Thursday, April 17, 2014

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்!

இயற்கையின் படைப்பில் மனித இனம் மட்டுமே சிந்திக்கும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டதாய் விளங்குகின்றது. ஏனைய உயிரினங்களுக்கு அத்தகைய வாய்ப்பு அமையவில்லை. தமிழின் தன்னேரில்லாத இலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றிய ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர்,

”ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. ”

 என்று ஓரறிவு முதல் ஆறறிவு வரை அமையப்பெற்ற உயிரினங்களை அவற்றின் புலன்கள் அடிப்படையில் (தொல்காப்பிய) பொருளதிகாரத்திலுள்ள ‘மரபியல்’ என்ற பகுதியில் அழகாக வகைப்படுத்தியுள்ளார். மெய், வாய், மூக்கு, கண், செவி என்று ஒவ்வொறு புலனுணர்வும் கூடிக்கொண்டே வந்து இறுதியில் மனத்தையும் தன்னகத்தே கொண்டதாக மனித இனம் தோன்றியது என்பதனை இந்நூற்பா தெளிவாக விளக்குகின்றது. இத்தகைய உன்னதமான மனித இனம் தோன்றப் பல மில்லியன் வருடங்கள் ஆயின என்று அறிவியல் கூறுகின்றது. இதனையே பரிணாமக் கொள்கை (The theory of evolution) என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றார்கள்.

மனம் என்று அறியப்படுகின்ற, சிந்தனைக்கு வித்திடும் ஆறாமறிவால் மனித இனம் மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்டதாயும், தனித்தன்மை மிக்கதாயும் விளங்கிவருகின்றது. ’அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று அவ்வையாரும் மனிதப் பிறவியின் சிறப்பைப் போற்றுகின்றார். ஆயினும், மனம் என்ற ஒன்று இருக்கின்ற காரணத்தினாலேயே மனிதர்கள் எல்லாருமே உயர்ந்தோர் என்றோ, உத்தமர் என்றோ நாம் ஓர் முடிவுக்கு வந்துவிட முடிகின்றதா?….இல்லையே!

மனத்தை மனிதன் எவ்வாறு பண்படுத்துகின்றான், பயன்படுத்துகின்றான், அதில் முகிழ்க்கின்ற சிந்தனைகளும், செயற்பாடுகளும் அவனுக்கும் அவன் சார்ந்த சமூகத்திற்கும் எந்த அளவிற்கு நன்மை அல்லது தீமையைத் தருகின்றன என்பதன் அடிப்படையிலேயே நாம் மனிதனின் பண்பை, குணத்தை முடிவுசெய்ய இயலும். குறையற்ற மனிதன் என்று யாரேனும் உண்டா? என்ற வினா உடனேயே நம் உள்ளத்தில் எழும்; அதற்கு ‘இல்லை’ என்பதனைத்தான் நாம் விடையாகச் சொல்லமுடியும். அப்படியானால், ஓர் மனிதனை நல்லவன் என்றோ தீயவன் என்றோ எவ்வாறு முடிவெடுப்பது என்ற நம் ஐயத்தை உணர்ந்தவராய் அதனைத் தெளிவிக்க வருகின்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.

ஒருவனிடமுள்ள குணம், குறை என்ற இரண்டையும் நிறுத்துப் பார்த்துத்தான் அவன் குணத்தை நாம் எடை போடமுடியும் என்று கூறும் அவர் அதனை,

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல்.” என்ற குறட்பா வாயிலாக விளக்கியுள்ளார்.

இக்குறள் சொல்வது போலவேதான் நம் சமுதாயமும் மனிதரில் அதிக நற்குணங்கள் கொண்டவரை நல்லவர் என்றும், மாறாகத் தீய குணங்களையே உடன்பிறப்புக்களாகக் கொண்டோரைத் தீயவர் என்றும் முடிவெடுக்கின்றது.

மண்ணில் பிறக்கும்போது அனைத்துக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே. வளர்ப்பில் இருக்கும் வேறுபாட்டாலேயே அவர்கள் நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் மாறுகின்றனர் என்று கருத்து நம் மக்களால் பரவலாகச் சொல்லப்பட்டு வருகின்றது.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே.”

என்று ’கவிஞர் புலமைப்பித்தன்’ எழுதிய ஓர் பிரபலமான திரைப்படப் பாடல் உண்டு. (பாருங்கள்..! அதிலும் பிள்ளையை வளர்க்கும் முழுப் பொறுப்பும், அவன் நடை தவறினால் அதற்கான பழியும் அவன் தாய்க்கு மட்டும்தான்!!)

