Friday, October 16, 2015

யுத்தத்தில் மலர்ந்த புத்தம்!

நம் இந்தியத் துணைக்கண்டத்தின் வலிமைவாய்ந்த பேரரசாக முதன்முதலில் திகழ்ந்தது மௌரியப் பேரரசே ஆகும். கங்கைச் சமவெளியில், இன்றைய பீகார், வங்காளம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய அன்றைய மகத நாட்டில் முகிழ்த்த இப்பேரரசு தோற்றம்பெறுவதற்குப் பெரிதும் காரணமாயிருந்தவர் அரசியல் தந்திரங்களில் வல்லவரான சாணக்கியர் (கௌடில்யர் என்றும் கூறுவர்) ஆவார். மௌரியர்களுக்கு முன்பு மகதத்தை ஆண்டுவந்த நந்தவம்சத்தின் அரசனான தனநந்தனுக்கும் அவனுடைய அமைச்சராயிருந்த சாணக்கியருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டினால், நந்த வம்சத்தையே கருவறுக்க முடிவுசெய்தார் சாணக்கியர்.

ஒருநாள் தட்சசீலத்தை (It was in Rawalpindi District, Punjab) நோக்கிச் சென்றுகொண்டிருந்த சாணக்கியர், தாம் செல்லும்வழியில் காட்டில் வேட்டையாடிக்கொண்டிருந்த ஓர் இளைஞனைக் கண்டார். அவனிடம்  காணப்பட்ட வீரம் அவர் உள்ளங் கவர்ந்தது. அவனை வைத்தே நந்த வம்சத்தின் வரலாற்றை முடித்துவிட எண்ணிய அவர், அவ்விளைஞனைத் தன்வயப்படுத்தி, நந்த அரசனுக்கு எதிராகப் போர் தொடுக்கவைத்து அச்சாம்ராஜ்யத்தின் அழிவுக்கு அடிகோலினார். பின்பு, தன் எண்ணப்படியே அந்த இளைஞனை மகத நாட்டரசனாக்கினார். அந்த இளைஞன் வேறுயாருமில்லை! மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த முதலாம் சந்திரகுப்தனே அவன்! (’மௌரியர்’ என்ற பெயர் சந்திரகுப்தனின் தாய் ’முரா’வின் பெயரடிப்படையில் தோன்றியது என்று கூறப்படுகின்றது.)

ஓர் அரசனுக்குத் தேவையான சகல கலைகளையும் சந்திரகுப்தனுக்குக் கற்பித்த சாணக்கியர், அவனைப் பெருவீரனாகவும் அறிஞனாகவும் மாற்றினார். அரசின் நிலப்பரப்பை விஸ்தரித்தார். அத்தகைய புகழ்வாய்ந்த மௌரிய வம்சத்தில் சந்திரகுப்தனின் வழித்தோன்றலான பிந்துசாரனின் மகனாகத் தோன்றியவர்தான் மாமன்னர் அசோகர்.

’அசோகன்’ என்ற சொல்லுக்குச் ’சோகமற்றவன்’…அதாவது ’துயரமற்றவன்’ என்பது பொருள்.   கி.மு. 304-இல் பிறந்தவர் என்று (தோராயமாகக்) கணிக்கப்படும் அசோகர், தம் பெயருக்கேற்பவே தாம் துயரமற்றவராய்த் திகழ்ந்து மற்றவர்க்கே துயரத்தைப் பரிசளித்துவந்தார். தம் தந்தை பிந்துசாரரின் பல (மனைவியரின்) பிள்ளைகளையும் கொன்றுகுவித்து அவர்களின் அரத்த ஆற்றில் நீந்தித்தான் ஆட்சிபீடத்தை அவர் கைப்பற்றினார் என்கின்றனர் வரலாற்றறிஞர்கள். அதுபோல், இளவயதில் சிங்கம் ஒன்றைக் கட்டையால் அடித்துக்கொன்ற அவருடைய சாகசச் செயலும் வியந்துபேசப்படும் ஒன்றாகும். (புலியை முறத்தால் அடித்த மறத்தமிழச்சியின் வீரச்செயல் இத்தருணத்தில் நம் நினைவிற்கு வருகின்றது அல்லவா!).

