Friday, June 19, 2015

இயற்கைக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth)

இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியிலுள்ள காக்கர்மவுத் (Cockermouth) எனும் இயற்கையெழில் கொஞ்சுமிடத்தில், ஜான் வேர்ட்ஸ்வொர்த் மற்றும் ஆன் குக்ஸன் எனும் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகளுள் இரண்டாவதாகப் பிறந்தார் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த். அவருடைய உடன்பிறப்புக்களில் அவரை அடுத்துப் பிறந்த சகோதரியான டோரதி வேர்ட்ஸ்வொர்த் என்பவரும் சிறந்த கவிஞராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்திருக்கின்றார். அண்ணனோடு இறுதிக்காலம்வரை நெருக்கமான உறவைப் பேணியவரும் அவரே.

வேர்ட்ஸ்வொர்த்தின் தந்தைதான் இளமையில் அவருக்கு ஷேக்ஸ்பியர், மில்டன், ஸ்பென்ஸர் போன்ற புகழ்பெற்ற கவிஞர்களின் படைப்புக்களை அறிமுகப்படுத்தி அவற்றைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

1787-ஆம் ஆண்டு தன்னுடைய முதல் படைப்பான பதினான்கு வரிப் பாடலொன்றை (Sonnet) ஐரோப்பியச் சஞ்சிகையில் (The European Magazine) பிரசுரித்து எழுத்துத்துறையில் தன் பாதம் பதித்தார் வேர்ட்ஸ்வொர்த்.

தொடர்ந்து கவிதைகள் படைத்துவந்த அவர், 1793—ஆம் ஆண்டு தன் கவிதைகளைத் தொகுத்து மாலை நடையுலாவும் கவிதைத் தீற்றல்களும்(Evening walk and Descriptive Sketches) எனும் பெயரில் கவிதை நூலாய்ப் பதிப்பித்தார்.

சாமுவெல் டெய்லர் கோல்ரிட்ஜ் (Samuel Taylor Coleridge) எனும் ஆங்கிலக் கவிஞரோடு இணைந்து ஆங்கில இலக்கியத்தில், அகத்திணைக் காலத்தைத் (Romantic age in English literature) முதலில் தொடங்கிய முன்னோடிக் கவிஞர் எனும் பெருமைக்குரியவர் வில்லியம்  வேர்ட்ஸ்வொர்த்.

பிற கவிஞர்களால் அதிகம் பதிவுசெய்யப்படாத, அடித்தட்டு மக்களையும் (people from the lower classes), தங்க இடமின்றித் திரிவோரையும் (wanderers), உழவர் பெருமக்களையும் (peasants), சிறு வணிகர்களையும் (peddlers) பாடுபொருளாக்கிப் பெருமை சேர்த்தவர் வேர்ட்ஸ்வொர்த். எல்லாவற்றிற்கும் மேலாக, இயற்கையன்னையின்மீது தணியாத காதல் கொண்ட தனயன் இவர். அதனாலல்லவோ தன்னுடையThe Tables Turned’ (அட்டவணைகள் மாறுகின்றன) எனும் கவிதையில், புத்தகங்களை வீசியெறிந்துவிட்டு இயற்கையிடம் பாடம்கேட்கப் பள்ளிப் பிள்ளைகளை அன்போடு அழைக்கின்றார்.

அக்கவிதை

Up! up! My Friend, and quit your books;
Or surely you’ll grow double
Up! up! my Friend, and clear your looks;
Why all this toil and trouble?
[…]
And hark! how blithe the throstle sings!
He, too, is no mean preacher
Come forth into the light of things,
Let Nature be your teacher…

தனியே வயலில் அறுவடை செய்துகொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மதுர கானத்தைப் போற்றி, அவர் எழுதியThe Solitary Reaperஎன்ற கவிதையும் மிகவும் புகழ்வாய்ந்தது.

அக்கவிதை

Behold her, single in the field,
Yon solitary Highland Lass!
Reaping and singing by herself;
Stop here, or gently pass!
Alone she cuts and binds the grain,
And sings a melancholy strain;
O listen! for the Vale profound
Is overflowing with the sound
[…]
Will no one tell me what she sings?
Perhaps the plaintive numbers flow
For old, unhappy, far-off things,
And battles long ago
Or is it some more humble lay,
Familiar matter of to-day?
Some natural sorrow, loss, or pain,
That has been, and may be again?
…………………………………………….

