Sunday, December 13, 2015

கானப்பேர் தந்த மானவீரர்கள்!

சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த பாண்டிய நாடு வீரத்துக்கும் விளைநிலமாய்த் திகழ்ந்தது. அந்நாட்டில் ஆட்சிபுரிந்த குறுநில மன்னர்கள் பலர் பெருவீரமும், அதற்கிணையான ஈரமும் மிக்கவர்களாய் வாழ்ந்திருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாய் அறிகின்றோம்.

அவ்வீர மண்ணில் நிலவளமும் நீர்வளமும் நிறைந்த ஊர்கள் பலவுண்டு. அத்தகைய வளமிகு ஊர்களில் ஒன்றுதான் ‘கானப்பேர்.’ எழிலால் மட்டுமின்றி எயிலாலும் (மதில்) சிறப்புப்பெற்றது அவ்வூர். அப்பகுதியை ஆண்டுவந்தான் குறுநில மன்னன் ஒருவன். அவன் பெயர் ’வேங்கைமார்பன்’ என்பதாகும். தோள்வலியும் வாள்வலியும் கொண்ட பெருவீரனான அவன், வான்தொடும் உயரத்தோடு கூடிய எயிலையும், காவற்காடுகளையும் அரணாய்க் கொண்ட வளமனையில் வாழ்ந்துவந்தான். வன்மையும் வனப்பும் மிக்க அந்த எயிலானது ‘கானப்பேரெயில்’ என்று இலக்கியங்களில் குறிக்கப்படுகின்றது.

அந்நாளைய அரசர்கள், தம்மோடு முரணியோரிடமிருந்து (பகைவர்) தம்மையும், தம் நாட்டையும் காப்பதற்காகப் பல்வேறு அரண்களைக் கொண்டிருந்தனர். அவற்றில் சில இயற்கையாய் அமைந்தவை; சில செயற்கையாய் அரசர்களால் அமைக்கப்பட்டவை.

”மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்” என்று அரண்களை அழகாய் வகைப்படுத்துவார் வள்ளுவப் பெருந்தகை. அவ்வகையில், நாட்டைச் சுற்றியிருக்கும் கடல், மலை, காடு போன்றவை இயற்கையாய் ஒரு நாட்டிற்கு அமைந்திருக்கும் அரண்கள். அவையேயன்றி, பெரிய மதில்கள், அகழிகள் (எனும் செயற்கை நீர்நிலைகள்) முதலியவற்றை ஏற்படுத்தியும் தங்கள் நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவர் அரசர்கள்.


பேரெயிலைப் பாதுகாப்பாய்க் கொண்டு ஆட்சி புரிந்ததாலேயே தருக்கும் செருக்கும் மிக்கவனான் வேங்கைமார்பன். அப்போது மதுரையில் ஆட்சிபுரிந்துவந்தான் பாண்டிய மன்னன் ’உக்கிரப்பெருவழுதி’ என்பான். உக்கிரமான கோபத்தோடு பகைவர்களைப் பந்தாடும் மாவீரம் பொருந்தியவன் அவன். இப்பாண்டிய மன்னன் காலத்தில்தான் அதிசயிக்கத்தக்க வகையில் தமிழகத்தின் மூவேந்தரும் ஒற்றுமையாய் இருந்திருக்கின்றனர்(!). இதனைக் கண்ணுற்று மகிழ்ந்த அவ்வையார் எனும் பெண்பாற்புலவர் இதுபோன்ற ஒற்றுமையோடு இவர்கள் என்றும் வாழவேண்டும் என்று வாழ்த்திப்பாடிய பாடலொன்று புறநானூற்றில் (புறம்: 367) இடம்பெற்றுள்ளது.

வீரமும், பெருவேந்தர்களின் நட்பும் கொண்ட வழுதியோடு யாது காரணத்தாலோ வேங்கைமார்பனுக்குக் கடும்பகை ஏற்பட்டுவிட்டது. அதன் விளைவு பெரும்போராய் வெடித்தது. கானப்பேரில் நிகழ்ந்த அப்போரில் உக்கிரப்பெருவழுதி வலிமைமிகு கானப்பேரெயிலை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றிவிட, வேங்கைபோல் வீரப்போர் புரிந்தும் தன் வீரம் வென்றியை விளைவிக்காததை உணர்ந்த வேங்கைமார்பன், மாறுகோலம் பூண்டு கானப்பேரைக் கடந்து ஓடிமறைந்தான்!

வெற்றிவாகை சூடிய பாண்டியனின் மீனக்கொடி கானப்பேரில் உயரப் பறந்தது!

”உக்கிரப் பெருவழுதியால் கைப்பற்றப்பட்ட கானப்பேர், கொல்லனுடைய காய்ச்சிய இரும்பில்பட்ட நீர்த்துளி போன்றது; வெம்மையான இரும்பால் உண்ணப்பட்ட நீர் எவ்வாறு மீளாதோ அதுபோல் கானப்பேரும் இனி வேங்கைமார்பனிடம் மீளாது!” என்று வழுதியின் வெற்றிச் சிறப்பை வியந்து பாடியுள்ளார் ஐயூர் மூலங்கிழார் எனும் நல்லிசைப் புலவர்.

புலவரை யிறந்த புகழ்சால் தோன்றல்
நிலவரை இறந்த குண்டுகண் கழி
வான்தோய் வன்ன புரிசை விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங்குறும்பு உடுத்த
கானப் பேரெயில்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புண் நீரினும் மீட்டற்கு அரிதென
வேங்கை மார்பன் இரங்க வைகலும்
ஆடுகொளக் குறைந்த தும்பைப் புலவர்
பாடுதுறை
முற்றிய கொற்ற வேந்தே
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே. (புறம்:21)

அதுமுதல், உக்கிரப்பெருவழுதி ’கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி’ என்று போற்றப்பட்டான். போரில் வெற்றித் திருமகளைத் பற்றிடத் தவறினாலும், கானப்பேர் தந்த வேங்கையாம் வேங்கைமார்பனின் வீரம் வழுதியின் வீரத்துக்குக் குறைந்ததன்று!

எயிலால் பெயர்பெற்ற கானப்பேர், ’திருக்கானப்பேர்’ எனும் பெயரோடு பாண்டிநாட்டுச் சிவத்தலங்களுள் ஒன்றாகவும் விளங்கும் பெருமைக்குரியது.