ஆனால் பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே நல்ல குழந்தைகள்தாமா? என்பது குறித்த ஐயங்கள் தற்போது எழுந்துள்ளன. ஏனெனில் சமீபத்திய மனநோய்கள் குறித்த ஆராய்ச்சிகளில், மனநலத்தை பாதிக்கும் நோய்களையும், குறைபாடுகளையும் தீர்மானிப்பதில் மனிதனின் மரபணுக்கள் (genes) முக்கியப் பங்காற்றுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே ஒரு மனிதனின் சமூக விரோத நடவடிக்கைகளையும், வக்கிர எண்ணங்களையும் தீர்மானிப்பதிலும் அவற்றின் பங்களிப்பு இருக்கவே செய்கின்றது என்று ஒரு சாராரும்; இல்லை, இல்லை சூழ்நிலையே ஒரு மனிதனின் போக்கையும், நடத்தையையும் பெரிதும் தீர்மானிக்கிறது என்று மற்றொரு சாராரும் தங்கள் வாதப் பிரதிவாதங்களை அறிவியல் பூர்வமாகவும், அனுபவங்கள் வாயிலாகவும் எடுத்து வைக்கின்றனர். இவ்விரு வாதங்களையும் கேட்டபின் ’ஒரு மனிதனின் மரபணுக்களும், அவன் வாழும் சமூகமும் சேர்ந்தே அவனை வடிவமைக்கின்றன, அவன் குணத்தைத் தீர்மானிக்கின்றன’ என்பதனையே நாம் தீர்ப்பாக எடுத்துக்கொள்வதில் தவறில்லை எனத் தோன்றுகின்றது.

மனிதன் மனதுவைத்தால் நல்ல கருத்துக்களையும், நற்சிந்தனைகளையும் தொடர்ந்து தன் உள்ளத்தில் செலுத்தி உள்ளே உறைந்திருக்கும், மறைந்திருக்கும் தீய எண்ணங்களையும், சிந்தனைகளையும் (மரபணுக்கள் வாயிலாக வந்திருந்தாலும் கூட) அகற்றிவிடலாம். ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை, நாம் மனது வைத்தால் நிஜ வாழ்விலும் சாத்தியமாக்கலாம். நம்மிடையே வாழ்ந்து மறைந்த ஞானியரும், அருளாளர்களும், தலைவர்களும் அதற்குச் சான்றுகளாய்த் திகழ்கின்றனர் எனலாம்.

நல்ல எண்ணங்கள், நற்பண்புகள் என்று பொதுப்படையாகக் கூறுவதைவிட அவற்றில் சிலவற்றைச் சற்று விளக்கிக் காட்டுவதன் மூலம் அவை குறித்த சிந்தனையை மக்கள் மனத்தில் நாம் விதைக்கலாம் அல்லவா? ஆகவே, மனித மனத்தையும், வாழ்வையும் சீர்ப்படுத்தும், செம்மைப்படுத்தும் நற்பண்புகள் சிலவற்றை இங்கே காண்போம்.

”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லால்
வேறொன்றறியேன் பராபரமே.” என்றார் தாயுமானவர்.

எல்லா மக்களும் குறைகள் ஏதுமின்றி இன்பமாயிருக்கவேண்டும் என்பதே தாயுமானவ சுவாமிகள் இறைவன்முன் சமர்ப்பிக்கும் வேண்டுகோளாய் உள்ளது. மனம் உயர்ந்ததாய் இருந்தால்தானே இத்தகைய உயரிய சிந்தனை முகிழ்க்கும்.

சமரச சன்மார்க்கம் கண்ட வள்ளலாரோ இன்னும் ஒருபடி மேலேபோய்,
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
     வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்”

என்று துன்பத்தைத் தாம் எவ்விடத்துக் கண்டாலும், அஃது ஓரறிவுள்ள பயிராகட்டும் அல்லது ஆறறிவுள்ள உயிராகட்டும், தம் மனம் வாடுகின்றது; பதைக்கின்றது என்கின்றார். இதுவல்லவோ உண்மையான உயிரிரக்கம் (ஜீவகாருண்யம்) என்பது!

பிற உயிர்கள் படும் துன்பம் நம் மனத்தைப் பாதித்தாலே போதும் நாம் அவ்வுயிர்கட்கு ஊறு செய்ய அஞ்சுவோம். ’இரக்கம் அல்லது அருள்’ என்று கூறப்படும் உயர் பண்பும், அது பிறப்பதற்குக் காரணமாயிருக்கும் ’அன்பு’ என்ற தாய்ப்பண்பும் மனிதர்கள் அனைவரும் கைக்கொள்ள வேண்டிய உயர்ந்த பண்புகளாகும்.  தூய அன்பின் பிடியில் வசப்படாதார் யார்?

”அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” என்றும், “அன்பே சிவம்” என்றும் நம் அருளாளர்கள் இறைவனையே தம்அன்பினால் கட்டிவைத்தனர் என்று திருமுறைகளும், இன்னபிறச் சமய நூல்களும் சான்றாதாரம் காட்டவில்லையா? அப்படியிருக்க மனித மனங்களை வசப்படுத்த, அவர்தம் மனத்தில் இடம்பிடிக்க அன்பைவிட உயர்ந்த சாதனம் வேறென்ன இருக்க முடியும்? அத்தகைய உயர்ந்த அன்பையும், அதன் இளவலான மனிதநேயத்தையும் சக மனிதர்கள்பால் செலுத்துவோம்.

”மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?” என்ற மகாகவியின் வரிகளை உணர்ந்து கொள்வோம்.

கொலைவெறியும், வக்கிர எண்ணங்களும் நம்மைவிட்டு முற்றிலும் ஒழியட்டும். அன்பும், அருளும் நம் பார்வையில் நிரம்பி வழியட்டும்.

அடுத்து நாம் பின்பற்ற வேண்டிய ஓர் உயர்ந்த கொள்கை ஒன்றுண்டு – அதன் பேர் எளிமை. காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல்லற்ற தன்மையும் உடைய ஓர் அரசனின் நாட்டை உலகமே புகழும் என்கின்றார் வள்ளுவப் பெருந்தகை.

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.” என்பது அவர் வாக்கு.

மன்னனே இப்படியிருக்கவேண்டுமென்றால் அவனால் காக்கப்படும் மக்களும் அவ்வாரிருத்தல்தானே முறை. ஆகவே பகட்டும், படாடோபமும் அற்ற எளிமையை மனிதர்கள் கடைப்பிடிப்பது சிறந்தது. அத்தகு எளிமை நம்மிடம் குடிபுக ’அவா அற்ற தன்மை’ நம்மிடம் முதலில் வந்து சேரவேண்டும். ’ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார் புத்தர் பெருமான். துன்பத்திற்கு மட்டுமல்ல தேவையற்ற வீண் ஆடம்பரங்களுக்கும், வீண் செலவுகட்கும், போலி கௌரவத்திற்கும் கூட அளவுக்கு மீறிய ஆசைதானே அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றது.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.”  என்று ஈசனாரிடம் கூட ஆசையோ, பற்றோ கொள்ள வேண்டாம், ஆசையினால் துன்பங்களே நேரும்; அதனை விட விட ஆனந்தம் சேரும் என்று திருமூலரும் தன் திருமந்திரத்தில் புத்தரின் கருத்தையே வலியுறுத்திச் சொல்கின்றார்.

நம் வான்புகழ் வள்ளுவரும் ஆசையை அறுப்பதன் அவசியத்தைத் தன் ”அவா அறுத்தல்” என்ற அதிகாரத்தில் விரித்துக் கூறி விளங்க வைக்கின்றார்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்.” என்பது குறள்.

செல்வத்திலேயே உயர்ந்த செல்வம் எது தெரியுமா? எதையும் வேண்டாத அவா அற்ற தன்மையே ஆகும். அதற்கீடான செல்வம் எங்குமே இல்லை என்கின்றார் அவர்.

வள்ளுவரும், ஏனைய சான்றோரும் போற்றிக் கொண்டாடும் ஆசை ஒழிப்புக் கொள்கையானது சொல்லும் அளவிற்குச் சுலபமாகச் செயல்படுத்த முடியாத ஒன்றுதான் என்பதனை மறுப்பதற்கில்லை. அதுவும் போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் வெல்வதற்கும், நம் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கும் ஆசைகள் தேவையானவைதான் என்ற கருத்தும் நம்முன் வைக்கப்படுகின்றது. எனவே ஆசைகளை முற்றாக ஒழிப்பது என்ற கடுமையான கொள்கையைச் (rigid principle) சற்றே தளர்த்தி, முதலில் நம் ஆசைகளைப் பட்டியலிடுவோம். அத்தியாவசியமானது, அவசியமானது, ஆடம்பர வகையைச் சேர்ந்தது என்று அவ்வாசைகளைப் பிரித்து வைப்போம்.

முதல் வகையைச் சார்ந்த ஆசைகளை மட்டும் நம் கவனத்தில் கொண்டு அவற்றை அடைய முயலுவோம். வெற்றிகரமாக அவற்றை அடைந்துவிட்டால் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள ‘அவசியமானது’ வகையைச் சேர்ந்த ஆசைகளைப் பற்றி ஆய்வு செய்வோம். அவ்வாசைகள் நிறைவேறாவிட்டாலும் நமக்கொன்றும் (பெரிய) இழப்பு இல்லை என்பது உறுதியானால் அவற்றைக் கூட நாம் விட்டுவிடலாம். 