கி.பி. 7—ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகைபுரிந்த சீன யாத்ரீகர் யுவான்சுவாங் (Xuanzang) அசோகரின் ஆரம்பகால ஆட்சியில் குற்றவாளிகளின் நிலையைப் பின்வருமாறு வருணிக்கிறார்:

”தம் ஆட்சியில் குற்றவாளிகளை அசோகர் தண்டித்தமுறை கற்பனைக்கு எட்டாதவகையில் மிகக் கொடூரமானது; தலைநகரான பாடலிபுத்திரத்தின் (இன்றைய பாட்னா) வடக்கே கைதிகளைச் சித்திரவதை செய்வதற்கென்றே அழகிய மாளிகை ஒன்றை அமைத்திருந்தார் அசோகர்; வெளித்தோற்றத்தில் சொர்க்கலோகம்போல் காட்சியளித்த அம்மாளிகை உண்மையில் கைதிகளுக்கு நரகமாகவே இருந்ததால் அதைச் ’சொர்க்க நரகம்’ (Paradisal Hell) என்றே அழைக்கலாம்” எனக் குறிப்பிடுகின்றார் யுவான்சுவாங்.

இவ்வாறு கண்டோர் நடுங்கும்படி கொடுங்கோலாட்சி செலுத்தி, ’தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்’ என்று இறுமாந்திருந்த அசோகரின் பார்வை, மகதத்துக்கு அதுவரை அடிபணியாதிருந்த கலிங்கத்தின்மீது (Present day states of Odisha and North Coastal Andra Pradesh) விழுந்தது. அதன் கொட்டத்தை அடக்கி அடிப்படுத்த விரும்பிப் போர்முரசு கொட்டினார். உக்கிரமாக நடைபெற்ற அப்போரில் கலிங்க வீரர்கள் இலட்சக்கணக்கானோர் மடிந்தனர்; மீதமிருந்தோர் சிறைப்பட்டனர் என்ற விவரங்கள் அசோகரின் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளதாய் அறிகின்றோம்.

கலிங்கப்போரில் அசோகர் வெற்றித்திருமகளைக் கைப்பற்றியபோதினும், வீரர்களின் பிணக்காடாய்க் காட்சியளித்த போர்க்களத்தைக் கண்ட அவருடைய கொடூர உள்ளமும் கலங்கித்தான் போனது. அக்கோரக்காட்சிகள் அவருக்குள் மிகப்பெரிய மனமாற்றத்தை நிகழ்த்தத் தொடங்கின. “ஐயோ! என்ன காரியம் செய்துவிட்டேன்? இத்துணை உயிர்களைக் கொன்றுவித்தது எனக்குக் கிடைத்த வெற்றியா? இல்லை தோல்வியா? அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் அழித்த இச்செயலுக்குப் பெயர்தான் வீரமா? அந்தோ! தந்தையரையும், கணவரையும், பிள்ளைகளையும் போரில் பறிகொடுத்துக் கதியற்றுக் கலங்கிநிற்கும் இப்பெண்களுக்கு நான் என்ன பதில் சொல்லப்போகிறேன்?” என்றெல்லாம் கேள்விக்கணைகள் அவரைத் துளைக்கத் தொடங்கின.

கழிவிரக்கமும் தன்மீதே அளவற்ற வெறுப்பும் ஏற்பட்டது அவருக்கு. ”போதும்! மறத்தொழில் செய்து நான் நாடுபிடித்தது போதும்! இனியேனும் அறத்தின்பால் திரும்புகின்றேன்!” என்று தீர்மானித்து, கருணையே வடிவான புத்தர்பிரான் காட்டிச்சென்ற அருள்நெறியே இனியென் வாழ்க்கை நெறி!’ எனத் தெளிந்தார் அசோகர் என்கிறது அவரது வாழ்க்கை வரலாறு.

இவ்விடத்தில் நமக்கோர் ஐயம் எழுகின்றது. அசோகரின் பாட்டனாராகிய சந்திரகுப்த மௌரியர், தம் வாணாளின் இறுதியில் சமணத்துறவியாகி கர்நாடகத்திலுள்ள சிரவணபெலகுலாவில் தங்கி உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்தார்; அசோகரின் தந்தை பிந்துசாரரோ ஆசீவகத்தின் ஆதரவாளராய் இருந்தார். ஆனால் அசோகர்…தம் தகப்பனாரும் பாட்டானாரும் பின்பற்றிய அறநெறிகளில் ஒன்றையும் தேர்வுசெய்யாது (திடீரென்று) பௌத்தத்தின்பால் ஈர்க்கப்பட்டதேன்? இதனை ஆராயும்போதுதான் ஓர் உண்மை வெளிச்சத்திற்கு வருகின்றது.

