான்
சொல்லப்போவது அவர்கள் இருவரையும் பற்றித்தான். ஆனால் அவர்களிருவரும் உயிருள்ள மனிதர்கள்
அல்லர்! பின்பு யார் என்கிறீர்களா? அவர்கள் இருவரும் ஒரு நாட்டையே பேரழிவுக்கு உள்ளாக்கிய
அணுகுண்டு வடிவிலான அரக்கர்கள் ஆவர்!
இனியும் புதிர் எதற்கு? சின்னப்
பையனும் (Little Boy),
கொழுத்த மனிதனும் (Fat Man) இரண்டாம் உலகப் போரின்போது
(World War II) அமெரிக்கா, ஜப்பான் நாட்டின்மீது வீசிய இரு அதிபயங்கர அணுகுண்டுகள்!
இவ்வணுகுண்டுகளை
ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின்மீது அமெரிக்கா வீசியதன் எழுபதாவது
ஆண்டாகும் (1945 – 2015) இது.
உலகையே உலுக்கிய இரண்டாம் உலகப்போர்
1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-இல் தொடங்கி 1945-ஆம் ஆண்டு முடிய நடைபெற்றது என்பதை நாமறிவோம்.
அணுகுண்டு வீச்சு, இன அழிப்பு என மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும்
விளைவித்த அப்போரையும் அதனால் ஏற்பட்ட கோர விளைவுகளையும் யாரே மறப்பர்?
இவ்வேளையில், இரண்டாம் உலகப்போர்
பற்றிச் சற்றே நாம் நினைவுகூர்வது, எந்தத் தருணத்தில் அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி
ஜப்பானைத் தாக்கியது என்பதை அறிந்துகொள்ள உகந்ததாய் இருக்கும்.
அச்சுநாடுகள் (Axis Alliance)
என்றும், நேச நாடுகள் (Allies Alliance) என்றும் உலக நாடுகள் இரு அணிகளாய்ப் பிரிந்து
இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டன. அச்சுநாடுகள் அணியில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்டவையும்,
நேச நாடுகள் அணியில் பிரான்ஸ், பிரிட்டன், போலந்து போன்றவையும் இணைந்திருந்தன. போலந்தின்
மீது (தேவையில்லாமல்) படையெடுத்து இவ்வுலகப்போருக்குப் பிள்ளையார்சுழி போட்ட ஜெர்மனியின்
சர்வாதிகாரியும், நாஜிக் கட்சியின் தலைவருமான (Leader of Nazi Party) அடால்ஃப் ஹிட்லர்,
போரின் தொடக்க காலங்களில் வெற்றிமேல் வெற்றியைக் குவித்தபோதிலும், ஐரோப்பா கண்டத்தையே
தன்வசப்படுத்திவிட வேண்டும் எனும் அவருடைய பேராசை, சோவியத் யூனியனின் (Union of
Soviet Socialist Republics) சர்வாதிகாரியும், அஞ்சாநெஞ்சருமான
ஜோசப் ஸ்டாலினால் தவிடுபொடியானது.
1942-ஆம் ஆண்டு தன் படைகளுடன்
ஜெர்மனியின் பெர்லின் நகருக்குள் நுழைந்த சோவியத் யூனியன், அதனைக் கடுமையாகத் தாக்கத்
தொடங்கியது. ஒரு சில மாதங்களே நீடித்த இச்சண்டையில் படுதோல்வியைச் சந்தித்த ஜெர்மனி,
நிபந்தனை ஏதுமின்றி சோவியத் யூனியனிடம் சரணடைந்தது. (ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர்
சரணடையாமல் தற்கொலை செய்துகொண்டார் என்றும் தப்பியோடித் தலைமறைவாகிவிட்டார் என்றும்
இருவேறு விதமான வதந்திகள் இன்றளவும் காற்றில் உலாவருகின்றன.)
