Friday, November 6, 2015

வையம் போற்றும் வரகவி

”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது; மானிடராய்ப் பிறந்த காலையின் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது” என்றார் தமிழ்மூதாட்டி அவ்வை. ஞானமும் கல்வியும் வாய்த்த மானிடனே சிறந்த படைப்பாளனாய்ப் பரிணமிக்கின்றான். சிறுமை கண்டு பொங்குகின்றான்; கண்மூடிப் பழக்கமெல்லாம மண்மூடிப் போக வேட்கை கொள்கின்றான். தன் வேட்கையை வெளிப்படுத்த அவன் தேர்ந்தெடுக்கும் சாதனமே மொழி.

மொழியின் வடிவங்கள் பல. அவற்றில் முதன்முதலில் மனிதன் பயன்படுத்தியது பாடல் எனப்படும் கவிதை வடிவமே. ஏனெனில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலைக் கவிதையில்தான் செம்மையாய்ச் செய்யவியலும். கபிலரும் பரணரும் நக்கீரரும் கம்பரும் சேக்கிழாரும் நம் உள்ளத்தைப் பிணித்தது தீஞ்சுவைக் கவிதைகளாலேயே.

நம் செந்தமிழ்ப் புலவர்களைப்போல் மேற்குலகப் பாவலர்களிலும் தம் கவிஆளுமையால் உலகைக் கட்டியோர் பலராவர். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் பெருங் கவிஞர் ஜான் மில்டன். ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இடத்தில் இன்றளவும் வைத்துப் போற்றப்படுபவர் இப்புலவர் பெருமானே. பெருங்காப்பியங்கள், குறுங்காப்பியங்கள், உரைநடை நூல்கள், கடிதங்கள், நாடகங்கள், இரங்கற்பாக்கள் என மொழியின் அனைத்து வடிவங்களையும் தம் ஏட்டில் வடிப்பதில் இணையற்ற வல்லவராய்த் திகழ்ந்தார் இக் கவிஞர்.

1608-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9-ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள இலண்டன் மாநகரில் ஜான் மில்டன் மூத்தவருக்கும் (senior), சாரா ஜெஃப்ரி அம்மையாருக்கும் மகனாய்த் தோன்றினார் ஜான் மில்டன் (ஆம், தந்தையின் பெயரே இவர் பெயரும்). புதுமைச் சிந்தனைகள் கொண்டவராய் விளங்கிய மில்டனின் தந்தை, கத்தோலிக்கக் கிறித்தவத்தைச் சார்ந்திருந்த தம் தந்தையிடமிருந்து (மில்டனின் பாட்டனாரிடமிருந்து) இளைஞராயிருக்கும்போதே பிரிந்துவந்து புரோட்டாஸ்டாண்டு கிறித்தவத்தைப் பின்பற்றத்தொடங்கினார் (He belonged to extreme Protestantism or Puritanism). பத்திரம் எழுதுபவராய்ப் பணியாற்றிய அவர் பாப்புனைவதிலும் நூல்களைப் படிப்பதிலும் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். ’சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ எனும் பொன்முடியாரின் பொன்மொழிக்கேற்ப மகன் மில்டனைச் சிறந்த புலவனாய்க் காணவேண்டும் எனும் வேணவா கொண்டிருந்தார் அத்தந்தை. ஆயினும், தன்மகன் கவிச்சிங்கமாய்த் திகழ்ந்து உலக மாகவிகளின் வரிசையில் இடம்பிடிக்கப்போகின்றான் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கல்விமீது காதல்கொண்ட மில்டன், எப்போதும் புத்தகங்கள் படிப்பதையே தன் பொழுதுபோக்காய்க் கொண்டவராம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறித்து கல்லூரியில் (Christ's College) தன் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் மில்டன். கல்லூரிக் காலத்திலேயே கவிதைகள் எழுதும் பழக்கம் அவரிடம் அரும்பத் தொடங்கிவிட்டது. கிறித்து பிறந்தநாள் காலைக்கொண்டாட்டம் (Ode on the morning of Christ’s Nativity) எனும் கும்மிப்பாட்டு தன் கல்லூரி நாட்களில் அவர் எழுதியதாகும்.

’லிசிடஸ்’ (Lycidas) எனும் இரங்கற்பா (Elegy) மறைந்த தன்னுடைய நண்பர் எட்வர்டு கிங் (Edward King, a college mate of Milton’s in Cambridge) என்பவரின் நினைவாய் மில்டன் எழுதியது. இவ்விரங்கற்பா ஆங்கில இலக்கிய இரங்கற்பாக்களிலேயே தலைசிறந்த ஒன்றாய்க் கருதப்படுகின்றது. முல்லை நிலத்தை வனப்புடன் வருணிக்கும் அர்கேடிஸ் (Arcades)  எனும் கவிதையொன்றையும் எழிலுறத் தீட்டியுள்ளார் மில்டன்.

சமய நம்பிக்கைகளில் சீர்திருத்தம் வேண்டும் என விரும்பிய மில்டன், தன் தந்தையைப் போலவே புரோட்டாஸ்டண்ட் கிறித்தவத்தைப் பின்பற்றினார். சமய நூல்களின்பால் கொண்டிருந்த ஆழ்ந்த பற்றின் காரணமாய், விவிலிய நூலின் அருட்பகுதிகள் சிலவற்றை மிக அழகான கவிதைகளாய் வடித்திருக்கின்றார் அவர்.

ஆங்கிலக் கவிஞர்களிலேயே அதிகம் கற்றவராய்க் கூறப்படும் மில்டன் (Man of letters), ஆங்கிலம் மட்டுமல்லாது, கிரேக்கம், இலத்தீன், இத்தாலியம், எபிரேயம், பிரெஞ்சு, இசுபானியம் எனப் பலமொழிகளில் நல்ல தேர்ச்சியும் திறனும் பெற்றிருந்தார். இலத்தீனைத் தாய்மொழியாகக் கொண்டவர்களோடு (நூல்களின் வாயிலாய்ச்) சொற்போர் புரியும் அளவிற்கு அதில் புலமை வல்லாராய் வாழ்ந்திருக்கின்றார் மில்டன்.

தன் அறிவை விரிவுசெய்ய விரும்பிய அப்புலவர் பெருந்தகை, 1630-களின் பிற்பகுதியில், ஐரோப்பாவில் கலை அறிவியல் ஆகியவற்றின் தாயகமாக விளங்கிய கிரேக்கம், இத்தாலி போன்ற நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போதுதான் புகழ்பெற்ற வானியல் அறிஞரான கலிலியோவை அவர் சந்தித்தார். ஆயினும், தன் சுற்றுப்பயணத்தை மேலும் நீட்டிக்க முடியாதபடி, இங்கிலாந்தில் புரட்சி தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படுவதை நாளிதழ்கள் வாயிலாய் அறிந்த மில்டன், உடனடியாய் இங்கிலாந்திற்குப் புறப்பட்டார்.

இதுகுறித்துக் குறிப்பிட்ட மில்டன், “என் சகமக்கள் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் என் அறிவை வளர்த்துக்கொள்வதற்காக மகிழ்ச்சியோடு ஊர்சுற்றிக்கொண்டிருப்பது இழிவான செயல் என்று எனக்குத் தோன்றியதால் உடனடியாகத் தாய்நாட்டிற்குத் திரும்பினேன்.” என்கிறார்.

1640-இல் இங்கிலாந்தில் புரட்சி வெடித்தபோது மில்டனின் வயது 32. அவ்வேளையில், புரட்சியின் காரணமாக இங்கிலாந்தில் (முதலாம் சார்லஸ்) மன்னனின் ஆட்சி முடிவுற்று, நாடாளுமன்றத்தினரின் குடியாட்சி கால்கொள்ளத் தொடங்கிற்று. குடியாட்சியின் ஆதரவாளரான மில்டன், அதற்குச் சார்பாய்ப் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். அவருடைய நண்பரும், மன்னனுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் வெற்றிவாகை சூடியவருமான ஆலிவர் கிராம்வெல் (Oliver Cromwell) அப்போது ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தார். அவருக்குத் துணையாக மில்டனும் முழுநேர அரசியல் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். 1649-இல் அயல்மொழித்துறை செயலாளர் பொறுப்பு மில்டனுக்கு வழங்கப்பட்டது. வெளியுறவுகளைப் பேணுதற்கான கடிதப் போக்குவரத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புமிக்க அப்பணியில், மில்டன் தன் பன்மொழிப் புலமையை நன்கு புலப்படுத்தினார்.

ஆனால், இப்பணியில் இருக்கும்போதே அவருடைய கண்கள் அவருக்குத் தொல்லைதரத் தொடங்கின. சிறிது சிறிதாக கண்பார்வை மங்கத் தொடங்கியது. மில்டனின் கண்களைப் பரிசோதித்த மருத்துவர், தொடர்ந்து அவர் கண்களுக்கு அதிகவேலை கொடுத்துவருவாராயின், கண்பார்வை முற்றிலும் பறிபோகக்கூடும் என்று எச்சரித்திருந்தார். அதனைப் பொருட்படுத்தாத மில்டன், இரவு பகலாய்க் கண்களுக்குக்குக் கடுமையான வேலை கொடுத்துக்கொண்டே இருந்தார். அதன் விளைவு, வருந்தத்தக்க வகையில் ஒருநாள் தன் கண்ணொளியை முற்றிலும் இழந்தார்.

