Thursday, April 17, 2014

தேய்புரிப் பழங்கயிறு

தலைவன் ஒருவன் பொருள்தேடும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து வேற்றூர் சென்றான். ஆனால் அவன் கருதிச் சென்ற வேலையைச் செம்மையாகச் செய்யமுடியாதவாறு, தாழ்ந்து இருண்ட கூந்தலையும், நெய்தல் மலர் போன்று விளங்கும் குளிர்ச்சி பொருந்திய மையுண்ட கண்களையும் உடைய, அவன் உள்ளத்தைப் பிணித்துப் பற்றிக்கொண்ட தலைவியின்பால் இடையிடையே சென்றது அவன் நினைவு!

உடனே சென்று அவளுடைய  தனிமைத் துயரைத் தீர்ப்போம் என்கிறது காதலில் மயங்கி நிற்கும் ஒரு மனம்! பொருள்தேட வந்த வேலையைச் செய்துமுடிக்காமல் பாதியில் செல்வதா? கூடாது..கூடாது! அது தேவையற்ற இகழ்ச்சியையும், இழிவையும் அல்லவோ தந்துவிடும் என்று அவனைத் தடுக்கிறது அறிவின்பாற்பட்டுச் சிந்திக்கும் மற்றொரு மனம்!
 
அவன் என்ன செய்வான்? தேய்ந்த புரியை (இழை) உடைய பழங்கயிறு ஒன்று தலையிலே கொம்புடைய களிற்றியானையால் இருபுறமும் மா(ற்)றி மா(ற்)றி இழுக்கப்பட்டால் எவ்வாறு இற்றுப்போகுமா அவ்வாறே என் உடம்பும் இந்நினைவுகளால் அலைப்புண்டு வருந்தி அழியவேண்டியதுதானோ என்று புலம்புகின்றான் பாவம்!


’தேய்புரிப் பழங்கயிறு’ என்ற அழகிய உவமையை இப்பாடலில் கையாண்ட காரணம்பற்றி இப்பாடலை இயற்றிய பெயர்தெரியாத புலவர்பெருந்தகை ‘தேய்புரிப் பழங்கயிற்றினார்’ என்றே இன்றும் அன்போடு அழைக்கப்படுகின்றார்.

நற்றிணையில் இடம்பெற்றுள்ள அவ்வினிய பாடல் இதோ...

                நற்றிணை

திணை : பாலை.
துறை : பொருண் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.

புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்
செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்காத் தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங் கயிறு போல
வீவதுகொல் என் வருந்திய உடம்பே (நற்: 284 - தேய்புரிப் பழங்கயிற்றினார்)

காதலனின் மனத் தவிப்பை விளக்கக் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய ’இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன். நினைத்து வாட ஒன்று; மறந்துவாழ ஒன்று!’ என்ற திரைப்படப் பாடல் இந்நற்றிணைப் பாடலின் கருத்தை ஒத்திருக்கிறது அல்லவா!


No comments:

Post a Comment