Monday, December 14, 2015

காலத்தை வென்ற கவின்மிகு காவியங்கள்!

மேற்குலகில் கலை, இலக்கியம், நாகரிகம், பண்பாடு, தத்துவம் போன்ற துறைகளின் தாயகமாய்த் திகழ்ந்தவை கிரேக்கமும் உரோமாபுரியும். புராணங்கள் எனப்படும் தொன்மங்களுக்கு இவ்விருநாட்டுக் கதைகளிலும் பெரும்பங்குண்டு. இப்புராணக் கதைகளையேஇதிகாசங்கள்எனும் பெயரால் நாம் இந்தியாவில் அழைக்கின்றோம்.
நம்மண்ணின் இதிகாசங்களாய்க் கருதப்படும் இராமாயணம், மகாபாரதம் முதலியவற்றிற்கு இணையானவை கிரேக்கத்தின் ஆதிகாவியங்களான இலியடும், ஒடிசியும் (Iliad & Odyssey). இந்த அமர காவியங்களைத் தீட்டிய பெருமைக்குரியவர், ’காவியங்களின் தந்தைஎன்று புகழப்படும் ஹோமர். இவருடைய காலம், கிறித்துவிற்குக் கிட்டத்தட்ட 700 ஆண்டுகள் முற்பட்டது என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஹோமர் என்றொருவர் இருந்தாரா? (Homeric Question) அல்லது அவருடைய காவியங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் பின்னாளைய கிரேக்கப் புலவர்களின் கவிதைத் தொகுப்புக்களா? எனும் முடிவற்ற விவாதங்கள் ஒருபுறம் நிகழ்ந்துகொண்டிருந்தாலும், ஹோமர் என்றோர் பெரும்புலவர் இருந்தார்; விழியற்றவரான அவர், இணையற்ற காப்பியப் புலமையும், அசாதாரண நினைவுத்திறனும் பெற்றவராய்த் திகழ்ந்தார். அந்நினைவுத்திறனின் துணைகொண்டு, தம்காலத்திற்கு முன்பு மக்களிடையே வழங்கிவந்த புராணச் செய்திகளையும், கதைப்பாடல்களையும் இணைத்து, காலத்தைவென்ற கவிதைக் காவியங்களைப் (Epic poems) படைத்தார் என்று நம்பும் மாந்தரின் எண்ணிக்கையே மிகுதி.

உண்மை எதுவாயினும், செம்மொழியாம் கிரேக்கமொழியில் முதன்முதலில் கிடைக்கும் பெருங்காவியங்கள் இலியடும் ஒடிசியுமே. பொதுவாக, காவியங்களுக்குப் பாடுபொருளாயிருப்பவை காதலும் வீரமும். ஹோமரின் காவியங்களும் இவற்றிற்கு விலக்கானவை அல்ல. (காதலை அகமென்றும், வீரத்தைப் புறமென்றும் பகுத்துப் பாக்கள் புனைந்தனர் நம் பைந்தமிழ்ப் புலவர்கள் என்பது நாமறிந்ததே.)

இனி, இலியட் மற்றும் ஒடிசியைச் சற்றே சுவைத்துவிட்டு வருவோம்!

இலியடை எடுத்துக்கொண்டால், கிரேக்கத்தின் ஒருபகுதியான ஸ்பார்டாவை ஆண்டமேனலாஸ்’ (Menelaus, King of Sparta) எனும் மன்னனைச் சந்தித்துச் சமாதானம் பேசவரும் ட்ராய் நகர (Troy was a famous city in Turkey) இளவரசன்பாரிஸ்’ (Paris), அங்கே மன்னனின் மனைவியும், பேரழகியுமானஹெலனைக் (Helen) கண்டான்; கண்டதும் காதல் கொண்டான். தான் வந்தவேலையை மறந்தான்; ஹெலனை மேனலாஸுக்குத் தெரியாமல் தன்னோடு அழைத்துக்கொண்டு ட்ராய் நகருக்குப் பறந்தான்.

