Wednesday, December 17, 2014

பாஞ்சாலி சபதம் - சில சுவையான பகுதிகள்


உரிமையிழந்து (சூதாட்டத்தில்) அடிமைப்படுத்தப்பட்ட மாபாரதப் பாஞ்சாலியின் நிலையும், பரங்கியரிடம் அடிமைப்பட்ட பாரதத் தாயின் நிலையும் ஒன்றே என உணர்ந்த மகாகவி பாரதி அவ்விருவர் நிலைகண்டும் பொறாது, இருவருக்கும் நீதியும், நல்விடுதலையும் கிடைக்க வேண்டும் என்பதையே உட்கிடையாக வைத்துப் படைத்த காவியமே அவருடைய ‘magnum opus’-ஆக அமைந்த “பாஞ்சாலி சபதம்.” 

வியாசரின் மகாபாரத்தை அடியொற்றி நம் மகாகவி படைத்த இப்பாஞ்சாலி சபதம் படிக்கத் தெவிட்டாத தீஞ்சுவைத் தெள்ளமுது; இதனை முழுவதும் விளக்கப் புகுந்தால் மிகவும் நீண்டுவிடும் என்பதால் அதில் நான் மிகவும் ரசித்த பகுதிகளை மட்டும் இங்கே பகிர்ந்துள்ளேன். 

தருமனின் சிறப்பையும், புகழையும் கண்டு பொறாமையுற்ற துரியோதன் சகுனியைத் தன் தந்தை திரிதராட்டிரனிடம் பேசிப் பாண்டவரைச் சூதுக்கு அழைக்கச் சம்மதம் வாங்கச் சொல்லுகிறான். சகுனியும் அதுபற்றி மன்னனிடம் விரிவாகப் பேசுகிறான். அதைக் கேட்டுத் திரிதராட்டிரன் கோபத்தோடு சகுனியிடம் கூறும் மறுமொழி இது…

அட,
பிள்ளையை நாசம் புரியவேஒரு
பேயென
நீவந்து தோன்றினாய்; -- பெரு
வெள்ளத்தைப் புல்லொன் றெதிர்க்குமோ? -- இள
வேந்தரை நாம்வெல்ல லாகுமோ?
சோதரர் தம்முட் பகையுண்டோ? -- ஒரு
சுற்றத்திலே பெருஞ் செற்றமோ?...”

என்று பாண்டவர்களைப் புகழ்ந்தும் தன் மகனை இகழ்ந்தும் பேசுகின்றான். (வியாச பாரதத்தில் திரிதராட்டிரன் தொடக்கத்தில் நல்லவனாகவே காட்டப்படுகின்றான்; பின்பு மைந்தனால் மனங்கெட்டுப் போகிறான்.)

அதுகேட்டுச் சினந்த துரியோதனன், ”பெற்ற மைந்தர்க்குத் தீங்கு செய்யும் தந்தை உன்னைப்போல் இப்புவியில் யாருமில்லை” என்று தந்தையைக் கடுஞ்சொற்களால் சாடத் தொடங்குகிறான்…

அட!
தாம்பெற்ற மைந்தர்க்குத் தீதுசெய் -- திடும்
தந்தையர் பார்மிசை உண்டுகொல்? -- கெட்ட
வேம்பு நிகரிவ னுக்குநான் -- சுவை
மிக்க சருக்கரை பாண்டவர்; -- அவர்
தீம்பு செய்தாலும் புகழ்கின்றான், -- திருத்
தேடினும் என்னை இகழ்கின்றான்…” என்று கொக்கரிக்கின்றான்.

மீண்டும் திரிதராட்டிரன் எவ்வளவோ நல்லுரைகளை நயமாகக் கூறியும் கேளாத துரியோதனன், ”பாண்டவர்களை நீ இங்கு சூதுக்கு அழைத்தே ஆகவேண்டும்!” என்று வற்புறுத்த, வேறுவழியின்றித் தந்தையும் சம்மதித்துத் தம்பி விதுரனைப் பாண்டவர்களை அழைத்துவரத் தூதனுப்புகின்றான்.

பாண்டவர்களின் தலைநகரான இந்திரபிரஸ்தம் வருகின்ற விதுரன் மூலமாகத் துரியோதனின் சதியை அறிந்தும், பெரியோர்களின் அழைப்பை மறுக்கக்கூடாது எனும் நாகரிகம் கருதித் தருமபுத்திரன் தன் தம்பியரோடும், மனைவி பாஞ்சாலியோடும் அஸ்தினாபுரம் பயணமாகிறான். தெரிந்தே இப்பயணத்திற்கு உடன்படும் தருமனுடைய விதியின் வலிமையை அழகிய உவமைகள் வாயிலாய் விளக்குகின்றான் பாரதி.

நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்
நழுவிவிழும், சிற்றெறும்பால் யானை சாகும்,
வரிவகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்,
வருங்கால முணர்வோரும் மயங்கி நிற்பார்…” விதி வகுத்த வழியில்தான் மதி செல்லும் என்பது இங்கு சுட்டப்படுகின்றது.

அடுத்து, அஸ்தினாபுரத்தில் சூதாட்டம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தருமன் தன் உடைமைகள் ஒவ்வொன்றாக வைத்திழக்கின்றான்; சகுனியும் விடாது…”தருமா! நீ இன்னும் உன் நாட்டை இழக்கவில்லை; அதை வைத்தாடு!” என்று தூண்டுகிறான். (அடடா! என்ன பாசம்! மாமன் என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்!) 

மாடிழந்து விட்டான், -- தருமன்
மந்தை மந்தையாக;
ஆடிழந்து விட்டான், -- தருமன்
ஆளி ழந்து விட்டான்;
பீடி ழந்த சகுனி -- அங்கு
பின்னுஞ் சொல்லு கின்றான்:
நாடி ழக்க வில்லை, -- தருமா!
நாட்டை வைத்திடென்றான்.

சகுனியின் சொற்கேட்டு நாட்டை வைத்திழந்த தருமன், பின்னர்த் தம்பியர் நால்வரையும் சூதில் இழந்து முடிவில் தன்னையும் இழக்கின்றான்; அப்போது கயவன் சகுனி ”உனக்கு இன்னமும் வெற்றிபெற வாய்ப்புள்ளது தருமா!; உன் தேவியை வைத்தாடுவாய்!” என்று விஷத்தைக் கக்குகின்றான். அதுகேட்டுத் துரியோதனாதியர், தங்கள் மாமனை உயரத்தூக்கி ஆனந்தக் கூத்தாடினர்; ”நீயே எங்கள் தெய்வம்!” என்று கொண்டாடினர்.

அந்த அதர்மத்தைக் கண்டு அப்போது ஜகத்தில் மிகப் பெரியதோர் குழப்பம் உண்டாயிற்றாம். அதன் விளைவாய் நான்முகன் வாயடைத்துப் போனான்; நாமகளுக்குப் புத்திகெட்டது; திருமாலும் அறிதுயிலைவிட்டு ஆழ்துயிலில் ஆழ்ந்தான்…என்று அக்குழப்பத்தை நமக்குப் பட்டியலிடுகிறான் பாரதி.

நான்முகனார் நாவடைக்க, நாமகட்குப் புத்திகெட,
வான்முகிலைப் போன்றதொரு வண்ணத் திருமாலும்
அறிதுயில்போய் மற்றாங்கே ஆழ்ந்ததுயி லெய்திவிட ...”

துரியோதனன் கட்டளைப்படி அவன் தம்பியும் மூர்க்கனுமான துச்சாதனன் பாஞ்சாலியை அழைத்துவர அந்தப்புரம் செல்கின்றான். அவள், தன்னைச் சூதில் பணயம் வைப்பதற்குத் தருமனுக்கு உரிமையில்லை என்று எவ்வளவு எடுத்துக்கூறியும் கேளாத அந்த மூடன் அவள் நீண்ட கூந்தலைப் பற்றி இழுத்துக்கொண்டு போகிறான். அதுகண்டு ஒன்றும் தோன்றாமல் வேடிக்கை பார்த்திருந்தோரை ”வீரமிலா நாய்கள்” என்றும், ”நெட்டை மரங்கள்” என்றும் கனல் கக்கும் வார்த்தைகளால் விளாசுகின்றான் பாரதி.

என்ன கொடுமையிதுவென்று பார்த்திருந்தார்.
ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள்; விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே,
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்,
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?”

சபைக்கு அழைத்துவரப்பட்ட பாஞ்சாலி ”தன்னை எவ்வாறு சூதில் பணயமாக வைக்கலாம்?” என்று தருமனிடம் ஆவேசத்தோடு கேட்கிறாள். அப்போது ‘பீஷ்மர்’ ஆண் பெண் சமத்துவம் பற்றிப் பாஞ்சாலியிடம் கூறுகின்ற செய்திகள் நம்மைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்துகின்றன. 

அவர் உரைக்கிறார்…”கோமகளே! வேத காலத்தில் ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய நிலை அதுவல்ல! உன்னை உன் கணவன் பணயப் பொருளாக வைத்ததில் தவறொன்றுமில்லை; ஏனெனில் தன் மனைவியை விற்கவோ, வேறு ஒருவனுக்குத் தானமாகத் தரவோ அவள் கணவனுக்கு முழு உரிமையுண்டு; எனவே தருமன் சூதில் தோற்ற பின்பும் உன்னைப் பணயம் வைத்ததைத் தவறென்று கூற இயலாது என்கிறார்.