ஆம்! அசோகரைப் பௌத்தத்தின்பால் திருப்பியது கலிங்கப்போரின் கோரக் காட்சிகள் மட்டுமல்ல! ஓர் பௌத்தமதப் பெண்மணியோடு அவருக்கு ஏற்பட்ட ஆழமான நட்பும்தான் என்பதே அந்த உண்மை!

அந்தப் பெண்மணி யார் என்று அறிந்துகொள்ளும் ஆவல் எழுகிறதல்லவா?

அந்தப் பெண்மணியின் பெயர் ‘காருவகி’’ (Karuvaki or Karuwaki) என்பதாகும். மீனவ குலத்தில் தோன்றிய காருவகி, பௌத்தமதக் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு அம்மதத்தில் சேர்ந்து துறவியானவர். இவருக்கும் மன்னர் அசோகருக்கும் ஏற்பட்ட நட்பால், இப்பெண்ணின் தருமோபதேசங்களைக் கேட்கக்கூடிய அரிய வாய்ப்பு அசோகருக்கு ஏற்படுகின்றது. அஃது அவருக்குள் நிகழ்த்திய மிகப்பெரிய மனமாற்றமே, அவரை உயிர்களை இரக்கமின்றி அழித்தொழிக்கும் யுத்தத்தை விட்டுவிட்டு அன்பையும், உயிரிரக்கத்தையும் போதிக்கும் புத்தத்துக்கு மடைமாற்றியது என்று தெரியவருகின்றது. பௌத்த மதத்தில் சேர்ந்த அசோகர், பின்பு காருவகியை மணம்புரிந்துகொள்கின்றார். இப்பெண்ணரசியின் வழிகாட்டுதலின்படியே அசோகர் தம் நாடுமுழுவதும் பௌத்தத்தைப் பரப்பினார்.

நாம் வரலாற்றுப் பாடத்தில் படிக்கின்ற ’அசோகர் சாலையின் இருமருங்கிலும் கனிதரும் மரங்களை நட்டார்; ஊரெங்கும் குளங்களை வெட்டினார்’ எனும் அறச்செயல்களுக்கெல்லாம் வினையூக்கியாய் (catalyst) விளங்கியவர் இந்தக் காருவகியே. நாடெங்கும் பௌத்தப்பள்ளிகள் நிறுவி, புத்தரின் கொள்கைகளைப் பரப்ப அளவற்ற நிதியுதவி நல்கினார் இப்பெண்மணி. தம் மனைவியின் அறச்செயல்களையும், தொண்டுகளையும் தமக்குரியதாய் அறிவித்துக்கொள்ளாமல் மனைவியின் பெயராலேயே அவற்றைக் கல்வெட்டுக்களில் பொறிக்கச்செய்திருக்கின்றார் அசோகர்; இஃது அவருடைய பெருந்தன்மைக்குச் சான்றாகும்!

மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்குகளுக்கும் மருத்துவமனைகளைக் கட்டிய அசோகர், ஏழைகளின் பசிப்பிணி போக்குதற்கு அன்னசத்திரங்களையும் அமைத்தார். கட்டடக்கலையில் ஆர்வம் மிகக்கொண்டிருந்த அவர், மலைகளைக் குடைந்து கோயில்கள், தூண்கள் முதலியவற்றை நிர்மாணித்தார்; ஆயிரக்கணக்கில் ஸ்தூபிகளை எழுப்பினார். ’சாரநாத்’ எனுமிடத்தில் அவர் எழுப்பிய ஸ்தூபியில் காட்சியளிக்கும் நான்கு சிங்க வடிவங்களை நம் இந்தியஅரசு தன் இலச்சினையாகப் பயன்படுத்திவருகின்றது; அதுபோல், அச்சிங்கங்களின் கீழிருக்கும் 24 ஆரங்களைக் கொண்ட அசோகச் சக்கரத்தையே இந்திய தேசியக்கொடியின் மையத்தில் கம்பீரமாய்ப் பொறித்திருக்கின்றது. இவையெல்லாம் நாமறிந்த செய்திகளே.