இதற்கிடையில் 1941-ஆம் ஆண்டு டிசம்பர்
7-ஆம் தேதி (அச்சு நாடுகளில் ஒன்றான) ஜப்பான் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய்த் தீவிலுள்ள
முத்துத் துறைமுகத்தை (Pearl Harbor) தாக்கியது; அங்கு நிறுத்திவைக்கப்படிருந்த அமெரிக்காவின்
போர்க்கப்பல்கள், விமானங்கள் ஆகியவை இத்தாக்குதலால் பெருமளவில் சேதமடைந்தன. முத்துத்
துறைமுகத்தைத் தாக்கியதன் மூலம் அமெரிக்காவுக்குச் சரியான புத்தி புகட்டிவிட்டதாக நினைத்த
ஜப்பான் அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து அமெரிக்காவின் விமானத்தளமொன்றையும்
தாக்க, அதுவரை இரண்டாம் உலகப்போரில் கலந்துகொள்ளாமல் நல்லபிள்ளையாக(!) ஒதுங்கியிருந்த
அமெரிக்காவும் களத்தில் குதித்தது. அப்போது பிடித்தது ஜப்பானுக்கு ஏழரைச்சனி!
ஆம்! ஜப்பானைப் பழிக்குப்பழி வாங்க
நேரம் பார்த்துக்கொண்டும், அதற்காக அணுகுண்டுச் சோதனைகள் நடத்திக்கொண்டுமிருந்த அமெரிக்கா
1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி, ஜப்பானின் தரைப்படைகளுக்கான முக்கிய ராணுவத் தளவாட
மையமாகவும் (one of the chief supply depots for the Japanese army), அந்நாட்டின் இரண்டாவது பெரிய
நகரமாகவும் திகழ்ந்த ஹிரோஷிமாவின் மீது ’சின்னப்
பையன்’ (Little Boy) (இப்பெயர் அமெரிக்க முன்னாள் அதிபர் ரூஸவெல்ட்டைக்
(Franklin Roosevelt) குறிக்கும்
என்று கருதப்படுகிறது!) எனும் பெயர்கொண்ட அணுகுண்டை வீசியது. அதற்கடுத்த ஓரிரு நாட்களிலேயே
அதாவது ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஜப்பானின் மற்றொரு தொழில்நகரமான நாகசாகியின்மீது ’கொழுத்த மனிதன்’ (Fat Man) எனும் பெயர்கொண்ட
மற்றொரு அணுகுண்டையும் வீசி ஜப்பானில் மிகப்பெரிய அழிவை உண்டாக்கியது.
கொழுத்த மனிதனைவிடச் சின்னப் பையன்
வீரியத்தில் குறைவாக இருந்தபோதிலும் அவனே பெருத்த சேதத்தை உண்டாக்கினான் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தோராயமாக, 2 இலட்சத்து 15 ஆயிரம் பேர் இவ்விருக்குண்டு வெடிப்புகளினால் ஜப்பானில் இறந்துபோனார்கள்
என்று கணக்கிடப்பட்டுள்ளது. எதிர்பாராத இக் குண்டுவெடிப்புகளால் தான் கனவிலும் கருதியிராத
பேரழிவைச் சந்தித்த ஜப்பான், ஆகஸ்ட் 14-ஆம் தேதி நிபந்தனை ஏதுமின்றி நேச நாடுகள் கூட்டணியிடம்
சரணடைந்தது.
இரண்டாம் உலகப்போர் முடிந்து இப்போது
பல பத்தாண்டுகள் கடந்துவிட்டபோதினும், அப்போரும் அதனால் ஏற்பட்ட கோர அழிவுகளும் மாறாத
வடுக்களாய் இன்றும் ஜப்பான் மக்கள் மனத்தில் தங்கிவிட்டன என்றே கூறவேண்டும்.
’வாளெடுத்தவன் வாளால் மடிவான்’
என்ற பழமொழிக்கேற்பப் போரில் ஈடுபடும் நாடுகள் என்றும் ஆதாயத்தைவிட அழிவையே அதிகம்
சந்தித்திருக்கின்றன என்பது வரலாறு நமக்குக் காட்டும் உண்மையாகும்.
’ஒருவனை யொருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று; இவ்வுலகத் தியற்கை’ என்று மனிதனின் போர்க்குணத்துக்குப் புறநானூறு நியாயம்
கற்பிக்க முனைந்தாலும், அன்பும் அருளும், எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் எனும்
நல்லுள்ளமும் பெற்றிருக்கும் மாந்தர், மனிதத்தை மரி(ற)க்கச் செய்யும் இப்போர்களைக்கண்டு
இரத்தக் கண்ணீர் வடிக்கவே செய்கின்றனர்.
ஆகையால், அழிவுக்கு வித்திடும்
போரையும் பகைமையையும் ஒழித்து, உலக நாடுகள் இனியேனும் ஒன்றுபட்டால் மக்கள் அனைவர்க்கும்
உண்டு நல்வாழ்வு!
No comments:
Post a Comment