மிகவும் இளகிய மனம் படைத்தவராகவும் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் திகழ்ந்திருக்கின்றார் என்பதைப் பின்வரும் நிகழ்வால் அறியலாம்.

ஒருமுறை வேர்ட்ஸ்வொர்த் ஒரு மலைச்சாரல் பக்கமாய் நடந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த பாறை இடுக்கிலிருந்து ஒரு மலர் எட்டிப்பார்த்ததாம். அதைக் கண்டவுடன், வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, ஆதரிப்பார் யாருமின்றி அநாதையாய் உயிர்விட்ட இளங்கவிஞன் சாட்டர்டனின் நினைவு அவருக்கு வந்துவிட, “சாட்டர்டன் நீ இங்கேயா இருக்கிறாய்?” என்று அந்த ஒற்றை மலரைப் பார்த்துக் கேட்டுவிட்டுக் கண்ணீர் சிந்தினாராம். முல்லைக்கொடி பற்றிப்படரக் கொழுகொம்பில்லாமல் வாடுவதைக் கண்டு மனங்கசிந்த வள்ளல் பாரியை  இத்தருணத்தில் நம்முள்ளம் நினைவுகூர்கின்றது இல்லையா? பாரி புவியரசன், எனவே தேரைத் தந்தான் கொடிக்கு; வேர்ட்ஸ்வொர்த்தோ கவியரசன் மட்டுமேஆதலால் கண்ணீரைத்தான் அவரால் தர முடிந்திருக்கின்றது மலருக்கு!

தன் சுயசரிதையைக் கருவாகக்கொண்டு அவர் எழுதிய 'முன்னுரை' (The prelude) எனும் கவிதை, கவிஞர் மில்டனின் 'இழந்த சொர்க்கத்திற்கு'ப் (The Paradise Lost) பின்பு எழுதப்பட்ட மிக நீண்ட கவிதை எனும் சிறப்பைப் பெற்றதோடல்லாமல், வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகளிலேயே  சிறந்தவொன்று எனும் அங்கீகாரத்தையும் உலக மக்களிடம் பெற்றிருக்கின்றது.

சிறந்த கவிஞராகவும், அருளுள்ளம் கொண்ட மனிதராகவும் வாழ்ந்து மறைந்த வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், காலத்தைவென்ற தன்னுடைய அமர கவிதைகளால் என்றும் நிலைத்து வாழ்வார் என்பதில் ஐயமில்லை.



Saturday, June 13, 2015

தேனின் மகத்துவம்!


சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!’ என்பார்கள் முருக பக்தர்கள். ’முருகன்என்ற சொல் போலவேதேன்என்ற சொல்லைச் சொல்லும்போதும் நம் நாவும் மனமும் இனிக்கவே செய்கின்றன. அதனால்தான், மணிவாசக அடிகளும் தம் திருவாசகத்தில்தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்என்று சிவனைத் தித்திக்கும் தேனுக்கு ஒப்புமை காட்டுகின்றார். இனிமைக்கு மட்டுந்தான் தேன் உரியதா? இல்லைஅதையும் தாண்டிய அபூர்வ மருத்துவ குணங்கள் பலவும் நிறைந்த அருமருந்து தேன்!

Wednesday, May 6, 2015

விடாமுயற்சியின் வெற்றி!

ஒருநாள், விவசாயி ஒருவனுக்குச் சொந்தமான கழுதையொன்று தவறிப்போய்ப் பாழுங்கிணற்றில் விழுந்துவிட்டது. கிணற்றில் விழுந்த கழுதை வெகுநேரமாகப் பரிதாபமாக ஓலமிட்டுக்கொண்டிருந்தது. அதுகண்ட விவசாயி என்னசெய்வதென்று புரியாமல் தவித்தான். ஒருவழியும் புலப்படாத நிலையில், “கழுதைக்கோ வயதாகிவிட்டது; அதனைக் காப்பாற்றுவதால் பயனொன்றுமில்லை. அதுபோல், கிணறும் வறண்டுபோய்விட்டதால் மூடப்பட வேண்டியதே; எனவே கிணற்றையும் கழுதையையும் சேர்த்து மூடிவிடுவதே நல்லது” என்ற முடிவுக்கு வந்தான்.