உலகெங்கும் பௌத்தம் தழைக்கவேண்டும் எனும் பேரவா கொண்ட அசோகர், தமிழகம், இலங்கை போன்ற பகுதிகளுக்குத் தம் மைந்தரான மகேந்திரனையும், (சிலர் இவரை அசோகரின் தம்பி என்பர்) மகள் சங்கமித்திரையையும் அனுப்பினார் என்று இலங்கையின் அரசவரலாறு கூறுகின்ற ’மகாவம்சம்’ எனும் நூல் நவில்கின்றது. ஆகவே, அசோகரின் ஆட்சிக் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவிலேயே பௌத்தம் தமிழகத்திற்கு வந்துவிட்டது என்பது புலப்படுகின்றது. இதே காலகட்டத்தில் அசோகரின் தீவிர முயற்சியால் பௌத்தம் கடல்கடக்கும் வாய்ப்பையும் பெற்றுச் சீனம், பர்மா, தாய்லாந்து போன்ற அயல்நாடுகளிலும் பரவிற்று.

கொடுங்கோலராய்த் தம் ஆட்சியைத் தொடங்கிய அசோகர், பின்பு மாபெரும் அருளாளராய் மாறி, ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று புத்தரின் அறக்கொள்கைகளை உலகெங்கும் பரப்பினார்; அன்புநெறியை அகிலமெங்கும் தழைக்கச் செய்தார்.

”உலக வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள் தங்களைத் தாங்களே மாட்சிமை பொருந்தியவர், மாமன்னர் என்றெல்லாம் அழைத்துக்கொண்டனர். அத்தகைய மாட்சிமை பொருந்திய மாமன்னர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம்மட்டுமே மின்னி மறைந்துவிட்டனர்; ஆனால், ஒரேயொருவர் மட்டுந்தான் வரலாறு உள்ளவரை மறையாத நட்சத்திரமாக ஒளிவீசிக் கொண்டிருப்பார்; அவர்தாம் அசோகர்!” என்று ஆங்கில எழுத்தாளர் ஹெச். ஜி. வெல்ஸ் (Herbert George Wells) தன்னுடைய ’The Outline of History’ எனும் நூலில் அசோகருக்குச் சூட்டியுள்ள புகழாரம் ஈண்டு குறிப்பிடத்தக்கது.

இன்றளவும் நினைந்து போற்றப்படும் அசோகரின் அகிம்சை நெறியும், பௌத்த சமயத்தொண்டுகளும், திருவாளர் வெல்ஸின் கூற்று முற்றிலும் உண்மையே என்பதை அறுதியிட்டு உறுதிகூறுகின்றன.




தமிழ்மணம் பரப்பிய குளிர்தென்றல்!

வெள்ளையர் ஆட்சியில் தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நின்றது நம் பாரதம். அத்தருணத்தில் மண்விடுதலை பெறுவதற்காகக் கண்ணுறக்கமின்றி உழைத்த உத்தமர்தாம் எத்தனை பேர்! அத்தகையோரில் நாட்டுவிடுதலைக்கு மட்டுமல்லாது, தொழிலாளர் முன்னேற்றம், பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம், மொழி வளர்ச்சி, சமய நெறி எனப் பல்துறைகளிலும் பார்வையைச் செலுத்திச் சாதனை படைத்தோர் வெகுசிலரே ஆவர். அத்தகு அரிதான மனிதர்களில் ஒருவர்தாம் திருவாரூர் விருத்தாசலக் கலியாணசுந்தரனார் என்ற பெயருடைய திரு.வி.க. அத்தமிழ்மகனாரைப் பற்றிச் சிறிது சிந்திப்போம்!

பூர்வீகமாய்த் திருவாரூரைக் கொண்டிருந்த திரு.வி.க.வின் குடும்பம் அவருடைய பாட்டனார் காலத்திலேயே சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டது. 1883-ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் நாள், சென்னைக்கு அருகிலுள்ள துள்ளம் எனும் கிராமத்தில் பிறந்தார் திரு.வி.க.

