Tuesday, August 11, 2015

நரையில வாகுதல் யாங்ஙனம்?


மனித வாழ்க்கையில் குழந்தைப் பருவம் தொடங்கிக் கிழப் பருவம் வரை பருவங்கள் பல. பருவத்திற்கேற்ப உருவத்தில் ஏற்படும் மாற்றங்களும் பலப்பல. வயது ஏற ஏற நரை, திரை, மூப்பு, பிணி போன்ற பலவும் தோன்றி இறுதியில் சாக்காடு வாய்க்கும் என்பது பொதுவான வாழ்வியல் நியதி.

அவ்வகையில், தோற்றத்தில் முதுமையை முதலில் தொடங்கிவைப்பது நரையே ஆகும். ஆண் பெண் பாகுபாடின்றி இருபாலருமே வாழ்வில் ஒருநாள் நரையைச் சந்திக்க வேண்டியிருக்கின்றது.
ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக, நரையற்ற தோற்றத்தோடு நடுவயதைக் கடந்த மனிதர் ஒருவர் அன்று பாண்டிய நாட்டில் வாழ்ந்திருக்கின்றார். அவரது இளமைத்தோற்றம் கண்டு மலைத்த அவர் வயதையொத்த ஆடவர்கள் அவரிடம் வந்து மெதுவாக, ”ஐயாநாங்களும்  உம் வயதினரே; எங்களுக்கெல்லாம்கயல்முள்போன்று தலைமுடி நரைத்துவிட்டது; ஆனால் உமக்கு மட்டும் எப்படி ஒரு முடிகூட நரைகாணாது கருகருவென்று இருக்கிறது?” என்று ஏக்கத்தோடு வினவியிருக்கின்றனர்.

அதற்கு அந்த மனிதர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? ”எனக்கும் நரைத்த தலைதான்; அது வெளியில் தெரியாமல் இருக்கத் தலைமைபூசியிருக்கிறேன்என்றுதானே? அதுதான் இல்லை!
சான்றோர்களே! நரை திரைகட்குக் காரணம் முதுமையன்று; மனக் கவலையே; எனக்குக் கவலை கிடையாது. அதற்குக்  காரணம்  என் குடியிலோ,  ஊரிலோ,  நாட்டிலோ கவலையுண்டாவதற்குரிய சூழ்நிலையே இல்லை;  எவ்வாறெனின், என் வீட்டில் என் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பியவர்கள்; என் பணியாளர்கள் என் குறிப்பறிந்து நடப்பவர்கள்; எம்நாட்டு வேந்தனோ அறமல்லன செய்யான்; அனைத்திற்கும் மேலாய் எங்கள் ஊரில் ஆன்றவிந் தடங்கிய கொள்கையையுடைய சான்றோர் பலர் உளர். இப்படித் திருத்தமான சமூகம் வாய்த்தமையால்தான் நான் வருத்தமற்று இருக்கிறேன். இவையே என் நரையற்ற இளமைத் தோற்றத்திற்குக் காரணங்கள்என்று கூறி அனைவரையும் வியப்பில் வாய்பிளக்க வைத்திருக்கிறார்.

யாண்டுபல வாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின்
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையரென் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே. (புறம்: 191)

அந்த அதிசய மனிதர் யார் என்று எண்ணுகிறீர்கள்? உங்கள் ஊகம் சரிதான்! அவர்தான் சோழமன்னன் கோப்பெருஞ்சோழனின் உயிர்நண்பராகியபிசிராந்தையார்எனும் நல்லிசைப் புலவர்!

சரி, ஆந்தையார் கூறியது உண்மையா இல்லையா என்பதை இன்றைய அறிவியலின் துணையோடு ஆராய்வோமா!

இன்றைய அறிவியல் கூறுவதாவது:

கவலைகளும் மனவுளைச்சல்களும் முடியை நரைக்க வைப்பதில் நேரடிப்பங்கு வகிக்காவிட்டாலும், ’நரைத்தல்எனும் நிகழ்வைத் துரிதப்படுத்துவதில் அவற்றின் பங்களிப்பை மறுக்கமுடியாதுஎன்கிறது இன்றைய அறிவியல். இஃது ஆந்தையாரின் கூற்றை உறுதிப்படுத்துவதாகத்தானே உள்ளது?

இனி, தலைமுடியைப் பற்றியும் அது நரைப்பது எவ்வாறு என்பதைப் பற்றியும் அறிவியல்ரீதியாக அறிந்துகொள்வோம்!