மனைவியைத் தொலைத்த மேனலாஸ், தன் அண்ணனும், கிரேக்கத்தின் மற்றொரு பகுதியான மைசீனேயின் (Mycenae) மன்னனுமான மாவீரன் கமெம்னானிடம் (Agamemnon) நடந்ததைக்கூறி வருந்தினான். ட்ராயைக் கைப்பற்றிக் கிரேக்கத்தின் எல்லையை விரிவாக்கவேண்டும் என்று ஏற்கனவே துடித்துக்கொண்டிருந்த அகமெம்னானுக்கு இச்சம்பவம் எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்ததுபோல் அமைந்து ட்ரோஜன்கள்’ (ட்ராய் நகரக் குடிமக்கள்) மீதான பகையை அதிகரிக்கச் செய்துவிட, கிரேக்கத்திற்கும் ட்ராயிக்கும் போர் மூள்கின்றது. கிட்டத்தட்ட பத்தாண்டுகள்வரை நீடித்ததாகக் கூறப்படும் இந்த ட்ரோஜன் போரின் இறுதி ஐம்பதுநாள் போரை மட்டுமே தன் காவியத்தில் விரிவாய்ப் பதிவுசெய்துள்ளார் ஹோமர். இதனை மகாபாரதத்தின் யுத்தபர்வத்தோடு நாம் ஒப்பிடலாம்.

கதையமைப்பு, கடவுளரின் பிள்ளைகள் காவியப் பாத்திரங்களாய் மிளிர்கின்ற தன்மை, போர்க்கள நிகழ்வுகள் போன்ற பலவற்றில் இந்திய இதிகாசங்களுக்கும் கிரேக்கக் காவியங்களுக்குமிடையே அதிசயிக்கத்தக்க ஒற்றுமைக்கூறுகள் இருப்பதை இக்காவியங்களைப் பயில்வோர் தெள்ளிதின் உணர்வர்.

பெண்ணை (ஹெலன்) மீட்பதற்காக நடந்த பெரும்போரே இலியட் காவியமாய் விரியக் காண்கின்றோம். அவ்வகையில், தன் மனைவி சீதையைத் தூக்கிச்சென்ற இராவணனை எதிர்த்து இராமன் புரிந்தபோரை ட்ரோஜன் போரோடு ஒப்பிடலாம். ஆனால், இராமாயணச் சீதையைப்போல் கற்பின் கொழுந்தாகவும், பொற்பின் செல்வியாகவும் திகழ்ந்தவளில்லை இலியட் நாயகி ஹெலன். தனக்குத் துணைவராகும் பேற்றைப் பல ஆடவருக்கு விரும்பியளித்த தயாளகுணத்தினள் அவள்!
ஹெலனின் இத்தகைய ஒழுக்கக்கேடான நடத்தையை அறிந்த ஷேக்ஸ்பியர், தன்னுடைய As you like itநாடகத்தில், அதன் நாயகி ரோசலிண்டை (Rosalind) ருணிக்கும்போது, ”பேரழகி ஹெலனின் கன்னங்களையொத்த அழகான கன்னங்களைக் கொண்டவள் ரோசலிண்ட்; ஆனால் அவளைப்போல் சலன சித்தம் கொண்டவள் அல்லள்” (Helen’s cheek, but not her heart…) என்பார் எச்சரிக்கையாக.

இலியட் காவியத்தின் தன்னேரிலாத் தலைவனாய்த் திகழ்பவன் அக்கில்லஸ்’ (Achilles) எனும் மாவீரன். இவன் கடல்தெய்வமான தீட்டிஸ்’ (The goddess Thetis) என்பவளுக்கும், மானுட மன்னனானபீலியஸூக்கும் (Peleus – king of Aegina, located in Greece) பிறந்தவன். தாய், தெய்வப்பிறவியாய் இருந்தபோதினும், தந்தை மானுடன் ஆனபடியால் அக்கில்லஸும் மரணத்திற்கு உட்பட்டவனே! இதனை உணர்ந்த தீட்டீஸ் தன் மகனை மரணமற்றவனாக மாற்ற என்னவழி என யோசித்தாள். உடனே, பாதாளலோகத்தில் உள்ளதும், தன்னில் மூழ்கி எழுந்தவருக்குச் சாகாவரம் நல்குவதுமான ஸ்டிக்ஸ்(Styx) எனும் புனித நதியின் நினைவு அவளுக்கு வந்தது; ஓடினாள் குழந்தை அக்கில்லஸைத் தூக்கிக்கொண்டு அந்நதி நோக்கி! ஸ்டிக்ஸ் நதியில் அவனைத் தலைகீழாய்ப் பிடித்து முக்கியெடுத்தாள்.

இந்தப் புனிதநதியானது, சிலப்பதிகாரத்தில் வருகின்ற தெய்வத்தன்மை வாய்ந்ததும், நினைத்ததை அளிக்கவல்லதும், பழம்பிறப்புணர்த்துவதுமான புண்ணியசரவணம், இட்டசித்தி, பவகாரணி எனும் மூன்று பொய்கைகளை நம் நினைவுக்குக் கொண்டுவருகின்றது.
  