குடும்பச்சூழலாலும் சில தனிப்பட்ட காரணங்களாலும் பத்தாம் வகுப்புக்குமேல் படிக்க வழியின்றிப்போனாலும், நாவன்மையில் சிறந்தவரும், தமிழ் வடமொழி ஆகிய இருமொழிப் புலமை செறிந்தவருமான யாழ்ப்பாணத்துக் கதிரைவேற் பிள்ளையிடமும், மகாவித்வான் தணிகாசல முதலியாரிடமும் தமிழ்க் கல்வியையும் வடமொழிக் கல்வியையும், சைவசமய நூல்களையும் கசடறக் கற்றார் திரு.வி.க. அதுமட்டுமா? வேதாந்தம், பிரம்மஞான தத்துவம் போன்றவற்றிலும்கூடப் புலமைபெற்றிருந்தார் அவர். 

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியிலுள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய திரு.வி.க., அதனைத் தொடர்ந்து வெஸ்லி கல்லூரியிலும் சிலகாலம் பணியாற்றியிருக்கின்றார்.

வெள்ளையர் எதிர்ப்பு மிகத்தீவிரமாக இருந்த அக் காலகட்டத்தில், நாட்டு விடுதலையில் நாட்டங்கொண்டிருந்த திரு.வி.க.வால் ஆசிரியர் பணியில் ஆர்வங்காட்ட இயலவில்லை. ஆகையால், ஆசிரியப் பணியைத் துறந்தார்; நாட்டு விடுதலைக்கு முழுமூச்சாய்ப் பாடுபடத் தொடங்கினார். தேசபக்தன், திராவிடன், நவசக்தி போன்ற பல இதழ்களில் பணிசெய்த அவர், தம் கனல் கக்கும் எழுத்துக்களால் இளைஞர்களிடத்து சுதந்திரத் தீயை மூட்டினார்; விடுதலை வேட்கையை ஊட்டினார். அப்போது பத்திரிகைகளில் அவர் எழுதிய தலையங்கங்கள் மக்களிடத்துப் பெரும் வரவேற்பைப் பெற்றன. தம் எண்ணங்களைத் திறம்பட எழுத்தில் கொணர்வதெப்படி என்பதை அறிந்துகொள்ள இன்றைய பத்திரிகையாளர்களும் அவசியம் படிக்கவேண்டிய எழுத்துக்கள் அவை! 

திரு.வி.க. நவசக்தியில் பணிபுரிந்துகொண்டிருந்த சமயத்தில்தான் (1924) தந்தை பெரியார் கேரளாவிலுள்ள ‘வைக்கம்’ எனுமிடத்தில் தீண்டாமைக்கு எதிராகப் போர்புரிந்து சிறைசென்றார். பெரியாரின் வீரத்தைப் பாராட்டித் தம்முடைய தலையங்கத்தில் ‘வைக்கம் வீரர்’ (Hero of Vikom) என்று அவரை வருணித்திருந்தார் திரு.வி.க. அப்பெயர் பெரியாருக்கு இன்றுவரை நிலைத்துவிட்டதை நாமறிவோம். 

தொழிலாளர் நலனிலும் பெரிதும் அக்கறைகாட்டிய திரு.வி.க.வின் சீரிய முயற்சியால் 1918-இல் சிங்காரச்சென்னையில் ’தொழிற்சங்கம்’ எனும் அமைப்பு முதன்முதலில் தோற்றங் கண்டது. இது தமிழர்களாகிய நாம் பெருமிதம் கொள்ளவேண்டிய ஒன்றாகும்! 
அன்னைத் தமிழின் அருமையை மறந்தோராய், தனித்தமிழில் எழுதுவதே சாத்தியமற்றது என்று எண்ணிக்கொண்டு, மணிப்பவள நடைமீது மயல்கொண்டிருந்த அன்றைய தமிழ்ச்சமுதாயத்தின் மடமையைப் போக்கித் தெள்ளுதமிழ் நடையில் எழுதுவதே தமிழரின் கடமை என்று உறுதிபட மொழிந்த திரு.வி.க., தன் ஆற்றொழுக்கான அழகுத்தமிழ் நடையால் மக்களைத் தென்றலாய் வருடினார்; அவர்தம் மனங்களைத் திருடினார். அதனாலன்றோ ’தமிழ்த்தென்றலாய்’ இன்றும் அவர் மக்கள் மனங்களில் உலாவருகின்றார்! 

தேசத் தலைவர்களான மகாத்மா காந்தி, திலகர் போன்றோர் தமிழகம் வந்தபோது அவர்களின் மேடைப்பேச்சுக்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் ‘மொழிபெயர்ப்பாளராகவும்’ திரு.வி.க. திகழ்ந்திருக்கின்றார். அண்ணல் காந்தியாரின் அகிம்சைக் கொள்கையும், அறவாழ்வும் திரு.வி.க.வைப் பெரிதும் ஈர்த்தன. அதனால் வாணாள் முழுவதும் காந்தியத்தைப் பின்பற்றுவதையே தம் கடனாய்க் கொண்டிருந்தார் அவர். 