இதோ அவ்வரிகள்…
”…உன்னையொரு பந்தயமா வைத்ததே
குற்றமென்று சொல்லுகிறாய். கோமகளே, பண்டையுக
வேதமுனிவர் விதிப்படி, நீ சொல்லுவது
நீதமெனக் கூடும்; நெடுங்காலச் செய்தியது!
ஆணொடுபெண் முற்றும் நிகரெனவே அந்நாளில்
பேணிவந்தார். பின்னாளில் இஃது பெயர்ந்துபோய்,
இப்பொழுதை நூல்களினை யெண்ணுங்கால், ஆடவருக்
கொப்பில்லை மாதர். ஒருவன்தன் தாரத்தை
விற்றிடலாம்; தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம்.
முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை.
தன்னை யடிமையென விற்றபின் னுந்தருமன்
நின்னை யடிமையெனக் கொள்வதற்கு நீதியுண்டு...”

இதன் வாயிலாய் நாம் அறிவது என்ன? வேத காலத்தில் பெண்களுக்கிருந்த சமத்துவம், பின்புவந்த இதிகாச காலத்திலேயே மாறிவிட்டிருக்கிறது. பெண்ணுரிமை மறுக்கப்பட்டுப் ’பெண்ணடிமைத்தனம்’ தலைதூக்கியிருக்கிறது என்பதே!

பீஷ்மரின் பேச்சைக்கேட்டுக் கொதித்தெழுந்த பாஞ்சாலி,
 நன்று சொன்னீர் ஐயா!...
 பேயரசு
செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று பொங்கிவிட்டுச் சற்றே தணிந்த குரலில்,

”……பெண்டிர்
தமையுடையீர்! பெண்க ளுடன்பிறந்தீர்!
பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ?
கண்பார்க்க வேண்டும்!” என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கின்றாள்.

இவற்றையெல்லாம் கண்டு பெருஞ்சினம் கொண்ட வீமன், தம்பி சகாதேவனிடம் “எரிதழல் கொண்டு வா; அண்ணன் கையை எரித்திடுவோம்” என்று சீறிவிழ, எப்போதும் மிதவாதத்தையே விரும்பும் விஜயனோ, வீமனிடம், ”என்ன வார்த்தை சொன்னாய் அண்ணா?”,

”தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம்மறு படிவெல்லும்என்று அவனைச் சமாதானப்படுத்திவிட்டு,
”கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
தனுஉண்டு காண்டீவம் அதன்பேர்” என்று அவனுக்குத் தைரியம் சொல்கின்றான்.

திரௌபதியின் நிலைகண்டு மகிழ்ச்சி மிகக்கொண்ட துரியோதனாதியரும், கர்ணனும் அவளைக் கேலிபேசி நகைத்தனர். ”அடிமைக்கு மேலாடை எதற்கு?” என்று கேட்டு அவள் மேலாடையைக் களையுமாறு கர்ணன் யோசனை கூற, அதனைச் செயற்படுத்தும் விதமாகத் துச்சாதனன் அவள் மேலாடையைப் பற்றியிழுக்கத் தொடங்குகின்றான் சபையில்.

வெலவெலத்துப்போன பாஞ்சாலி, தன் மானத்தைக் காக்குமாறு கண்ணபெருமானிடம் இறைஞ்சுகின்றாள். அப்போது ஆங்கோர் அதிசயம் நிகழ்ந்தது! மாயக் கண்ணனின் அருளால் பாஞ்சாலியின் சேலையானது துச்சாதனன் துகிலுரிய உரிய வளர்ந்தவண்ணமிருந்தனவாம். கடைசியில் அவனும் களைத்துப்போய் நிலத்தில் வீழ்ந்தான்!

கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!
எண்ணத்தி லடங்காவே; -- அவை
எத்தனை எத்தனை நிறத்தனவோ!  என்று இந்த அசாதாரண நிகழ்வை அழகாய் விவரிக்கிறான் பார்போற்றும் பாரதி.

பின்பு வீமனும் விஜயனும், ”துரியோதனாதியரைப் போரில் வீழ்த்துவோம் பாஞ்சாலிக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைப்போம்!” எனச் சினத்துடன் சூளுரைக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து,
”பாவிதுச் சாதனன் செந்நீர், -- அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து -- குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன்யான்; -- இது
செய்யுமுன்னேமுடியேன் எனப் பாஞ்சாலியும் விழிகள் சிவக்க வீர சபதம் செய்கின்றாள்.

இவ்வாறு மாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போருக்குத் தோற்றுவாயாய் அமைந்த சூதாட்ட நிகழ்வையும், அதைத் தொடர்ந்து பாஞ்சாலி செய்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சபதத்தையும் படிப்போர்க்கு(ம்) அவ்வீரவுணர்ச்சி தொற்றிக்கொள்ளும் வகையில் தன் காவியத்தில் வடித்துத் தந்த பாட்டுக்கொரு புலவனின் கவியாற்றலைப் போற்ற வார்த்தைகள் ஏது?