மூன்றாவதான ’ஆடம்பர வகை’யைச் சேர்ந்த ஆசைகளை நாம் நம் பட்டியலிலிருந்தே நீக்கிவிடலாம். அவற்றை அடையமுயல்வது நமக்குத் தேவையற்ற துன்பத்தைத் தருவதோடல்லாமல் நம்மைக் கடனாளியாகக் கூட ஆக்கிவிடக்கூடும். ஆகவே தேவையற்ற ஆசைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டு நிம்மதியாக வாழ்வோம். வீண் ஆசைகளை ஒழித்து வருமானத்திற்குள் குடும்பம் நடத்தப் பழகிக்கொள்வதுதான் வாழ்வின் வெற்றிக்கும், பாதுகாப்பிற்கும் வழிவகுக்கும்.

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லைப்
போகாறு அகலாக் கடை.” என்பது எல்லாரும் நடைமுறையில் செயற்படுத்த வேண்டிய வள்ளுவரின் அனுபவ மொழி.
  
அடுத்து, மனிதர்களை மனிதர்களாக வாழவைக்கும் பண்பு ‘ஒழுக்கம்’ ஆகும்.
ஒழுக்கத்தின் இன்றியமையாமையை அறிய வள்ளுவத்தினும் உயர்ந்த சான்றை யாங்கணுமே காண இயலாது என்று உறுதிபடச் சொல்லலாம்.

ஒழுக்கத்தை உயிரினும் மேலாய் மதித்துப் போற்றவேண்டும் என அறிவுறுத்தும் வள்ளுவர், அப்பண்பிலிருந்து தவறுதலால் பெரும்பழிதான் ஒருவனுக்கு ஏற்படும் என்று எச்சரிக்கவும் தவறவில்லை.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.” என்கின்றார்.

சமுதாயத்தில் தற்போது அதிக அளவில் நடைபெற்றுவரும் ஒழுக்கக்கேடான செயற்பாடுகளும், அதன் விளைவாய் ஒழுக்கம் தவறுவோர் அடைகின்ற துடைக்கவியலாப் பழியும், அவர்களால் பாதிக்கப்பட்டோரின் துன்பங்களும், சொல்லொணாத் துயரங்களும் ஒழுக்கத்தின் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாகவே உள்ளன.
வாழ்வியல் நன்னெறிகளைப் போதிக்கும் உலகப் பொதுமறையாம் திருக்குறளையும், வீரத் துறவி விவேகானந்தரின் சிந்தனைகளையும் நம் இந்திய மாணாக்கர் அனைவரும் அறிந்து பின்பற்றும் வகையில் அகில இந்திய அளவில் அதனை மாணாக்கரின் பள்ளிப் பாடத்திட்டத்தில் வைப்பது அவர்தம் ஒழுக்கத்தையும், உயர் சிந்தனைகளையும் வளர்ப்பதில் பேருதவி புரியும் எனத் தோன்றுகிறது.

ஒழுக்கம் என்பது ஏதோ இல்லறத்தைத் துறந்தார்க்கும், ஞானியர்க்கும் மட்டுமே வகுக்கப்பட்ட வாழ்க்கை முறை போலவும்; இளைஞர்களும், இல்லறத்தை மேற்கொள்வோரும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றும் எண்ணுகின்ற மனநிலை முதலில் மாறவேண்டும். நல்லொழுக்கமும், நன்னெறிகளும், பெண்களைத் தாயாகவும், உடன்பிறப்பாகவும் எண்ணும் நற்பண்பும் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு வீட்டிலும், கல்விக் கூடங்களிலும் கற்பிக்கப்பட வேண்டும். சமுதாய மாற்றத்திற்கு அவை உண்மையிலேயே பேருதவி புரியும். 
   
மேலே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நற்பண்புகளில் ஏதேனும் ஒன்றிரண்டையேனும் நம் மக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து பின்பற்றத் தொடங்குவார்களேயானால் சமுதாயம் செம்மையுறும். தனிமனித விருப்பு, வெறுப்பு, தேவையற்ற போட்டி, பொறாமை, பேராசை ஆகியவை மறையும். நல்லெண்ணமும், மனிதநேயமும் மலர்ந்து மணம்வீசும். வீடும், நாடும் வளம் பெறும். மகாகவி கனவு கண்டதுபோல் எல்லாரும் அமரநிலை எய்தும் வழிமுறையை இந்தியா உண்மையிலேயே உலகிற்கு அளிக்கும்.


No comments:

Post a Comment