தன் எண்ணத்தை உடனடியாகச் செயற்படுத்த நினைத்த விவசாயி அக்கம்பக்கத்தவரிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கோர, அவர்களும் உடனே அவனுக்கு உதவ முன்வந்தனர். மண்வெட்டிகளோடு வந்த அவர்கள் அருகிலிருந்த அழுக்கையெல்லாம் அள்ளியெடுத்துக் கிணற்றுக்குள் வீசினர். மக்களின் இச்செயல்கண்ட கழுதை முதலில் மிகவும் பயந்துபோய்க் கதறியது. ஆனால் சிறிது நேரத்தில் அனைவரும் வியக்கும்வண்ணம் அமைதியானது.


அழுக்குளையும், சகதிகளையும் கிணற்றில் வீசுவதிலேயே குறியாயிருந்த மக்கள் உள்ளேயிருந்த கழுதையின் நிலையென்ன என்பதில் கவனம் செலுத்தவில்லை. சிறிதுநேரம் கழித்து எதார்த்தமாக உள்ளே பார்த்தவர்களுக்கு அங்கே ஓர் அதிசயம் காத்துக்கொண்டிருந்தது. ஆம்…மக்கள் அழுக்குகளைத் தன்மீது அள்ளி வீசும்போதெல்லாம் தன் உடலைக் குலுக்கிய கழுதை அவற்றைக் கீழே விழச்செய்து படிபோல் மாற்றிக்கொண்டு மெதுவாக மேலேறி வந்துகொண்டிருந்தது.

இதுகண்டு உற்சாகம் கொண்ட மக்கள் மேலும் மேலும் அழுக்குகளை உள்ளே வீசக் கழுதையும் சளைக்காமல் அவற்றையே படிகளாக்கித் தொடர்ந்து முன்னேறியது. வெகு விரைவிலேயே  கிணற்றின் விளிம்பை அடைந்த கழுதை உற்சாகத்தோடு துள்ளிக்குதித்து வெளியே ஓடியது.

பார்த்தீர்களா நண்பர்களே! மனிதர்கள் அழுக்கைவீசி அந்தக் கழுதையின் கதையை முடிப்பதற்குக் காலம் குறிக்க, கழுதையோ அவர்களைப் பேதைகளாக்கித் தன் விடாமுயற்சியால் தன் விதியையே மாற்றி எழுதிவிட்டது!

இக்கதை நமக்குணர்த்தும் நீதியென்ன?

வாழ்க்கை நம் மீது அனைத்துவிதமான சேற்றையும் சகதியையும் வாரியிறைக்கலாம். அவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு முன்னேற வேண்டும். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிக்கலையும் தடைக்கல்லாக எண்ணாமல் நம்மை உயர்த்தும் படிக்கல்லாக எண்ணினால் எத்தகைய ஆழமான கிணற்றிலிருந்தும் (அதாவது துன்பத்திலிருந்தும்) நாம் வெளிவர முடியும்; தேவை தளர்வற்ற விடாமுயற்சி!

துன்பத்தைக் கண்டு துவளாதவர் துன்பத்துக்கே துன்பம் தந்துவிடுவர் என்ற பொய்யில் புலவரின் பொருளுரையை இக்கழுதை மெய்யுரையாக்கிவிட்டதே!

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
(குறள்: 623)

வாழ்வில் என்றும் மகிழ்ச்சியோடிருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய 5 விதிமுறைகள்: 
  • பிறரை வெறுக்கும் பண்பை இதயத்திலிருந்து நீக்குங்கள்! மன்னிக்கக்   கற்றுக்கொள்ளுங்கள்!
  • மனத்தைக் கவலைகளிலிருந்து விடுவியுங்கள். கூடுமானவரை அதற்குக் கவலைகளை அளிக்காமல் இருங்கள்!
  • எளிமையாக வாழப் பழகுங்கள்! இருப்பதில் நிறைவு காணுங்கள்!
  • உங்களிடம் இருப்பதைப் பிறருக்குத் தாராளமாக வழங்குங்கள்!
  • நீங்கள் பிறரிடம் எதிர்பார்ப்பது குறைவாகவும் உங்களிடம் (நீங்கள்) எதிர்பார்ப்பது அதிகமாகவும் இருக்கட்டும். (நம் தகுதிகளை, திறமைகளை அதிகப்படுத்தி முன்னேறுவதே நாம் நம்மிடம் கொள்ளும் எதிர்பார்ப்பு எனலாம்.) 
இவ்விதிமுறைகளை நடைமுறைப்படுத்தினால் வாழ்க்கை இனிக்கும்; வானம் வசப்படும்!

(முகநூலில் படித்த கதையின் தமிழாக்கம் இது!)

பாவேந்தரின் நகைச்சுவை!

புதுவையில் பிறந்து புதுமைச் சிந்தனைகளில் வளர்ந்து பாரதியைத் தன் ஆசானாக ஏற்றுக் கனகசுப்புரத்தினம் எனும்தன் இயற்பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டவர், ’புரட்சிக்கவிஞர்’ என்று பெரியாராலும், ’புரட்சிக்கவி’ என்று அறிஞர் அண்ணாவாலும் அன்போடு அழைக்கப்பட்ட கவிஞர் பாரதிதாசன்.

சமத்துவம், பொதுவுடைமை, பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், கருத்தடையின் அவசியம், முதியோர் காதல் எனப் பல்வேறு புரட்சிக்கருத்துக்களை மிகத் துணிச்சலாக அன்றே தன் கவிதைகள் வாயிலாய் வலியுறுத்தியவர் அவர். அற்புதமான படைப்புக்கள் பலவற்றைத் தந்து நம் சிந்தனைக்கு விருந்து படைத்த பாவேந்தர், அத்தோடு நில்லாமல் நம்மை விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் நகைச்சுவை வித்தகராகவும் விளங்கியிருக்கின்றார் என்பதற்கு அவர்தம் படைப்புக்களே சான்று பகர்கின்றன.

அவருடைய ஆக்கங்களில் நகைச்சுவை வலிந்து திணிக்கப்பட்டதாயில்லாமல் மிக இயல்பாக அமைந்திருப்பதைக் காணும்போது அவருடைய நகைச்சுவை உள்ளம் நமக்குத் தெற்றெனப் புலனாகின்றது. அவ்வாறு நான் இரசித்த பாவேந்தரின் நகைச்சுவைகள் சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.

Thursday, February 26, 2015

மங்கையர் திலகம்!


வயல்களும் வாவிகளும் நிறைந்த திருமுனைப்பாடி நாட்டில் எழில் கொஞ்சும் ஊர் ஒன்று இருந்தது; அதன் பெயர் திருவாமூர். அங்கே வேளாளர் குடியைச் சேர்ந்த, சிவபக்தியிற் சிறந்த புகழனார் மாதினியார் என்ற இணையர் வாழ்ந்து வந்தனர். ’உடம்பொடு உயிரிடையென்ன’ (உடலும் உயிரும் போல) கருத்தொருமித்துக் காதலோடு வாழ்ந்த அவ்விருவரின் இல்லறத்தை மேலும் இனிமையாக்கப் பெண் மகவு ஒன்று பிறந்தது.

அக்குழந்தையின் தெய்வீக அழகு ’திருமகளே புவிக்கு வந்து பிறந்துவிட்டாளோ!’ எனப் பிரமிக்கும்வண்ணம் இருந்தது. அக்குழந்தையைக் கண்டு உளம்பூரித்த தாய்தந்தையர் பின்னாளில் அது மங்கையர்குலத் திலகமாய் ஒளிவீச வேண்டும் என்று திருவுளம் கொண்டனரோ என்னவோ…அதற்குத் ’திலகவதி’ எனும் பொருத்தமான பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர்.

Friday, February 6, 2015

நின்னினும் நல்லன்!


நண்பர்களே! காலஎந்திரத்தில் பயணித்துப் பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்னே செல்வோமா? (கற்பனையில்தான்!)

நாம் இப்போது தஞ்சைக்கு அருகிலுள்ள ’வெண்ணிப் பறந்தலை’ எனும் இடத்திற்கு வந்துவிட்டோம். அதோ அங்கே பாருங்கள்! அங்கே போர்க்களம் ஒன்று காட்சியளிக்கிறது; கடும்போர் ஒன்று இப்போது அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கக் காண்கிறோம். வாள்களோடு வாள்களும் வேல்களோடு வேல்களும் மோதி உண்டாக்கும் ஒலியும், வெயிலில் மின்னும் அவற்றின் ஒளியும், இடியும் மின்னலும் தரைக்கு இறங்கி வந்துவிட்டதாகவே தோற்றம் காட்டுகின்றன!

போரில் ஈடுபட்ட வீரர்களின் எண்ணிக்கையோ அளவிடற்கரியது. வெற்றிகண்டவீரர்களின் வீரமுழக்கமும், புண்பட்டுத் தரையில் சாயும் வீரர்களின் ஓலக்குரலும் ஒருங்கிணைந்து கடலின் இரைச்சலைப்போல் காற்றில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இவ்வளவு உக்கிரமாக அங்கே போர் புரிந்து கொண்டிருப்பவர்கள் யார்…சற்று நெருங்கிச் சென்று பார்ப்போமா?

அதோ! ஒரு பக்கம் புலிக்கொடி பறக்கிறது. கம்பீரமாக யானையின்மீது அமர்ந்து போர்புரியும் மன்னர் ஒருவரைக் காணமுடிகிறது. உற்சாகமும் இப்பகுதியில்தான் அதிகமாக இருக்கக் காண்கிறோம். அது என்ன முழக்கம்? ”மாமன்னர் கரிகால் வளவர் வாழ்க!” அடடா! இவர்தான் கரிகால் வளவரா? இமயத்தில் புலிச்சின்னத்தைப் பொறித்த பெருவீரர் அல்லரோ இவர்? அவ்வீரர்கள் இவர் குறித்துப் பெருமிதம் கொள்வதில் பொருளிருக்கிறது!

சரி…எதிர்ப்பக்கத்தில் போர்புரிவது யார் என்று அறிந்துவருவோம்.|

 

 ”அஞ்சாநெஞ்சர் பெருஞ்சேரலாதர் வாழ்க!” என்ற முழக்கமிடுகிறார்களே இவ்வீரர்கள்! ”ஓ! இவர்தான் பெருஞ்சேரலாதரா?” வீரத்தில் இவர் கரிகாலருக்குச் சற்றும் குறைந்தவரல்லவே! இவர்கள் இருவரும் புரியும் கடும்போரின் முடிவு யாதாயிருக்கும்? எனும் பரபரப்பு இப்போதே நமக்கும் தொற்றிக்கொள்கிறது.

போர்க்களத்திலிருந்து சிறிது விலகி, அதோ…அந்தப் பனைமரத்தடியில் நின்று இந்தப் போரை நாமும் கவனிப்போம்!

கடுமையான போர் தொடர்ந்து நீடிக்கின்றது. இதோ…போரின் உச்சக்கட்டம் நெருங்கிவிட்டதாகக் காண்கிறது. ஆம்…கரிகாலரும் பெருஞ்சேரலாதரும் நேருக்கு நேராகவே தத்தம் யானைகளிலிருந்து ஒருவரையொருவர் எதிர்த்துப் போர்புரியகத் தொடங்கிவிட்டார்கள். ”என்ன நடக்கப்போகிறதோ?” என்ற பதற்றத்தில் நம் இதயத்துடிப்பு எகிறுகின்றது.

இருவர் வேல்களும் ஒன்றோடொன்று மோதி ’டணார் டணார்’ என்று ஒலியெழுப்புகின்றன. ”அற்புதம்! அருமையான வேற்போர்! ஆ! என்ன இது? கரிகாலர் சேரலாதரின் வேலைத் தன் வேலால் தட்டிவிட்டாரே! சேர மன்னனின் மார்புக்குக் குறிவைத்துத் தன் வேலைச் செலுத்துகிறாரே! ஐயோ…சேரமானின் மார்பில் வேல் பாய்ந்துவிட்டதே! அவர் தன்யானையிலிருந்து கீழே சாய்கிறாரே!”

”நல்லவேளை!” கீழே நின்று போர் புரிந்துகொண்டிருந்த அவருடைய காலாள் வீரர்கள் அவரைத் தாங்கிப் பிடித்துவிட்டனர்.

சோழர் பக்கத்திலோ வெற்றிமுழக்கம் விண்ணை எட்டுகிறது. ”கரிகாலர் வாழ்க! பகைவருக்குக் காலர் வாழ்க!” என்ற முழக்கத்தோடு சோழவீரர்கள் சேரவீரர்களை ஓட ஓட விரட்டுகின்றனர். சேரர்படைச் சிதறி ஓடுகின்றது. கரிகாலர் வெற்றிக்களிப்போடு தன் பாசறைக்குத் திரும்புகிறார்.

ஆனால் போர்க்களத்திலோ…மார்பில் வேல்பாய்ந்து புண்பட்டுச் சாய்ந்திருக்கும் சேரர்பெருமானின் அருகில் பத்துப் பதினைந்து வீரர்கள் வேதனையோடு நின்றிருக்கின்றனர். சேரர் தன்மார்பில் பாய்ந்திருக்கும் வேலைப் பார்க்கிறார் அது குறித்து அவர் கவலை கொண்டாரில்லை. ஆனால், அதன் மறுமுனை அவர் முதுகில் ஊடுருவியிருப்பதை உணர்கின்றார். அதனால் பெருவேதனையும் அவமானமும் கொள்கின்றார். அவர் கண்கள் கலங்குகின்றன.

“என் வீரத்திற்கு இப்படி ஓர் களங்கமா? போரில் புறமுதுகிட்டதுபோல் அல்லவா புறப்புண் (முதுகில் ஏற்படும் புண்) ஏற்பட்டுவிட்டது! இனியும் நான் உயிர்வாழ வேண்டுமா? என் குலத்திற்கே மாறாப் பழியை ஏற்படுத்திவிட்டேனே!” என்று எண்ணித் துடிக்கிறார். அவருடைய கம்பீரமான முகத்தில் கடுமையான வேதனையின் சாயை படர்கின்றது. ஒரு முடிவுக்கு வந்தவராகத் தன் பக்கத்தில் கவலையோடு நின்றிருக்கும் வீரர்களைப் பார்க்கிறார். அவர்களில் ஒருவன், ”அரசே! ஊருக்குள் சென்று மருத்துவர் யாரையேனும் உடனே அழைத்துக்கொண்டு வருகிறேன்” எனக் கிளம்புகிறான். அவன் கையைப் பிடித்து நிறுத்திய சேரமான், அவனைக் கருணையோடு பார்த்து, ”வீரனே! என்மீது உனக்கிருக்கும் அன்பினைக் கண்டு மகிழ்கிறேன். எனக்கு மருத்துவர் வேண்டாம்; அதற்குப் பதிலாக நீ வேறோர் உதவி செய்யவேண்டும்” என்கிறார்.

அவ்வீரன் அவர் முகத்தையே ஆவலோடு பார்க்க அவரோ, ”அன்பனே! ஊருக்குள் சென்று தருப்பைப்புல் கொஞ்சம் கொண்டுவந்து இப்போர்க்களத்திலே பரப்பி நான் அமர்வதற்கான ஆசனமாய் அதை ஆக்கு! போரில் புறப்புண்பெற்ற நான் இனியும் உயிர்வாழ விரும்பவில்லை; வடக்கிருந்து உயிர்த்துறந்து வீரசொர்க்கம் புக விரும்புகிறேன்!” என்கிறார்.

தன் கண்களில் வழிந்த நீரைத்துடைத்துக் கொண்டு ஏதோ சொல்ல வாயெடுத்த அவ்வீரன், தம் அரசரின் கொள்கையை மாற்றுவது கடினம் என்று மனத்துள் நினைந்தவனாய்க் கூறவந்ததைக் கூறாமலே தளர்ந்த நடையோடு அங்கிருந்து அகன்றான்.

அடுத்து நடந்தவை தமிழரின் தன்மானத்திற்கும் வீரத்திற்கும் என்றென்றும் சான்று பகர்பவையாக அமைந்துவிட்ட நிகழ்வுகள். ஆம்…தன் புறப்புண்ணுக்கு நாணிப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர்த் துறந்தான் பெருஞ்சேரலாதன். அவனோடு அவன் வீரர்கள் சிலரும் அவ்வாறே உயிர்த்துறந்து வீரசொர்க்கம் ஏகினர்.