புனிதநதியில் நீராட்டப்பட்ட அக்கில்லஸ் உடலின் அனைத்துப் பாகங்களும் மரணத்தை வென்றனவாயின. ஆயினும், மகனைத் தலைகீழாய் நீரிலழுத்தும்போது அவனுடைய குதிகால்கள் நனையாமல் போனதைத் தீட்டீஸ் கருத்தில்கொள்ளத் தவறிவிட்டாள். ஆதலால், அவனுடைய குதிகால்கள் மட்டும் (மரணத்திற்குரிய) பலவீனமானவையாய் அமைந்துவிட்டன. இன்றும்கூட, தனிமனிதர் ஒருவரின் பலவீனத்தைக் குறிக்கஅக்கில்லஸின் குதிகால்’ (Achille’s heel) சுட்டப்படுவதை நாமறிவோம். (Ex: He is very brave, but fear of snakes is his Achilles’ heel.)

இவ்வாறு, தன் தெய்வத் தாயால் அதிபலம் பொருந்தியவனாய் மாற்றப்பட்ட அக்கில்லஸ், கிரேக்க நாட்டின் மிகச்சிறந்த போர்வீரனாய்த் திகழ்ந்தான். இம்மாவீரனின் சீற்றப் பெருக்கையும், ஆண்மைச் செருக்கையும் மையக் கருவாய்க்கொண்டு, ட்ராய் நகரின்இலியம்எனும் கோட்டையில் நடந்த போர்நிகழ்வுகளையே பார்போற்றும் இலியட் காவியமாய்க் கவினுற வடித்துள்ளார் ஹோமர்.

கிரேக்கர்களின் படைத்தலைவனாய் ட்ரோஜன் போரில் பங்கேற்ற அக்கில்லஸ், கிரேக்க அரசனான அகமெம்னானோடு ஏற்பட்ட மனவேறுபாட்டால் போரிலிருந்து பாதியிலேயே விலகுகின்றான். தனக்கு மாற்றாய்த் தன்னுயிர் நண்பன் பாட்ரோக்லோஸைப் (Patroklos) போருக்கு அனுப்புகின்றான். நண்பனின் பாதுகாப்புக்காகத் தான் தரித்திருந்த தெய்வத்தன்மை பொருந்திய கவசத்தை அவனுக்கு அளிக்கின்றான். அக்கில்லஸின் கவசத்தை நாம் கர்ணனின் உடலைத் தாங்கிப்பிடித்து அவனை ஆபத்துக்களிலிருந்து காத்த சூரியக் கவசத்தோடு ஒப்பிடலாம். கர்ணன் காய்கதிர்ச்செல்வனின் புதல்வன்; அக்கில்லஸோ கடலன்னையின் மைந்தன்!

அக்கில்லஸின் கவசத்தை அணிந்து திறம்படப் போரிட்டுக்கொண்டிருந்த பாட்ரோக்லோஸ், துரதிர்ஷ்டவசமாய் ட்ராய் நகரின் படைத்தலைவனும் ஹெலனைக் கடத்திக்சென்ற பாரிஸின் சகோதரனுமான ஹெக்டரிடம்’ (Hektor) போர்க்களத்தில் வசமாய்ச் சிக்கிவிட, பாட்ரோக்லோஸின் கவசங்களைப் பிடுங்கி, அவனைக் கடுமையாய்த் தாக்கிக் கொன்றுவிடுகின்றான் ஹெக்டர். அதுகேட்டுச் சினந்தெழுந்தது அக்கில்லஸ் எனும் செங்கட்சீயம். போரில் கலந்துகொள்வதில்லை எனும் தன்னுடைய எண்ணத்தைத் தூக்கியெறிந்துவிட்டுப் போரில் குதித்தது மீண்டும். அக்கில்லஸைக் களத்தில்கண்ட கிரேக்கப்படை ஆனந்தக் கூத்தாடியது. வெற்றி உறுதி என்று வீரமுழக்கமிட்டது.

அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. ஹெக்டரைப் போர்க்களத்தில் பந்தாடிய அக்கில்லஸ், அவனை வென்றுவீழ்த்திக் கொன்றான் கோரமாய். அத்தோடு அவன் வெஞ்சினம் அடங்கவில்லை. தன்னுடைய தேர்க்காலில் ஹெக்டரின் பிணத்தைக் கட்டி இழுத்துச்சென்று அவமதித்தான். இவ்வாறு பத்துநாட்கள் ஹெக்டரின் சடலத்தைப் புழுதியில் புரளவிட்டான் அக்கில்லஸ் என்கிறார் ஹோமர். அக்கில்லஸின் இந்த அராஜகச் செயல்கண்ட ஹெக்டரின் தந்தையும் ட்ராயின் அரசருமான ப்ரியம்’ (Priyam) கண்ணீர்பெருக்கினார்; ட்ராய் நகரமே சோகத்தில் ஆழ்ந்தது.