காலம் மாறியது; கூடவே கானப்பேரின் பெயரும் மாற்றம் கண்டது. ஆம், சங்க காலத்தில் கானப்பேராக இருந்த அவ்வூர், பின்னாளில் ’காளையார்கோயில்’ என்று வழங்கப்படுவதாயிற்று. பெயர் மாறியபோதினும் அப்பகுதி மக்களின் வீரம் மாறவில்லை.
காளையார்கோயிலின் வீர வரலாற்றிற்குச் சிறப்புச் சேர்த்தனர் சகோதரர்கள் இருவர்! 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராகப் புரட்சிசெய்துப் பரங்கியரை எதிர்த்த முன்னோடிகளாய்த் தமிழத்தில் திகழ்ந்தவர்கள் இவர்களே. அஞ்சாமையைத் தம் உடைமையாய்க் கொண்டிருந்த இவ்வீரர்கள், தம் நெஞ்சுரத்தாலும் நாட்டுப்பற்றாலும் வெள்ளையருக்குச் சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்தனர்.

அவர்கள் வேறுயாருமல்லர்! சிவகங்கைச் சீமையின் சிங்கங்களாய் இன்றளவும் போற்றப்படும் ’மருது சகோதரர்களே’ அவர்கள்! இவ்விருவரில் மூத்தவர் ’பெரிய மருது’ (இவருக்கு வெள்ளை மருது என்ற பெயருமுண்டு) என்றும், இளையவர் ’சின்ன மருது’ என்றும் மக்களால் அழைக்கப்பட்டிருக்கின்றனர். (In his book ‘A History of Tinnevelly’, Bishop R. Caldwell says, Marudu was their family title, not a personal name). காட்டுவேட்டையில் ஆர்வம் மிக்கவராயிருந்த பெரிய மருது, நாட்டு நிர்வாகத்தில் சிறிதும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆகவே, ஆட்சிப்பொறுப்பை மாட்சியோடு செய்துவந்தவர் சின்ன மருதுவே!

காளையார்கோயில் வட்டத்திலுள்ள ’சிறுவயல்’ எனும் ஊரில் அரண்மனை அமைத்து ஆட்சிசெய்துவந்த சின்ன மருது, குடிகள் போற்றும் கோனாய்த் திகழ்ந்திருக்கின்றார். மருதுவை நாடித் தமிழ்ப்பாவலர்கள் பலரும் வந்து பாடிப் பரிசில் பெற்றுச் சென்றிருக்கின்றனர். மருது சகோதரர்கள் ஆட்சியில் காவல் சிறப்பாய் இருந்தமையால் மக்கள் கவலையேதுமின்றிக் களிப்போடு வாழ்ந்திருந்தனர். ”வெள்ளிநிலா வானில் விளையாடும் நள்ளிரவு வேளையில் காட்டுவழியில் சென்றால்கூடக் கள்ளர்பயம் ஏதுமில்லை எம் தலைவனின் ஆட்சியில்” என்று குடிகள் சின்ன மருதுவைக் கொண்டாடினர். சகோதரர்களை ’மருதுபாண்டியர்’ என்றே மக்கள் அன்போடு அழைத்துவரலாயினர்.

மருதுபாண்டியர், காளையார்கோயிலில் ஆட்சிபுரிந்துவந்த அதேசமயத்தில், நம் இந்தியாவோ அந்நியரான ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. மருதுவின் ஆட்சியின்போது, அவர் மாளிகையில் விருந்தினனாய்த் தங்கியிருந்த ஜெனரல் வெல்ஷ் (General Welsh) எனும் ஆங்கிலப் படைத்தலைவன் ஒருவன் தன்னுடைய நூலில் சின்ன மருதுவைப் பற்றிப் பின்வருமாறு செப்புகின்றான்:

”சின்ன மருது காட்சிக்கு எளியவர்; கடுஞ்சொல் அற்றவர்; கருணை மிக்கவர். இவரது தலையசைப்பையே சட்டமாக மதித்தனர் மக்கள். இவருடைய அரண்மனையில் ஒரு காவலாளிகூடக் கிடையாது. யார் வேண்டுமானாலும் உள்ளே செல்லலாம்; வெளியே வரலாம். அத்துணைச் சுதந்திரம் அங்கே நிலவியது!”

அடையா நெடுங்கதவமாய் அனைவருக்கும் திறந்தே இருந்திருக்கின்றது மருதுவின் அரண்மனைவாயில் என்பதை மேற்காணும் விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன அல்லவா?

நாற்பது மைல் சுற்றளவுள்ள மருது சகோதரர்களின் நாட்டின் நடுவே அமைந்திருந்தது காளையார் கோட்டை. அதனைச்சுற்றி ஆடு, மாடுகளைத் தம் செல்வமாய்க் கொண்ட முல்லைநிலத்து மக்கள் பல்லாயிரவர் வாழ்ந்திருந்தனர். வீரத்தில் தம் தலைவனுக்குச் சற்றும் சளைக்காத அம் மறக்குடியினர், மாற்றார் படையெடுத்துவந்தால் வேலையும், வாளையும், குத்துக்கோலையும், துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு புறப்படுவர் போர்முனை நோக்கி; அழிப்பர் பகைவர் படையைக் கடுமையாய்த் தாக்கி!

மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரரான ஊமைத்துரையோடு (இவர் கட்டபொம்மனின் சகோதரர்) நட்பு பூண்டிருந்தனர். இவர்கள் அனைவருமே அன்னை பூமியை அந்நியனுக்கு அடகுவைக்க விரும்பாத மானவீரர்கள் ஆவர். ஆதலால் அந்நியரின் சீற்றத்துக்கு ஆளாயினர்; தமக்கு அடிபணிய மறுத்த காளையார்கோயிலைக் கைப்பற்ற விழைந்தனர் வெள்ளையர். ஆனால் அரணமைந்த அவ்வூரைப் பிடிப்பது அத்துணைச் சுலபமான காரியமாய் இருக்கவில்லை அவர்களுக்கு!