முடி வளர்ச்சிக்குக் காரணமாயிருப்பது நம் தலையிலுள்ள ஃபாலிக்கிள் (follicle) எனும் உறுப்பே ஆகும். முடிவளர்ச்சி என்பது பல்வேறு சுழற்சி நிலைகளை (cycles) உள்ளடக்கியது. அவை, வளர்நிலை (anagen), மெதுவான வளர்நிலை (catagen), ஓய்வுநிலை (telogen) ஆகியவை. முதல்நிலையில் துரிதமாகவும், (முதல் நிலையின் இறுதிக்கட்டமான) இரண்டாம் நிலையில் சற்று மெதுவாகவும், மூன்றாம் நிலையில் வளர்ச்சியின்றி ஓய்வுநிலையிலும் தலைமுடி இருக்கும்.

மனித உடலுக்கும், முடிக்கும் நிறம் தருவதுமெலனின்’ (melanin) எனும் நிறமியே. முடியைத் தோற்றுவிக்கும் ஃபாலிக்கிளில் காணப்படும் இந்த நிறமி, யூமெலனின் (eumelanin), ஃபியோமெலனின் (pheomelanin), மற்றும் நியூரோமெலனின் (neuromelanin) என்று மூன்றுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

யூமெலனினானதுபழுப்பு யூமெலனின்’ (brown eumelonin), ’கறுப்பு யூமெலனின்’ (black eumelonin) என்று மேலும் இருவகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. கறுப்பு யூமெலனின் கருமை நிறத்தையும், பழுப்பு யூமெலனின் பழுப்பு நிறத்தையும் முடிக்குத் தருகின்றன. ஃபியோமெலனின் எனும் மற்றொருவகை மெலனின்சிவப்பு வண்ணத்தைத் தலைமுடிக்குத் தருகின்றது. மூன்றாவது வகையைச் சார்ந்தநியூரோமெலனின்மூளையில் மட்டும் காணப்படும் ஒன்றாகும். இதன் உயிரியல்சார் செயற்பாடுகள் குறித்துத் தெளிவாக இதுவரை வரையறுக்க இயலவில்லை. (Its biological functions are still obscure).

இந்தியர்களைப் பொறுத்தவரை நம் தலைமுடி கறுப்பாக இருக்கக் காரணம் நம் உடலிலுள்ள கறுப்பு யூமெலனின் நிறமிகளே. இந்த நிறமிகளின் உற்பத்தி குறையும்போது தலைமுடி நரைக்கத்தொடங்குகின்றது. பெரும்பாலும் இது மத்திய வயதில்தான் தொடங்குமென்றாலும், மரபு காரணமாகவும், வேறுசில புறக்காரணங்களாலும் 20 அல்லது 30 வயதிலேயேகூட தலைமுடி நரைக்கத் தொடங்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும் வயதான தோற்றத்தைத்தரும் நரையைப் பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை. எனவே கடைகளில் விற்கப்படும் பல்வேறு தலைச்சாயங்களை உபயோகித்து நரையை மறைக்கத் தொடங்குகின்றனர். அது தவறில்லை எனினும், அச்சாயங்களில் கலக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான வேதிப்பொருள்கள் தலைமுடிக்கும், உடலுக்கும் ஊறுவிளைவிக்காதவைதானா என்பதைத் தோல்மருத்துவர் (dermatologist) உதவியுடன் உறுதிசெய்துகொண்டு பயன்படுத்துவதே நல்லது.

செயற்கைச் சாயங்களைப் பயன்படுத்த விரும்பாதோர், இயற்கை மூலிகைகளான கறிவேப்பிலை, நெல்லிக்காய், மருதாணி முதலியவற்றை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்படும் எண்ணெய்கள், சாயங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி நரைக்குத் திரையிட்டு வருவதைக் காண்கிறோம்.

நண்பர்களே! இன்றைய பரபரப்பான வாழ்க்கைமுறையில் நாம் அனைவருமே நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். என்னதான் நமக்குத்தலைக்குமேல்வேலை இருந்தாலும், தலைமேல் இருக்கும் முடியின்மீதும் நாம் அக்கறையும் கவனிப்பும் கொள்வதும், பதற்றமும் மனஅழுத்தமுமற்ற வாழ்க்கையைப் பின்பற்றுவதும் இன்றையமையாதவை ஆகும். இவ்வாறு வாழ்ந்தால் தலைப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்; ’கருகருமுடியோடு களிப்பாயிருக்கலாம்.



No comments:

Post a Comment