அதைத்தொடர்ந்து, ட்ராய் அரசரான ப்ரியம் செய்த செயல்கள் இலியடின் கவித்துவத்தைத் தனித்துவம் மிக்கதாய் மாற்றுகின்றன. ஆம்! தன் மகனின் சடலத்தை அக்கில்லஸிடமிருந்து பெறவேண்டும் என்று விரும்பிய அந்த முதிய தந்தை என்ன செய்தார் தெரியுமா?

போர்முடிந்து ஓய்வாக அக்கில்லஸ் இருந்த ஓர் இரவுவேளையில், நிறையப் பரிசுப்பொருள்களுடன் அவன் தங்கியிருந்த குடிலுக்குச் சென்றார். உணவு மேசைக்கருகே அமர்ந்து எதையோ பருகிக்கொண்டிருந்த அக்கில்லஸின் கைகளை எடுத்து மென்மையாய் முத்தமிட்டார். அவரை அருகில் கண்ட அக்கில்லஸ் குற்றவுணர்வோடு மருண்டு நோக்கினான். தன் தந்தையின் வயதொத்த அவரைச் சந்தித்தவேளையில், தன் தந்தையின் நினைவு வரப் பெற்றவனான். ப்ரியம் பேசலானார், “அக்கில்லஸ்! என் மகன் ஹெக்டரை எந்தக் கையால் கொன்றாயோ, அந்தக் கையை நான் அன்போடு முத்தமிட்டிருக்கின்றேன்; தயவுசெய்து என்மகனின் சடலத்தை என்னிடம் கொடுத்துவிடு!” என்றுகூறித் தான் கொணர்ந்த பரிசுப்பொருள்களை அவன்முன் வைத்து மண்டியிட்டார்.

ஏற்கனவே அவரின் பரிதாப நிலைகண்டு மனமிளகியிருந்த அக்கில்லஸ், மேலும் அவரைச் சோதிக்க விரும்பாமல், ”ஐய! பரிசுப்பொருள்கள் வேண்டாம்! உங்கள் மகனின் சடலத்தை நீங்கள் தாராளமாக எடுத்துச் செல்லலாம்; அதற்குமுன் இங்கே உணவுண்டு சற்றே இளைப்பாறுங்கள்!” என்றுகூறி அவருக்கு நல்ல உணவும், மதுவும் அளிக்கின்றான். அதனைப் பருகி அங்கேயே ஓய்வெடுத்துவிட்டுத் தன்மகனின் சடலத்தையும் பெற்றுச் செல்கின்றார் அந்த முதியவர்.

மகனைக் கொன்றவனோடு மகனை இழந்தவன் ஒன்றாக அமர்ந்து உண்பதும் உறங்குவதும் கற்பனைக்கெட்டாத அதிசய நிகழ்வுகள் அல்லவா? இதனைத் தன் காப்பியத்தில் சாத்தியமாக்கியிருக்கும் ஹோமரின் கற்பனைத்திறன் நம்மை பிரமிக்கவைக்கின்றது. ஹெக்டர் அடக்கம் செய்யப்படுவதுடன் இலியட் காப்பியம் நிறைவடைகின்றது.

காப்பிய நாயகன் அக்கில்லஸ் என்னவானான் என்பதைப்பற்றி அது பேசவில்லை. ஆனாலும், அந்த மாவீரனைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல் நமக்குள் குறுகுறுக்கத்தானே செய்கின்றது. இதற்கான விடையைக் கண்டறிய வேண்டுமானால் நாம் ஹோமரின் மற்றொரு காப்பியமான ஒடிசியைப் படிக்கவேண்டும்.

ட்ரோஜன் போரில் பங்கேற்பதற்காக வந்த ஒடிசியஸ் (Odysseus) எனும் அரசன் (Odysseus – king of Ithaca, it’s a Greek island) போர்முடிந்து தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிச்செல்லும்வழியில் தான் சந்திக்கும் இடையூறுகளை எவ்வாறு எதிர்கொண்டு அவற்றை வென்று தாயகம் திரும்புகின்றான் என்பதைச் சொல்லோவியமாக்கியுள்ளது ஒடிசி. இக்கதையின் இடையில்தான் இலியட் நாயகன் அக்கில்லஸைப் பற்றிய செய்திகள் இடைப்பிறவரலாகச் சொல்லப்படுகின்றன.