வழிமறித்துநின்ற காடுகளைக் கொன்றாலொழியக் கோட்டையை நெருங்கமுடியாது என்ற நிலை. பல மைல் தூரத்துக்குப் பரவியிருந்த அந்தக் காட்டையழிப்பது வெள்ளையருக்குச் சாத்தியப்படாத நிலையில், அக்காட்டில் மறைந்திருந்த மருது சகோதரர்களும், அவர்தம் மக்களும் ஆங்கிலப்படையைக் கடுமையாய்த் தாக்கினர். இதனால் மனச்சோர்வுற்ற ஆங்கிலேயர், நேரிய வழியில் மருது சகோதரர்களை வீழ்த்தமுடியாது என்றுணர்ந்து, தமக்கே உரித்தான நரித்தனத்தால் அவர்களை வெல்லக் கருதினர். அப்பகுதியைச் சேர்ந்த மறக்குலத் தலைவன் ஒருவனை அவ் வட்டத்திற்குரியவன் என்று பட்டங்கட்டி அவன் மூலமாக மருது சகோதரர்களை மடக்கிப் பிடித்தனர் என்று சொல்லப்படுகின்றது. (மருதுசகோதரர்கள் பிடிபட்டது குறித்து வேறுவிதமான செய்திகளும் சொல்லப்படுகின்றன.)

பிடிபட்டதற்கு யார் அல்லது எது காரணமாயிருந்தபோதிலும், தம் இன்னுயிரைத் தந்து, தமிழனின் மானத்தைத் தலைநிமிரச் செய்தவர்கள் இச் சோதரர்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

ஆங்கிலேயரிடம் பிடிபட்டபோது, அன்னை பூமியின் விடுதலைக்காகத் தாம் உயிரழிக்கவிருப்பது குறித்துப் பெருமிதமும் மகிழ்ச்சியுமே அடைந்தனர் மருது சகோதரர்கள். அதேநேரத்தில், எக்காரணமுமின்றித் தம் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பிள்ளைகளைக் கும்பினியார் கொல்லமுயன்றதை ஏற்கமுடியாதவர்களாய், “ஐயா! வயதில் இளையவர்களான இப்பிள்ளைகள் உமக்குச் செய்த தீங்குதான் என்ன? இவர்களை எதற்காகக் கொல்ல முற்படுகின்றீர்?” என்று வெள்ளையரை வினவியிருக்கின்றனர்.

மலையமானின் சின்னஞ்சிறு பிள்ளைகளை (மலையமான்மீது கொண்ட பகையால்) யானையின் காலால் இடறமுற்பட்ட கிள்ளிவளவனிடம் இதே போன்றதொரு கேள்வியை எழுப்பினார் கோவூர்கிழார் எனும் புலவர் பெருந்தகை. வளவன் சிந்தித்தான்; தகப்பனோடு ஏற்பட்ட பகைக்குப் பாவமேதும் அறியாத பச்சிளம் பிள்ளைகளைப் பலியிடுவது முறையன்று என்று தன்னுடைய கொலை முயற்சியைக் கைவிட்டான் என்கின்றது சங்க இலக்கியம். ஆனால் அத்தகைய கருணையுள்ளத்தை இரக்கமேயற்ற அரக்கர்களான வெள்ளையரிடம் நாம் எதிர்பார்க்க முடியுமா? மருது சகோதரர்களின் கோரிக்கை, செவிடன் காதில் ஊதிய சங்காய்ப் பயனற்றுப்போனது.

1801-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டுக் கொன்றது வெள்ளை அரசு. இவர்களோடு, ஊமைத்துரை, மருது சகோதரர்களின் உறவினர்கள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என 500-க்கும் மேற்பட்டோரை ஆங்கில அரசாங்கம் ஈவு இரக்கமின்றிக் காவு கொடுத்திருக்கின்றது. நாட்டு விடுதலைக்காக எத்துணை வீரர்களைக் களபலியாக்கியிருக்கின்றோம் என்பதை அறிய நெஞ்சு பதைக்கின்றது.

நண்பர்களே! கானப்பேரின் ’பெயரை’ இலக்கியத்தில் நிலைநிறுத்திய பெருமைக்குரியவன் வேங்கைமார்பன் என்றால், காளையார்கோயிலாக மாறிய அவ்வூரை இந்திய வரலாற்றின் பொன்னேடுகளில் இடம்பெறச்செய்த பெருமைக்குரியவர்கள் மருது சகோதரர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.




Friday, November 6, 2015

வையம் போற்றும் வரகவி

”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது; மானிடராய்ப் பிறந்த காலையின் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது” என்றார் தமிழ்மூதாட்டி அவ்வை. ஞானமும் கல்வியும் வாய்த்த மானிடனே சிறந்த படைப்பாளனாய்ப் பரிணமிக்கின்றான். சிறுமை கண்டு பொங்குகின்றான்; கண்மூடிப் பழக்கமெல்லாம மண்மூடிப் போக வேட்கை கொள்கின்றான். தன் வேட்கையை வெளிப்படுத்த அவன் தேர்ந்தெடுக்கும் சாதனமே மொழி.

மொழியின் வடிவங்கள் பல. அவற்றில் முதன்முதலில் மனிதன் பயன்படுத்தியது பாடல் எனப்படும் கவிதை வடிவமே. ஏனெனில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலைக் கவிதையில்தான் செம்மையாய்ச் செய்யவியலும். கபிலரும் பரணரும் நக்கீரரும் கம்பரும் சேக்கிழாரும் நம் உள்ளத்தைப் பிணித்தது தீஞ்சுவைக் கவிதைகளாலேயே.

நம் செந்தமிழ்ப் புலவர்களைப்போல் மேற்குலகப் பாவலர்களிலும் தம் கவிஆளுமையால் உலகைக் கட்டியோர் பலராவர். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் பெருங் கவிஞர் ஜான் மில்டன். ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இடத்தில் இன்றளவும் வைத்துப் போற்றப்படுபவர் இப்புலவர் பெருமானே. பெருங்காப்பியங்கள், குறுங்காப்பியங்கள், உரைநடை நூல்கள், கடிதங்கள், நாடகங்கள், இரங்கற்பாக்கள் என மொழியின் அனைத்து வடிவங்களையும் தம் ஏட்டில் வடிப்பதில் இணையற்ற வல்லவராய்த் திகழ்ந்தார் இக் கவிஞர்.