கண்ணொளி இழந்தும் அகத்தின் கருத்தொளி அவருக்குக் குன்றவில்லை; வாசிப்பையே தன் சுவாசிப்பாய் எண்ணிய அவர், தம்மால் படிக்கவியலாமல் போனபோது, தம்முடைய புதல்வியரையும் உடனிருந்த உதவியாளரையும் நூல்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்வாராம்.

கண்ணிழந்த பின்னர் அவர் எழுதியதுதான், அவருடைய படைப்புக்களின் உச்சமாய் (Masterpiece) மெச்சப்படும் ’துறக்க வீழ்ச்சி’ (Paradise Lost) எனும் கவிதைக் காவியம். விவிலியத்தில் கூறப்பட்டுள்ள மானுடனின் வீழ்ச்சிக் கதையே இக்காவியத்தின் கதையாகும். இறைவன் இயற்றிய துறக்கம் எனும் பொன்னுலகில் முதல்மனிதன் ஆதாமும், முதல்மாது ஏவாளும் வாழ்ந்ததும், அவர்கள் இறைவனின் பகைஞனாகிய சாத்தானின் உரைகேட்டுக் கருத்தழிந்து அறிவுமரத்தின் கனியை உண்டதும், அதன்விளைவாய் உலகில் தீவினை, நோய், முதுமை, மரணம் முதலியவை ஏற்பட்டதும் இதில் பேசப்படும் செய்திகளாகும். மனிதனின் முதற்பிறழ்வையும்…” (Of Mans first Disobedinece…) என்று முதலடியிலேயே கதையின் கருப்பொருளைச் சொல்லித் தொடங்கும் ’துறக்க வீழ்ச்சி’, மில்டனின் செம்மாந்த கவியாற்றலுக்குக் கட்டியம் கூறுகின்றது.

ஆழ்ந்த அறிவோடும் கருத்துச் செறிவோடும் மில்டனால் படைக்கப்பட்ட இக்கவிதைக் காவியம், எதிர்பார்த்த வரவேற்பை அன்று இங்கிலாந்து மக்களிடம் பெறவில்லை. கரணியம், அஃது இறைவனின் எதிரியான சாத்தானிடம் மானுடம் வீழ்ந்துபட்ட வரலாற்றை விரிவாய்ப் பேசியதே. அதில், இறையினும் விஞ்சிய திறலுடையோனாய்ச் சாத்தானைப் படைத்துவிட்டார் மில்டன் என்றெண்ணிய (பழமைவாதிகளான) கத்தோலிக்கக் கிறித்தவர்கள், இக்காவியத்தை ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்தனர்.

அம்மட்டோ? ’துறக்க வீழ்ச்சியை’ ஏனையோரிடம் சென்றுசேரவொட்டாமல் வீழ்த்திடமுனைந்த அம்மக்கள், அதனைத் அங்கியக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்தனர் (தீயிட்டுக் கொளுத்தினர்). சாத்தான், இறைவனை வெல்வதுபோல் கதை அமைத்திருப்பதை வைத்து, ”மில்டன் ஓர் நாத்திகவாதி, இறைநம்பிக்கையற்றவர்” என்றெல்லாம் அவரைத் தூற்றினர். பின்னர், (தம் நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க) மில்டன், ’துறக்க மீட்சி’ (Paradise Regained) எனும் நூல் எழுதியவுடன் ”ஆகா! மனிதர் திருந்திவிட்டார்; நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்கு மாறிவிட்டார்!” என்று பேசத்தொடங்கியதும் இவர்களே!

உண்மையில், மில்டன் நாத்திகரும் அல்லர்; மூடநம்பிக்கைகளைப் பற்றியொழுகும் ஆத்திகரும் அல்லர். அவர் இறைவனை ஏற்றுக்கொண்டார். ஆனால் இறைவனுக்கும் மானிடர்க்குமிடையே இடைத்தரகராய் நின்று அநியாயங்கள் செய்துவந்த (திருச்சபை) குருமார்களைச் சாடினார். ’பராசக்தி’ (படத்தின்) வசனம்போல், அவர் பூசாரிகளைத் (தம் எழுத்துக்களால்) தாக்கினார்; பூசாரிகள் கூடாதென்பதற்காக அல்ல; பூசாரிகள் கயவர்களாகவும், காவலனுக்குக் (இங்கிலாந்து மன்னனுக்கு) கால்பிடிக்கும் ஏவலர்களாகவும் இருக்கக்கூடாது என்பதற்காக!