அதனை நாமும் அறிந்துகொள்வோம்!

ஹெக்டரின் மறைவுக்குப் பின்னரும் தொடர்கின்றது ட்ரோஜன் போர். ஒருகட்டத்தில், கிரேக்கக் கடவுளான அப்போல்லோ (Apollo – God of light, prophecy, inspiration, poetry, etc.), ஹெக்டரின் சகோதரனான பாரிஸிடம், அக்கில்லஸை (அவனுடைய பலவீனமான பகுதியான) குதிகாலில் அம்பெய்து கொல்லுமாறு இரகசிய வழிகாட்ட, அவ்வாறே செய்து அக்கில்லஸின் வீரமரணத்திற்கு வழிவகுக்கின்றான் பாரிஸ்.

அக்கில்லஸின் மரணம், நமக்குத் திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் கிருஷ்ணரின் மரணத்தை நினைவுறுத்துகின்றது. தன் அவதார முடிவில் கிருஷ்ணர் தனியராய் யோகத்தில் அமர்ந்திருந்த வேளையில், அவர் உள்ளங்காலின் தோற்றத்தை ஏதோ விலங்கென்று தவறாக எண்ணிய வேடனொருவன் எய்த அம்பினால் அவர் உயிர்நீத்தார் என்று கிருஷ்ணாவதாரக் கதைகள் கூறுகின்றன. அக்கில்லஸும் அவ்வாறே தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளது ஈண்டுக் கருதத்தக்கது.

அதெல்லாம் இருக்கட்டும்ஹெலன் என்ன ஆனாள்? என்றுதானே கேட்கவருகின்றீர்கள்; அதையும் சொல்லிவிடுகின்றேன்!

ட்ராய் போரில் அவளுடைய காதலன் பாரிஸ் வீழ்ந்துபட, அவள் பாரிஸின் தம்பியான டெய்ஃபோபஸுக்குத் (Deiphobus) துணைவியாகிறாள். பின்பு டெய்ஃபோபஸைக் கிரேக்கர்களிடம் சிக்கவைத்துவிட்டுத் தான் தப்பியோடிவிடுகின்றாள். அவள் மேனாள் கணவனான மேனலாஸ் அவளைத் தன் கையாலேயே கொன்றுவிடுவது என்ற வெறியோடு தேடியலைகின்றான். ஒருநாள் அவன் கையில் சிக்குகின்றாள் ஹெலன். ஆனால் அந்த அழகியைக் கண்டதும் கோபவெறி மாறி மீண்டும் காதல் பிறந்துவிடுகின்றது அவனுக்கு. ஆகவே மீண்டும் தன் பழைய கணவனோடு அவள் ஸ்பார்டாவின் ராணியாய்த் திகழ்ந்தாள் என்கிறது ஒடிசி. ட்ரோஜன் போருக்கு முக்கியக் காரணமாயிருந்த நஞ்சனைய அந்த வஞ்சமகள் யாதொரு தண்டனையும் பெறாதது வியப்பே!

இலியடுக்கும், ஒடிசிக்கும் கதைப்போக்கிலும் தொடர்பிருப்பதால் (Odyssey is, in part, a sequel to Iliad) இவற்றையும்கூட நாம்இரட்டைக் காப்பியங்கள்என்று அழைக்கலாம்.

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியின் சுவையில் ஈடுபட்ட மேனாட்டு அறிஞரான ஜி.யு. போப் அவர்கள் அதனைக் கிரேக்கக் காப்பியங்களான இலியடுக்கும் ஒடிசிக்கும் இணையானது என்று போற்றியிருப்பதை இத்தருணத்தில் நாம் நினைவுகூர்ந்து இன்புறலாம்.

படிக்கத் தெவிட்டாத தீஞ்சுவைக் காப்பியங்களை யாத்து, ஐரோப்பாவின் இலக்கியப் படைப்புக்களுக்கு முன்னோடியாய், மூலவராய்த் திகழ்கின்றார் ஹோமர். பார்வையற்றவராய் அறியப்படும் இந்தப் பெரும்புலவர், காலத்தை வென்ற காப்பியங்களால் உலகின் பார்வையையே தன் பக்கம் திருப்பியிருப்பது பெருஞ்சாதனை அன்றோ?