1608-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9-ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள இலண்டன் மாநகரில் ஜான் மில்டன் மூத்தவருக்கும் (senior), சாரா ஜெஃப்ரி அம்மையாருக்கும் மகனாய்த் தோன்றினார் ஜான் மில்டன் (ஆம், தந்தையின் பெயரே இவர் பெயரும்). புதுமைச் சிந்தனைகள் கொண்டவராய் விளங்கிய மில்டனின் தந்தை, கத்தோலிக்கக் கிறித்தவத்தைச் சார்ந்திருந்த தம் தந்தையிடமிருந்து (மில்டனின் பாட்டனாரிடமிருந்து) இளைஞராயிருக்கும்போதே பிரிந்துவந்து புரோட்டாஸ்டாண்டு கிறித்தவத்தைப் பின்பற்றத்தொடங்கினார் (He belonged to extreme Protestantism or Puritanism). பத்திரம் எழுதுபவராய்ப் பணியாற்றிய அவர் பாப்புனைவதிலும் நூல்களைப் படிப்பதிலும் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். ’சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ எனும் பொன்முடியாரின் பொன்மொழிக்கேற்ப மகன் மில்டனைச் சிறந்த புலவனாய்க் காணவேண்டும் எனும் வேணவா கொண்டிருந்தார் அத்தந்தை. ஆயினும், தன்மகன் கவிச்சிங்கமாய்த் திகழ்ந்து உலக மாகவிகளின் வரிசையில் இடம்பிடிக்கப்போகின்றான் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கல்விமீது காதல்கொண்ட மில்டன், எப்போதும் புத்தகங்கள் படிப்பதையே தன் பொழுதுபோக்காய்க் கொண்டவராம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறித்து கல்லூரியில் (Christ's College) தன் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் மில்டன். கல்லூரிக் காலத்திலேயே கவிதைகள் எழுதும் பழக்கம் அவரிடம் அரும்பத் தொடங்கிவிட்டது. கிறித்து பிறந்தநாள் காலைக்கொண்டாட்டம் (Ode on the morning of Christ’s Nativity) எனும் கும்மிப்பாட்டு தன் கல்லூரி நாட்களில் அவர் எழுதியதாகும்.

’லிசிடஸ்’ (Lycidas) எனும் இரங்கற்பா (Elegy) மறைந்த தன்னுடைய நண்பர் எட்வர்டு கிங் (Edward King, a college mate of Milton’s in Cambridge) என்பவரின் நினைவாய் மில்டன் எழுதியது. இவ்விரங்கற்பா ஆங்கில இலக்கிய இரங்கற்பாக்களிலேயே தலைசிறந்த ஒன்றாய்க் கருதப்படுகின்றது. முல்லை நிலத்தை வனப்புடன் வருணிக்கும் அர்கேடிஸ் (Arcades)  எனும் கவிதையொன்றையும் எழிலுறத் தீட்டியுள்ளார் மில்டன்.

சமய நம்பிக்கைகளில் சீர்திருத்தம் வேண்டும் என விரும்பிய மில்டன், தன் தந்தையைப் போலவே புரோட்டாஸ்டண்ட் கிறித்தவத்தைப் பின்பற்றினார். சமய நூல்களின்பால் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றின் காரணமாய், விவிலிய நூலின் அருட்பகுதிகள் சிலவற்றை மிக அழகான கவிதைகளாய் வடித்திருக்கின்றார் அவர்.

ஆங்கிலக் கவிஞர்களிலேயே அதிகம் கற்றவராய்க் கூறப்படும் மில்டன் (Man of letters), ஆங்கிலம் மட்டுமல்லாது, கிரேக்கம், இலத்தீன், இத்தாலியம், எபிரேயம், பிரெஞ்சு, இசுபானியம் எனப் பலமொழிகளில் நல்ல தேர்ச்சியும் திறனும் பெற்றிருந்தார். இலத்தீனைத் தாய்மொழியாகக் கொண்டவர்களோடு (நூல்களின் வாயிலாய்ச்) சொற்போர் புரியும் அளவிற்கு அதில் புலமை வல்லாராய் வாழ்ந்திருக்கின்றார் மில்டன்.

தன் அறிவை விரிவுசெய்ய விரும்பிய அப்புலவர் பெருந்தகை, 1630-களின் பிற்பகுதியில், ஐரோப்பாவில் கலை அறிவியல் ஆகியவற்றின் தாயகமாக விளங்கிய கிரேக்கம், இத்தாலி போன்ற நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போதுதான் புகழ்பெற்ற வானியல் அறிஞரான கலிலியோவை அவர் சந்தித்தார். ஆயினும், தன் சுற்றுப்பயணத்தை மேலும் நீட்டிக்க முடியாதபடி, இங்கிலாந்தில் புரட்சி தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படுவதை நாளிதழ்கள் வாயிலாய் அறிந்த மில்டன், உடனடியாய் இங்கிலாந்திற்குப் புறப்பட்டார்.

இதுகுறித்துக் குறிப்பிட்ட மில்டன், “என் சகமக்கள் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் என் அறிவை வளர்த்துக்கொள்வதற்காக மகிழ்ச்சியோடு ஊர்சுற்றிக்கொண்டிருப்பது இழிவான செயல் என்று எனக்குத் தோன்றியதால் உடனடியாகத் தாய்நாட்டிற்குத் திரும்பினேன்.” என்கிறார்.

1640-இல் இங்கிலாந்தில் புரட்சி வெடித்தபோது மில்டனின் வயது 32. அவ்வேளையில், புரட்சியின் காரணமாக இங்கிலாந்தில் (முதலாம் சார்லஸ்) மன்னனின் ஆட்சி முடிவுற்று, நாடாளுமன்றத்தினரின் குடியாட்சி கால்கொள்ளத் தொடங்கிற்று. குடியாட்சியின் ஆதரவாளரான மில்டன், அதற்குச் சார்பாய்ப் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். அவருடைய நண்பரும், மன்னனுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் வெற்றிவாகை சூடியவருமான ஆலிவர் கிராம்வெல் (Oliver Cromwell) அப்போது ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தார். அவருக்குத் துணையாக மில்டனும் முழுநேர அரசியல் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். 1649-இல் அயல்மொழித்துறை செயலாளர் பொறுப்பு மில்டனுக்கு வழங்கப்பட்டது. வெளியுறவுகளைப் பேணுதற்கான கடிதப் போக்குவரத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புமிக்க அப்பணியில், மில்டன் தன் பன்மொழிப் புலமையை நன்கு புலப்படுத்தினார்.