மகாத்மாவை, ’காந்தியடிகள்’ என்ற பெயரால் முதலில் அழைத்தவரும் திரு.வி.க.வே ஆவார். அதற்கு அவர்தரும் விளக்கம் மனங்கொளத்தக்கது. ”அறநெறியில் நின்று உயர்ந்தோரே ’அடிகள்’ எனும் பெயருக்கு உரியோர்; அவ்வகையில் இளங்கோவடிகள், கவுந்தியடிகள், அறவண அடிகள் போலத் தம் வாழ்வையே அறவாழ்வாக மாற்றிக்கொண்ட மாமனிதர் மகாத்மாவை நான் காந்தியடிகள் என அழைக்கின்றேன்” என்றார் அவர். 

’காந்தியடிகளின் வாழ்வே மனிதவாழ்வுக்கு இலக்கணம்’ எனும் உறுதியான கொள்கையுடைய திரு.வி.க., ’மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ எனும் அருமையான நூலொன்றை எழுதியுள்ளார். அதில் மகாத்மாவையும், அவர்தம் வாழ்வியல் முறைகளையும் வாயூறிப் பேசுகின்றார். (It’s a study of the implications of Gandhi's thought for human conduct).

அந்நூலிலிருந்து சில கருத்துக்கள்…

மக்களின் கொலை புலை தொலையக் கீழைநாட்டில் தோன்றிய ஞாயிறு காந்தியடிகள். அண்ணலின் வாழ்க்கையே ஓர் பெருங்கல்விக் கழகமாகும். அதில் நாம் கற்கவேண்டியவை எண்ணிறந்தவையாகும்.

தன்னை ஓர் சனாதன இந்து என்று சொல்லிக்கொள்ளும் மகாத்மா, ஒழுங்கீன முறைமையற்ற வருணாசிரம தர்மத்தை நான் நம்புகிறேன் என்றார். வருணாசிரம தர்மத்தை ஏற்கும் அதேவேளையில் அவை உயர்வு தாழ்வு பேசுவதை அவர் ஏற்றுக்கொண்டாரில்லை. நால் வருணங்களும் மனிதனின் கடமைகளைக் குறிப்பனவேயன்றி உயர்வு தாழ்வைக் குறிப்பவையல்ல என்பதே அண்ணலின் எண்ணம். மனித வாழ்வுக்கு இலக்கியமாக வாழும் பெரியாரான காந்தியடிகள், அகிம்சை தர்மத்தை அரசியற் போரில் முதன்முதல் நுழைத்த பெருந்தகையாளர் ஆவார்.”

இவ்வாறெல்லாம் மகாத்மாவின் வாழ்வியலைச் சொல்லோவியங்களாகத் தீட்டியுள்ளார் திரு.வி.க. அந்நூலில்! 

தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும் காதலுமுடைய திரு.வி.க., பண்டைத் தமிழரின் இயற்கையோடு இயைந்த இனியவாழ்வை, காட்சிக்கினிய ’முருகை’யே (முருகு-அழகு) அவர்கள் கடவுளாய்க் கொண்ட தன்மையை தம்முடைய ’முருகன் அல்லது அழகு’ (Lord Murugan or Beauty) எனும் நூலில் பின்வருமாறு விவரிக்கின்றார்: 

மலைப்பகுதியே மாந்தஇனம் முதலில் வாழ்ந்த இடம் என்பது அறிஞர்கள் துணிபு. குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த அம்மக்கள் தம் கண்களுக்குப் புலப்பட்ட ’கைபுனைந்தியற்றா கவின்பெறு வனப்பான’ இயற்கையழகில் ஈடுபட்டு அதற்கு ’முருகு’ என்று பெயர் சூட்டினர். காலையும், மாலையும் மலையில் தோன்றும் காய்கதிர்ச்செல்வனின் கண்ணுக்கினிய செம்மையழகும், செக்கர் வானத்தின் சொக்கவைக்கும் பேரழகும் அம்மக்களைப் பெரிதும் கவர்ந்தன. அச்செவ்விய இயற்கையழகைச் ’சேய்’ என்று போற்றினர் அவர்கள். குன்றாத அழகும், குறையாத இளமையும், மாறாத மணமும், மறையாத கடவுள்தன்மையும் கொண்ட அந்த முருகையே செம்பொருளாகக் கருதி அவர்கள் வழிபட்டனர்” என்று குறிப்பிடுகின்றார். அடடா! இயற்கையில் நிறைந்திருக்கும் இறையின் தோற்றத்தைக் கவினுறக் காட்சிப்படுத்தியுள்ள தமிழ்ச்சான்றோர் திரு.வி.க.வின் புலமைத்திறன் போற்றத்தக்கதன்றோ? 

