Thursday, April 17, 2014

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்த இறைநேசர்!

திருச்சிற்றம்பலம்

வ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி நாள் சிவராத்திரி ன்று கருதப்படுகின்றது. மாசி மாதத்தில் தேய்பிறைக் காலத்தில் வரும் சதுர்த்தசி நாளையே நாம் மகா சிவராத்திரியாகக் கொண்டாடி வருகின்றோம்.  இந்த மகா சிவராத்திரியின் வரலாறு குறித்துப் பல்வேறு புராணக் கதைகள் கூறப்படுகின்றன.

சிவனின் கண்களைப் பார்வதிதேவி விளையாட்டாக மூடியதால் ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கின; அந்த நாளே சிவராத்திரி என்பர் பௌராணிகர் சிலர். ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான்திருநீலகண்டர்’ எனப் பெயர் பெற்றார். அன்றைய தினத்தன்று இரவு தேவர்கள் பரமேஸ்வரனை வணங்கித் துதித்தனர்; அந்நாளே சிவராத்தரி எனக் கூறுகின்றனர் வேறு சில அருளாளர்கள். சிவனாரின் அடிமுடி காணமுடியாமல் நின்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் நெருப்புப் பிழம்பாகச் சிவன் காட்சி தந்த தினமே சிவராத்திரி என்றொரு கருத்தும் கூறப்படுகின்றது.

சிவராத்திரி விரதமும் சிவதரிசனமும் மறலி பயத்தையும், மரண பயத்தையும் போக்கி முக்திக்கு வழிவகுக்கும் என்பது நாயன்மார்களின் கூற்று. இப்புண்ணிய நன்னாளில் சிவபக்திச் செல்வத்தால் உயர்ந்த – சிவனின் திருவருளுக்குப் பாத்திரமான ஓர் அருட்செல்வரின் வரலாற்றைச் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும் அல்லவா! அவ்வடியாரின் வரலாற்றை அறிந்துகொள்வோம் வாருங்கள்!

திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துவந்த மலையமான் வழித் தோன்றல்களில் ஒருவர் மெய்ப்பொருள் நாயனார். சிவனடியார்களின் திருநீற்றுக் கோலமும், உருத்திராக்கமுமே மெய்ப்பொருள் சின்னங்கள் என்று எண்ணிச் சிவனடியார்கள்பால் மிகுகாதல் கொண்டு அவர்களைப் போற்றியபடியால் ‘மெய்ப்பொருள்’ என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டிருக்கவேண்டும் என எண்ணுகின்றேன். சிவபக்தியில் திளைத்தவராயிருந்தபோதிலும் வாள்வலியிலும் தோள்வலியிலும் சிறந்த பெருவீரராயும் மெய்ப்பொருளார் திகழ்ந்தார். அதனால் திருக்கோவலூரை அவர்தம் பகைவர்களால் கனவிலும் நெருங்க முடியவில்லை.

அத்தருணத்தில், மெய்ப்பொருளாருடன் பலமுறைப் போரிட்டும் வெற்றி மங்கையைத் தழுவமுடியாமல் தோல்வியையே முத்தமிட்டுவந்த ’முத்தநாதன்’ என்ற பகையரசன் அவரைச் சூழ்ச்சியால் வெல்லக் கருதினான். அதற்கு என்ன வழி என்று அல்லும் பகலும் சிந்தித்தவனின் மனத்தில் அருமையான திட்டம் ஒன்று உதயமானது. ’ஆமாம்! அதுதான் சரி!’ என்று தனக்குள் கூறிக்கொண்டவன் சற்றும் தாமதியாமல் செயலில் இறங்கினான்.

தன் உடலெங்கும் திருநீற்றைக் குழைத்துப் பூசிக்கொண்டான். கையினில் ஓர் புத்தகப் பையை எடுத்துக்கொண்டு அதிலே கொலைக் கருவியாம் கத்தியை மறைத்து வைத்துக்கொண்டான். திருக்கோவலூரை நோக்கிப் புறப்பட்டான். அவன் பொய்த்தவ வேடம் எப்படி இருந்தது தெரியுமா? விளக்கானது வெளியில் சுடர்விட்டு ஒளிதந்தாலும் அதன் அடிப்பகுதியில் கருமை கொண்டதாய் இருக்குமல்லவா? அதுபோலவே முத்தநாதனின் பொய்த்தவ வேடமும் வெளியில் சிவச்சின்னங்களுடன் திகழ்ந்தாலும் மனத்திலே வஞ்சம் எனும் கருமைகொண்டு திகழ்ந்தது என்கிறார் தெய்வச் சேக்கிழார். அப்பாடல் வரிகள்…

’மெய்யெலாம் நீறுபூசி  வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்புவைத்துப்
பொய்த்தவ வேடங்கொண்டு புகுந்தனன் முத்தநாதன்.’ (பெரியபுராணம்)

இத்தகைய பொய்க்கோலத்துடன் சென்றவனைக் கண்ட திருக்கோவலூர் மக்கள் அவனை உண்மைச் சிவனடியார் என்றே எண்ணி வணங்கினர். அவன் நடந்துசென்ற வழிகளிலெல்லாம் அவனுக்கு அரசமரியாதை கிடைத்தது. எளிதில் மன்னரின் அரண்மனையை அடைந்தவனைக் காவலாளிகள் அனைவரும் தொழுது ‘தேவரீர் எழுந்தருள்க!’ என்று முகமன் கூறி வரவேற்றனர். அரண்மனையின் பல வாயில்களையும் இலகுவாகச் கடந்து உள்ளே சென்றவன், அந்தப்புர வாயிலை அடைந்து உள்ளே செல்ல எத்தனித்தான். அங்கே காவல் புரிந்துகொண்டிருந்த அரசரின் மெய்க்காப்பாளனான ‘தத்தன்’ என்பவன் முத்தநாதனைத் தடுத்து, ‘ஐயா! சமயமறிந்து உள்ளே செல்ல வேண்டும்! மன்னர் பெருமான் உறங்கிக் கொண்டிருக்கின்றார். இப்போது உள்ளே செல்வது முறையில்லையே?’ என்றான். அவனைத் தீயெழ நோக்கிய அப்பொய்த்தவ வேடத்தான், ‘நான் அரசர்க்குச் சிவனாரின் உறுதிப்பொருள் ஒன்றை உரைக்க வந்துள்ளேன், என்னைத் தடுக்காதே!’ என்று கூறியவாறே உள்ளே புகுந்தான். 
 
சிவனாடியாரைக் கண்டதும், உறங்கிக்கொண்டிருந்த மெய்ப்பொருளாரின் அருகில் அமர்ந்திருந்த அரசமாதேவியார் துணுக்குற்று எழுந்தார். தம் கணவரையும் உடனே எழுப்பினார். உறக்கம் கலைந்து எழுந்த மெய்ப்பொருளார், அடியாரைக் கண்டதும் ஆண்டவனையே கண்டதாய் அகமும் முகமும் மலர்ந்தார். ‘ஐயனே! தாங்கள் இங்கு எழுந்தருளியது யாது கருதியோ?’ என்று அன்போடு வினவினார். மர்மப் புன்னகை பூத்த முத்தநாதன், ’சிவபெருமான் பண்டைக் காலத்தில் திருவாய் மலர்ந்தருளிய ஆகமநூல் ஒன்று என்வசம் உள்ளது. அதனை உனக்கு உபதேசிக்கவே இங்குவந்தேன்’ என்றான். பரவசமடைந்த திருக்கோவலூர் அரசர், ’பேறு எனக்கு இதன்மேல் உண்டோ? உடனே உபதேசித்து அருளுங்கள்!’ என்று மகிழ்வோடு கூற, முத்தநாதனோ அருகிருந்த தேவியாரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ‘அரசே! நீயும் நானும் தனித்திருக்கும் வேளையிலேயே இவ்வாகமத்தை உபதேசிக்கவேண்டும்!’ என்று கூறக் குறிப்பறிந்த மன்னவன் தேவி உடனேயே அவ்விடம்விட்டு அகன்றார்.

மெய்ப்பொருளார் முத்தநாதனை ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமர்த்திவிட்டுத் தாம் பணிவோடு வெறுந்தரையில் அமர்ந்துகொண்டார். ‘ஐயனே! அந்த உயர்ந்த ஆகமத்தை அடியேனுக்கு இப்போது உபதேசிக்கலாமே!’ என்று கூறிக் குனிந்தவண்ணம் அவர் தொழுதிருந்த வேளையில், முத்தநாதன் எனும் அந்த மூர்க்கநாதன் தன் புத்தகக் கவளியில் மறைத்து வைத்திருந்த கொலைக் கருவியை எடுத்துத் தான் செய்ய நினைந்த அப்பரிசே செய்தான் (கத்தியால் குத்தினான் என்பதே இதன் பொருள்) என்கிறார் சேக்கிழார் பெருமான். (அவன் கத்தியால் குத்தினான்; கொலை செய்தான் என்பன போன்ற அமங்கலச் சொற்களை மறந்தும் நாம் பெரிய புராணத்தில் காணமுடியாது; நயத்தகு நாகரிக மொழிகளாலேயே தீச்செயல்களைக் கூடச் சேக்கிழார் விளக்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.) முத்தநாதனால் குத்தப்பட்ட மெய்ப்பொருளார் ’மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்’ என்று கூறியவண்ணம் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

இந்நிகழ்வு நமக்குப் ’பகைவர்கள் வணங்கித் தொழுகின்ற கையினுள்ளும் கொலைக் கருவி மறைந்திருக்கும்; அவர்கள் அழுது சொரியும் கண்ணீரும் அத்தன்மையானதே!’ என்ற பொருள்தரும் குறளை நினைவுபடுத்துகின்றது.

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. (குறள்: 828)

சிவனடியார்பால் கொண்ட காதல் காரணமாக, வந்தவர் உண்மையான சிவனடியாரா? இல்லை…பகைவனா? என்பதை மெய்ப்பொருளார் ஆராய மறந்துவிட்டார்!!

முத்தநாதனின் கொடூரச் செயலை விவரிக்கும் சேக்கிழாரின் பாடல்…
’கைத்தலத் திருந்தவஞ்சக் கவளிகை மடிமேல் வைத்து
புத்தக மவிழ்ப்பான்போன்று புரிந்தவர் வணங்கும்போதில்
பத்திரம் வாங்கித் தான்முன் னினைந்தஅப் பரிசேசெய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்பொரு ளெனத்தொழுது வென்றார்.’ (பெரியபுராணம்)

தரையில் சரிந்த மன்னரின் குரல்கேட்டு, வாயிலில் காவல் புரிந்தபோதிலும் தன் கவனம் முழுவதையும் உள்ளேயே வைத்திருந்த மெய்க்காவலன் தத்தன் உள்ளே பாய்ந்துவந்தான். அரசரின் நிலைகண்டு வெகுண்டவன் தன் உடைவாளை உருவி முத்தநாதனைக் கொல்லமுற்பட, அப்போதும் முத்தநாதன்பால் மாளாத அன்புகொண்ட மெய்ப்பொருளார் தன் காவலனைத் தடுத்து, ‘தத்தா நமரே காண்! (தத்தா! அவர் நம்மவர் அவரை ஒன்றும் செய்யாதே!) எனக் கூறவே, செய்வதறியாது திகைத்த தத்தன், ‘பெருமானே! இப்போது நான் என்ன செய்ய?’ என்று நாத்தழுதழுக்க, கண்ணீர்மல்க மெய்ப்பொருளாரை வினவினான். ’இந்த அடியாருக்கு யாதொரு தீங்கும் நேராவண்ணம் நம் ஊரின் எல்லையில் கொண்டுபோய் விட்டுவா, இது என் ஆணை!’ என்றார் மாசிலா மாணிக்கமாம் மெய்ப்பொருள் நாயனார்.

மன்னரின் கட்டளையைச் சிரமேற்கொண்ட தத்தன், (மன்னரின் நிலையறிந்து) முத்தநாதனைக் கொல்லவிழைந்த மற்ற காவலர்களிடமிருந்து அந்தப் பொய்வேடத்தானைக் காத்து, ஊரெல்லையில் அவனைப் பத்திரமாகக் கொண்டுசேர்த்துவிட்டு விரைந்துவந்தான் அரசரைக் காண! அவன் திரும்பி வரும்வரையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த மெய்ப்பொருளார், தம்மை நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்த தத்தனின் முகத்தை ஆவலோடு நோக்கினார். தத்தனும் குறிப்பறிந்து, ‘அரசர் பெருமானே! தங்கள் ஆணைப்படி அடியாரை இடையூறு ஏதுமின்றி ஊரெல்லையில் பத்திரமாகச் சேர்த்துவிட்டேன்!’ என்றுகூறிப் பொங்கிவந்த அழுகையை அடக்கிக் கொண்டான்.

தத்தனை அன்புமீதூறப் பார்த்த நாயனார், ‘ஐயனே! இன்று நீ எனக்குச் செய்த இவ்வரிய உதவியை இனி யாரே செய்வார்?’ என்று அவனைப் பாராட்டிவிட்டுத் தம்மைச் சூழ்ந்துநின்ற சுற்றத்தார், அமைச்சர் பெருமக்கள், அரசியார் அனைவரையும் நோக்கி, ’திருநீற்றினிடத்து (சிவனடியார்களிடத்து) வைத்த அன்பினைச் சோர்வு வாராது பாதுகாத்து உலகிலே கொண்டு செலுத்தக் கடவீர்!’ என்று அன்புக் கட்டளையிட்டுவிட்டுச் சிற்றம்பலத்திலே ஆனந்தக் கூத்தாடும் அம்பலவாணரின் அழகிய கழலணிந்த திருவடிகளைச் சிந்தித்தவண்ணமே கண்மூடியிருந்தார்.

அப்போது, மெய்ப்பொருளாரின் சிந்தையில் கொலுவீற்றிருந்த அம்பலவாணர் சிவகாமியம்மை சகிதம் தம்மினிய தொண்டர்க்குச் காட்சிதந்து நீங்காமல் தம் திருவடிகளில் தங்கியிருக்கும் பெரும்பேற்றையும் மெய்ப்பொருளார்க்கு அளித்தார் என்பது மெய்ப்பொருள் நாயனார் வரலாறாகும்.

’பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!’ என்ற மகாகவியின் வாக்கிற்குச் சான்றாகவும், வள்ளுவப் பெருந்தகையின்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
 
மற்றும்

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு என்ற குறட்பாக்களுக்கு இலக்கணமாகவும் திகழ்கின்றார் மெய்ப்பொருள் நாயனார் என்பது அவர் வரலாறு வாயிலாய்ப் புலனாகும் செய்திகளாகும்.  
சிவபரம்பொருளுக்குப் பெரிதும் உகந்த இச்சிவராத்திரித் திருநாளில் சித்தத்தைச் சிவன்பால் வைத்துப் பிறவாப் பெருநிலையை அடைந்த சிவநேசச் செல்வர்களைச் சிந்தித்துப் பயன்பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்



சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம் - பகுதி 3

இல்லோர் செம்மல்
 
பொதுவாக மனமிருப்போரிடம் பணமிருப்பதில்லை; பணமிருப்போரிடம் மனமிருப்பதில்லை என்று கூறுவர்; அதனைப் பொய்யாக்கிவிடுகின்றது கோவலனிடம் காணப்படுகின்ற அருளுள்ளம்! பணமும், குணமும் நிறைந்த பண்பாளனாகவே சிலப்பதிகாரத்தில் அவன் அடையாளப்படுத்தப்படுகின்றான்.

புகார் நகரில் நடைபெற்ற மற்றுமோர் நிகழ்வு கோவலனின் பத்தரை மாற்றுப் பொன் மனத்தைப் பளிச்செனக் காட்டுவதாய் அமைந்துள்ளது; அதனையும் காண்போமா?

புகார் நகரத்தில் வாழ்ந்துவந்த கற்பிற் சிறந்த பெண்ணொருத்தி அவப்பெயர் எய்துவதற்கு ஏதுவாக, அறிவற்ற கீழ்மகன் ஒருவன் அப்பெண்ணின் ஒழுக்கத்தைப் பற்றி அவள் கணவனிடம் பொய்ப்பழி கூறுகின்றான். அதுகண்டு, புகார் நகரின்கண் தீயோரை அழிப்பதற்காகவே வாழ்ந்து வந்ததாகக் கூறப்படும் பெரிய பூதமானது அக்கீழ்மகனைத் தன் கையிலுள்ள பாசக்கயிற்றால் கட்டியது. அவன் அச்சம் கொண்டு அரற்றினான்; அழுதான்; ஒன்றும் பயனில்லை. அவனுடைய தாய் தன் மகன் பூதத்திடம் மாட்டிக்கொண்டு உயிர்விடப் போகிறானே என்று அஞ்சிக் கண்ணீர் பெருக்கினாள். அப்போதும் பூதம் அக்கொடியோனை விடவில்லை.

இந்நிகழ்வினை அறிந்த கோவலன் விரைந்து அவ்விடத்திற்கு வருகின்றான். பூதத்தின் கையிலிருந்த பாசக்கயிற்றினையும், அதில் மாட்டிக் கொண்டு உயிர்விடும் தறுவாயில் இருந்த மனிதனையும் காண்கின்றான்; உள்ளம் உருகுகின்றான். சற்றும் தாமதியாது அப்பூதத்தின் கையில் இருந்த பாசக்கயிற்றில் தன்னை வலியச் சென்று மாட்டிக்கொண்டு, ’தீயோரை அழிக்கும் பூதமே! என்னுயிரை எடுத்துக்கொள்! இம்மனிதனை உயிரோடு விட்டுவிடு!’ என்று மன்றாடுகின்றான். பிறர் துன்பம் கண்டு பொறாத எத்தகைய உயர்ந்த உள்ளம் கோவலனுடையது!!

ஆயினும் தன் கொள்கையில் சிறிதும் தளராத அப்பூதமோ, ’கோவலா! நீ கேட்டுக்கொண்டபடி என்னால் செய்ய இயலாது; தீயவன் ஒருவன் செய்த தவற்றுக்காக நல்லவன் ஒருவனுடைய உயிரை நான் எடுத்துக்கொள்வேனானால் எனக்கு நற்கதி கிடைக்காது(!). ஆகவே அத்தகைய தவற்றினை நான் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டு கோவலன் கண்ணெதிரிலேயே அக்கீழ்மகனைப் புடைத்து உண்டது. கோவலன் பூதத்திடம் வைத்த வேண்டுகோளையும் அதனை மறுத்து அப்பூதம் கோவலனிடம் கூறிய மறுமொழியையும் நாமும் சற்றுச் செவிமடுப்போமா?

”………………………………………………………………………………………………………………..
கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி
என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென
நன்னெடும் பூதம் நல்கா தாகி
நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை
ஒழிகநின் கருத்தென உயிர்முன் புடைப்ப….” (அடைக்கலக் காதை: 81-86)


Picture1 
 
சிறிதுநேரம் செய்வதறியாது திகைத்துநின்ற கோவலன் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டு அருகில் நின்று அழுதுகொண்டிருந்த, பூதத்தால் கொல்லப்பட்ட மனிதனின் தாயை அழைத்துக்கொண்டு அவள் இல்லம் செல்கின்றான். மகனை இழந்த அத்தாய்க்குத் தானே மகனாகி அத்தாயையும், அவளுடைய இதர சுற்றத்தினரையும் பசிப்பிணியிலிருந்து காத்து, அவர்கள் சிறப்பாக வாழும் வகையில் செல்வத்தையும் ஏராளமாக வாரி வழங்கி வறியோரின் தலைவனாக – இல்லோர் செம்மலாகத் திகழ்ந்து பலகாலம் அவர்களைக் காத்து நிற்கின்றான்.

”அழிதரு முள்ளத்து அவளொடும் போந்தவன்
சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப்
பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்” (அடைக்கலக் காதை: 87-90) என்கிறார் அடிகள்.

இவ்வாறு, தன் நண்பன் கோவலனின் அற்புத குணங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிடும் மாடலன் தொடர்ந்து, ‘அறிவில் முதிர்ந்தவனே! நானறிந்த வகையில் இப்பிறவியில் நீ செய்தவையெல்லாம் நற்செயல்களேயன்றி வேறொன்றுமில்லையே!? அவ்வாறிருக்கத் திருமகளை ஒத்த மாணிக்கத் தளிரான கண்ணகியுடன் நீ தனியே மதுரை நோக்கிப் புறப்பட்டது முற்பிறவியில் செய்த தீவினைப் பயனோ? என்று புலம்புகின்றான்.

”இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
விருத்தகோ பால நீயென வினவ….” (அடைக்கலக் காதை: 91-94) 
 
அடைக்கலக் காதையில் மாடலனால் வியந்து பேசப்படும் கோவலனின் உயர்ந்த கொள்கைகள், நற்பண்புகள், எளியோர்மீது அவன் காட்டும் அளவிறந்த கருணை ஆகியவை கோவலன் மீதான நம் மதிப்பீட்டையே முழுவதும் மாற்றிவிடுவதாக அமைந்துவிடுகின்றது அல்லவா!

கோவலனின் இனிய குணங்களை எடுத்தியம்ப இளங்கோவடிகள் பயன்படுத்தியுள்ள ‘கருணை மறவன்’, ’செல்லாச் செல்வன்’, ’இல்லோர் செம்மல்’ போன்ற அற்புதமான சொல்லாட்சிகள் அடிகளின் தமிழ்ப் புலமையை உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெளிவாய்ப் புலப்படுத்தி நம்மை மகிழ்விக்கின்றன.

ஆகவே, சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவனான கோவலனின் குணங்கள், குறைகள் இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் குறைகளினும் அவனுடைய நற்குணங்களே விஞ்சி நிற்கின்றன என்பது மேற்கூறிய நிகழ்வுகள் வாயிலாகப் பெறப்படுகின்றது.

அருளாட்சி செய்கின்ற அக்கோமகனின் மறுபக்கம் நம் நெஞ்சில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி அதுகாறும் அவன் செய்திருந்த தவறுகளையும் மறக்கச் செய்து தொழத்தக்க ஒருவனாகவே அவனை எண்ணச்செய்துவிடுகின்றது. கதையோட்டத்தின் சுவைகெடா வண்ணம் விறுவிறுப்பாக ஒவ்வொரு காட்சியையும் மிகச் சாதுரியமாகச் செதுக்கியிருக்கும் கவிச்சிற்பி இளங்கோ கோவலனின் கருணையுள்ளத்தை, வள்ளல் குணத்தைச் சரியான தருணத்தில் வெளிப்படுத்தி உண்மையான காவியத் தலைவனாக அவனை உயர்த்திக்காட்டியுள்ள பாங்கு மிகுந்த பாராட்டுக்குரியதுதான் இல்லையா?

கருணை மறவனையும், காப்பிய ஆசிரியரையும் வாழ்த்தி விடைபெறுவோம்!!

(முற்றும்)


சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம் - பகுதி 2

செல்லாச் செல்வன்

கருணை மறவனாக விளங்கி அந்தண முதியவர் ஒருவரை மதயானையிடமிருந்து காத்த கோவலன், இன்னொரு சந்தர்ப்பத்தில் ஓர் பார்ப்பனப் பெண்ணுக்கு நேர்ந்த மிகப் பெரிய கொலைப் பாவத்திலிருந்து அவளைக் காத்து, அவளிடம் கோபித்துச் சென்ற  கணவனை அவளோடு சேர்த்துவைத்த பெருந்தகையாளனாகத் திகழ்கின்றான்.

சுவையான அந்த வரலாற்றை இனிக் காண்போம்.

புகார் நகரில் வசித்துவந்த ஓர் பார்ப்பனத் தம்பதிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறின்மையால் அவர்கள் (தம்மை அண்டி வந்த) ஓர் கீரிப்பிள்ளையைத் தம் பிள்ளையாகவே எண்ணி வளர்த்துவந்தனர். அந்தக் கீரி வந்த நல்ல நேரமோ என்னவோ..அவர்களின் பிள்ளையில்லாக் குறைக்கும் ஓர் விடிவு ஏற்பட்டது. அந்தப் பெண் அழகான ஆண் மகவு ஒன்றைப் பெற்றெடுத்தாள். அந்தக் கீரியும் அக் குழந்தையிடம் மிகுந்த அன்போடு பழகி வந்தது.


Picture1 
 
ஒரு நாள் தண்ணீர் எடுப்பதற்காகக் குடத்தோடு வெளியே சென்றாள் அந்தப் பெண். தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் அவள் கண்ட காட்சி அவளைத் துணுக்குற வைத்தது. அவள் அன்போடு வளர்த்துவந்த அந்தக் கீரிப்பிள்ளை தன் வாயில் இரத்தம் வழிய அவளை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதனைக் கண்டவுடன் மிகவும் பதற்றமடைந்த பார்ப்பனி, சற்றும் சிந்தியாமல், என்ன நடந்தது என்பதனை நேரில் கண்டு தெரிந்துகொள்ளாமல் தன் குழந்தையைத்தான் அந்தக் கீரிப்பிள்ளைக் கொன்றுவிட்டு வாயில் இரத்தத்தோடு வந்துகொண்டிருக்கிறது என்று அவசரப்பட்டு முடிவுகட்டித் தன் கையில் இருந்த குடத்தால் அந்தக் கீரியைக் கொன்றுவிட்டு வீட்டை நோக்கி அழுதவண்ணமே விரைந்து வந்தாள்.

ஆனால் அங்கே அவள் கண்ட காட்சியோ அவளை வெட்கித் தலைகுனிய வைப்பதாகவும், மிகுந்த வேதனையில் ஆழ்த்துவதாகவும் இருந்தது. ஆம்..அங்கே அவளுடைய அருமைக் குழந்தை யாதொரு அபாயமும் இல்லாமல் தொட்டிலிலே தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அத்தொட்டிலின் கீழே ஓர் பாம்பு இறந்து கிடந்தது. அங்கே நடந்தது என்ன என்று இப்போது அவளுக்கு நன்றாகவே விளங்கிவிட்டது. ”தான் தண்ணீர் எடுக்கச் சென்றிருந்த வேளையில் ஒரு பாம்பு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தீண்ட வந்திருக்கிறது, அதைக் கண்ட கீரிப்பிள்ளை அப்பாம்பினைக் கொன்றுக் குழந்தையைக் காத்திருக்கின்றது. அடடா! எப்பேர்ப்பட்ட மகத்தான செயலைச் செய்திருக்கின்றது அன்பே உருவான அந்தக் கீரிப்பிள்ளை! தன் குழந்தைக்கு மறுவாழ்வு அல்லவா கொடுத்திருக்கின்றது! இதனை அறியாமல் பூசிக்க வேண்டிய அந்தக் கீரியை ஈவு இரக்கமில்லாமல் கொன்றுவிட்டல்லவா வந்திருக்கிறோம்?” என்று எண்ணி அவள் வருத்தம் மேலிட இருந்த வேளையில் வெளியில் சென்றிருந்த அவள் கணவன் வீட்டிற்குத் திரும்பி வந்தான்.

மனைவியின் முகவாட்டத்தைக் கண்டவன் அதன் காரணம் என்ன என்று வினவ, பார்ப்பனி நடந்தவற்றைக் கண்ணீரோடு அவனிடம் விவரிக்கின்றாள். அது கேட்டு வெகுண்டெழுந்த பார்ப்பனன், ”மிகப்பெரும் கொலைப் பாதகத்தைச் செய்த உன்னோடு இனி என்னால் வாழ இயலாது. உன் கையால் சமைத்த உணவை நான் இனி உண்ணவும் மாட்டேன்!” என்று கடுங்கோபத்தோடு கூறிவிட்டு வடமொழி வாசகம்1 எழுதிய ஏடு ஒன்றை அவள் கையில் திணித்துவிட்டு, ”இதன் பொருள் உணர்வாரிடம் இதனைக் கொடு” என்று சொல்லிவிட்டு வடதிசை நோக்கிப் புறப்பட்டுவிட்டான். (அப்பார்ப்பனி வடமொழி அறியாதவள் என்பது இதன் மூலம் தெரியவருகின்றது.)

என்ன செய்வது என்று புரியாது திகைத்த அப்பெண், தன்னை மன்னிக்கும்படிக் கணவனிடம் கெஞ்சியபடியே அவன்பின்னே தொடர்ந்து செல்கின்றாள். ஆனால், அவள் கணவன் அவள் செய்த பாவத்தை மன்னிக்க விரும்பாதவனாய் அவளைத் திரும்பியும் பாராமல் தனியே விட்டுவிட்டுக் கங்கைக்கு நீராடச் சென்றுவிடுகின்றான்.
இவ்வாறு கீரிப்பிள்ளை இறந்ததனால் கணவனுக்கும், மனைவிக்குமிடையே பிரிவு ஏற்பட்டுவிடுகின்றது. இச்சம்பவத்தை இளங்கோவடிகள் பின்வரும் அடிகளில் காட்சிப்படுத்துகின்றார்.

பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல
வடதிசைப் பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகம் செய்தநல் ஏடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கென...(அடைக்கலக் காதை: 54-59)

இப்பாடலில் ’பிள்ளை நகுலம்’ என்ற அழகான சொற்றொடர் கீரிப்பிள்ளையைக் குறிக்கின்றது.

பின்பு அப்பார்ப்பனி அவ்வாசக ஏட்டைக் கையில் ஏந்தியவளாய் கடைவீதிகளிலும், வணிகர் வாழும் தெருக்களிலும் கண்ணீரோடு சுற்றித் திரிந்து ”இந்த வடமொழி வாசகத்தை யாரேனும் படித்துச் சொல்லுங்கள்; என் பாவத்தினைப் போக்கிப் புண்ணியப் பயனை அடையுங்கள்!” என்று கண்ணில்படுவோரிடமெல்லாம் இரந்து கேட்கின்றாள். ஆனால் அங்கே ஒருவருக்கும் அவள் கையில் உள்ள ஏட்டில் என்ன எழுதியிருக்கின்றது என்பதனை விளங்கிக்கொள்ள இயலவில்லை. இவ்வாறு அப்பார்ப்பனி துயருற்றுத் திரிவதை ஒருநாள் கோவலன் காண்கின்றான். அவளை அருகில் அழைத்து, “அம்மா! உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் இவ்வாறு வருத்தத்தோடு போவோர் வருவோரிடமெல்லாம் ஏதோ கேட்டுக்கொண்டிருக்கிறாய்? கையில் வைத்திருக்கும் இந்த ஏடு யாது?” என இரக்கத்தோடு வினவுகின்றான்.

அப்பெண் தன் நிலையைக் கோவலனிடம் மிகுந்த வருத்தத்தோடு விளக்கி, ”இந்த ஏட்டில் குறிப்பிட்டுள்ளபடிப் பரிகாரம் செய்து என் துயரத்தையும், பாவத்தையும் போக்குங்கள்!” என்று கோவலனிடம் மன்றாடுகின்றாள். அதுகேட்டு அவள்பால் மிகுந்த பரிவு கொண்ட கோவலன், “கவலைப்படாதே அம்மா! தாளாமாட்டாத உன் துயரத்தை நான் போக்குகிறேன்” எனக்கூறி, அந்தணர்களின் வேதநூலில் கூறியுள்ளபடி அந்தப் பார்ப்பனியின் கொலைப் பாவம் நீங்குமாறு தானங்கள் பல செய்கிறான். அத்தோடு நில்லாமல் அவளைப் பிரிந்து வடக்கே சென்ற அவள் கணவனையும் தேடிக் கண்டுபிடித்து அழைத்துவந்து அவளோடு சேர்த்து வைக்கிறான். 

இவ்வாறு அவர்களை நன்னெறிப்படுத்தியதோடு அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய செல்வங்களையும் வரையாது வழங்கிய செல்வந்தனாகக் கோவலன் விளங்குகின்றான். அப்பார்ப்பனியின் துயரத்தைக் கோவலன் போக்கினான் என்று இளங்கோ குறிப்பிடுவதால் அவ்வேட்டில் எழுதப்பட்டிருந்த வடமொழி வாசகத்தை அவன் படித்து அதன் பொருளை உணர்ந்தே அதில் குறிப்பிட்டிருந்தபடி கொலைப் பாவத்தைப் போக்குதற்குரிய பரிகாரத்தைச் செய்திருத்தல் வேண்டும் என்பதனை நாம் உய்த்துணர முடிகின்றது. கோவலனின் வடமொழிப் புலமையை ஆசிரியர் இந் நிகழ்வின்மூலம் குறிப்பாய் உணர்த்தியுள்ளார் என்று கொள்வதில் தவறில்லை.

கோவலன் பார்ப்பனியின் துயர்தீர்த்த வரலாற்றை விளக்கும் சிலம்பின் வரிகள் இதோ…

அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்

தானஞ் செய்தவள் தன்துயர் நீக்கிக்
கானம் போன கணவனைக் கூட்டி
ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து
நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ! (அடைக்கலக் காதை: 68-75)
 
இப்பாடல் வரிகளில் கோவலனைத் ’தொலையாத செல்வமுடையவனே’ என்ற பொருள்தரும் ”செல்லாச் செல்வ!” என்ற சொல்லால் உயர்வுபடுத்துகின்றார் அடிகள்.

மிகுந்த செல்வம் படைத்திருந்ததோடல்லாமல் அதனை மற்றவருக்கு வாரிக் கொடுக்கும் வள்ளலாகவும் அவன் திகழ்ந்திருக்கின்றான் என்பது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய உயர்பண்பு தானே?

கோவலனின் பொன் மனத்தை வெளிச்சமிடும் மற்றொரு சம்பவம் அடுத்த பகுதியில்……

(தொடரும்)

******************************************************************************************************************************************************************
        1.  வடமொழி வாசகமாகச் சிலப்பதிகார உரையாசிரியர் ‘அடியார்க்கு நல்லார்’ குறிப்பிடுவது "அபரீக்ஷ்ய நகர்த்தவ்யங் கர்த்தவ்யம் ஸுபரீக்ஷிதம், பச் சாத்பவதி ஸந்தாபம்  ப்ராஹ்மணீ நகுலம்யதா" என்பதாகும்.

   இதன் பொருள்: “எந்த செயலையும் ஆராயாமல் செய்யக்கூடாது; நன்கு ஆராய்ந்த பின்பே செய்யவேண்டும்; இல்லையெனில் கீரிப்பிள்ளையைக் கொன்ற பார்ப்பனியைப் போல் பின்னால் வருந்த நேரிடும் என்பதாகும்.”

கீரிப் பிள்ளையைக் கொன்ற பெண்ணின் கதை, குப்த அரசன் 2-ஆம் சந்திரகுப்தன் (also known as விக்கிரமாதித்தன்) காலத்தில் வாழ்ந்த ’விஷ்ணு சர்மா’ என்பவர் எழுதிய பஞ்சதந்திரக் கதைகளில் (a collection of fables) ஒன்றாகவும் பின்னாளில் சொல்லப்பட்டுப் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.



சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம் - பகுதி 1

கருணை மறவன்!
 
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் இன்றளவும் மக்கள் மனத்தில் நீங்கா இடம்பிடித்து நிலைத்து நின்றுவிட்ட ஓர் ஒப்பற்ற காப்பியமாகும். பண்டைத் தமிழர்தம் பண்பட்ட வாழ்க்கை முறையினையும், நாகரிகத்தையும் அறிந்து கொள்வதற்கு ஓர் சிறந்த இலக்கியச் சான்றாகவும் இக்காப்பியம் விளங்கிவருகின்றது.

அக்கால வழக்கத்தையொட்டி எழுதப்பட்ட மற்ற காப்பியங்கள் எல்லாம் அரசர்களையோ, குறுநில மன்னர்களையோ, அல்லது வள்ளல்களையோ பெரிதும் போற்றுவதாகவும், அவர்தம் கொடைச் சிறப்பினையும், போர் வெற்றிகளையும் வானளாவப் புகழ்வதாகவுமே இயற்றப்பட்டிருக்க, அவற்றினின்று முற்றிலும் மாறுபட்டுச் சாதாரணக் குடிமக்களைக் காப்பியத் தலைவனாகவும், தலைவியாகவும் தேர்ந்தெடுத்து அவர்தம் வாழ்வையே காப்பியக் களனாக்கிய ’புரட்சிச் சிந்தனையாளர்’, இளங்கோவடிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
 

அதுமட்டுமல்லாமல் தம்முடைய காப்பியத் தலைவனைக் குணத்திலே குன்றாகவும், குறைகளற்ற கோமகனாகவும் படைத்திடாமல் அதிலும் வேறுபட்டவராய்க் குற்றம் குறைகள் நிறைந்த சாதாரண மனிதனாகவே அவனைப் படைத்திருப்பதும் புதுமையே! ஆம்..! கோவலனின் வாழ்க்கைமுறை பற்றிப் புகார்க் காண்டத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் செய்திகள் அவனைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடு எதனையும் நமக்கு ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

இதனைக் காணும்போது நற்குடிப் பிறப்பாளனான கோவலன் அறச் செயல்கள் எதனையுமே செய்யவில்லையா? கட்டிய மனைவியைப் பிரிந்து மற்றொரு பெண்ணோடு வாழ்பவனாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றானே…இஃது அவனுடைய ஒழுக்கக் குறைவைக் காட்டுவதாக அல்லவா அமைந்திருக்கிறது? என்றெல்லாம் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

கண்ணகி தன் நல்வாழ்வைத் தொலைத்ததும், அவளுடைய தனிமைத் துயருமே நம் நெஞ்சமெங்கும் நிறைந்து நம்மை வருந்தச் செய்யும் வகையில் கதையின் நிகழ்வுகள் சிலம்பின் முற்பகுதியில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே கணிகையர் குலத்தில் பிறந்தும் கற்புக்கரசியாக வாழ்ந்த மாதவி நல்லாளுடன் கோவலன் நடத்திய இல்வாழ்க்கையைப் பற்றியும், அப்போது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும் நாம் அதிகம் அறிந்துகொள்ளக்கூடிய சந்தர்ப்பமே வாய்க்கவில்லை. அதனால்தானோ என்னவோ..அருளும், வீரமும் நிறைந்த கோவலனின் இனிய மறுபக்கத்தை நாம் உணராதவர்களாயிருக்கிறோம். கோவலன் செய்த அறச் செயல்களுக்கும் ஓர் அளவில்லை என்பதனை மதுரைக் காண்டத்திலேதான் (அவன் கொலை செய்யப்படுவதற்குச் சற்றுமுன்பு) நமக்கு அறியத் தருகின்றார் காப்பிய உத்திகளை அமைப்பதில் கைதேர்ந்தவரான இளங்கோவடிகள்.

கோவலனின் கருணை உள்ளத்தையும், எளியோர்மாட்டு அவன் காட்டும் பேரன்பையும் நாம் அறிந்து மகிழும் வகையில் அவற்றைப் பற்றிய செய்திகளை ’அடைக்கலக் காதை’ எனும் பகுதியில் வைத்துள்ளார் ஆசிரியர். நமக்கு மர்மமாகவும், புரியாத புதிராகவும் விளங்கும் கோவலனின் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்குமுரிய மறுபக்கம் இங்குதான் வெளிச்சத்திற்கு வருகின்றது.

பூம்புகாருக்கு அருகிலுள்ள ’தலைச்செங்காடு’ என்னும் ஊரில் வசித்துவரும் கோவலனின் நெருங்கிய நண்பனான, நான்கு மறைகளையும் நன்குணர்ந்த அந்தண குலத்தைச் சேர்ந்த ’மாடலன்’ என்பவன் தன் திருத்தல யாத்திரையை முடித்துவிட்டுத் திரும்பி வரும் வழியில் மதுரையை ஒட்டிய பகுதியில் சமணத் துறவியான கவுந்தியடிகளுடன் (சமணப் பள்ளியில்) தங்கியிருக்கும் கோவலனையும், கண்ணகியையும் சந்திக்கின்றான்.

கோவலனின் உருவழிந்த, வாடிய தோற்றத்தைக் கண்டு வருந்திக் கோவலன் மதுரை வந்த காரணம் என்ன? என்று மாடலன் வினவ, பொருளினை இழந்து வறுமையுற்றிருக்கும் தன் நிலையை மாற்றி வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய பொருள் ஈட்டவே தாம் அங்கு வந்ததாகக் கோவலன் கூறுகின்றான். அதுகேட்டு அவனுடைய முந்தைய வளமான வாழ்வையும், இன்றைய அவல நிலையையும் நினைந்து மட்டிலா மனவேதனை அடைகின்றான் மாடலன். அவ்வேதனையினூடே வெளிப்படும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நமக்குக் கோவலனின் கடந்த காலத்தை, அவனுடைய அரிய குணங்களைப் புலனாக்கி நம்மையும் அவனிடம் பேரன்பும், பெருமதிப்பும் கொள்ளவைக்கின்றன.

அப்படி என்னதான் அந்த மாடலன் கோவலனைப் பற்றிச் சொல்லியிருப்பான் என்ற ஆவல் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பொங்குகின்றதல்லவா? கோவலனுடைய கடந்த காலத்திற்கு நாமும் சற்றுச் சென்று அங்கு நிகழ்ந்தவற்றை அறிந்துகொள்வோமா?
  
கோவலனும், மன்னனிடம் ’தலைக்கோல்’ பெற்ற (சிறந்த நாட்டிய நங்கைக்கு மன்னனால் செய்யப்படும் சிறப்பு) புகழ்மிக்க மாதவியும் மகிழ்வோடு நடத்திய இல்லறத்தின் பயனாய் அருஞ்சாதனைகளைப் புரிவதற்கென்றே தோன்றியது ஓர் ஒப்பற்ற பெண் மகவு.

அக்குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று மாதவியின் குலத்தைச் சேர்ந்த கணிகையர் அனைவரும் யோசித்திருக்கும் வேளையில் கோவலன் ஓர் சிறந்த பெயரைத் தேர்ந்தெடுக்கின்றான்; அப்பெயரைத் தான் தேர்ந்தெடுத்த காரணத்தையும் அனைவருக்கும் அறியத் தருகின்றான்.

”முன்பொரு காலத்தில் எம்குல முன்னோனான வணிகன் ஒருவன் கடற்பயணம் செய்தபோது அவனுடைய மரக்கலம் பேரலைகளினால் தாக்கப்பட்டு உடைய, கரையை அடையமுடியாமல் அவன் துயருற்றான். அப்போது அவன்முன் தோன்றிய ’மணிமேகலா தெய்வம்’ என்ற பெண்தெய்வம் அவனுக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து அவனைக் காத்துக் கரை சேர்த்தது. அத்தெய்வமே எங்கள் குலதெய்வம் ஆகும். அத்தெய்வத்தின் பெயரையே என் மகளுக்குச் சூட்டுக” என்கின்றான் கோவலன்.

அதுகேட்டு, அங்குக் கூடியிருந்த ஆயிரம் கணிகையர் (ஆயிரம்பேர் என்பது கவிச்சுவைக்கான மிகைப்படுத்தலாயிருக்கலாம்) அக்குழந்தைக்கு “மணிமேகலை” என்ற அழகிய பெயரைச் சூட்டி வாழ்த்தினர். இதனை இளங்கோவடிகள்,

”அணி மே கலையார் ஆயிரம் கணிகையர்,
மணிமே கலைஎன வாழ்த்திய ஞான்று;” எனக் குறிப்பிடுகின்றார்.

மகிழ்ச்சி நிறைந்திருந்த அவ்வேளையிலே அழகிய மடந்தையாகிய மாதவியோடு சேர்ந்து செம்பொன்னை, தானம் பெறுவதற்காக அங்கு வந்திருந்தவர்கட்கெல்லாம் வாரி வாரி வழங்குகின்றான் கோவலன்.

அப்போது அங்கே அச்சம் தரத்தக்க ஓர் காட்சி தென்படுகின்றது. தானம் பெறுவதற்காக நிறைந்த ஞானத்தையுடைய, வயது முதிர்ந்த அந்தணர் ஒருவர் கையில் கோலூன்றியபடி கோவலன் இல்லத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். கோவலன் இல்லத்தில் குழுமியிருந்த அனைவரும் அம்முதியவரையே அச்சத்தோடும், கவலையோடும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏன்…அவருக்கு ஏதேனும் ஆபத்து நெருங்குகிறதோ..? நம் யூகம் சரியே! தள்ளாடியபடியே நடந்துவரும் அப்பெரியவரைப் பாகனிடமிருந்து தப்பித்த மதம் கொண்ட யானை ஒன்று துரத்தி வருகின்றது; அத்தோடு நில்லாமல் அவரைத் தன் துதிக்கையில் பற்றியும் கொண்டுவிட்டது. அதனைக் கண்டோர் அனைவரும் செய்வதறியாது பயத்துடன் திகைத்து நிற்க, அதுகண்ட கோவலன் பாய்ந்துசென்று ’ஒய்’யென்ற (யானையைத் திட்டும் ஆரிய மொழி) ஒலி எழுப்பியபடியே மின்னல் வேகத்தில் அந்த முதிர்ந்த அந்தணரை யானையின் பிடியினின்று விடுவித்து அவர் உயிரைக் காத்தான்; அத்தோடு நிறுத்தவில்லை. அந்த யானையின் வளைந்த துதிக்கையின் இடையே புகுந்து அதன் மதத்தையும் அடக்கிக் ’கருணை மறவனாக’த் திகழ்கின்றான். இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ’கருணை மறவன்’ என்ற சொல்லாட்சிப் புதியதாகவும், சுவையாகவும் இருக்கக் காண்கிறோம்.

அந்த முதிய அந்தணர் மீது கொண்ட கருணையால்தானே தன் உயிரையும் துச்சமாக மதித்து ’மறவனாக’ மாறி, மதயானையை அடக்கி வீரனாகத் திகழ்கின்றான் கோவலன். ஆகவே ’அருள்வீரன்’ என்னும் பொருள்பட அமைந்த ’கருணை மறவன்’ என்ற பெயர் அவனுக்குச் சாலப் பொருத்தமானதுதானே?

”…………………………உயர்பிறப் பாளனைக்
கையகத்து ஒழித்ததன் கையகம் புக்குப்
பொய்பொரு முடங்குகை வெண்கோட்டு அடங்கி,
மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப்
பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக்
கடக்களிறு அடக்கிய கருணை மறவ!”  என்பவை மேற்சொன்ன நிகழ்வை விளக்கும் இனிய வரிகள்.

இவ்வாறு அளவற்ற அருளாளனாகத் திகழும் கோவலன் ஓர் அபலைப் பெண்ணுக்கு அரிய உதவி ஒன்றைச் செய்து அவள் வாழ்வைக் காக்கின்றான். அது என்ன?

(தொடரும்)