ஆனால், இப்பணியில் இருக்கும்போதே அவருடைய கண்கள் அவருக்குத் தொல்லைதரத் தொடங்கின. சிறிது சிறிதாக கண்பார்வை மங்கத் தொடங்கியது. மில்டனின் கண்களைப் பரிசோதித்த மருத்துவர், தொடர்ந்து அவர் கண்களுக்கு அதிகவேலை கொடுத்துவருவாராயின், கண்பார்வை முற்றிலும் பறிபோகக்கூடும் என்று எச்சரித்திருந்தார். அதனைப் பொருட்படுத்தாத மில்டன், இரவு பகலாய்க் கண்களுக்குக்குக் கடுமையான வேலை கொடுத்துக்கொண்டே இருந்தார். அதன் விளைவு, வருந்தத்தக்க வகையில் ஒருநாள் தன் கண்ணொளியை முற்றிலும் இழந்தார்.

கண்ணொளி இழந்தும் அகத்தின் கருத்தொளி அவருக்குக் குன்றவில்லை; வாசிப்பையே தன் சுவாசிப்பாய் எண்ணிய அவர், தம்மால் படிக்கவியலாமல் போனபோது, தம்முடைய புதல்வியரையும் உடனிருந்த உதவியாளரையும் நூல்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்வாராம்.

கண்ணிழந்த பின்னர் அவர் எழுதியதுதான், அவருடைய படைப்புக்களின் உச்சமாய் (Masterpiece) மெச்சப்படும் ’துறக்க வீழ்ச்சி’ (Paradise Lost) எனும் கவிதைக் காவியம். விவிலியத்தில் கூறப்பட்டுள்ள மானுடனின் வீழ்ச்சிக் கதையே இக்காவியத்தின் கதையாகும். இறைவன் இயற்றிய துறக்கம் எனும் பொன்னுலகில் முதல்மனிதன் ஆதாமும், முதல்மாது ஏவாளும் வாழ்ந்ததும், அவர்கள் இறைவனின் பகைஞனாகிய சாத்தானின் உரைகேட்டுக் கருத்தழிந்து அறிவுமரத்தின் கனியை உண்டதும், அதன்விளைவாய் உலகில் தீவினை, நோய், முதுமை, மரணம் முதலியவை ஏற்பட்டதும் இதில் பேசப்படும் செய்திகளாகும். மனிதனின் முதற்பிறழ்வையும்…” (Of Mans first Disobedinece…) என்று முதலடியிலேயே கதையின் கருப்பொருளைச் சொல்லித் தொடங்கும் ’துறக்க வீழ்ச்சி’, மில்டனின் செம்மாந்த கவியாற்றலுக்குக் கட்டியம் கூறுகின்றது.

ஆழ்ந்த அறிவோடும் கருத்துச் செறிவோடும் மில்டனால் படைக்கப்பட்ட இக்கவிதைக் காவியம், எதிர்பார்த்த வரவேற்பை அன்று இங்கிலாந்து மக்களிடம் பெறவில்லை. கரணியம், அஃது இறைவனின் எதிரியான சாத்தானிடம் மானுடம் வீழ்ந்துபட்ட வரலாற்றை விரிவாய்ப் பேசியதே. அதில், இறையினும் விஞ்சிய திறலுடையோனாய்ச் சாத்தானைப் படைத்துவிட்டார் மில்டன் என்றெண்ணிய (பழமைவாதிகளான) கத்தோலிக்கக் கிறித்தவர்கள், இக்காவியத்தை ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்தனர்.

அம்மட்டோ? ’துறக்க வீழ்ச்சியை’ ஏனையோரிடம் சென்றுசேரவொட்டாமல் வீழ்த்திடமுனைந்த அம்மக்கள், அதனைத் அங்கியக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்தனர் (தீயிட்டுக் கொளுத்தினர்). சாத்தான், இறைவனை வெல்வதுபோல் கதை அமைத்திருப்பதை வைத்து, ”மில்டன் ஓர் நாத்திகவாதி, இறைநம்பிக்கையற்றவர்” என்றெல்லாம் அவரைத் தூற்றினர். பின்னர், (தம் நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க) மில்டன், ’துறக்க மீட்சி’ (Paradise Regained) எனும் நூல் எழுதியவுடன் ”ஆகா! மனிதர் திருந்திவிட்டார்; நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்கு மாறிவிட்டார்!” என்று பேசத்தொடங்கியதும் இவர்களே!

உண்மையில், மில்டன் நாத்திகரும் அல்லர்; மூடநம்பிக்கைகளைப் பற்றியொழுகும் ஆத்திகரும் அல்லர். அவர் இறைவனை ஏற்றுக்கொண்டார். ஆனால் இறைவனுக்கும் மானிடர்க்குமிடையே இடைத்தரகராய் நின்று அநியாயங்கள் செய்துவந்த (திருச்சபை) குருமார்களைச் சாடினார். ’பராசக்தி’ (படத்தின்) வசனம்போல், அவர் பூசாரிகளைத் (தம் எழுத்துக்களால்) தாக்கினார்; பூசாரிகள் கூடாதென்பதற்காக அல்ல; பூசாரிகள் கயவர்களாகவும், காவலனுக்குக் (இங்கிலாந்து மன்னனுக்கு) கால்பிடிக்கும் ஏவலர்களாகவும் இருக்கக்கூடாது என்பதற்காக!

மில்டனின் படைப்புக்களில் இறுதியானதாய்க் கருதப்படுவது, ’மாமல்லன் சாம்சன்’ (Samson Agonistes  - A tragic closet drama) எனும் நாடக நூலாகும். இங்கிலாந்துப் புரட்சியும் மில்டனின் தனிவாழ்வும் கைகோத்துச்செல்லும் வகையில் இந்நூலின் கதையோட்டம் அமைந்திருக்கின்றது என்பது ஆய்வாளர்கள் கருத்து.

ஆங்கிலக் கவிதைகளில் அதிக அளவில் உவமைகளைப் பயன்படுத்தி வெற்றிகண்டவர் மில்டனே. ”எவ்வித முயற்சியுமின்றிக் கவிஞனின் உள்ளத்தில் தானாய் ஊற்றெடுப்பது கவிதை; வலிந்து வரவழைப்பது கட்டுரை” என்று மொழியின் இருவடிவங்களுக்கிடையேயுள்ள வேறுபாட்டை வரையறுக்கின்றார் அவர்.