சிறந்த மேடைப்பேச்சாளராகவும் புகழ்பெற்றவர் திரு.வி.க. பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பெண்கல்விக்காகவும் உண்மையாய் உழைத்தவர் அவர். விதவைகள் மறுமணத்தை வலியுறுத்திய முற்போக்குச் சிந்தனையாளராகவும், மனிதாபிமானம் மிக்க மனிதராகவும் அவர் திகழ்ந்தார். பெண்மையின் சிறப்பையும் தனித்துவத்தையும் நவில்வதற்கென்றே ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை’ எனும் ஒப்பற்ற நூலை எழுதினார். பெண்ணுரிமை குறித்து அதிலே அவர் கூறியுள்ள கருத்துக்கள் சிந்திக்கற்பாலன.

பகுத்தறிவற்ற அஃறிணை உலகில் பெண்ணுரிமைக்குப் பழுதுநேர்ந்ததில்லை. அந்தோ! ஆறறிவுள்ள உயர்திணை இனத்திலேயே பெண்ணுரிமைக்குப் பழுது நேர்ந்திருக்கின்றது…வெட்கம்! வெட்கம்! இதற்குக்காரணம் ஆண்மகனின் தன்னலமே ஆகும். ஆண்மகன், பெண்மகளைத் தனக்குரிய காமப்பொருளாகவும், பணியாளாகவும் கொண்ட நாள்முதல் அவள்தன் உரிமையை இழக்கலானாள். ஆனால், ஒரு நாட்டின் நாகரிகம் என்பது அந்நாட்டுப் பெண்கள் நிலையைப் பொறுத்தேயன்றோ அமைகின்றது. பெண்கள் எவ்விதக் கட்டுப்பாடும் இடுக்கணுமின்றி எங்கே தம் பிறப்புரிமையை நுகர்கின்றனரோ அங்குள்ள ஆண்மக்களே நாகரிக நுட்பம் உணர்ந்தோராவர். அந்நாடே நாகரிகம் பெற்றதாகும்.” என்று முழங்குகின்றார். 

வாய்ச்சொல் வீரராயும், நன்னெறிகளை ஏட்டில் மட்டுமே எழுதிக்குவிக்கும் காகிதப் புலியாகவும் திகழ்ந்தவர் அல்லர் திரு.வி.க. தாம் வலியுறுத்திய வாழ்வியல் நெறிகள் அனைத்தையும் தம் வாழ்வில் தவறாது கடைப்பிடித்தவர். இளவயதிலேயே தம் அருமை மனைவியைப் பறிகொடுத்தும் பிறிதொரு பெண்ணைச் சிந்தையாலும் தொடாத பேராண்மையாளர் அவர் என்றறியும்போது அவருடைய புலனடக்கமும், தவவொழுக்கமும் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றன. 

பல்துறைப் புலமையும், அண்ணல் காந்தியைப் போன்ற எளிமையும், சொல்லும் செயலும் ஒன்றேயான நேர்மையும், பெண்களைத் தெய்வமாய்ப் போற்றும் நீர்மையும் கொண்ட அரிதினும் அரிதான மாமனிதர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. என்பதை எவரே மறுப்பர்?

இம்மனிதருள் மாணிக்கத்தைப் பற்றி நூலெழுதியுள்ள பேராசிரியர் திரு. ம.ரா.போ. குருசாமிஅவர்கள், படிப்பால் இமயம்பண்பால் குளிர்தென்றல்பணியால் நாவுக்கரசர்சுருங்கச்சொல்லின் தமிழகம் கண்ட ஓர் காந்தி இவர்!” என்று திரு.வி.க.வைப் பற்றி வியந்துபேசுவது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை!