Thursday, April 17, 2014

வானினும் உயர்ந்த காதல்!

அருவிநீரில் இருவிழிகள் சிவக்க நீராடினர் தலைவியும், தோழியும். பின்பு மலைவழியே நடந்துவந்துகொண்டிருந்தபோது தலைவியை வம்புக்கிழுக்க நினைத்த தோழி. ’எப்படி இருக்கிறார் உன் காதலர்?’ என்று கிண்டலோடு கேட்டுவிட்டுத் தலைவியின் முகத்தைப் பார்த்தாள்.

”நன்றாக இருக்கிறார்!” என்றாள் தலைவி.

”இத்தனை நாட்களாக உன்னோடு பழகிவருகிறாரே…உன்னைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கிறதா அவருக்கு?’ – இது தோழி.

’நிச்சயம் செய்துகொள்வார்’ என்று நம்பிக்கையோடு பேசிய தலைவியை இடைவெட்டிய தோழி, ”உன்னருமைக் காதலர் நாளைக் கடத்துவதைப் பார்த்தால் எனக்கென்னவோ கொஞ்சம் ஐயமாகவே இருக்கிறது. உன்னை அவர் உண்மையாகத் தானே காதலிக்கிறார்..? இல்லை அவருக்குக் காதல் செய்வதென்பது பொழுதுபோக்கா? என்று கேட்டுவிட, தலைவிக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது.

”எங்கள் காதலையா சந்தேகிக்கிறாய்?” அதன் நிலைத்த தன்மையை அறிந்தால் இவ்வாறு நீ பேசமாட்டாய்” என்று கூறித் தோழியை முறைத்தாள்.

தொடர்ந்து தலைவியே பேசட்டும் என்று மௌனம் காத்த தோழியைப் பார்த்து, ”என் காதல் நிலத்தைவிடப் பெரியது” என்று கைகளை அகல விரித்தாள்.

”அப்படியா?” ஆச்சரியம் தோழியின் குரலில்.

”வானைவிட உயர்ந்தது” என்றாள் தலைவி தொடர்ந்து.

வியப்பில் விரிந்தன தோழியின் விழிகள்.

”அதுமட்டுமா? கடலைவிட ஆழமானது” என்று தலைவி பரவசமாகக் கூறி முடிக்க வாயடைத்துப்போனாள் தோழி.

தலைவியும் தோழியும் பேசிக்கொண்டிருந்ததை (சிறைப்புறத்தே) மறைந்திருந்த தலைவனும் கேட்டான்; தலைவி தன்மீது கொண்டிருக்கும் உண்மைக் காதலின் அளவையறிந்து மகிழ்ந்தான்.

குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள அவ்வினிய பாடல்…

நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே. (குறுந்: 3)

விளக்கம்: மலைப் பக்கத்திலுள்ள கரிய கொம்புகளையுடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமான மலை நாட்டுத் தலைவனோடு யான் செய்த நட்பானது பூமியைக் காட்டிலும் அகலம் உடையது; ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது; கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது என்கிறாள் தலைவி. இங்கே உயர்ந்த பொருள்களான பூமி, வானம், கடல் ஆகியவறைத் தன் காதலோடு அவள் தொடர்புபடுத்தித் தன் காதலின் உயர்வை, சிறப்பைத் தோழிக்குப் புலப்படுத்துகின்றாள்.

எலிசபெத் ப்ரௌனிங் எனும் ஆங்கிலப் பெண்கவிஞரின் “How Do I Love Thee?" என்ற ஆங்கிலக் கவிதையில் இடம்பெற்றுள்ள,
 "How do I love thee? Let me count the ways.
 I love thee to the depth and breadth and height
 My soul can reach, when feeling out of sight...
"
என்ற வரிகள் நாம் மேலே கண்ட குறுந்தொகைப் பாடலின் வரிகளை ஒத்திருக்கின்றன அல்லவா?
  
 

No comments:

Post a Comment