தனிவாழ்க்கை, பொதுவாழ்க்கை இரண்டுமே போர்க்களங்களாய் அமைந்திருந்தன மில்டனுக்கு. அதற்காக அவர் வாழ்வை வெறுத்து ஓடினாரில்லை. இறவாத புகழுடைய புதுநூல்களைப் பூவுலகிற்குப் படைத்தளிக்கத் தவறினாரில்லை. ஷேக்ஸ்பியரைத் தனக்கு ஆதர்சமாகக் கொண்டிருந்தார் மில்டன் என்பர். அதுபோல், மில்டனை வழிகாட்டியாய்க் கொண்டு சிறந்தோர் பலருளர். அவர்களில் குறிப்பிடத்தக்க சிலர், இயற்கைக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth), வில்லியம் பிளேக் (William Blake), ஜான் கீட்ஸ் (john Keats) போன்றோர்.

இத்தருணத்தில், வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், தெய்வமாகவி மில்டனை, ’மீண்டும் இங்கிலாந்தில் தோன்றுக!’ என்று வரவேற்று எழுதிய கவிதையொன்று நினைவுகூரத்தக்கது.

   London, 1802 – William Wordsworth 
    Milton! thou shouldst be living at this hour:
   England hath need of thee: she is a fen
   Of stagnant waters: altar, sword, and pen,
   Fireside, the heroic wealth of hall and bower,
   Have forfeited their ancient English dower
   Of inward happiness. We are selfish men;
   Oh! Raise us up, return to us again;
   And give us manners, virtue, freedom, power.
   Thy soul was like a Star, and dwelt apart:
   Thou hadst a voice whose sound was like the sea:
   Pure as the naked heavens, majestic, free,
   So didst thou travel on life's common way
   In cheerful godliness; and yet thy heart
   The lowliest duties on herself did lay.

தமிழில்…

மில்டன்! நீ இப்போது எம்மிடை இருந்திட விழைகின்றோம்
இங்கிலாந்துஅன்னை உன்னை அழைக்கின்றாள்; தேங்கிய நீராய்
எம்வாழ்க்கை இங்கு கெட்டழிந்தது; சமய வழக்கம்,
இணையில் வீரம், கல்வி, இல்லறம் இவற்றொடு
மாண்புடை ஆங்கில மக்களின் நல்அமைதி
மறைந்திடச் சுயநலச் சுழலில் சிக்கினோம் யாமே
மீண்டு(ம்) வருவாய் எமக்குப் புத்துயிர் தருவாய்
வேண்டுகின்றோம் நல்லறமும் ஆண்மையும்
துருவமீனாய்த் தோன்றும் நின்வாழ்க்கை எமக்கு!
தூய வானெனப் பொறையும் பெருமையும் பெற்றாய்!
நீள்கடல் முழக்கமாய் முழங்கிடும் உந்தன் மொழிகள்
மனித வாழ்விடை மனிதனாய் வாழ்ந்த தேவன்நீ
திருவும் மேன்மையும் சிறப்புறக் கொண்டனை ஆயினும்
உருவில் எமக்கோ எளியனாய் வந்து தோன்றினை!

கவிஞர்கள் போற்றும் கவிஞராய், ஆங்கில இலக்கிய வரலாற்றின் மைல் கல்லாய், காலத்தை வென்று நிற்கின்றார் மில்டன். அன்று தீயில் கருகிய அவருடைய ’துறக்க வீழ்ச்சி’ இன்றோ பல்லக்கில் பவனிவருகின்றது அவனிபோற்ற. பார்போற்றும் பனுவல்கள் பலபடைத்த காப்பியக் கவிஞர் மில்டன் வையத்தில் என்றும் வரகவியாய் வாழ்வார்.




Saturday, October 31, 2015

தமிழ்வானில் ஒளிரும் எழிற்பரிதி!

தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலைவாணரும் இவள் என்று பிறந்தவள் என்று உணரமுடியாத தொன்மையுடையவள் நம் தமிழன்னை. நெஞ்சையள்ளும் சிலம்பும், மனங்கவரும் மேகலையும், சிந்தை மயக்கும் சிந்தாமணியும் அன்னையவள் எழிலைக் கூட்டின. தேவாரமும் திருவாசகமும் திருவாய்மொழியும், இன்னபிற பனுவல்களும் பக்திமணம் பரப்பி அவளைப் பரவசமாக்கின. ஆனால் காலப்போக்கில் நம்மனோர் தாய்த்தமிழின் சிறப்பை மறந்து வடமொழிபால் அதிகவேட்கை கொள்வாராயினர்.

வடமொழியும் தமிழும் கலந்து எழுதுவது மணியும் முத்தும் கலந்ததுபோல் அதிக அழகுடைத்து என்றெண்ணியவராய், ’மணிப்பவள நடையை உருவாக்கி அதில் எழுதலாயினர். இதனால் தாய்த்தமிழின் தூய்மை அழிந்ததேயொழிய அதன் அழகு சிறக்கவில்லை. இதனைக் கண்ணுற்ற தமிழறிஞர் சிலர் மணிப்பவள நடைக்கு விடைகொடுத்து, மணியான தமிழ்நடையிலேயே எழுதுதல் வேண்டும் எனச் சிந்திக்கத்தொடங்கினர். இந்தத் தனித்தமிழ்ச் சிந்தனையைத் தமிழ்மண்ணில் விதைத்த முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர் சூரியநாராயண சாஸ்திரியார் எனும் திருநாமம் கொண்ட பெருந்தகையாளர்.

மாடமலி கூடலில் (மதுரையில்) பரங்குன்றிற்கு அருகிலுள்ள விளாச்சேரி எனுமிடத்தில் 1870-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 11(?)-இல் கோவிந்த சாஸ்திரிஇலட்சுமி அம்மாள் இணையருக்குத் தவப்புதல்வராய்த் தோன்றினார் சூரியநாராயண சாஸ்திரியார். தந்தையிடம் சமஸ்கிருதமும், மதுரை சபாபதி முதலியாரிடம் தமிழும் பயின்ற சாஸ்திரியார், மதுரை உயர்நிலைப்பள்ளியில் தம் பள்ளிப்படிப்பை நிறைவுசெய்து, இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் உதவித்தொகையுடன் சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் மாணாக்கராய்ச் சேர்ந்தார். அதில், மாநிலத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேறிய அவருக்கு அதே கல்லூரியில் நிறைந்த ஊதியத்துடன் தத்துவத் துறையில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தும் அதனை மறுத்துக் குறைந்த ஊதியத்தில் தமிழ்த்துறை ஆசிரியராய்ப் பணியமர்ந்தார். அப்போது கிறித்தவக் கல்லூரியின் முதல்வராயிருந்த டாக்டர் மில்லர் (A Scottish Educationalist),  சாஸ்திரியாரின் தமிழார்வத்தைக் கண்டு வியந்து, பிறதுறை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அதே (உயர்)ஊதியத்தை அவருக்கும் வழங்கினார். கல்லூரியளவில் தமிழாசிரியர் பணியை விரும்பி ஏற்றுக்கொண்ட முதல் பட்டதாரி சூரிய நாராயணரே என்பது குறிப்பிடத்தக்கது.