சேரன் இவ்வாறு உயிர்த்துறந்ததை அறிந்தார் அதே ஊரைச் சேர்ந்த பெண்பாற் புலவரான ‘வெண்ணிக் குயத்தியார்.’ தம்மரசனான கரிகாலன் மீதும் பெருமதிப்பு கொண்டவர் அவர். ஆயினும் சேரன் தன்முதுகில் புண்பட்டதற்காக மனம்வருந்தி உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்தது அவரைப் பெரிதும் நெகிழ்த்திவிட்டது. அச்செயல் அவனைச் சுத்தவீரன் என்று மெய்ப்பித்துவிட்டதையும், கரிகாலனினும் அவனை உயர்ந்தவனாகவும், நல்லவனாகவும் ஆக்கிவிட்டதையும் உணர்ந்தார் குயத்தியார்.

நேரே தம்மரசனான கரிகாற் சோழனைக் காணப் புறப்பட்டார். அங்கே நாளோலக்கத்தில் கம்பீரமாக வீற்றிருந்தான் கரிகாலன். புலவரைக் கண்டதும் இன்முகத்தோடு வரவேற்று ஆசனத்தில் அமர்த்திவிட்டு, ”பெருமாட்டி! வெண்ணிப் போரைப் பற்றி அறிந்திருப்பீர்களே…?” தன்மீசையை முறுக்கியபடிக் குயத்தியாரைப் பார்த்து அவன் கம்பீரமாக வினவ, அவரும் பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு,

”நீர் செறிந்த பெரிய கடலின்கண்ணே மரக்கலத்தையோட்டி போர்செய்தற்குக் காற்றின்துணை அவசியம் என்றறிந்து வளிச் செல்வனை (காற்றை) அழைத்து ஏவல் கொண்ட வலியோன் மரபிலுள்ளோனே!

(கடலில் இயங்கும் காற்றைக் கலஞ் செலுத்துதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் தந்திரத்தை முதன்முதலிற் கண்டவர் பண்டைத் தமிழரே ஆவர் என்பது குயத்தியாரின் இம்மொழிகளால் உறுதிப்படுகின்றது; சிலர் நினைப்பதுபோல் காற்றின் திசையறிந்து மரக்கலத்தை முதலில் செலுத்தியவர்கள் உரோமானியர் அல்லர்…தமிழரே என்பதை அறிக.)

மதம் பொருந்திய யானையையுடைய கரிகால் வளவனே! போர்மேற்சென்று போரில் நின்னாற்றல் நன்கு வெளிப்படுமாறு வென்றவனே! புது வருவாயையுடைய வெண்ணியென்னும் ஊர்ப்புறத்தேயுள்ள போர்க்களத்தில், உலகத்துப் புகழுக்குப் பெரிதும் பாத்திரமாகும் வண்ணம் தன் புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்த சேரர்பெருந்தகை நின்னைவிட நல்லவன் அன்றோ?” என்று புலவர் கரிகாலனைப் பார்த்துக் கேட்க, அம்மையாரைச் சிறிதுநேரம் உற்றுப்பார்த்தவண்ணம் யோசனையோடு அமர்ந்திருந்த கரிகாலன், பின்பு அவரை நிமிர்ந்து பார்த்து ‘ஆம்!’ என்று தலையசைத்தான்.

போரில் வென்று கரிகாலன் பெற்ற புகழ் வெற்றிப் புகழ்; போரில்பெற்ற புறப்புண்ணுக்கு நாணி உயிர்த்துறந்ததன் வாயிலாய்ச் சேரன் பெற்றதோ வளவனினும் விஞ்சிய பெரும்புகழ் என்பதே வெண்ணிக் குயத்தியாரின் எண்ணம்; அதுவே அவர் பாடலின் பொருள்.

நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் னாற்றல் தோன்ற
வென்றோய் நின்னினு நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே. (வெண்ணிக் குயத்தியார்: புறம்-66)

தம்மரசன் முன்பு பிறிதோர் அரசனை, அதுவும் தம்மரசனிடம் போரில் தோல்விகண்ட அரசனைப் போற்றுதற்கு ஒரு புலவருக்கு எத்துணைத் துணிச்சல் வேண்டும்! அஃது அந்நாளைய புலவோர்க்கு இருந்திருக்கிறது என்பதற்கு இப்பாடல் சான்றாகிறது. வாழ்க புலவரின் அஞ்சாமை!