மில்டனின் படைப்புக்களில் இறுதியானதாய்க் கருதப்படுவது, ’மாமல்லன் சாம்சன்’ (Samson Agonistes  - A tragic closet drama) எனும் நாடக நூலாகும். இங்கிலாந்துப் புரட்சியும் மில்டனின் தனிவாழ்வும் கைகோத்துச்செல்லும் வகையில் இந்நூலின் கதையோட்டம் அமைந்திருக்கின்றது என்பது ஆய்வாளர்கள் கருத்து.

ஆங்கிலக் கவிதைகளில் அதிக அளவில் உவமைகளைப் பயன்படுத்தி வெற்றிகண்டவர் மில்டனே. ”எவ்வித முயற்சியுமின்றிக் கவிஞனின் உள்ளத்தில் தானாய் ஊற்றெடுப்பது கவிதை; வலிந்து வரவழைப்பது கட்டுரை” என்று மொழியின் இருவடிவங்களுக்கிடையேயுள்ள வேறுபாட்டை வரையறுக்கின்றார் அவர்.

தனிவாழ்க்கை, பொதுவாழ்க்கை இரண்டுமே போர்க்களங்களாய் அமைந்திருந்தன மில்டனுக்கு. அதற்காக அவர் வாழ்வை வெறுத்து ஓடினாரில்லை. இறவாத புகழுடைய புதுநூல்களைப் பூவுலகிற்குப் படைத்தளிக்கத் தவறினாரில்லை. ஷேக்ஸ்பியரைத் தனக்கு ஆதர்சமாகக் கொண்டிருந்தார் மில்டன் என்பர். அதுபோல், மில்டனை வழிகாட்டியாய்க் கொண்டு சிறந்தோர் பலருளர். அவர்களில் குறிப்பிடத்தக்க சிலர், இயற்கைக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth), வில்லியம் பிளேக் (William Blake), ஜான் கீட்ஸ் (john Keats) போன்றோர்.

இத்தருணத்தில், வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், தெய்வமாகவி மில்டனை, ’மீண்டும் இங்கிலாந்தில் தோன்றுக!’ என்று வரவேற்று எழுதிய கவிதையொன்று நினைவுகூரத்தக்கது.

   London, 1802 – William Wordsworth 
    Milton! thou shouldst be living at this hour:
   England hath need of thee: she is a fen
   Of stagnant waters: altar, sword, and pen,
   Fireside, the heroic wealth of hall and bower,
   Have forfeited their ancient English dower
   Of inward happiness. We are selfish men;
   Oh! Raise us up, return to us again;
   And give us manners, virtue, freedom, power.
   Thy soul was like a Star, and dwelt apart:
   Thou hadst a voice whose sound was like the sea:
   Pure as the naked heavens, majestic, free,
   So didst thou travel on life's common way
   In cheerful godliness; and yet thy heart
   The lowliest duties on herself did lay.

தமிழில்…

மில்டன்! நீ இப்போது எம்மிடை இருந்திட விழைகின்றோம்
இங்கிலாந்துஅன்னை உன்னை அழைக்கின்றாள்; தேங்கிய நீராய்
எம்வாழ்க்கை இங்கு கெட்டழிந்தது; சமய வழக்கம்,
இணையில் வீரம், கல்வி, இல்லறம் இவற்றொடு
மாண்புடை ஆங்கில மக்களின் நல்அமைதி
மறைந்திடச் சுயநலச் சுழலில் சிக்கினோம் யாமே
மீண்டு(ம்) வருவாய் எமக்குப் புத்துயிர் தருவாய்
வேண்டுகின்றோம் நல்லறமும் ஆண்மையும்
துருவமீனாய்த் தோன்றும் நின்வாழ்க்கை எமக்கு!
தூய வானெனப் பொறையும் பெருமையும் பெற்றாய்!
நீள்கடல் முழக்கமாய் முழங்கிடும் உந்தன் மொழிகள்
மனித வாழ்விடை மனிதனாய் வாழ்ந்த தேவன்நீ
திருவும் மேன்மையும் சிறப்புறக் கொண்டனை ஆயினும்
உருவில் எமக்கோ எளியனாய் வந்து தோன்றினை!

கவிஞர்கள் போற்றும் கவிஞராய், ஆங்கில இலக்கிய வரலாற்றின் மைல் கல்லாய், காலத்தை வென்று நிற்கின்றார் மில்டன். அன்று தீயில் கருகிய அவருடைய ’துறக்க வீழ்ச்சி’ இன்றோ பல்லக்கில் பவனிவருகின்றது அவனிபோற்ற. பார்போற்றும் பனுவல்கள் பலபடைத்த காப்பியக் கவிஞர் மில்டன் வையத்தில் என்றும் வரகவியாய் வாழ்வார்.