கேட்டார்ப் பிணிக்கும் பைந்தமிழ் நடையில் அவர் நடாத்தும் பாடங்களைக் கேட்டின்புறுவதற்காகப் பிறதுறை மாணாக்கரும் மலரை மொய்க்கும் வண்டுகளாய் அவர் வகுப்பில் வந்து கூடுவராம். தமிழறிவும் ஆர்வமும் மிகுந்த மாணாக்கர்கட்குத் தம் இல்லத்திலும் தனியாக வகுப்புக்கள் எடுத்துத் தமிழ்த்தேனை அவர்களுக்கு அள்ளி வழங்கியுள்ளார் சாஸ்திரியார்.

இவரது தேர்ந்த தமிழ்ப்புலமை கண்ட பதிப்புச்செம்மல், யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள், சூரியநாராயண சாஸ்திரியாரைத்திராவிட சாஸ்திரிஎனும் பட்டம் தந்து சிறப்பித்திருக்கின்றார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் எனும் மும்மொழிப் புலமை நிரம்பப் பெற்றவர் சூரியநாராயண சாஸ்திரியார். ஆயினும், தமிழ்மீது தணியாத காதல்கொண்ட அவ்விளம் அறிஞர் வடமொழியில் அமைந்திருந்த தம் பெயரைத் தனித்தமிழில்பரிதிமாற் கலைஞர்என்று மாற்றிக்கொண்டதைத்தனிப்பாசுரத் தொகைஎனும் அவருடைய செய்யுள்நூல் நமக்கு அறியத்தருகின்றது. இத்தனிப்பாசுரத் தொகையிலுள்ள செய்யுள்கள் அனைத்தும் ஆங்கிலத்திலுள்ள சானட்டைப் போல் (Sonnet – a poem of 14 lines) தமிழில் 14 அடிகளில் அழகுற இயற்றப்பட்டிருக்கின்றன.

காட்டாக, ’புள்எனும் தலைப்பில் பரிதிமாற் கலைஞர் எழுதிய அருமையான  செய்யுளொன்று:

புள் (பறவை)

புள்ளே மென்சிறைப் புள்ளே பல்வகை
வண்ணமும் மேவிய வனப்புடைப் பறவாய்

எண்ணிய எண்ணமும் என்கொலோ அறியேன்
தானுமின் புற்றுத் தன்னிசை அதனால்
ஏனைய உயிர்க்கும் இன்பம் செய்குவை
வேண்டுழிச் செல்வை வேண்டுந புரிகுவை
வேண்டா என்றுநீ விழைசெயல் தகைக்குநர்  
ஈண்டுச் சிலருளர் இன்ப உருவினோய்
கவற்சிகொண் டுழலும்அக் கண்ணில்புன் மாக்கள்   
ஐயகோ நின்னை அருமையிற் பேணார்
வெய்ய கணைகொடு வீழ்ப்பர் அதான்று     
நெய்பெய் தட்டுநிற் குய்ம்மணம் கமழ
எயிற்றிடை மென்று வயிற்றின்
இட்டு நாள்தொறும் கெட்டுலை வாரே!

(தகைக்குநர்-தடுப்பவர்; அதான்று -அதுமட்டுமல்லாமல்; குய்ம்மணம் -தாளிக்கும் மணம்)
வண்ணத்தாலும் இசையாலும் மக்களை மகிழ்விக்கும் புள்ளின் பெருமையறியா (மா)க்கள் அதன் விருப்பப்படி அதனைச் சுதந்திரமாய்ப் பறக்கவிடாது, கணையால் வீழ்த்தி நெய்சொரிந்து அதனைச் சமைத்துண்ணும் அவலத்தை இச்செய்யுளில் கண்டிக்கின்றார் பரிதியார்.

தமிழை இயல், இசை, நாடகம் எனும் மூன்று துறைகள் கொண்டமுத்தமிழ்என்று தமிழர்கள் பெருமிதத்தோடு பகர்வதுண்டு. இவற்றில் முதலிரண்டையும் வளர்த்த அளவிற்கு நாடகத்தமிழை முனைப்புடன் வளர்க்கத் தவறிவிட்டனர் நம் முன்னோர். குற்றுயிரும் குலை உயிருமாக அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த அவ்வினிய நாடகத் தமிழுக்குப் புத்துயிர் ஊட்டத் தலைப்பட்டனர் மூவர். அவர்கள், சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், மற்றும் பரிதிமாற் கலைஞர் ஆகியோர்.

இவர்களைத்தமிழ் நாடக மூவர்என்று மக்கள் அன்போடு அழைத்துவருகின்றனர்.
நாடகக்கலைக்கு மறுவாழ்வளித்தவர்களில் ஒருவராகத் திகழும் பரிதிமாற் கலைஞர், கலாவதி, ரூபாவதி அல்லது காணாமற்போன மகள் முதலிய நாடகங்களை அழகிய உரைநடைத் தமிழில் படைத்தளித்துள்ளார். அதுமட்டுமல்லாது, நாடகங்களை எவ்வாறு இயற்றவேண்டும், அதற்குரிய இலக்கணங்கள் யாவை என்பவற்றை விளக்கிநாடகவியல்எனும் அரிய நூலொன்றையும் யாத்துள்ளார்.

செய்யுள் வடிவில் இவரியற்றிய மற்றொரு நாடகம்மான விஜயம்’ (மானத்தின் வெற்றி) என்பதாகும். இந்நூலில் கோச்செங்கட் சோழனால் சிறைப்படுத்தப்பட்ட கணைக்கால் இரும்பொறை, மானமே பெரிதென்று சிறையில் உயிர்நீத்ததனை மிகவும் உயிரோட்டமாய்க் காட்சிப்படுத்தியுள்ளார். (இம்மன்னன் இறக்கும் தறுவாயில் எழுதியகுழவி இறப்பினும்என்று தொடங்கும் வீரம்செறிந்த பாடல் புறநானூற்றில் 74-ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளதை அறிக.)

இவையேயன்றி, ‘மதிவாணன்எனும் நாவல், `பாவலர் விருந்து’ `சித்திர கவி விளக்கம்போன்ற கவிதை நூல்கள், நற்றமிழ்ப் புலவோரின் வாழ்க்கை வரலாற்றைச் சுட்டும்தமிழ்ப்புலவர் சரித்திரம்எனும் கட்டுரை நூல் ஆகியவையும் பரிதிமாற் கலைஞரின் கைவண்ணத்தில் உருவாகியுள்ளன.

அவர் இயற்றிய நூல்களிலேயே பெரிதும் போற்றப்படுவதுதமிழ்மொழியின் வரலாறுஎனும் ஆராய்ச்சி நூலேயாகும். அதில், தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழியாவது யாங்ஙனம்?’ என்பதைச் சுவைபட விளக்கியுள்ளார் அச்சான்றோர்.

அவ்விளக்கத்தை நாமும் அறிந்துகொள்வோமே

தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள பலமொழிகளினும் தலைமையுடையதும் அவற்றினும் மிக்க தகவுடையதுமான ஓர் மொழியே உயர்மொழியாகும். இவ்விலக்கணங்கொண்டு ஆராயுமிடத்து, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கெல்லாம் தலைமையுடையதும் அவற்றினும் மேதகவுடையதுமாகியநம்தமிழ் ஓர் உயர்மொழியாகும்!

தான் வழங்கும் நாட்டில் பயின்றுவரும் பிறமொழிகளின் உதவியின்றித் தனித்தியங்கும் தன்மையுடைய மொழியே தனிமொழி எனும் தகுதியுடைத்து. தான் பிறமொழிகளுக்குச் செய்யும் உதவி மிகுந்தும், தனக்குப் பிறமொழிகள் செய்யும் உதவி குறைந்துமிருத்தலே வழக்காறு. தமிழின் உதவியின்றித் தெலுங்கு முதலிய மொழிகள் இயங்கமாட்டா. ஆனால் அவற்றின் உதவியின்றித் தமிழ் தனித்தியங்கும் பெற்றியது. ஆதலின் தமிழ் ஓர் தனிமொழியே!

இனிச் செம்மொழியாவது யாது?


திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம்என்பது இலக்கணம். இம்மொழிநூல் இலக்கணத்திற்குச் சாலப் பொருத்தமுடையது தமிழ்மொழி. பிறமொழிச் சொற்களன்றித் தன்மொழிச் சொற்கள் மிகுந்திருத்தலே தூய்மொழியாகும். அவ்வகையில் தமிழ் தூய்மொழியுமாகும். அவ்வாறே தமிழில் ஆளப்படும் சொற்கள் நம் மக்களின் பண்பாலும் நாகரிகத்தாலும் செழுமையுற்றவை. எனவே தமிழ்மொழிசெம்மொழிஎன்பது திண்ணம். இதனாலன்றோ நந்தமிழ் செந்தமிழ் என்று நல்லிசைப் புலவரால் தொன்றுதொட்டு நவின்றோதப்படுகின்றது. ஆதலால் செந்தமிழ் நாட்டின்கண் சிறந்தொளிரும் அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராயினும் உயர்தனிச் செம்மொழியே ஆகும் என்று தெளிக!” என்கிறார்

நம்மொழியைச் செம்மொழி என்று முதன்முதலில் தமிழ்கூறு நல்லுலகுக்கு மெய்ப்பித்துக் காட்டிய பெருமை பரிதிமாற் கலைஞரையே சாரும்.  (He was the first person to campaign for the recognition of Tamil as a classical language.)

இத்துணைச் சிறப்புக்கள் வாய்க்கப்பெற்ற தமிழை, கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து விலக்குவதற்குச் சென்னைப் பல்கலைக்கழகம் (University of Madras) 1902-ஆம் ஆண்டு முடிவெடுத்தது. என்னே நம் மக்களின் பேதைமை! அதனையறிந்த பரிதிமாற் கலைஞர், தமிழ்த்தொண்டர் மு.சி.பூரணலிங்கம் பிள்ளையுடன்  இணைந்து அம்முடிவை முறியடித்தார். கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழ்மொழியும் தொடர வழிவகுத்தார் என்பது வரலாறு காட்டும் உண்மை.

தமிழ்க்குழந்தைகள் தம் தாய்மொழியாம் தமிழிலேயே கல்விகற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர் இந்நல்லறிஞர். தமிழ் வாழவும், தமிழர் வாழவும் தம் வாணாளின் இறுதிவரை உறுதியோடு பாடுபட்ட பரிதிமாற் கலைஞர், 1903-ஆம் ஆண்டு தம் 33-ஆம் அகவையில் பொன்னுடல் நீத்துப் புகழுடல் கொண்டார். ஆம்! இரக்கமற்ற எலும்புருக்கி நோய் (tuberculosis), தமிழ்வேட்கை மிகுந்த அவ்விளைஞரை அகாலத்தில் வாரிச்சென்றது நம் தவக்குறைவே!

பரிதிமாற் கலைஞரின் மறைவைக் கேட்ட கிறித்தவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மில்லர், ”என் புருவம் சுருக்கமேறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான்; ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே!” என்று கையற்றுக் கலங்கியுள்ளார்.

இவர்மட்டும் அதிககாலம் வாழ்ந்திருந்தால் தமிழன்னையை அரியாசனத்தில்அவளுக்கேற்ற சரியாசனத்தில் அமர்த்தி அழகுபார்த்திருப்பார்என்று இத்தனித்தமிழ் மறவருக்குப் புகழாராம் சூட்டியுள்ளார் தமிழ்த்தென்றல் திரு.வி..

தமிழ் செம்மொழியாய்ப் போற்றப்படல் வேண்டும் எனும் பரிதிமாற் கலைஞரின் நற்கனவு நெடுங்காலத்திற்குப்பின் இப்போது நனவாகியிருப்பது அவரது அரிய முயற்சிக்குக் கிடைத்த பெரிய வெற்றியே!

தமிழெனும் தையல்நல்லாள் இத்தரணியில் பீடுநடை பயிலுங் காலம்வரைச் செம்பரிதியாய்ச் சுடர்விட்டுப் புகழ்பரப்பிக்கொண்டிருப்பார் பரிதிமாற் கலைஞர்!